பிரதமர் அலுவலகம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
Posted On:
07 JUL 2025 8:18AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
"உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார். பின்னர், பிரதமர் "பன்முகத்தன்மை, பொருளாதார-நிதி விவகாரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் கூட்டாண்மை மற்றும் விருந்தினர் நாடுகள் பங்கேற்றன.
உலகளாவிய நிர்வாகம், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமர்வில் உரையாற்றிய பிரதமர், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார தேவைகளை வலியுறுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பத்தை அணுகுவதில் நிலையான வளர்ச்சிக்கு அதிக ஆதரவு தேவை என்று அவர் குறிப்பிட்டார். 20-ம் நூற்றாண்டின் உலகளாவிய அமைப்புகளுக்கு 21- ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் இல்லை என்பதை எடுத்துரைத்த அவர், அவற்றை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். பன்முனைத்தன்மை கொண்ட உலக ஒழுங்கமைப்பிற்கு அழைப்பு விடுத்த பிரதமர், ஐ.நா. பாதுகாப்பு குழுமம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்ற உலகளாவிய நிர்வாக அமைப்புகள் தற்கால யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில், உடனடி சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். ஐ.நா. பாதுகாப்பு குழுமத்தின் சீர்திருத்தத்தின் அவசியத்தை எடுத்துரைத்ததற்கும், உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் இந்த பிரச்சினையில் வலுவான கருத்தை ஏற்றுக்கொண்டதற்கும் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், மனித சமுதாயம் எதிர்கொள்ளும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். 2025 ஏப்ரலில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இந்தியா மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மீதான தாக்குதலாகும் என்றும் அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான உலகளாவிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த பிரதமர், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பவர்கள், ஊக்குவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பான புகலிடங்களை அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த பிரிக்ஸ் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், அச்சுறுத்தலைக் எதிர்கொள்வதில் சகிப்புத்தன்மையை கடைபிடிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விரிவாகக் குறிப்பிட்ட பிரதமர், மேற்கு ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரையிலான மோதல்கள் மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டார். இதுபோன்ற மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியிலான நடவடிக்கைக்கு இந்தியா எப்போதும் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அத்தகைய முயற்சிகளுக்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
"பல தரப்பு வாதம், பொருளாதார-நிதி விவகாரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல்" என்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர், பன்முகத்தன்மை பிரிக்ஸ் அமைப்பின் மதிப்புமிக்க பலம் என்று கூறினார். உலக நாடுகள் அழுத்தத்தையும், உலக சமூகம் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொண்ட தருணத்திலும் சவால்கள் இருந்தபோதிலும், பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிந்தது என்று தெரிவித்தார். பன்முக உலகத்தை வடிவமைப்பதில் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக, அவர் நான்கு பரிந்துரைகளை குறிப்பிட்டார். முதலாவதாக, திட்டங்களுக்கு அனுமதி அளிக்க, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, தேவை சார்ந்த கொள்கை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையைப் பின்பற்ற வேண்டும்; இரண்டாவதாக, உலகளாவிய வளரும் நாடுகளுக்கு பயனளிக்கும் ஒரு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி களஞ்சியத்தை அமைப்பதை குழு பரிசீலிக்க வேண்டும்; மூன்றாவதாக, முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பாகவும், மீள்தன்மையுடனும் மாற்றுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். நான்காவதாக, செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தின் பிரச்சினைகளை ஆராயும் அதே வேளையில், பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவுக்காக அமைப்பு பணியாற்ற வேண்டும். இந்தத் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு சமமான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
தலைவர்கள் பங்கேற்ற அமர்வின் நிறைவில், உறுப்பு நாடுகள் 'ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தை' ஏற்றுக்கொண்டன.
***
(Release ID 2142787)
AD/TS/IR/LDN/KR
(Release ID: 2142898)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam