பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் (122ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25-05-2025

Posted On: 25 MAY 2025 11:38AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக  ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது.  நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு.  நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது.  நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம்.  ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. 

 

நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூர் என்பது ஒரு இராணுவச் செயல்பாடு மட்டுமல்ல, இது நமது உறுதிப்பாடு, சாகஸம், மாறிவரும் பாரதத்தின் காட்சி இது; இந்தக் காட்சி தான் நாடு முழுவதிலும் தேசபக்தி உணர்வால் நிரப்பியது, மூவண்ணத்தால் கொட்டி முழக்கியது.  நீங்களே கவனித்திருக்கலாம், தேசத்தின் பல நகரங்களில், கிராமங்களில், சின்னச்சின்ன பகுதிகளில் எல்லாம், மூவண்ண யாத்திரைகள் நடந்தன.  ஆயிரக்கணக்கான மக்கள், கைகளிலே மூவண்ணக்கொடியை ஏந்திக் கொண்டு, தேசத்தின் இராணுவத்திடம் தங்கள் அன்புகலந்த வணக்கங்களை வெளிப்படுத்தினார்கள்.  பல நகரங்களில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக ஆக, அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள்.   சண்டீகட்டின் காணொளிகள் மிகவும் பிரபலமாகியதை நாமுமே கூட பார்த்தோம்.  சமூக ஊடகங்களில் கவிதைகள் எழுதப்பட்டன, உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டன.   சின்னச்சின்னக் குழந்தைகள் கூட, ஓவியங்கள் வரைந்தார்கள், அதிலே பெரிய செய்திகள் மறைபொருளாக இருந்தன.  நான் மூன்று நாட்கள் முன்பாகத்தான் பீகானேர் சென்றிருந்தேன்.  அங்கே குழந்தைகள் இப்படிப்பட்டதொரு ஓவியத்தைத் தான் எனக்குப் பரிசாக அளித்திருந்தார்கள்.  ஆப்பரேஷன் சிந்தூர், நாட்டுமக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொன்னால், பல குடும்பங்கள் இதைத் தங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார்கள்.  பிஹாரின் கடிஹாரிலே, உபியின் குஷிநகரிலே, மேலும் பல நகரங்களிலே, இந்த வேளையில் பிறந்த குழந்தைகளுக்கு, சிந்தூர் என்று பெயர் சூட்டினார்கள்.

 

நண்பர்களே, நமது வீரர்கள், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நாசம் செய்தார்கள், இது அவர்களின் மாபெரும் சாகஸம்.  மேலும் அதிலே பாரதத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் பலமும் கூட அதிலே இடம் பெற்றிருந்தது.  அதிலே தற்சார்பு பாரதத்தின் உறுதிப்பாடு வெளிப்பட்டது.  நமது பொறியாளர்கள், நமது தொழில்நுட்பவியலாளர்கள் என அனைவரும் இந்த வெற்றிக்கு வியர்வை சிந்தியிருக்கிறார்கள்.   இந்த இயக்கத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதை முன்னிறுத்தி, புதிய சக்தி வெளிப்படுகிறது.  பல விஷயங்கள் மனதைத் தொடும் வண்ணம் இருக்கிறது.  ஒரு தாய்-தந்தை இணை – இனிமேல் நாங்கள் எங்களின் குழந்தைகளுக்கு பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளையே வாங்கித் தருவோம், சிறுவயது முதற்கொண்டே தேசபக்தி தொடங்க வேண்டும் என்று சொன்னார்கள்.  சில குடும்பங்களோ– நாங்கள் எங்களுடைய விடுமுறைகளை தேசத்தின் ஏதாவது ஒரு அழகான இடத்தில் செலவு செய்வோம் என்று சபதமே மேற்கொண்டார்கள்.  பல இளைஞர்கள், Wed in India, அதாவது இந்தியாவில் திருமணம் செய்வோம் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இனி எந்தவொரு பரிசுப்பொருளை வாங்க வேண்டும் என்றாலும், ஒரு இந்தியக் கைவினைஞர் தயாரித்த பொருளையே வாங்குவேன் என்று ஒருவர் கூறினார்.

 

நண்பர்களே, இது தானே பாரதத்தின் மெய்யான பலம், மக்களின் மனங்களின் இணைவு, மக்கள் பங்களிப்பு!!  நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன், வாருங்கள், இந்த சந்தர்ப்பத்திலே நாம் உளவுறுதி பூணுவோம் – நாம் நமது வாழ்க்கையிலே, முடிந்த வரையில், நம்முடைய தேசத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முதன்மை அளிப்போம்.  இது பொருளாதார தற்சார்பு தொடர்பான விஷயம் அல்ல, இது தேசத்தின் நிர்மாணத்தில் பங்களிப்பு பற்றிய உணர்வு.  நமது ஒரு அடியெடுப்பு, பாரதத்தின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்.

 

நண்பர்களே, பேருந்துப்பயணம் எத்தனை எளிமையான விஷயம்.  ஆனால் நான் எப்படிப்பட்ட கிராமத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன் என்றால், அங்கே முதன்முறையாக ஒரு பேருந்து சென்றடைந்தது.  இந்த நாளுக்காகத் தான் அங்கே மக்கள் பல்லாண்டுகளாகக் காத்துக் கிடந்தார்கள்.  அந்தக் கிராமத்தில் முதன்முறையாக ஒரு பேருந்து சென்ற போது, அந்த மக்கள் மேள வாத்தியங்கள், தாரை தப்பட்டைகளை இசைத்து அதை வரவேற்றார்கள்.  பேருந்தைப் பார்த்து அவர்களின் உற்சாகம் நிலை கொள்ளவில்லை.  கிராமத்திலே நல்ல சாலை இருந்தது, மக்களுக்குத் தேவையும் இருந்தது என்றாலும் இதற்கு முன்பாக அங்கே பேருந்துகள் செல்லவில்லை.  ஏன்?  ஏனென்றால் இந்த கிராமம் மாவோவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தது.  இந்த இடம் மகாராஷ்டிரத்தின் கட்சிரௌலி மாவட்டத்தில் இருக்கிறது, கிராமத்தின் பெயர் காடேஜரி ஆகும்.  காடேஜரி கிராமத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை, அக்கம்பக்கத்தில் இருந்த பகுதியில் எல்லாம் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.  இப்போது இங்கே நிலைமை வேகமாக இயல்பாக மாறிக் கொண்டிருக்கிறது.  மாவோவாதிகளுக்கு எதிராக, சமூகப் போராட்டம் காரணமாக, இப்போது அடிப்படை வசதிகள் இப்படிப்பட்ட இடங்களுக்குக் கூட சென்றடையத் தொடங்கிவிட்டது.  பேருந்து வருவதால் தங்களின் வாழ்க்கையில் சுலபத்தன்மை அதிகரித்து விடும் என்று கிராமவாசிகள் கூறுகிறார்கள்.

 

நண்பர்களே, மனதின் குரலில் நாம் சத்திஸ்கட்டில் நடைபெற்ற பஸ்தர் ஒலிம்பிக்ஸ் மற்றும் மாவோவாதம் பாதித்த பகுதிகளில் அறிவியல் சோதனைக்கூடங்கள் பற்றி பேசியிருக்கிறோம்.  இங்கே இருக்கும் குழந்தைகளிடம் அறிவியல் தொடர்பாக பேரார்வம் இருக்கிறது.  இவர்கள் விளையாட்டுக்களில் அற்புதம் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.  இப்படிப்பட்ட முயற்சிகளால் என்ன தெரிய வருகிறது என்றால், இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் எத்தனை திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது தான்.  இந்த மனிதர்கள் தடைகள்-சவால்கள் அனைத்தையும் தாண்டி, தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கக்கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  10ஆவது, 12ஆவது வகுப்புக்களுக்கான, தந்தேவாடா மாவட்டத்தின் பொதுத்தேர்வு முடிவுகள் மிகச் சிறப்பானவையாக இருந்தன என்பதை அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.  சுமார் 95 சதவீத தேர்ச்சி விகிதத்தோடு இந்த மாவட்டம் 10ஆவது வகுப்பு தேர்வு முடிவுகளில் தலைசிறந்து விளங்குகிறது.  அதே போல 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் இந்த மாவட்டமானது, சத்திஸ்கட்டிலே 6ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.  சற்றே சிந்தித்துப் பாருங்கள்!!  எந்த தந்தேவாடாவில் மாவோவாத சித்தாந்தம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்ததோ, அங்கே இன்று கல்வி கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.  இப்படிப்பட்ட மாற்றங்கள் தாம் அனைவரின் உள்ளங்களிலும் பெருமிதத்தை நிரம்பச் செய்கிறது. 

 

எனதருமை நாட்டுமக்களே, இப்போது நான் சிங்கங்களோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  கடந்த வெறும் ஐந்தாண்டுகளிலே, குஜராத்தின் கிர் பகுதியிலே, சிங்கங்களில் எண்ணிக்கை 674லிருந்து அதிகரித்து 891ஆக அதிகரித்திருக்கிறது.  சிங்கங்களுக்கான கணக்கெடுப்பை நடத்திய பிறகு தெரிய வந்த இந்த சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.  நண்பர்களே, இந்த விலங்குகளின் கணக்கெடுப்பு எப்படி நடக்கிறது என்று உங்களில் பலர் தெரிந்து கொள்ள விருப்பப்படலாம்.  இந்தச் செயல்பாடு மிகவும் சவால்கள் நிறைந்த ஒன்று.  சிங்கங்களின் கணக்கெடுப்பு 11 மாவட்டங்களிலே, 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலே செய்யப்பட்டது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.  கணக்கெடுப்பிற்காக குழுக்கள் 24 மணிநேரமும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.  இந்த மொத்த இயக்கத்திலும் சரிபார்த்தல், மறுமுறை சரிபார்த்தல் என இரண்டும் செய்யப்பட்டன.  இதன் வாயிலாக மிக நுணுக்கமான முறையிலே சிங்கங்களைக் கணக்கிடுதல் பணியை நிறைவு செய்ய முடிந்தது.

 

நண்பர்களே, சமூகத்திலே தங்களுடையதாக ஏற்கும் தன்மை பலமடையும் போது, எத்தகைய அருமையான முடிவுகள் வருகின்றன என்பதைத் தான்   ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நமக்குக் காட்டுகிறது.  சில தசாப்தங்கள் முன்பு, கிர் பகுதியில் இருந்த நிலைமை மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது.  ஆனால் அங்கே இருந்த மக்கள் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்தும் சவாலை மேற்கொண்டார்கள்.  அங்கே நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, உலக அளவிலான மிகச்சிறப்பான செயல்பாடுகள் கையாளப்பட்டன.  பெரிய அளவில் வன இலாக்கா அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படும் முதல் மாநிலமாக இந்த வேளையில் தான் குஜராத் மாநிலம் ஆனது.  இன்று நாம் அதன் விளைவுகளைப் பார்க்கிறோம், இதிலே இவர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது.  வன உயிரினப் பாதுகாப்பிற்காக நாம் இப்படித்தான் எப்போதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். 

 

என் அன்பான நாட்டுமக்களே, 2-3 நாட்கள் முன்பு, நான், முதல் Rising North East Summit, உயர்வடையும் வடகிழக்கு உச்சிமாநாட்டிற்குச் சென்றிருந்தேன்.  அதற்கு முன்பாக, நாம், வடகிழக்கின் வல்லமைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஷ்டலக்ஷ்மி மகோத்சவத்தையும் கொண்டாடினோம்.  வடகிழக்கு பற்றிய பேச்சு வேறுரகமானது, அங்கே இருக்கும் திறமைகள், அங்கே இருக்கும் திறன்கள் எல்லாம் உண்மையிலேயே அலாதியானவை.  எனக்கு ஒரு மிக சுவாரசியமான விஷயம் தெரிய வந்தது, இது Crafted Fibers பற்றியது.  இந்த Crafted Fibers என்பது ஒரு பிராண்ட் மட்டுமல்ல, இது சிக்கிம் மாநிலத்தின் பாரம்பரியம், நெசவுக்கலை, மற்றும் இன்றைய ஃபேஷன் நோக்கு என்ற இந்த மூன்றின் அழகான சங்கமம்.  இதன் தொடக்கத்தை டாக்டர் சேவாங்க் நோர்பூ பூடியா (Dr. Chewang Norbu Bhutia) தான் ஏற்படுத்தினார்.  தொழில்ரீதியாக இவர் ஒரு கால்நடை மருத்துவர் என்றாலும் இவருடைய மனதால் இவர் சிக்கிம் கலாச்சாரத்தின் மெய்யான ப்ராண்ட் தூதுவர் என்று கூறலாம்.  ஏன் நாம் நெசவுக்கலைக்கு ஒரு புதிய கோணத்தை ஏற்படுத்தக் கூடாது என்று இவர் சிந்தித்தார்.  இந்த எண்ணத்தில் விளைந்தது தான் Crafted Fibers.  இவர் பாரம்பரியமான நெசவை, நவீன ஃபேஷனோடு இணைத்ததால், இதை ஒரு சமூக முன்னெடுப்பாக உருவாக்கினார்.  இப்போது இவரிடத்தில் துணிகள் மட்டும் தயாராவதில்லை, இவரிடத்தில் வாழ்க்கைகள் நெசவு செய்யப்படுகின்றன.  இவர் உள்ளூர் மக்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கிறார், அவர்களைத் தற்சார்புடையவர்களாக ஆக்குகிறார்.  கிராமங்களைச் சேர்ந்த நெசவாளர்கள், கால்நடைப் பராமாரிப்பாளர்கள், சுயவுதவிக் குழுக்கள் ஆகிய அனைவரையும் இணைத்து டாக்டர் பூடியா, வேலைவாய்ப்புக்களுக்கான புதிய பாதையை அமைத்திருக்கிறார்.   இன்று, வட்டாரப் பெண்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, சிறப்பாக வருவாய் ஈட்டி வருகிறார்கள்.  இந்த crafted fiberகளால் உருவாக்கப்பட்ட சால்வைகள், ஸ்டோல்கள், கையுறைகள், காலுறைகள் என அனைத்தும் உள்ளூர் கைத்தறியால் உருவானவை.  இவற்றில் பயன்படுத்தப்படும் இழைகள், சிக்கிமின் முயல்கள் மற்றும் செம்மறியாட்டிலிருந்து வருபவை.  வண்ணம் கூட முழுமையாக இயற்கையாகவே இருக்கிறது, எந்த ரசாயனப் பயன்பாடும் இல்லை, இயற்கையான வண்ணம் மட்டுமே.  டாக்டர். பூடியா, சிக்கிமின் பார்ம்பரிய நெசவுக்கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கிறார்.  நாம் பாரம்பரியத்தை, பேரார்வத்தோடு இணைக்கும் போது, அது உலகத்தை எந்த அளவுக்குக் கவர்கிறது என்பதையே டாக்டர் பூடியாவின் இந்தப் பணி நமக்குக் கற்பிக்கிறது.

 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று நான் உங்களுக்கு ஒரு அருமையான நபரைப் பற்றிக் கூற இருக்கிறேன், ஒரு கலைஞர், தவிர வாழும் உத்வேகக் காரணியாகவும் இவர் இருக்கிறார்.  இவர் பெயர் ஜீவன் ஜோஷி, வயது 65 ஆண்டுகள்.  நீங்களே சிந்தியுங்கள், யாருடைய பெயரிலேயே ஜீவன் இருக்கிறதோ, அவரிடம் எத்தனை உயிர்ப்பு நிறைந்திருக்கும் என்பதை.   ஜீவன் அவர்கள் உத்தராகண்டின் ஹல்த்வானியிலே வசிக்கிறார்.  சிறுவயதில் போலியோவால் பாதிப்பு ஏற்பட்டு இவருடைய கால்களின் பலத்தை இழந்தார் என்றாலும், போலியோவால் இவருடைய நெஞ்சுரத்தை பறிக்க இயலவில்லை.  இவர் நடப்பது கொஞ்சம் மெதுவாக இருக்கலாம் ஆனால், இவருடைய மனத்தின் கற்பனைகளோ சிறகு கட்டிப் பறந்து கொண்டிருக்கும்.  இந்தப் பறத்தலில் தான், ஜீவன் அவர்கள் ஒரு விசித்திரமான கலைக்குப் பிறப்பளித்தார், பகேட் என்று இதற்குப் பெயர் சூட்டினார்.  இதிலே இவர் பைன் மரங்கள், அதாவது தேவதாரு மரங்களிலிருந்து விழும் காய்ந்த பட்டைகளிலிருந்து அழகான கலைப்படைப்புக்களை உருவாக்குகிறார்.  இந்த மரப்பட்டைகள், பொதுவாக பயனற்றவையாகக் கருதப்படுபவை.  ஜீவன் அவர்களின் கைகளுக்கு இவை வரும் போது இவை சிறப்புத்தன்மை பெற்று விடுகின்றன.  இவருடைய ஒவ்வொரு படைப்பிலும் உத்தராகண்டின் மண்ணின் மணம் கமழும்.  சில வேளைகளில் மலை மக்களின் இசைக்கருவிகள், சில வேளைகளில் மலைகளின் ஆன்மா அந்த மரத்தில் உறைந்திருப்பதாகத் தோன்றும்.  ஜீவன் அவர்களின் பணி வெறும் கலையோடு நின்று போவதில்லை, இது ஒரு சாதகம்.  இவர் இந்தக் கலைக்காகத் தன் வாழ்கை முழுவதையும் அர்ப்பணம் செய்திருக்கிறார்.  ஜீவன் ஜோஷி போன்ற கலைஞர்கள், சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், நோக்கம் பலமானதாக இருந்தால், சாத்தியமில்லாதது என்ற ஒன்று கிடையாது என்று நமக்கெல்லாம் நினைவுபடுத்துகிறார்.  இவருடைய பெயர் ஜீவன், வாழ்க்கையை வாழ்வது என்றால் என்ன என்பதை இவர் நமக்குக் காட்டியிருக்கிறார்.

 

எனதருமை நாட்டுமக்களே, இன்று பல பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதோடு கூடவே, வானைத் தொடும் உயரங்களுக்கு இணையாகப் பணியாற்றி வருகின்றார்கள்.  ஆமாம்.  நீங்கள் சரியாகத் தான் கேட்டீர்கள்!!  இப்போது கிராமத்துப் பெண்கள், ட்ரோன் சகோதரிகளாக ஆகி ட்ரோன்களைப் பறக்க விடுகிறார்கள், விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

 

நண்பர்களே, தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்திலே, சில காலம் முன்புவரை எந்தப் பெண்கள் எல்லாம் மற்றவர்களைச் சார்ந்து வாழ்ந்து வந்தார்களோ, இன்று அதே பெண்கள் ட்ரோன்கள் வாயிலாக 50 ஏக்கர் நிலத்தின் மீது மருந்து தெளிக்கும் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  காலையில் 3 மணிநேரம், மாலையில் 2 மணிநேரம், வேலை முடிந்தது.  வெப்பத்தில் வெந்து போவது இல்லை, விஷத்திற்கு ஒப்பான ரசாயனங்களின் அபாயம் இல்லை.  நண்பர்களே, கிராமவாசிகளும் கூட இந்த மாற்றத்தை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  இப்போது இந்தப் பெண்கள் ட்ரோன் ஆப்பரேட்டர்கள் மட்டுமல்ல, வான் வீரர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள்.  உத்தியும் உறுதிப்பாடும் ஒன்றிணைந்து பணியாற்றும்போது மாற்றம் ஏற்படுகிறது என்பதையே இந்தப் பெண்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள்.

 

என் மனம் நிறை நாட்டுமக்களே, சர்வதேச யோகக்கலை தினத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நேரமே இருக்கிறது.   நீங்கள் இதுவரை யோகக்கலையை இன்னும் பயிலத் தொடங்கவில்லை என்றால் இப்போது அதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் நினைவூட்டுகிறது.  யோகக்கலை நீங்கள் வாழ்க்கையை வாழும் முறையையே மாற்றி அமைத்து விடும்.  நண்பர்களே, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, யோகக்கலை தினம் தொடங்கப்பட்ட பிறகிலிருந்து இதன்பால் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்த முறையும் கூட யோகக்கலை தினம் தொடர்பாக உலகெங்கிலும் மக்களின் உற்சாகமும், உவகையும் தெளிவாகக் காண முடிகிறது.  பல்வேறு அமைப்புகள் தங்களுடைய தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  கடந்த ஆண்டுகளின் காட்சிகள் எல்லாம் மிகுந்த உள்ளெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.  பல்வேறு நாடுகளில், ஒரு சமயம் மக்கள் யோகக்கலை சங்கிலித் தொடரை உருவாக்கினார்கள், யோகக்கலை வளையத்தை ஏற்படுத்தினார்கள்.  இப்படி பலவிதமான காட்சிகளில், ஒன்றாக நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து யோகக்கலையைப் பயின்றதையும் நான் பார்த்தோம்.  பலர் தங்களுடைய நகரின் பிரபலமான இடங்களை யோகம் பயிலத் தேர்ந்தெடுத்தார்கள்.  நீங்களும் கூட இந்த முறை சில சுவாரசியமான வழிமுறைகள் வாயிலாக யோகக்கலை தினத்தைக் கொண்டாடுவது பற்றி சிந்திக்கலாமே!!

 

நண்பர்களே, ஆந்திர பிரதேச அரசாங்கம் யோகாந்திரா இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.  ஒட்டுமொத்த மாநிலத்திலும் யோகக்கலை கலாச்சாரத்தை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம்.   இந்த இயக்கத்தின்படி, யோகக்கலை பயில்வோர் பத்து இலட்சம் பேர் கொண்ட கூட்டத்தை ஏற்படுத்துவது.  இந்த ஆண்டு விஷாகப்பட்டனத்தில் யோகக்கலை தின நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது.  இந்த முறை நம்முடைய இளைய நண்பர்கள், தேசத்தின் மரபோடு தொடர்புடைய பாரம்பரிய இடங்களில் யோகக்கலையைப் பயில இருக்கிறார்கள் என்பது எனக்கு மிக இனிமையாக இருக்கிறது.  பல இளைஞர்கள், புதிய பதிவுகளை ஏற்படுத்தவும், யோகக்கலை சங்கிலித்தொடரின் அங்கமாக ஆகவும் உறுதி மேற்கொண்டிருக்கிறார்கள்.  நமது பெருநிறுவனங்களும் இதிலிருந்து பின் தங்கிப் போகவில்லை.  சில அமைப்புகள் தங்கள் அலுவலகங்களிலேயே யோகக்கலையைப் பயில பல்வேறு இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.  சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட தங்கள் இடங்களில், யோகக்கலையைப் பயில்வதற்கெனவே சில மணிநேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.  சிலரோ கிராமங்களுக்குச் சென்று யோகக்கலையைப் பயில்விக்கச் செல்லும் தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  உடல்நலம் மற்றும் உடலுறுதி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது எனக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது. 

 

நண்பர்களே, யோகக்கலை தினத்தோடு கூடவே ஆயுர்வேதத் துறையிலும் கூட சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, இவை பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்.  நேற்றுத் தான் அதாவது மே மாதம் 24ஆம் தேதியன்று, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரும் எனது நண்பருமான துளசி பாய் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தோடு கூடவே உடல்நல இடையீடுகளின் சர்வதேச வகைப்படுத்தல்படி, பிரத்யேகமான பாரம்பரிய மருந்துகள் பாகம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.  இந்த முன்முயற்சி காரணமாக, ஆயுஷை ஒட்டுமொத்த உலகிலும் விஞ்ஞான முறைப்படி அதிக அளவு மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப் பேருதவியாக இருக்கும். 

 

நண்பர்களே, நீங்கள் பள்ளிகளில் கரும்பலகையைப் பார்த்திருக்கலாம் ஆனால், இப்போது சில பள்ளிகளில் சர்க்கரைப் பலகை அமைக்கப்பட்டிருக்கிறது.  கரும்பலகை அல்ல, சர்க்கரைப் பலகை.  சிபிஎஸ்ஈ, மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தின் இந்த வித்தியாசமான முன்னெடுப்பின் நோக்கம் என்னவென்றால், குழந்தைகளிடம் சர்க்கரை உட்கொள்ளல் அளவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்.  எவ்வளவு சர்க்கரையை உண்ண வேண்டும், எவ்வளவு சர்க்கரையை உண்ணலாம் என்பதைத் தெரிந்து கொண்டு குழந்தைகள் தாங்களாகவே ஆரோக்கியமான வழிமுறையைத் தேர்தெடுக்கிறார்கள்.  இது ஒரு வித்தியாசமான முயற்சி, இதன் தாக்கம் கூட அதிக நேர்மறையாக இருக்கும்.  சிறுவயது தொடங்கியே ஆரோக்கியமான வாழ்கைமுறை தொடர்பான பழக்கங்களை ஏற்படுத்தும் போது இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.  பல பெற்றோர்களும் இதைப் பாராட்டி இருக்கிறார்கள்.  நான் என்ன நினைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், அலுவலகங்கள், கேண்டீன்கள் மற்றும் அமைப்புகளிடத்திலும் இருக்க வேண்டும்.  ஏனென்றால், உடல்நலம் தான் அனைத்துமே.  உடலுறுதியான இந்தியா தான் பலமான இந்தியாவுக்கான அடித்தளம்.

 

என் கனிவுநிறை நாட்டுமக்களே, தூய்மையான பாரதம் பற்றிய பேச்சு எழும் போது, மனதின் குரல் நேயர்கள் எப்படி பின் தங்கிப் போவார்கள்!!  நீங்கள் அனைவரும் அவரவர் நிலையில் இந்த இயக்கத்திற்கு பலம் சேர்த்து வருவீர்கள் என்பதில் எனக்கு சற்றும் ஐயமில்லை.  ஆனால் இன்று உங்களிடத்தில் ஒரு எடுத்துக்காட்டு குறித்துப் பேச விரும்புகிறேன்.    இங்கே தூய்மைக்கான உறுதிப்பாடு, மலையை ஒத்த சவால்களையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது.  நீங்களே சிந்தித்துப் பாருங்கள், ஒரு நபர் பனிமூடிய மலைகளின் மீது ஏறிக் கொண்டிருக்கிறார், அங்கே மூச்சு விடுவதே கடினமான பணியாக இருக்கிறது, ஒவ்வொரு அடியிலும் ஆபத்து நிறைந்திருக்கிறது, இவற்றையெல்லாம் தாண்டியும் கூட அந்த நபர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  நமது இந்தோ திபத்திய எல்லையோரப் பாதுகாப்புப் படையினரின் குழு உறுப்பினர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டார்கள்.  இந்தக் குழு, மகாலூ போன்ற மலையில், உலகின் மிகவும் கடினமான சிகரத்தின் மீது ஏறச் சென்றார்கள்.  ஆனால் நண்பர்களே, அங்கே அவர்கள் மலையேற மட்டும் செல்லவில்லை, தங்கள் இலக்கோடு கூட அவர்கள் ஒரு இயக்கத்தையும் இணைத்துக் கொண்டார்கள், அது தான் தூய்மை.  சிகரத்தினருகே இருந்த குப்பையை அகற்றும் சவாலை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  நீங்களே கற்பனை செய்து பாருங்கள், 150 கிலோவுக்கும் அதிகமான மக்கா குப்பையை இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களோடு கீழே எடுத்துக் கொண்டு வந்தார்கள்.  இத்தனை உயரங்களில் தூய்மை செய்வதில் ஈடுபடுவது எளிய பணி அல்ல.  ஆனால் எங்கே உறுதிப்பாடு இருக்கிறதோ, அங்கே பாதை தாமாகவே துலக்கப்படும் என்பதையே இது காட்டுகிறது. 

 

நண்பர்களே, இதோடு தொடர்புடைய மேலும் ஒரு முக்கியமான விஷயம் – காகிதக் குப்பை மற்றும் மறுசுழற்சி.  நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிக அளவில் காகிதக் கழிவுகள் ஏற்படுகின்றன.  நாம் இவற்றை சாதாரணமானவையாகக் கருத நேரலாம் ஆனால், தேசத்திலே குப்பைக்கிடங்குக் கழிவுகளில் நான்கில் ஒருபங்கு காகிதக் கழிவாக இருக்கிறது.  ஒவ்வொரு நபரும் இந்தத் திசையில் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும் என்பது இன்றைய அவசியமாக இருக்கிறது.  பாரதத்தின் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தத் துறையில் அருமையாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  விசாகப்பட்டினம், குருக்கிராமம் போன்ற பல நகரங்களில் பல ஸ்டார்ட் அப்கள், காகித மறுசுழற்சி செய்வதில் நூதனமான வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள்.  சிலர் மறுசுழற்சி காகிதத்தால் பேக்கேஜ் செய்யப்படும் பலகைகளைத் தயாரிக்கிறார்கள், சிலர் டிஜிட்டல் வழிமுறையில் செய்தித்தாள் மறுசுழற்சியை எளிமையாக்கி வருகிறார்கள்.  ஜாலானா போன்ற நகரங்களில் சில ஸ்டார்ட் அப்புகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் பேக்கேஜிங் சுருள் மற்றும் காகிதக் குழாய்களைத் தயாரித்து வருகிறார்கள்.   இந்த விஷயம் உங்களுக்குக் கருத்தூக்கத்தை அளிக்கலாம், ஒரு டன் காகிதத்தை மறுசுழற்சி செய்வதன் காரணமாக 17 மரங்கள் வெட்டப்படுவதை நாம் தடுக்கலாம், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும்.  சற்றே சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே, மலையேறுபவர்கள் இத்தனை கடினமான சூழலிலும் கூட குப்பைகளைத் திரும்பக் கொண்டு வர முடியும் போது, நாமும் கூட நமது இல்லங்களிலோ, அலுவலகங்களிலோ காகிதத்தைத் தனியாக்கி மறுசுழற்சி செய்யப்பட நமதுபங்களிப்பை அளிக்க வேண்டும்.  தேசத்தின் அனைத்துக் குடிமக்களும் தேசத்தை எப்படி சிறப்பாக ஆக்கலாம் என்று சிந்திக்கும் போது, நாம் இணைந்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.

   

நண்பர்களே, கடந்த நாட்களில், கேலோ இண்டியா விளையாட்டுக்கள் பெரும் பேசுபொருளாக இருந்தன.  கேலோ இண்டியாவினை பிஹாரின் ஐந்து நகரங்கள் ஏற்று நடத்தின.  அங்கே பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.  பாரதம் நெடுகவிருந்தும் வந்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 5000த்திற்கும் அதிகமாக இருந்தது.  இந்த வீரர்கள் பிஹாரின் விளையாட்டு உணர்வையும், பிஹார் மாநில மக்களின் இனிமையையும் மிகவும் பாராட்டியிருக்கிறார்கள். 

   

நண்பர்களே, பிஹாரின் மண்ணுக்கு என்று ஒரு விசேஷம் உண்டு, இந்த ஏற்பட்டின் போது இங்கே பல தனித்தன்மையான விஷயங்கள் நடந்தன.  கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களின் முதல் நிகழ்ச்சி இது.  இது ஒலிம்பிக் சேனல் வாயிலாக உலகெங்கும் சென்று சேர்ந்தது.  உலகெங்கிலும் இருப்பவர்கள் நமது இளைய விளையாட்டு வீரர்களின் திறமைகளைப் பார்த்தார்கள், பாராட்டினார்கள்.  நான் பதக்கங்களை வென்ற அனைவருக்கும், குறிப்பாக முன்னணி மூன்று வெற்றியாளர்களான, மகாராஷ்ட்டிரம், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே, இந்த முறை கேலோ இண்டியாவிலே மொத்தம் 26 பதிவுகள் ஏற்படுத்தப்பட்டன.  பளுதூக்கல் போட்டிகளில் மகாராஷ்ட்ராவின் அஸ்மிதா தோனே, ஒடிஷாவின் ஹர்ஷ்வர்தன் சாஹு, உத்தர பிரதேசத்தின் துஷார் சௌத்ரி ஆகியோரின் மிகச் சிறப்பான வெளிப்பாடுகள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டன.  அதே போல மகாராஷ்டிரத்தின் சாய்ராஜ் பர்தேசி, மூன்று சாதனைகளைப் படைத்தார்.  தடகளப் போட்டிகளில் உத்தர பிரதேசத்தின் காதிர் கான், ஷேக் ஜீஷான் ஆகியோரும், ராஜஸ்தானத்தின் ஹன்ஸ்ராஜும் மிக அருமையாகச் செயல்பட்டார்கள்.  இந்த முறை, பிஹாரும் கூட 36 பதக்கங்களை வென்றெடுத்தது.  நண்பர்களே, யார் விளையாடுகிறார்களோ அவர்களே மலர்கிறார்கள்.  இளம் விளையாட்டுத் திறமையாளர்களுக்கு போட்டிகள் மிக முக்கியமானவை.  இந்த மாதிரியான ஏற்பாடுகள், பாரதநாட்டு விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக்க வல்லவை.

 

எனதருமை நாட்டுமக்களே, மே மாதம் 20ஆம் தேதியன்று உலக தேனீக்கள் நாளை நாம் கொண்டாடினோம்.  அதாவது, தேன் என்பது வெறும் இனிப்பு நிறைந்தது மட்டுமல்ல, தேன் என்பது சுயவேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புக்கான ஒரு எடுத்துக்காட்டும் கூட என்பதைத் தான் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.  கடந்த 11 ஆண்டுகளிலே, தேனீக்கள் பராமரிப்பிலே, பாரதம் ஒரு இனிமைப் புரட்சியை அரங்கேற்றியிருக்கிறது.  இன்றிலிருந்து 10-11 ஆண்டுகள் முன்பு, பாரதத்தின் தேன் உற்பத்தி ஓராண்டிலே சுமார் 70 முதல் 75 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது.  இன்று இது அதிகரித்து சுமார் ஒண்ணேகால் இலட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இருக்கிறது.  அதாவது தேன் உற்பத்தியில் சுமார் 60 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.  நாம் தேன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஆகி விட்டோம்.  நண்பர்களே, இந்த நேர்மறைத் தாக்கத்தில் தேசிய தேனீக்கள் பராமரிப்பு மற்றும் தேன் மிஷன் ஆகியவற்றின் பெரிய பங்களிப்பு இருக்கிறது.  இதற்குட்பட்டு, தேனி வளர்ப்போடு தொடர்புடைய ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது, கருவிகள் கொடுக்கப்பட்டன, மேலும் சந்தைகள் வரை அவர்களின் அணுகல் திறன் மேம்படுத்தப்பட்டது.

 

நண்பர்களே, இந்த மாற்றம் என்பது வெறும் எண்ணிக்கையை மட்டும் காட்டவில்லை, இதை கிராமங்களின் அளவிலும் கூடத் தெளிவாகக் காண முடிகிறது.  சத்திஸ்கட்டின் கோரியா மாவட்டத்தின் ஒரு எடுத்துக்காட்டு, இங்கே பழங்குடியின விவசாயிகள், சோன் ஹனி என்ற பெயருடைய சுத்தமான இயற்கையான தேன் பிராண்டை உருவாக்கியிருக்கிறார்கள்.  இன்று இந்தத் தேன் ஜெம் உட்பட அநேக இணைய வலைத்தளங்களிலும் கிடைக்கிறது.  அதாவது கிராமங்களின் உழைப்பு இப்போது உலக அளவில் கொட்டி முழக்குகிறது.  இதைப் போலவே உத்தர பிரதேசம், குஜராத், ஜம்மு கஷ்மீரம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் இப்போது தேன் உற்பத்தி செய்யும் தொழில்முனைவோராகி விட்டார்கள்.  நண்பர்களே, இப்போது தேன் உற்பத்தி என்பது உற்பத்தி அளவோடு நின்று போவதில்லை, இதன் தூய்மை தொடர்பாகவும் பணிகள் நடந்தேறி வருகின்றன.  சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையோடு, தேனின் தரத்திற்கான ஆதாரச் சான்றை ஏற்படுத்துகிறார்கள்.  அடுத்த முறை நீங்கள் தேன் வாங்கச் சென்றால், இந்தத் தேன் தொழில்முனைவோர் உற்பத்தி செய்த தேனைக் கண்டிப்பாகச் சுவைத்துப் பாருங்கள், உள்ளூர் விவசாயி யாரிடத்திலாவது, அல்லது யாராவது பெண் தொழில்முனைவோரிடமிருந்து தேனை வாங்க முயலுங்கள்.  ஏனென்றால் அதன் ஒவ்வொரு சொட்டிலும் சுவை மட்டுமல்ல, பாரதத்தின் உழைப்பும் நம்பிக்கைகளும் கலந்திருக்கும்.  தேனின் இனிமை, தற்சார்பு பாரதத்தின் சுவை.

 

நண்பர்களே, நாம் தேனோடு தொடர்புடைய நாடுகளின் முயற்சிகளைப் பற்றிப் பேசும் போது, நான் மேலும் ஒரு முன்னெடுப்பு குறித்தும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  தேனீக்களின் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது வேளாண்மை மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் பொறுப்புமாகும் என்பதை இது நமக்கு நினைவுபடுத்துகிறது.  இந்த எடுத்துக்காட்டு புணே நகரைச் சார்ந்தது, அங்கே ஒரு குடியிருப்பு சமூகத்திலே தேன் கூடு ஒன்று அகற்றப்பட்டது, ஒரு வேளை பாதுகாப்பு காரணமாக இருக்கலாம் அல்லது பயம் காரணமாக இருக்கலாம்.   ஆனால், இந்தச் சம்பவம் ஒருவரை சிந்திக்கத் தூண்டியது.  அமித் என்ற ஒரு இளைஞர், தேனீக்களை அகற்றக் கூடாது, அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்தார்.  அவர் சுயமாகக் கற்றுக் கொண்டதோடு, தேனீக்கள் பற்றிய தேடலில் இறங்கினார், மற்றவர்களையும் இதோடு இணைத்துக் கொண்டார்.  மெல்ல மெல்ல ஒரு குழுவை ஏற்படுத்தினார், இதற்கு Bee Friends, அதாவது தேனீக்களின் நண்பர்கள் என்று பெயரிட்டார்.  இந்த தேனீக்களின் நண்பர்கள், தேன் கூடுகளை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, பாதுகாப்பான முறையிலே இடமாற்றம் செய்கிறது.  இதன் காரணமாக மக்களுக்கும் தேனீக்களால் ஆபத்து இல்லை, தேனீக்களும் பிழைத்திருக்கும்.  அமித் அவர்களின் இந்த முயற்சி ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அருமையாக இருந்தது.  தேனீக்களின் வாழ்விடங்கள் காப்பாற்றப்பட்டன.  தேன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது, மிகவும் முக்கியமானது என்னவென்றால், மக்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்திருப்பது தான்.   நாம் இயற்கையோடு இசைவாகப் பணியாற்றினோம் என்றால், இதனால் அனைவருக்கும் ஆதாயம் உண்டாகும் என்பதையே இந்த முன்னெடுப்பு நமக்குக் கற்பிக்கிறது.

 

            எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இந்த முறை இம்மட்டே.  நீங்கள் இதைப் போலவே, நாட்டுமக்களின் சாதனைகளை, சமூகத்தின் நலனுக்கான அவர்களின் முயற்சிகளை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள்.  மனதின் குரலின் அடுத்த பகுதியில் நாம் மீண்டும் சந்திப்போம், பல புதிய விஷயங்களையும், நாட்டுமக்களின் புதிய சாதனைகளையும் பற்றி விவாதிப்போம்.   நீங்கள் அனுப்பும் தகவல்களுக்காக நான் காத்திருப்பேன், உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள், வணக்கம்.  

 

*****

 

 

 

 


(Release ID: 2131113)