தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஈ.பி.எஃப்.ஓ உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்படாத முகவர்களை தவிர்க்கவும், பாதுகாப்பான ஆன்லைன் சேவைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அலுவலக இணையதளத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தல்

Posted On: 16 JUN 2025 1:42PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ), அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

அண்மைக் காலங்களில் ஈ.பி.எஃப்.ஓ, உறுப்பினர் சுய விவரங்கள் திருத்தத்தை எளிதாக்குவதற்கும், பரிமாற்றக் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும்,  ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கும்,  ஒரு லட்சம் ரூபாய் வரையிலான முன்பணக் கோரிக்கைகளை நிறைவேற்றும் செயல்பாட்டை பயன்படுத்துவதற்கும் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில் நோய், வீட்டுவசதி, திருமணம் மற்றும் கல்வி ஆகியவற்றின் கீழ் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான முன்பணம் தானியங்கி உரிமை கோரல்  வசதியின் கீழ் வழங்கப்பட்டன. இதன் விளைவாக 2.34 கோடி கோரிக்கைகளுக்கு இந்த முறையின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. பரிமாற்ற உரிமை கோரல் செயல்முறையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதலாளி ஒப்புதல் தேவையை நீக்குவதன் மூலம் 15.01.2025 அன்று முதல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர் சுயவிவர திருத்தத்திற்கான ஆன்லைன் வசதி, ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர் சுயவிவர திருத்தத்திற்கு முதலாளி மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பைச் சார்ந்திருக்கும் நிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணைப்பு நீக்க வசதி, உறுப்பினர்கள் தங்கள் யு.ஏ.என். எண்ணில் இருந்து தவறான உறுப்பினர் அடையாள இணைப்பை நீக்க உதவுகிறது. இதனால் குறைகள் குறைந்துள்ளன.

முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது. இந்த வசதியைப் பெறுவதன் மூலம், உறுப்பினர் பாஸ்புக் விவரங்களை பார்வையிடுதல், உறுப்பினர் சுய விவரக் குறிப்புகளை புதுப்பிப்பது, உரிமைகோரல் சமர்ப்பிப்பு போன்ற சேவைகளை உடனடியாக பெறமுடியும்.

ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதைக் குறைக்கவும், காசோலை, சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கை பதிவேற்ற வேண்டும் என்ற தேவையை ஈ.பி.எஃப்.ஓ. நீக்கியுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு விவரங்களை யு.ஏ.என். உடன் இணைப்பதற்கு முதலாளியின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் 2025 ஏப்ரல் முதல் நீக்கப்பட்டது.

இருப்பினும், பல இணையதள நிறுவன செயல்பாட்டாளர்கள் / ஃபின்டெக் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இலவச சேவைகளுக்கு ஈ.பி.எஃப்.ஓ. உறுப்பினர்களிடமிருந்து பெரும் தொகையை வசூலிப்பது தெரியவந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில், இந்த செயல்பாட்டாளர்கள் ஈ.பி.எஃப்.ஓ.வின் ஆன்லைன் குறை தீர்க்கும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர், இது எந்தவொரு உறுப்பினரும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இலவசமாகச் செய்யக்கூடியதாகும்.  உறுப்பினர்கள்  ஈ.பி.எஃ.ப்.ஓ. தொடர்பான சேவைகளுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் அல்லது முகவர்களை அணுக வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள், இது அவர்களின் நிதி தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தக்கூடும். இந்த நிறுவனங்கள் ஈ.பி.எஃப்.ஓ.வால் அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் அவை தேவையற்ற கட்டணங்களை வசூலிக்கலாம், உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யலாம்.

ஈ.பி.எஃப்.ஓ. குறைகளைக் கண்காணித்து நிவர்த்தி செய்யும் ஒரு வலுவான அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் உறுப்பினர்களின் குறைகள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு காணப்படும் வரை கண்காணிக்கப்படுகின்றன. 2024-25 நிதியாண்டில் 98% குறைகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136592

***

AD/TS/GK/LDN/KR/DL


(Release ID: 2136691)