பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
உள்கட்டமைப்பும், எரிசக்தியும் எந்த ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாகும்; கடந்த 11 ஆண்டுகளில், இந்தத் துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது: பிரதமர்
இன்று, இந்தியாவின் வளர்ச்சியில் உலகம் அதன் வளர்ச்சியைக் காண்கிறது: பிரதமர்
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க இந்திய அரசு பணியாற்றி வருகிறது; தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக, மாநிலத்தின் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில், துறைமுக உள்கட்டமைப்பை அதிநவீன உயர் தொழில்நுட்பமாகவும் மாற்றுகிறோம்: பிரதமர்
இப்போது, நாடு முழுவதும் மிகப்பெரிய மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது: பிரதமர்
Posted On:
26 JUL 2025 9:54PM by PIB Chennai
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இன்று சுமார் ₹4800 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். பல்வேறு துறைகளில் அமைந்துள்ள தொடர்ச்சியான முக்கிய திட்டங்கள், பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், தளவாடத் திறனை அதிகரிக்கும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலின் துணிச்சல்மிகு வீரர்களுக்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். தீரம் நிறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்குப் பிறகு பகவான் ராமேஸ்வரின் புனித பூமிக்கு நேரடியாக வந்தது, தமக்குக் கிடைத்த பாக்கியம் என்று கூறினார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அவர் எடுத்துரைத்தார். இந்த வளர்ச்சி, இந்தியாவின் மீதான உலகளாவிய நம்பிக்கையையும், நாட்டின் புதுப்பிக்கப்பட்ட பொறுப்புணர்வையும் குறிக்கிறது என்று குறிப்பிட்ட திரு. மோடி, இந்த நம்பிக்கை வளர்ந்த இந்தியாவையும் வளர்ந்த தமிழ்நாட்டையும் உருவாக்க ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார். பகவான் ராமேஸ்வர் மற்றும் திருச்செந்தூர் முருகனின் ஆசிர்வாதங்களுடன், தூத்துக்குடியில் இன்று வளர்ச்சியின் புதிய அத்தியாயம் விரிவடைந்து வருவதாக அவர் மேலும் கூறினார். “தமிழகத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு உயர்த்துவதற்காக 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணியை தூத்துக்குடி தொடர்ந்து கண்டு வருகிறது” என்று பிரதமர் கூறினார்.
பிப்ரவரி 2024 இல் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக கொள்கலன் முனையத்திற்கு அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த திரு. மோடி, அந்த நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்ததை எடுத்துரைத்தார். செப்டம்பர் 2024 இல், தூத்துக்குடியில் புதிய சர்வதேச கொள்கலன் முனையம் திறக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இன்று மீண்டும் ஒருமுறை, தூத்துக்குடியில் ₹4,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இந்த முயற்சிகள் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் முக்கியமான மின்சாரத் துறை முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பரவியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்காக அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“உள்கட்டமைப்பும், எரிசக்தியும் எந்த ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாகும். கடந்த 11 ஆண்டுகளில், இந்தத் துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் தெரிவித்தார். இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள், தூத்துக்குடியையும் தமிழ்நாட்டையும் மேம்பட்ட இணைப்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகளின் மையங்களாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடியின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்திற்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். வளமான மற்றும் வலுவான இந்தியாவைக் கட்டியெழுப்புவதில், இந்தப் பகுதியின் நீடித்த பங்களிப்பை அவர் பாராட்டினார். காலனித்துவ காலத்தில் கடல்சார் வர்த்தகத்தின் திறனை முன்னறிவித்து, உள்நாட்டு கப்பல் போக்குவரத்து முயற்சிகளைத் தொடங்கியதன் மூலம் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த தொலைநோக்குப் பார்வை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர் திரு வ.உ. சிதம்பரம் பிள்ளையை அவர் பாராட்டினார். தைரியத்திலும், தேசபக்தியிலும் வேரூன்றி, சுதந்திரம் மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியா குறித்து கனவு கண்டதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அழகு முத்துக்கோன் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளை, பிரதமர் கௌரவித்தார். தூத்துக்குடி அருகே தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறப்பிடத்தை நினைவுகூர்ந்த திரு. மோடி, தூத்துக்குடிக்கும் அவரது சொந்தத் தொகுதியான காசிக்கும் இடையிலான ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை எடுத்துரைத்தார். காசி-தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார முயற்சிகள், இந்தியாவின் பகிரப்பட்ட பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, தூத்துக்குடியின் புகழ்பெற்ற முத்துக்களை திரு. பில் கேட்ஸுக்கு பரிசளித்ததை நினைவுகூர்ந்த பிரதமர், திரு. கேட்ஸ், முத்துக்களை மிகவும் பாராட்டியதாகக் கூறினார். இந்தப் பகுதியின் பாண்டிய முத்துக்கள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் இந்தியாவின் பொருளாதார சக்தியின் அடையாளமாகக் கருதப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"வளர்ந்த தமிழ்நாடு மற்றும் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை இந்தியா தனது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் மெருகேற்றி வருகிறது" என்று திரு மோடி கூறினார், இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), இந்த தொலைநோக்குப் பார்வையை மேலும் துரிதப்படுத்துகிறது. "இன்று, இந்தியாவின் வளர்ச்சியில் உலகம் அதன் வளர்ச்சியைக் காண்கிறது" என்று குறிப்பிட்டு, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான நாட்டின் பயணத்தை துரிதப்படுத்தும் என்று திரு மோடி கூறினார்.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் விற்கப்படும் இந்தியப் பொருட்களில் 99 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். இங்கிலாந்தில் இந்தியப் பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால், தேவை அதிகரிக்கும், இந்தியாவில் அதிக உற்பத்தி வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், தமிழ்நாட்டின் இளைஞர்கள், சிறு தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தொழில், மீன்பிடி சமூகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் புதுமை போன்ற துறைகளை ஆதரிக்கும் என்றும், பரந்த அளவிலான ஆதாயங்களை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் உற்பத்தி இயக்கத்திற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகளின் வலிமை தெளிவாக நிரூபிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். பயங்கரவாதிகளின் கோட்டைகளைத் தகர்ப்பதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தன என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளைத் தொடர்ந்து அமைதியின்மைக்கு உள்ளாக்குகின்றன என்பதை திரு மோடி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் அதன் முழுத் திறனையும் வெளிக்கொணர்வதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு மோடி, மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் துறைமுக வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கு இணையாக, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வேக்களை ஒருங்கிணைப்பதற்கும், மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய மேம்பட்ட முனையத்தின் திறப்பு விழா இந்த வரிசையில் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ₹450 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த முனையம், இப்போது ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 3 லட்சமாக இருந்தது என்று அவர் கூறினார்.
புதிதாகத் திறக்கப்பட்ட முனையம், இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களுடனான தூத்துக்குடியின் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட திரு. மோடி, இந்த மேம்பாட்டின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பெருநிறுவனப் பயணங்கள், கல்வி மையங்கள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புக்கு பயனளிக்கும் என்று கூறினார். மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட அணுகல் மூலம் இந்தப் பிராந்தியத்தின் சுற்றுலாத் திறன் புதிய உத்வேகத்தைப் பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சாலைத் திட்டங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் அறிவித்தார். தோராயமாக ₹2,500 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த சாலைகள், இரண்டு முக்கிய மேம்பாட்டு மண்டலங்களை சென்னையுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சாலை உள்கட்டமைப்பு, டெல்டா மாவட்டங்களுக்கும், மாநிலத் தலைநகருக்கும் இடையிலான இணைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இது அதிக பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் அணுகலுக்கு வழி வகுக்கிறது என்று அவர் கூறினார்.
சாலைத் திட்டங்கள், தூத்துக்குடி துறைமுகத்துடனான இணைப்பை கணிசமாக அதிகரித்துள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, இந்த மேம்பாடுகள், பிராந்தியம் முழுவதும் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேலும் எளிமைப்படுத்தும் என்றும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தொழில்துறை வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக ரயில்வே வலையமைப்பை மத்திய அரசு கருதுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கலின் மாற்றத்தக்க கட்டத்தில் நுழைந்துள்ளது, இந்த முன்முயற்சியின் முக்கிய மையமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் எழுபத்தேழு நிலையங்கள் விரிவான மறுவடிவமைப்புக்கு உட்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். நவீன வந்தே பாரத் ரயில்கள் இப்போது தமிழக குடிமக்களுக்கு ஒரு புதிய பயண அனுபவத்தை வழங்குகின்றன. இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலமான பாம்பன், தமிழ்நாட்டில் கட்டப்பட்டது என்றும், இது ஒரு தனித்துவமான பொறியியல் சாதனை என்றும், இது வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், இப்பகுதியில் பயணத்தை சுமூகமாக்கும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.
"நாடு முழுவதும் மிகப்பெரிய மற்றும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மாற்றத்தக்க பிரச்சாரத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை முதல் முறையாக ரயில் மூலம் இணைத்து, ஜம்மு & காஷ்மீரில் சமீபத்தில் திறக்கப்பட்ட செனாப் பாலத்தை ஒரு பொறியியல் அற்புதம் என்று அவர் விவரித்தார். இது தவிர, நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது, அசாமில் உள்ள போகிபீல் பாலம் மற்றும் ஆறு கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதை போன்ற பல முக்கிய திட்டங்களை இந்தியா நிறைவு செய்துள்ளதையும் திரு. மோடி கோடிட்டுக் காட்டினார். இந்த முயற்சிகள், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்றும், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட ரயில் திட்டங்கள் மாநிலத்தின் தென் பகுதி முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார். மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம், இந்தப் பகுதியில் வந்தே பாரத் போன்ற அதி நவீன ரயில்களை இயக்குவதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ரயில்வே திட்ட முயற்சிகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், அதன் வளர்ச்சியை புதிய வேகத்துடன் அதிகரிக்கவும் தயாராக உள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
தமிழ்நாட்டில் 2,000 மெகாவாட் கூடங்குளம் அணுமின் திட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய மின் பரிமாற்றத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ₹550 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, வரும் ஆண்டுகளில் தூய எரிசக்தியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எரிசக்தி முயற்சி இந்தியாவின் உலகளாவிய எரிசக்தி இலக்குகளுக்கும் சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளுக்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். அதிக மின் உற்பத்தியுடன், தமிழ்நாட்டில் தொழில்துறை, பொதுமக்கள் என இரு தரப்பினரும் கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள் என அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்டத்தின் விரைவான முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஏற்கனவே மாநிலத்தில் சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார். இதுவரை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் சுற்றுச் சூழல் பாதிப்பின்றி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலவசமாக வழங்குவது மட்டுமல்லாமல், பசுமை எரிசக்தித் துறையில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு என்ற தொலைநோக்குப் பார்வையும் மத்திய அரசின் முக்கிய உறுதிப்பாடாக உள்ளது என்பதை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர், தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசு ₹3 லட்சம் கோடியை நிதிப் பகிர்வு மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது என அவர் கூறினார். இது முன்பு வழங்கப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டார். இந்த பதினொரு ஆண்டுகளில், தமிழ்நாடு பதினொரு புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.
கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு ஒரு அரசு முதன்முறையாக இவ்வளவு அர்ப்பணிப்புடன் அக்கறை காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நீலப் புரட்சி மூலம், அரசு கடல்சார் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி நகரம், வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தின் உதயத்தைக் காண்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். போக்குவரத்து இணைப்பு, மின்சாரப் பரிமாற்றம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிற்கும் வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கும் வலுவான அடித்தளத்தை அமைத்து வருகின்றன என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி, மத்திய அமைச்சர்கள் திரு கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு , மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பின்னணி
உலகத் தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, தென் மாநிலங்களில் அதிகரித்து வரும் விமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் ₹ 450 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள புதிய முனையக் கட்டடத்தின் உள்ளே நடந்து சென்று பிரதமர் பார்வையிட்டார்.
17,340 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முனையம், நெரிசல் மிக்க உச்சபட்ச நேரங்களில் 1,350 பயணிகளையும், ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளையும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உச்சபட்ச நேரத்தில் 1800 பயணிகளையும், ஆண்டிற்கு 25 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். 100% எல்இடி விளக்குகள், மின்சேமிப்புத் திறன் கொண்ட மின் மேலாண்மை அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாடு ஆகியவற்றுடன், இந்த முனையம் கிரிஹா -4 (GRIHA-4) நிலைத்தன்மை மதிப்பீட்டை அடையும் நோக்கில் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன உள்கட்டமைப்பு பிராந்திய விமான இணைப்பை கணிசமாக மேம்படுத்துவதுடன் தென் தமிழ்நாட்டில் சுற்றுலா, வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை உள்கட்டமைப்பு துறையில், பிரதமர் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். முதலாவது, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வழித்தடத்தின் கீழ் ₹2,350 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை-36 -ன் 50 கிலோ மீட்டர் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் வழித்தடத்தின் 4-வழிப்பாதை ஆகும். இதில் மூன்று புறவழிச்சாலைகள், கொள்ளிடம் ஆற்றின் மீது 1 கிலோ மீட்டர் நான்கு வழிப்பாதைப் பாலம், நான்கு பெரிய பாலங்கள், ஏழு மேம்பாலங்கள், பல சுரங்கப்பாதைகள் ஆகியவை அடங்கும். இது சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே பயண நேரத்தை 45 நிமிடங்கள் குறைக்கும். காவிரி டெல்டா பகுதியின் கலாச்சார, விவசாய மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும். இரண்டாவது திட்டம், 5.16 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை-138-ன் தூத்துக்குடி துறைமுக சாலையின் 6 வழிப்பாதை ஆகும். இது சுமார்
₹200 கோடியில் கட்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள், பாலங்கள் இதில் உள்ளன. இது சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கி செலவுகளைக் குறைக்கும். வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தைச் சுற்றியுள்ள துறைமுகம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும்.
துறைமுக உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி முயற்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய ஊக்கமாக, சிதம்பரனார் துறைமுகத்தில் சுமார் ₹285 கோடி மதிப்புள்ள, ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு தளவாட நிலையம்–III-ஐ பிரதமர் திறந்து வைத்தார். இது இப்பகுதியில் மொத்த உலர் சரக்கு தேவைகளைக் கையாளுவதற்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். இதன் மூலம் ஒட்டுமொத்த துறைமுகச் செயல்திறன் மேம்படுவதோடு சரக்கு கையாளும் திறனும் மேம்படும்.
நிலையான, திறன் வாய்ந்த போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க தென் தமிழ்நாட்டில் மூன்று முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 90 கிலோ மீட்டர் மதுரை-போடிநாயக்கனூர் பாதையின் மின்மயமாக்கல் பணிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும். மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் இது சுற்றுலாவையும் பயணிகள் போக்குவரத்தையும் ஊக்குவிக்கும். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கிலோ மீட்டர் தூர நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் ₹650 கோடி இரட்டைப்பாதை, தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும். கூடுதலாக, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு (12.87 கிலோ மீட்டர்), திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கிலோ மீட்டர்) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதைத் திட்டம் ஆகியவை, சென்னை-கன்னியாகுமரி போன்ற முக்கிய வழித்தடங்களில் பயண நேரத்தைக் குறைக்கும். மேலும் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.
கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3, 4 (2x1000 மெகாவாட்) ஆகியவற்றிலிருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மாநிலத்தின் மின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான, மாநிலங்களுக்கு இடையேயான ஒரு பெரிய மின் பரிமாற்றத் திட்ட அமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் ₹550 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தில், கூடங்குளத்திலிருந்து தூத்துக்குடி-II ஜிஐஎஸ் துணை மின்நிலையம் வரை 400 கிலோவாட் இரட்டை-சுற்று மின்மாற்ற பாதையும் அதனுடன் தொடர்புடைய முனைய உபகரணங்களும் அடங்கும். இது தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், நம்பகமான தூய எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். அத்துடன் தமிழ்நாட்டுக்கும், இதில் இருந்து பயன் பெறும் பிற மாநிலங்களுக்குமான, அதிகரித்து வரும் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் இது முக்கியப் பங்காற்றும்.
****
(Release ID: 2148955)
AD/SM/BR/PLM/SG
(Release ID: 2148969)
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada