கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் கூட்டுறவின் பங்கு" என்ற தலைப்பில் குஜராத்தில் மாநாடு - மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

2029-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் நிறுவப்படும் - திரு அமித் ஷா

Posted On: 18 MAY 2025 3:45PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (18.05.2025) குஜராத்தின் அகமதாபாத்தில் குஜராத் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த "வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் கூட்டுறவுகளின் பங்கு என்ற மாநாட்டில் உரையாற்றினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய திரு அமித் ஷா, 2025-ம் ஆண்டை சர்வதேச கூட்டுறவு ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருவதைச் சுட்டிக் காட்டினார். கூட்டுறவு என்ற சொல் 1900-ம் ஆண்டைப் போலவே இன்றும் முழு உலகிற்கும் பொருத்தமானது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு பெரிய முயற்சியாக 2021-ல் தனி அமைச்சகம் தொடங்கப்பட்டது என்றும், அதனால்தான் இந்தியாவில் இருந்து சர்வதேச கூட்டுறவு ஆண்டைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

கூட்டுறவுத் துறையில் ஏற்படும் மாற்றங்களின் நன்மைகள் அடிமட்ட அளவில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனவும் அதன் பலன்கள் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் விவசாயிகளை சென்றடையாவிட்டால் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். அதனால்தான் கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார். அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர இந்த அரசு பாடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச கூட்டுறவு ஆண்டில், இந்திய அரசு "கூட்டுறவு அறிவியல்" மற்றும் "கூட்டுறவில் அறிவியல்" ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சுதந்திர போராட்ட கால கட்டத்தில் தொடங்கிய கூட்டுறவு இயக்கத்தின் தீவிரம் இப்போது படிப்படியாகக் குறைந்து, நாட்டின் பெரும்பகுதிகளில் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது என்று அவர் கூறினார். கூட்டுறவு இயக்கத்தை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவது நம் அனைவரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். கூடுதலாக, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிலை மேம்பட வேண்டும் எனவும் மாவட்ட அளவிலான நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவற்றின் மூலம், மாநில மற்றும் தேசிய நிலைகளில் கூட்டுறவு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். நீண்டகாலமாக நிலவும் உலகளாவிய மூன்று அடுக்கு கூட்டுறவு கட்டமைப்பில் நான்காவது அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா மேலும் கூறினார். ஒவ்வொரு கூட்டுறவு நடவடிக்கையுடனும் தொடர்புடைய தேசிய நிறுவனங்கள், மாநில அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், மாவட்ட அளவிலான நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதை அடைய சர்வதேச கூட்டுறவு ஆண்டை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த முழு இயக்கமும் மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்று திரு அமித் ஷா கூறினார். நிர்வாகத்தின் முக்கிய நீரோட்டத்தில் கூட்டுறவை ஒருங்கிணைத்தல், தொழில்நுட்பம் மூலம் கூட்டுறவு இயக்கத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருதல், கூட்டுறவு இயக்கத்துடன் மேலும் அதிக எண்ணிக்கையில் குடிமக்களை இணைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துதல் ஆகிய மூன்றும் முக்கியம் என அவர் தெரிவித்தார். கூட்டுறவு ஆண்டில் இந்த மூன்று தூண்களிலும் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இதற்காக மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தால் இதுவரை பல்வேறு வகையான 57 முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

குஜராத் உட்பட நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு என்ற கருத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்றும், இதனால் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் முழு செயல்பாடும் மற்ற கூட்டுறவு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார். அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்கள், பால் பண்ணைகள் போன்றவை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த முயற்சியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேசிய அளவில் செயல்படும் திரிபுவன் சஹாகரி என்ற கூட்டுறவுப் பல்கலைக்கழகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறுவியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவின் அனைத்து துறைகள் தொடர்பான கல்வி தற்போது வலுப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் வலுப்படுத்தப்படாவிட்டால் கூட்டுறவு கட்டமைப்பை வலுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். அதனால்தான் 2029-ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு ஊராட்சியிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை (பிஏசிஎஸ் - PACS) நிறுவ பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார். இந்த முடிவின் கீழ், 2 லட்சம் புதிய பிஏசிஎஸ் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கமானது  சுமார் 22 வெவ்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். கலைக்கப்பட்ட பிஏசிஎஸ்-களின் தீர்வுக்கும், புதிய பிஏசிஎஸ்- களை நிறுவுவதற்கும் அரசு விரைவில் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தும் என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், கூட்டுறவுத் துறையில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டான 2025-ஐப் பயன்படுத்தி அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வைப் பரப்பி, வெளிப்படைத்தன்மையை அதிகரித்து கூட்டுறவு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.

*****

(Release ID: 2129439)

TS/PLM/SG

 

 


(Release ID: 2129443)