உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவு

Posted On: 20 JUL 2025 3:56PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வதையும் அவற்றின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், அடைமழை ஆகிய பேரிடர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI), புனே இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), இந்தூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட பல்துறை மத்திய குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு (2025) தென்மேற்கு பருவமழையின் போது இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, சேதங்களை நேரில்  மதிப்பீடு செய்வதற்காக, மத்திய அரசு ஏற்கனவே  அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு மத்தியக் குழுவை (IMCT) முன்கூட்டியே அனுப்பியுள்ளது. இந்தக் குழு 2025 ஜூலை 18 முதல் 21 வரை மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், பேரிடர் காலங்களில் மத்திய அரசு எந்த பாகுபாடும் இல்லாமல் மாநிலங்களுடன் உறுதியாக துணை நிற்கிறது. இந்த நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, 2023-ம் ஆண்டிற்கான வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் மறுகட்டமைப்புக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு ₹2006.40 கோடியை விடுவிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2025 ஜூலை 7 அன்று முதல் தவணையாக ₹451.44 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது .

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு ஏற்கனவே 2025 ஜூன் 18 அன்று மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (SDRF) முதல் தவணையாக ₹198.80 கோடியை இமாச்சலப் பிரதேசத்திற்கு விடுவித்துள்ளது. உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்காக இது ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள், ராணுவக் குழுக்கள், விமானப்படை ஆதரவு உட்பட அனைத்து தளவாட உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநிலத்தில் மொத்தம் 13 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

***

(Release ID: 2146219)

AD/TS/PLM/RJ


(Release ID: 2146234)