பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 07 JUL 2025 11:13PM by PIB Chennai

மாண்புமிக்கவர்களே,

பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.

நண்பர்களே,

இந்த ஆண்டு, சிஓபி-30 பிரேசிலில் நடைபெறுகிறது. இது பிரிக்ஸ் அமைப்பில் சுற்றுச்சூழல் குறித்த விவாதங்களை பொருத்தமானதாகவும் உரிய நேரத்திலும் மேற்கொள்கிறது. பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எப்போதும் இந்தியாவிற்கு முதன்மையான முன்னுரிமைகளாக இருந்து வருகிறது. எங்களுக்கு, இது எரிசக்தி குறித்தது மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் இடையில் சமநிலையைப் பராமரிப்பது பற்றியதாகும். சிலர் அதை வெறும் எண்களாகப் பார்த்தாலும், இந்தியாவில், இது நமது அன்றாட வாழ்க்கை மற்றும் மரபுகளின் ஒரு பகுதியாகும். எங்கள் கலாச்சாரத்தில், பூமி ஒரு தாயாக மதிக்கப்படுகிறது.

"மக்கள், கிரகம் மற்றும் முன்னேற்றம்" என்ற உணர்வால் வழிநடத்தப்பட்டு, இந்தியா பல முக்கிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை), 'ஏக் பெட் மா கே நாம்' (அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று), சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் மீட்சி உள்கட்டமைப்புக்கான கூட்டணி, பசுமை ஹைட்ரஜன் இயக்கம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மற்றும் பெரும் பூனைகள் (புலிகள்) கூட்டமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியாவின் ஜி20 தலைமையின் போது, நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதில் நாங்கள் வலுவான முக்கியத்துவம் அளித்தோம். இந்த நோக்கத்துடன், பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளிடையேயும் ஒருமித்த கருத்தை அடைந்தோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க, நாங்கள் பசுமை கடன் முன்முயற்சியையும் தொடங்கினோம்.

உலகின் விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருந்தபோதிலும், பாரிஸ் உறுதிமொழிகளை முன்கூட்டியே அடைந்த முதலாவது நாடு இந்தியாவாகும். 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தில் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான எங்கள் இலக்கை நோக்கி விரைவான முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், இந்தியா அதன் சூரிய சக்தியின் நிறுவப்பட்ட திறனில் குறிப்பிடத்தக்க 4000% அதிகரிப்பைக் கண்டுள்ளது. இந்த முயற்சிகள் மூலம், நிலையான மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143015

***

AD/TS/IR/SG/KR


(Release ID: 2143090)