வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள்: எழுச்சிமிகு வடகிழக்கு உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
25 MAY 2025 11:44AM by PIB Chennai
எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 குறிப்பிடத்தக்க முதலீட்டு அறிவிப்புகளுடன் நேற்று (சனிக்கிழமை மே 24) அன்று நிறைவடைந்தது. பிரதமர் திரு நரேந்திர மோடி மே 23 அன்று உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்தார். வடகிழக்கு இந்தியா உலகளாவிய கூட்டாண்மை மற்றும் பரஸ்பர ஆர்வத்தின் மையமாக உருவெடுத்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா தமது நிறைவுரையில் கூறினார். எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.4.3 லட்சம் கோடி முதலீட்டு ஆர்வத்தை ஈர்த்ததாகவும், இது வடகிழக்கு பிராந்தியம் இந்தியாவின் அடுத்த பொருளாதார சக்தியாக மாறுவதற்கான களத்தை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"ஜப்பான் முதல் ஐரோப்பா, ஆசியான் நாடுகள் வரை 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை நாங்கள் வரவேற்றோம். இதில் ஒருமித்த உணர்வு இருந்தது. அதாவது இந்தியாவின் எதிர்காலம் வடகிழக்கில் உள்ளது" என்று அமைச்சர் கூறினார்.
வடகிழக்கு பிராந்தியத்தின் பரந்த ஆற்றலை அங்கீகரிப்பது மட்டுமின்றி, அதனை ஏற்றுக்கொண்டதற்காகவும் பிரதமர் திரு மோடியை திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா பாராட்டினார். “பிரதமர் திரு மோடி தலைமையின் கீழ் அரசின் அர்ப்பணிப்பும், இந்தப் பிராந்தியத்துடனான அவரது ஆழமான, இதயப்பூர்வமான தொடர்பும் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை. சுதந்திரத்திற்குப் பின் ஆறு தசாப்தங்களாக, அடுத்தடுத்த அரசுகள் இந்த நிலத்தின் பரந்த ஆற்றலை அங்கீகரிக்கத் தவறிவிட்டன - ஒரு காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்களித்த நிலம். ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த ஆற்றலைப் புரிந்துகொண்டது மட்டுமின்றி, அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்” என்று அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய ஊக்கப்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு ராஜீயவாதிகள், தூதர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தினார். "இந்த விவாதங்கள் ரூ.4.30 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்களுக்கு உண்மையான பலனை அளித்துள்ளன" என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்ட தொழில்துறைத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தொடக்க விழாவின்போது, வடகிழக்கு பிராந்தியத்தில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக ரூ.1,55,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கூட்டாக அறிவித்தனர்.
மத்திய இணையமைச்சர் திரு சுகந்த மஜும்தார், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, திரிபுரா அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திருமதி சந்தனா சக்மா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131072
*******
TS/SMB/SG
(Release ID: 2131139)