பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரி்ன் மோத்திஹரியில் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார்
இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் வளர்ச்சிக்கான சகாப்தம்:பிரதமர்
நக்சல் தீவிரவாதம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
பின்தங்கிய மாவட்டங்களின் மேம்பாட்டிற்கு உயர் முன்னரிமை அளிப்பதுடன், பிரதமரின் தன்தானிய வேளாண் திட்டத்தின் கீழ், 100 மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, விவசாயப் பணிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது: பிரதமர்
Posted On:
18 JUL 2025 2:17PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் மோத்திஹரியில் இன்று (18.07.2025) 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
தியாகத்தைக் குறிக்கும் சவான் மாதத்தில் பாபா சோமேஸ்வர் நாத் பாதங்களை வணங்கி அவரது ஆசியுடன் பீகார் மாநில மக்கள் வாழ்வாதார மேம்பாடு, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சம்பாரன் மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது என்று கூறினார். சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது மகாத்மா காந்தியடிகளுக்கு இந்த மாவட்டம் புதிய திசையைக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த மண்ணிலிருந்து பீகார் மாநிலத்தில் புதிய எதிர்காலத்திற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பீகார் மாநில மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய – மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டில் உலக அளவில் விரைவான வளர்ச்சியைக் கண்டு வரும் வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டில் உலகின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் புதிய உத்வேகம் பெற்று வருவதாக அவர் கூறினார். உலக அளவில் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் வளர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில், இந்தியாவில், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக கூறினார். நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மும்பை நகரைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மோத்திஹரி உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். குருகிராம் நகரைப் போல், சமஅளவிலான வாய்ப்புகள், கயாவிலும், பாட்னாவில் உள்ள தொழில்துறை புனே நகரைப் போல், வளர்ச்சி அடையும் என்றும் சூரத் நகரில் உள்ள வளர்ச்சியுடன் ஒப்பிடக் கூடிய அளவில், சந்தால் பர்கானா மேம்பாடு அடையும் என்று பிரதமர் தெரிவித்தார். ஜெய்ப்பூர் நகரைப் போன்று ஜல்பைகுரி மற்றும் ஜெஜ்பூர் பகுதிகள் சுற்றுலாத் துறையில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும் பிர்பும் பகுதி பெங்களூருவைப் போல் வளர்ச்சிப் பெறும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு, பீகார் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக விரைவான வளர்ச்சி கண்டு வரும் மாநிலமாக பீகார் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பீகாரில் திரு நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக முந்தைய மத்திய அரசு பத்து ஆண்டுக் காலத்தில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்திருந்ததை பல்வேறு தரவுகளுடன் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். கடந்த 2014-ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக 9 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது முந்தைய அரசைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் என்றும் அம்மாநில மக்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பீகாரின் நிலை குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், முந்தைய அரசுகளின் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்து இருந்ததாகவும் நிதியுதவி ஏழைகளுக்கு எட்டாத நிலையில் இருந்து வந்ததாகவும் கூறினார். ஏழைமக்களின் நலன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளை கொள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய நிலையிலிருந்து அம்மாநில மக்கள் மீண்டெழுந்து கடினமான பணிகளை சாதனைகளாக மாற்றியமைத்துள்ளதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நேரடியாக வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நான்கு கோடிக்கும் கூடுதலான வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதில் 60 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை நார்வே, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம் என்று அவர் தெரிவித்தார். மோத்திஹரி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் குடும்பங்கள் கான்கிரீட் வீடுகளைப் பெற்றுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். இன்று நடைபெறும் நிகழ்ச்சியின் வாயிலாக 12,000-க்கும் அதிகமான குடும்பங்கள் புதிய வீட்டிற்கான சாவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கூடுதலாக தலித்துகள், மகா தலித்துகள் மற்றும் பின்தங்கிய சமூகங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள 40,000-க்கும் அதிகமான குடும்பங்கள் கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்கான நிதியுதவியை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இது முந்தைய அரசுடன் ஒப்பிடுகையில், ஏழை மக்கள் வீடுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிக் காலத்தில் நில உடமையாளர்களின் நடவடிக்கைகள் மீது அச்சம் கொண்டு வீடுகளுக்கு வண்ணம் பூசுவதற்குக் கூட தயங்கிய நிலை இருந்ததாக அவர் கூறினார். முந்தைய ஆட்சியாளர்கள் ஏழை மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஒரு போதும் மேற்கொண்டதில்லை என்று அவர் கூறினார்.
பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வலுவான மற்றும் உறுதியான பங்களிப்பை அம்மாநில தாய்மார்களும், சகோதரிகளும் வழங்கியுள்ளதற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். மாநிலஅரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநிலப் பெண்கள், தெளிவாக அறிந்து வைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். முன்பு வங்கிக் கணக்கு தொடங்க முடியாத நிலையில், பத்து ரூபாயைக் கூட மறைத்து வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் பெரும்பாலான பெண்களின் நிலை இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஏழை மக்கள் கண்ணியத்துடன் வாழும் வகையில் அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்பதில் தாம் உறுதியுடன் இருந்ததாக அவர் கூறினார். இதனையடுத்து ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் மக்கய் இயக்கமாக செயல்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மூன்றரை கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதாக அவர் கூறினார். திரு நிதிஷ் குமார் தலைமையிலான அம்மாநில அரசு, மூத்த குடிமக்கள். மாற்றும் திறனாளிகள், மற்றும் விதவைகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூத்தியத் தொகையை 400 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார. கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 24,000-க்கும் அதிகமான சுயஉதவிக் குழுகளுக்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவிகளை பெற்றுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பெயர்களில் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதன் மூலம் அவர்களுக்கு நிதிசார் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இது சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முன்முயற்சிகள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடு முழுவதும் லட்சாதிபதி சகோதரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த பிரதமர், பீகாரில் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 1.5 கோடி பெண்கள் இந்த இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பீகாரில் 20 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் லட்சாதிபதி சகோதரியாகவும், சம்பாரன் மாவட்டத்தில் 80,000-க்கும் அதிகமான பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இந்த நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெண்களுக்கு நிதிசார் வலிமை அளிக்கும் வகையில் சமூக முதலீட்டு நிதியத்தை உருவாக்க 400 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். பீகாரில் லட்சக்கணக்கான பெண்கள் தற்சார்பு நிலையை அடையும் வகையில், அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் வாழ்வாதார சகோதரிகள் திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
கட்சிகளின் தொலைநோக்குப் பார்வை: பீகார் மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று என்று வலியுறுத்திய பிரதமர் திரு மோடி, அம்மாநிலத்தின் முன்னேற்றத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் முன்னேற்றம் அடைய முடியும் என்று கூறினார். அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இளையோருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். அண்மை ஆண்டுகளில் அம்மாநிலத்திற்குள் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான இளையோருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.
தனியார் துறையில், முதன் முறையாக வேலை தேடுபவர்களுக்கு உதவிடும் நோக்கில், மத்திய அரசு அண்மையில், ஒரு பெருந்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்தில் முதல் முறையாக பணி நியமனம் பெறும் இளையோருக்கு 15,000 ரூபாய் மானியத் தொகையை மத்திய அரசு வழங்கும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இதற்கென ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இத்தொகையை மத்திய அரசே வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டம் அம்மாநிலத்தில் உள்ள இளையோருக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்று அவர் கூறினார். முத்ரா கடனுதவித் திட்டத்தின் கீழ், சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். கடந்த 2 மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கடனுதவிகள் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சம்பாரன் மாவட்டத்தில் மட்டும் 60,000 இளைஞர்கள் சுய வேலைவாய்ப்புக்களுக்காக முத்ரா கடன்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான நடைமுறைகளை ஒரு போதும் மேற்கொண்டதில்லை என்றும் மக்களின் நிலங்களை பறிமுதல் செய்ததாகவும், கூறிய பிரதமர், இன்றைய பீகார் மாநிலத்தின் நிலையையும், லாந்தர் விளக்குகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இருந்த நிலையையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த வளர்ச்சி மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டதன் காரணமாக சாத்தியமாகியுள்ளது என்றும் பீகாரின் இந்தக் கூட்டணிக்கு மக்கள் உறுதியான முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அண்மை ஆண்டுகளில் நக்சல் தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டார். சம்பாரன், ஔரங்காபாத், கயா, ஜமுய் போன்ற மாவட்டங்கள் நக்சல் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். நக்சலைட் தீவிரவாதத்தால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் பாதிப்புக்குள்ளாகியிருந்ததையும் தற்போது நக்சல் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் அரசின் உறுதியான செயல்பாடுகள் மீது இளைஞர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது புதிய இந்தியா என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி எதிரிகளைத் தண்டிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிடாமல் அதற்கு தரைப்படை மற்றும் விமானப் படையை முழு அளவில் பயன்படுத்துவது என்பதை உறுதி செய்து, அந்த முடிவை பீகார் மண்ணிலிருந்து அறிவித்தேன் என்று அவர் கூறினார். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த உறுதியான நடவடிக்கையின் வெற்றியை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
ஆதார வளங்கள் மற்றும் திறமைகளில் மிகவும் பின்தங்கியிருந்த பீகார் மாநிலம் இன்று வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக உருவெடுத்து வருவதாக அவர் கூறினார். மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் மக்கானா பயிரிடும் விவசாயிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக மக்கானா பயிர் வகையின் விலை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதற்கான சந்தைகள், விரிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கானா பயிரிடும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அதற்கென தனி வாரியம் உருவாக்கப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பீகார் மாநிலத்தில் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு உதாரணங்களாக வாழைப்பழம், லிச்சி, மிர்ச்சா, கட்டார்னி அரிசி வகைகள், சார்துளு மாம்பழம் மற்றும் பான் வெற்றிலை போன்ற பயிர் வகைகளைப் பட்டியலிட்டார். இது போன்ற பல்வேறு தயாரிப்புகள் அம்மாநில விவசாயிகள் மற்றும் இளையோருக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் விளைபொருட்கள் மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும், பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு 3.5 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மோத்திஹரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 1,500 கோடி ரூபாய்க்கும் கூடுதலான நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கோஷங்கள் மற்றும் வாக்குறுதிகளுடன் நின்றுவிடாமல் செயல்பாடுகளின் மூலம் அவற்றை நிறைவேற்றுவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். அரசு கொள்கைகளை வகுப்பதிலும் முடிவுகளை மேற்கொள்வதிலும் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் குறிப்பிட்டார். பின்தங்கிய பகுதிகள் அல்லது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த அனைவரது மேம்பாட்டையும் மையமாகக் கொண்டு திட்டங்களை வகுப்பதில் அரசு முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார். பல தசாப்தங்களாக பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் என்று முத்திரையிடப்பட்ட 110-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கண்டறியப்பட்டு முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின்கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்கள் கடைநிலைக் கிராமங்களாக கருதப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு அவற்றை முதன்மைக் கிராமங்களாக கருதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் உயர் முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இதரப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை கூட்டணி அரசின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பழங்குடியின சமுதாயங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜன் மன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அவர்களின் மேம்பாட்டிற்காக 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, பிரதமரின் தன்தானிய வேளாண் திட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேளாண் பணிகளுக்கு உகந்த சூழல் கொண்ட 100 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்குமான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் 1.75 கோடி விவசாயிகள் நேரடியாக பயனடைந்து வருவதாகவும் குறிப்பாக பீகாரில் உள்ள விவசாயிகள் இதில் பயன் பெறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து முடிவுற்ற திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இத்திட்டங்கள் பீகார் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்று அவர் கூறினார். நாடு முழுவதிலும் நான்கு வெவ்வேறு வழித்தடங்களில் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் மோத்திஹரி- பாபுதான் பகுதியிலிருந்து தில்லியில் உள்ள ஆனந்த் விகார் வரை நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் மோத்திஹரி ரயில் நிலையம் அதி நவீன வசதியுடன் மேம்படுத்தப்பட்டு புதுப் பொலிவைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். தர்பங்கா – நற்கத்தியாதஞ்ச் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். நாட்டின் நன்மதிப்புக்கும் கலாச்சார பாரம்பரியத்துடனும் சம்பாரன் மாவட்டத்தில் உள்ள தொடர்புகள் குறித்து குறிப்பிட்ட அவர், ராம் – ஜானகி வழித்தடம் மோத்திஹரியில் உள்ள சத்ரகாட், கெசாரியா, சக்கியா, மதுபன் ஆகிய நகரங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். சீதாமர்ஹியிலிருந்து அயோத்தியாவிற்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அயோத்தியாவின் ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்கு சம்பாரன் மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று கூறினார். இது போன்ற ரயில் கட்டமைப்புத் திட்டங்கள் அம்மாநிலத்தின் போக்குவரத்து இணைப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதுடன் இப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க உதவிடும் என்று தெரிவித்தார்.
ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மற்றும் பழங்குடியின சமூகங்களின் பெயரில் நீண்டகாலமாக அரசியல் செய்து வந்த முந்தைய அரசுகள் அவர்களுக்கு சம உரிமை வழங்க மறுத்ததாகவும் அவர்தம் குடும்பங்களைத் தவிர பிறருக்கு மரியாதை அளிக்கத் தவறியதையும் பிரதமர் விமர்சித்தார். இது போன்ற மலிவான பிரச்சாரங்களிலிருந்து பீகார் மாநிலத்தைப் பாதுகாக்க அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அம்மாநிலத்தின் சிறப்பான எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளில் அம்மாநில மக்கள் பங்கேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் புதிய பீகார் மாநிலத்தைக் கட்டமைக்க உதவிடும் என்றும் இதற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் திரு ஆரீஃப் முகமது கான், முதலமைச்சர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு ஜிதன் ராம் மஞ்சி, திரு கிரி ராஜ் சிங், திரு ராஜீவ் ரஞ்சன் சிங், திரு சிராக் பாஸ்வான், திரு ராம்நாத் தாக்கூர், திரு நித்தியானந்த ராய், திரு சதீஷ் சந்திர துபே, டாக்டர் ராஜ்பூஷன் சவுத்ரி உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னணி
ரயில், சாலை, கிராமப்புற மேம்பாடு, மீன்வளம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இதில் சமஸ்திபூர்-பச்வாரா இடையேயான ரயில் வழித்தடத்தில் தானியங்கி சமிக்ஞை கருவிகளை அமைக்கும் பணிகளும் அடங்கும். இது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கு வகை செய்கிறது. தர்பங்கா-சமஸ்திபூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.580 கோடிக்கு கூடுதல் செலவில், தர்பங்கா-தல்வாரா, சமஸ்திபூர்-ராம்பத்ரபூர் இடையே இரட்டை வழித்தடம் அமைப்பது என்பது, ரயில் போக்குவரத்து சேவையின் திறனை அதிகரிக்க உதவுவதுடன், கால தாமதங்களையும் வெகுவாக குறைக்கும்.
பாடலிபுத்ராவில் வந்தே பாரத் ரயில்களைப் பராமரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் அடங்கும். பட்னி-சாப்ரா கிராமின் ரயில் வழித்தடத்தில் (114 கி.மீ) தானியங்கி சமிக்ஞை கருவிகளை பொருத்துவது சீரான ரயில் போக்குவரத்திற்கு உதவிடும். இந்த வழித்தடத்தில் இழுவை அமைப்பை மேம்படுத்தி, அதன் உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவதன் வாயிலாக எரிசக்தித் திறன் மேம்பட வழி வகுக்கும். இது ரயிலின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதுடன், அதன் வேகத்தையும் அதிகரிக்க உதவிடும். தர்பங்கா-நர்கதியாகஞ்ச் இடையேயான ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கவும், வடக்கு பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையே ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்தவும் ரூ.4,080 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இம்மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் தேசிய நெடுஞ்சாலை எண்- 319 - ல் உள்ள ஆரா புறவழிச்சாலையில், ஆரா - மோஹானியா இடையே 4-வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கும், பாட்னா-பக்சர் இடையே நெடுஞ்சாலை எண்- 922- ஐ இணைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது இப்பகுதியில் தடையற்ற போக்குவரத்துக்கான இணைப்பை வழங்குவதுடன், பயண நேரத்தையும் கணிசமான அளவில் குறைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் - 319 - ல் பராரியா - மோஹானியா வரையிலான 4-வழிச் சாலையையும் பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். இது ஆரா நகரத்தை தேசிய நெடுஞ்சாலை எண் - 02 (தங்க நாற்கரம்) சாலையுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் - 319 திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உதவிடும். இவைதவிர, தேசிய நெடுஞ்சாலை எண்- 333சி-ல், சர்வான் - சக்காய் இடையே நடைபாதையுடன் கூடிய 2-வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு இடையே ஒரு முக்கியதத்துவம் வாய்ந்த போக்குவரத்துக்கான இணைப்பாக செயல்படும்.
தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவையும், தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைகள், மின்னணுவியல் அமைப்பு முறை, வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பாட்னாவில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ள வளாகத்தில் அதிநவீன தொடக்கநிலை மென்பொருள் மேம்பாட்டு ஆலையையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த வசதிகள் தகவல் தொழில்நுட்ப மென்பொருள், சேவை ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவிடும். இது வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கான சூழலை வளர்ப்பதுடன், புதுமை கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துரிமை, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தும்.
பீகாரில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிய மீன் குஞ்சு பொரிப்பகங்கள், உயிரித் தொகுதிக்கான அலகுகள், அலங்கார மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு அலகுகள், மீன்களுக்கான தீவன உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட நவீன மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்க வகை செய்கிறது. மீன்வளர்ப்புத் திட்டங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், அம்மாநில கிராமப்புறங்களில் சமூக-பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவிடும்.
எதிர்காலத்திற்குத் தேவைப்படும் ரயில் கட்டமைப்பிற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ராஜேந்திர நகர் முனையம் (பாட்னா) முதல் புது தில்லி வரையும், பாபுதம் மோதிஹரி முதல் தில்லி (ஆனந்த் விஹார் முனையம்) வரையும், தர்பங்கா முதல் லக்னோ (கோமதி நகர்) வரையும், மால்டா டவுன் முதல் லக்னோ (கோமதி நகர்) வரை பகல்பூர் வழியாக நான்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பீகார் மாநிலத்தில் 61,500 சுய உதவிக் குழுக்களுக்கு, தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.400 கோடி நிதியுதவியை பிரதமர் விடுவித்தார். மகளிர் தலைமையிலான பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
12,000 பயனாளிகளின் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடியேறும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சில பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை பிரதமர் வழங்குகிறார். மேலும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு ரூ.160 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை பிரதமர் வழங்கினார்.
***
AD/TS/PKV/KPG/RJ/DL
(Release ID: 2145914)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam