பாதுகாப்பு அமைச்சகம்
மூன்று லட்சம் பேருடன் என்சிசி விரிவாக்கம் செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்
Posted On:
03 JUN 2025 1:14PM by PIB Chennai
போபாலில் இன்று (ஜூன் 03, 2025) நடைபெற்ற தேசிய மாணவர் படையின் (NCC- என்சிசி) சிறப்பு கூட்டு மாநில பிரதிநிதிகள், கூடுதல்/துணைத் தலைமை இயக்குநர்கள் மாநாட்டை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மூன்று லட்சம் பேருடன் என்சிசி-யை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல மாநிலங்கள் இதற்கு ஏற்கெனவே தங்கள் ஒப்புதலை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். தேவையான பயிற்சி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதிலும் இளைஞர் மேம்பாட்டிலும் என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை முக்கியப் பங்கு வகிப்பதாவும் அவர் கூறினார். முன்னாள் ராணுவ வீரர்களை என்சிசி பயிற்றுவிப்பாளர்களாகச் சேர்ப்பது, முன்னாள் படை வீரர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழிகளை வழங்குதல் உள்ளிட்ட அரசின் அண்மைக்கால முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். தூய்மை இந்தியா இயக்கம், போதைப் பொருள் தடுப்பு இயக்கம் போன்ற தேசிய இயக்கங்களில் என்சிசி-யின் தீவிர ஈடுபாட்டை அவர் பாராட்டினார். 2025 மே 18 அன்று வெற்றிகரமாக சிகரத்தை அடைந்ததற்காக என்சிசி எவரெஸ்ட் பயணக் குழுவினரை அமைச்சர் பாராட்டினார், இது என்சிசி மாணவர்களின் துணிச்சல், மனஉறுதி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய-மாநில அரசுகள் இதில் ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு சஞ்சய் சேத், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவாக்கத்திற்கான மனிதவளம், உள்கட்டமைப்பு, நிதியுதவி ஆகியவற்றில் மாநிலங்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இளைஞர்களைச் சிறப்பாக வடிவமைப்பதிலும் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும் என்சிசி-யின் ஒருங்கிணைந்த பங்கை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் வலுவான பயிற்சி கட்டமைப்பையும், முகாம் உள்கட்டமைப்பையும் நிறுவுவதில் கவனம் செலுத்தி, என்சிசி செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கல்வி, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு ஆகிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில பிரதிநிதிகள், மாநிலங்களின் என்சிசி தலைவர்கள் பங்கேற்றனர்.
******
(Release ID: 2133486)
AD/SM/PLM/AG/KR
(Release ID: 2133498)