பிரதமர் அலுவலகம்
பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது
Posted On:
09 JUL 2025 7:55PM by PIB Chennai
நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் மாண்புமிகு டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த பிரதமரை, அதிபர் நந்தி-நதைத்வா அன்புடன் வரவேற்று, சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். பிரதமர் அளவில் இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கான இந்தப் பயணம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளபட்ட பயணம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் நந்தி-நதைத்வா நடத்திய முதல் இருதரப்பு அரசு முறை சந்திப்பும் இதுவாகும்.
நமீபியாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அதிபர் நந்தி-நதைத்வாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பெருமைமிக்க வரலாற்றை நினைவு கூர்ந்தனர். நமீபியாவின் நிறுவனர் தந்தை டாக்டர் சாம் நுஜோமாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் & யுபிஐ, விவசாயம், சுகாதாரம் மற்றும் மருந்து, எரிசக்தி மற்றும் முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இருதரப்பு வர்த்தக வளர்ச்சியில் திருப்தி தெரிவித்த தலைவர்கள், இந்த விஷயத்தில் முழு ஆற்றலையும் இன்னும் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டனர். இது சம்பந்தமாக, இந்தியா-தென்னாப்பிரிக்க சுங்க ஒன்றியம் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவாதங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். நமீபிய நிபுணர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு முயற்சிகளை இந்தியா அதிகரிக்கும் என்றும், நமீபியாவில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதில் கூட்டாண்மைகளை ஆராயும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். விவசாயம், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் விரைவான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் வழங்கினார். விவசாய நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் அனுபவத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார், இது நமீபியாவிற்கு மதிப்பைக் கொண்டுவரும் ஒரு திட்டமாகும்.
இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்புத் திட்டத்தில் நமீபியாவின் ஆதரவிற்கு அதிபர் நந்தி-நதைத்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பில் சேர நமீபியாவிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பரஸ்பர நலன்கள் கொண்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மக்களுக்கு நமீபியா அளித்த வலுவான ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்த ஒன்றாகச் செயல்படவும் அவர்கள் உறுதியளித்தனர்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு தலைவர்களும் சுகாதாரம் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர். கூடுதலாக, பேரிடர் நெகிழ்தன்மை உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணிக்கான குழுவில் நமீபியா இணைந்துள்ளதாகவும், யுபிஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு இது என்றும் அறிவிக்கப்பட்டது.
பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதிபர் நந்தி-நதைத்வா ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஏதுவான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அவரை அழைத்தார்.
-----
(Release ID: 2143512)
RB/DL
(Release ID: 2143573)