ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரக்சவுலில் மனித கடத்தல் முயற்சியை ரயில்வே பாதுகாப்புப் படை முறியடித்தது; 4 மைனர் சிறுமிகள் மீட்பு

Posted On: 16 MAY 2025 2:44PM by PIB Chennai

குழந்தைகள் பாதுகாப்பு, ஆள்கடத்தல் தடுப்பு ஆகிய முயற்சிகளில்  ரயில்வே பாதுகாப்புப் படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு விரைவான, ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, மே 13, 2025 அன்று ரக்சவுல் ரயில் நிலையத்தில் மனித கடத்தல் முயற்சியில் இருந்து நான்கு மைனர் சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பீகாரில் ரக்சவுலில் ரயில்வே பாதுகாப்புப் படைக் குழுவின், மனித கடத்தல் தடுப்பு பிரிவு, ஒரு அரசு சாரா நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், ரக்சவுல்-ஆனந்த் விஹார் சத்யாக்ரா விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டது. அப்போது 13 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், வேலை வாய்ப்பு, காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, அந்த சிறுமிகள் நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களின் பயணம் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

விரைவான நடவடிக்கை காரணமாக, சிறுமிகளுடன் பயணித்த, கடத்தலில் ஈடுபட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். சிறுமிகள் பராமரிப்புக்காக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து இந்திய நியாய சட்டத்தின் சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆள் கடத்தலுக்கு எதிராக ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்தப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவ் கூறியுள்ளார். ஆள்கடத்தல் தொடர்பான புகார்களை 139 என்ற எண்ணில்  தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

***

(Release ID: 2129060)
SM/PLM/RR/SG

 


(Release ID: 2129088)