பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாலத்தீவு அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 25 JUL 2025 7:10PM by PIB Chennai

மாண்புமிகு அதிபர் அவர்களே,

இரு நாடுகளிலிருந்தும் வந்துள்ள சிறப்புமிக்க பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

முதலாவதாக, அனைத்து இந்தியர்களின் சார்பாக, மாலத்தீவின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாலத்தீவு அதிபருக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், என்னை கௌரவ விருந்தினராக அழைத்ததற்காக மாலத்தீவு அதிபர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் குறிக்கிறது. இருப்பினும், எங்கள் உறவின் வேர்கள் வரலாற்றை விட பழமையானவை மற்றும் கடல் போல ஆழமானவை. இன்று வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல்தலை, இரு நாடுகளின் பாரம்பரிய படகுகளை உள்ளடக்கி, நாம் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பகிரப்பட்ட பயணத்தில் சக பயணிகளும் கூட என்பதை பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

இந்தியா மாலத்தீவின் மிக நெருக்கமான அண்டை நாடு. இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற கொள்கையிலும், நமது மகாசாகர் தொலைநோக்குப் பார்வையிலும் மாலத்தீவு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மாலத்தீவின் மிகவும் நம்பகமான நண்பராக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. இயற்கை பேரழிவுகளாக இருந்தாலும் சரி, பெருந்தொற்றுகளாக இருந்தாலும் சரி, இந்தியா எப்போதும் 'முதல் பதிலளிப்பவராக' மாலத்தீவுக்கு ஆதரவளித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதாக இருந்தாலும் சரி, கோவிட்-19க்குப் பிறகு பொருளாதார மீட்சியை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி, இந்தியா எப்போதும் மாலத்தீவுடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருகிறது.

எங்களுக்கு, அது எப்போதும் நட்புதான் முதன்மை.

நண்பர்களே,

கடந்த அக்டோபரில் அதிபரின் இந்திய வருகையின் போது, விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான தொலைநோக்குப் பார்வையை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அந்தக் தொலைநோக்குப் பார்வை இப்போது நிஜமாகி வருகிறது. இதன் விளைவாக, நமது இருதரப்பு உறவுகள் புதிய உச்சங்களை எட்டுகின்றன, மேலும் பல முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஆதரவுடன் கட்டப்பட்ட நான்காயிரம் சமூக வீட்டுவசதி அலகுகள் இப்போது மாலத்தீவில் உள்ள பல குடும்பங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம், அட்டு சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஹனிமாதூ சர்வதேச விமான நிலையத்தின் மறுவடிவமைப்பு போன்ற திட்டங்கள் இந்த முழுப் பகுதியையும் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய மையமாக மாற்றும்.

மிக விரைவில், படகு அமைப்பு தொடங்கப்பட்டவுடன், பல்வேறு தீவுகளுக்கு இடையிலான இணைப்பு இன்னும் எளிதாகிவிடும். அதன் பிறகு, தீவுகளுக்கு இடையிலான தூரம் ஜிபிஎஸ் மூலம் அளவிடப்படாது, மாறாக படகு நேரத்தால் அளவிடப்படும்!

எங்கள் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்க, மாலத்தீவுக்கு 565 மில்லியன் டாலர்கள், தோராயமாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வரியை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். இது மாலத்தீவு மக்களின் முன்னுரிமைகளுடன் இணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

நண்பர்களே,

எங்கள் பொருளாதார கூட்டாண்மையை விரைவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பரஸ்பர முதலீட்டை அதிகரிக்க, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு விரைவில் பாடுபடுவோம். தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ளன. இப்போது எங்களது இலக்கு, காகித வேலைகளில் இருந்து செழிப்பு வரை என்பதாகும்!

உள்ளூர் நாணய தீர்வு முறையுடன், வர்த்தகம் இப்போது நேரடியாக ரூபாய் மற்றும் ருஃபியாவில் நடைபெறலாம். மாலத்தீவில் யுபிஐ விரைவாக ஏற்றுக்கொள்ளப்படுவது சுற்றுலா மற்றும் சில்லறை விற்பனைத் துறைகள் இரண்டையும் மேலும் வலுப்படுத்தும்.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு என்பது பரஸ்பர நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். இன்று திறக்கப்படும் பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடம், அந்த நம்பிக்கையின் உறுதியான அடையாளமாகும், இது எங்கள் வலுவான கூட்டாண்மையின் உருவகம்.

எங்கள் ஒத்துழைப்பு இப்போது வானிலை அறிவியலுக்கும் நீட்டிக்கப்படும். வானிலை எப்படி இருந்தாலும், எங்கள் நட்பு எப்போதும் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்கும்!

மாலத்தீவின் பாதுகாப்புத் திறன்களின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை எங்கள் பொதுவான நோக்கமாகும். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் மூலம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவோம்.

காலநிலை மாற்றம் எங்கள் இரு நாடுகளுக்கும் ஒரு பெரிய சவாலாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம், மேலும் இந்த பகுதியில், இந்தியா தனது அனுபவத்தை மாலத்தீவுடன் பகிர்ந்து கொள்ளும்.

மேதகு அதிபர் அவர்களே,

மீண்டும் ஒருமுறை, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், உங்களுக்கும் மாலத்தீவு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பான வரவேற்புக்காக  உங்கள் அனைவருக்கும் நன்றி.

வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையில் மாலத்தீவின் ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா துணை நிற்கும் என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்பு துறப்பு- இது பிரதமர்  உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****

(Release ID:2148553)
AD/BR/SG


(Release ID: 2148836)