இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசி பிரகடன வெளியீட்டுடன் வாரணாசியில் நிறைவடைந்தது இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு

பாரதத்தின் ஆன்மீக வலிமையானது போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்குப் பங்களிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா

Posted On: 20 JUL 2025 4:32PM by PIB Chennai

"வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு போதைப் பொருள் இல்லாத பாரதம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இரண்டு நாள் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு, காசி பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வுடன் இன்று வாரணாசியில் நிறைவடைந்தது. இளைஞர் நலன், விளையாட்டுகள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உச்சிமாநாடு, 600-க்கும் மேற்பட்ட இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள், 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக, சமூக-கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், கள நிபுணர்களை ஒன்றிணைத்தது. 2047-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இந்த நிகழ்வு ஒரு தீர்க்கமான தருணமாக அமைந்தது.

 

உச்சிமாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இந்த மாநாட்டில் பல்வேறு கருப்பொருள் அமர்வுகளில் ஆழமான விவாதங்கள் நடைபெற்றதாக கூறினார். இந்தக் கூட்டு சிந்தனையின் அடிப்படையில், காசி பிரகடனம் ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல், பாரதத்தின் இளைஞர் சக்திக்கான பகிரப்பட்ட சங்கல்பமாகவும் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

பாரதத்தின் ஆன்மீக வலிமை எப்போதும் பாரதத்தை நெருக்கடிகளில்  இருந்து காப்பாற்ற வழிநடத்தியுள்ளது என அவர் கூறினார். அந்த வகையில் ஆன்மீக அமைப்புகள் இப்போது போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பங்காற்ற வேண்டும் என அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.

இந்த மாநாட்டு விவாதங்கள் அறிவுசார் அடித்தளத்தை அமைத்து தந்துள்ளது. மேலும் பல்வேறு குரல்களை ஒரு பொதுவான தேசிய திசையில் ஒன்றிணைத்தன. இன்று முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காசி பிரகடனம்,  போதைப் பொருள்களுக்கு எதிரான ஒருமித்த கருத்தை உறுதிப்படுத்துகிறது. போதைப் பழக்கத்தைத் தடுக்கவும், மறுவாழ்வை ஆதரிக்கவும், ஆன்மீக, கலாச்சார, கல்வி, தொழில்நுட்ப முயற்சிகளின் ஒருங்கிணைப்பையும் இது வலியுறுத்துகிறது.

உச்சிமாநாட்டின் இறுதி அமர்வில் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 4-வது அமர்வின் முக்கிய உரையை உத்தரபிரதேச அரசின் கலால், மதுவிலக்குத்துறை இணையமைச்சர் திரு நிதின் அகர்வால் நிகழ்த்தினார்.

மத்திய அமைச்சர்கள் திரு வீரேந்திர குமார், திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திருமதி ரக்ஷா நிகில் காட்சே உள்ளிட்ட பல பிரமுகர்கள் நேற்றைய முதல் நாள் அமர்வுகளில் பங்கேற்று மதிப்புமிக்க கருத்துப் பகிர்வுகளை வழங்கினர்.

****

(Release ID: 2146223)

AD/TS/PLM/RJ


(Release ID: 2146252) Visitor Counter : 2