விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் மே 29 முதல் தொடங்க உள்ளது: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான்

Posted On: 19 MAY 2025 4:18PM by PIB Chennai

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்  உரையாற்றினார். நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் 2025 மே 29 முதல் ஜூன் 12 வரை நடைபெற உள்ளது குறித்து அவர் விளக்கினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும், மேலும் இந்த இலக்கை அடைய, வளர்ச்சியடைந்த வேளாண்மை, நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் வளமான விவசாயிகள் ஆகியவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையானது மக்கள்தொகையில் பாதி அளவு மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவது மட்டுமல்லாமல், தேசிய உணவுப் பாதுகாப்பையும் ஆதரிப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் 1.45 பில்லியன் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும், சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதும், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும், எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து அளிப்பதும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முதன்மை நோக்கமாகும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த இலக்குகளை அடைய, அமைச்சகம் ஆறு அம்ச உத்தியை வகுத்துள்ளது. உற்பத்தியை அதிகரித்தல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல், விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்தல், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதல் மூலம் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல் மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் ஆகியவை இந்த அம்சங்களாகும்.

நடப்பாண்டு இந்தியா சாதனை அளவிலான வேளாண் உற்பத்தியை எட்டியுள்ளது என்று திரு சௌஹான் குறிப்பிட்டார்: காரீஃப் அரிசி உற்பத்தி 1206.79 லட்சம் மெட்ரிக் டன், கோதுமை 1154.30 லட்சம் மெட்ரிக் டன், காரீஃப் மக்காச்சோளம் 248.11 லட்சம் மெட்ரிக் டன், நிலக்கடலை 104.26 லட்சம் மெட்ரிக் டன், சோயாபீன் 151.32 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

காரீப் மற்றும் ராபி பயிர்களின் விதைப்பு பருவங்களுக்கு முன்பு ஆண்டுதோறும் இந்த இயக்கம் தொடங்கப்படும். மாநில வேளாண் அமைச்சர்கள் கலந்து கொண்ட சமீபத்திய காரீப் மாநாட்டின் போது, வேளாண் ஆராய்ச்சியை கள அளவில் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த முயற்சியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, சுமார் 16,000 வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த இயக்கம் அவர்களின் பணிகளை விவசாயிகளுக்கு நேரடியாக அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, குறைந்தது நான்கு விஞ்ஞானிகளைக் கொண்ட 2,170 நிபுணர் குழுக்கள் மே 29 முதல் ஜூன் 12 வரை 723 மாவட்டங்களில் உள்ள 65,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும். இந்த குழுக்களில் விவசாய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்களும் புதுமையான விவசாயிகளும்  அடங்குவர். அவர்கள் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் விவசாயிகளுடன் நேரடியாக ஈடுபடும் அமர்வுகளை நடத்துவார்கள். உள்ளூர் வேளாண்-பருவநிலை நிலைமைகள், மண் ஊட்டச்சத்து விவரங்கள், நீர் கிடைக்கும் தன்மை மற்றும் மழைப்பொழிவு முறைகளை குழுக்கள் மதிப்பிடும். மண் வள அட்டைகளைப் பயன்படுத்தி, அவர்கள் பொருத்தமான பயிர்கள், அதிக மகசூல் தரும் விதை வகைகள், சிறந்த விதைப்பு நுட்பங்கள் மற்றும் சீரான உர பயன்பாட்டை பரிந்துரைப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129632

***

TS/IR/LDN/KR


(Release ID: 2129662)