பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், நிறைவடைத திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்: பிரதமர்

பாரம்பரியமும், முன்னேற்றமும் கைகோர்த்து செல்லும் நிலம் அமராவதி: பிரதமர்

என்.டி.ஆர். அவர்கள் வளர்ச்சியடைந்த ஆந்திரப் பிரதேசத்தை கற்பனை செய்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியை வளர்ந்த இந்தியாவின் வளர்ச்சி உந்துசக்தியாக மாற்ற வேண்டும்: பிரதமர்

உள்கட்டமைப்பு வேகமாக நவீனமயமாகி வரும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது: பிரதமர்

ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் சக்தி ஆகிய நான்கு தூண்களின் மீது வளர்ந்த பாரதம் உருவாக்கப்படும்: பிரதமர்

நாகயாலங்காவில் நிர்மாணிக்கப்படவுள்ள நவதுர்கா ஏவுகணை சோதனை தளம், அன்னை துர்காவைப் போலவே நாட்டின் பாதுகாப்பு சக்தியை பலப்படுத்தும், இதற்காக நாட்டின் விஞ்ஞானிகளையும் ஆந்திர மக்களையும் நான் பாராட்டுகிறேன்: பிரதமர்

Posted On: 02 MAY 2025 6:44PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமராவதி என்ற புனித பூமியில் நிற்கும்போது, ​​வெறும் ஒரு நகரத்தை மட்டுமல்ல, ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்ற கனவை நனவாக்குவதையும் தான் காண்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். "அமராவதி, பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பூமி, அதன் புத்த பாரம்பரியத்தின் அமைதியையும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் ஆற்றலையும் தழுவிச் செல்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டமைப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசத்தின் அபிலாஷைகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையின் வலுவான அடித்தளமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, பகவான் வீரபத்ரர், பகவான் அமரலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகியோரை  பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

ஒரு காலத்தில் இந்திர லோகத்தின் தலைநகரம் அமராவதி என்று அழைக்கப்பட்டது என்றும், தற்போது அமராவதி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக உள்ளது என்றும் குறிப்பிட்ட திரு மோடி, இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பாதையை வலுப்படுத்தும் 'ஸ்வர்ண ஆந்திரா' உருவாக்கத்திற்கான நேர்மறையான அறிகுறி என்றும் வலியுறுத்தினார். 'ஸ்வர்ண ஆந்திரா' தொலைநோக்குப் பார்வைக்கு அமராவதி உத்வேகம் அளிக்கும் என்றும், அதை முன்னேற்றம் மற்றும் மாற்றத்திற்கான மையமாக மாற்றும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். "அமராவதி ஒரு நகரம் மட்டுமல்ல, அது ஒரு சக்தி, இந்த வலிமைதான் ஆந்திராவை நவீன மாநிலமாகவும், ஒரு மேம்பட்ட மாநிலமாக மாற்றும் சக்தியாகவும் உள்ளது" என்று திரு மோடி தெலுங்கில் கூறினார்.

 

ஆந்திரப் பிரதேச இளைஞர்களின் கனவுகள் நனவாகும் நகரமாக அமராவதியைக் கற்பனை செய்த பிரதமர், வரும் ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி, தூய்மையான தொழில்துறை, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் அமராவதி முன்னணி நகரமாக உருவெடுக்கும் என்று எடுத்துரைத்தார். இந்தத் துறைகளில் வளர்ச்சியை விரைவுபடுத்த தேவையான உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதில் மத்திய அரசு மாநில அரசுக்கு முழு ஆதரவளித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

எதிர்கால தொழில்நுட்பத்தை பெரிய அளவில் கற்பனை செய்து விரைவாக செயல்படுத்தியதில் திரு சந்திரபாபு நாயுடுவின் மதிநுட்பத்தை திரு மோடி பாராட்டினார். 2015 ஆம் ஆண்டில், பிரஜா ராஜதானிக்கு  அடிக்கல் நாட்டுவதற்கான பாக்கியம் தனக்குக் கிடைத்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார், பல ஆண்டுகளாக, மத்திய அரசு அமராவதியின் வளர்ச்சிக்கு விரிவான ஆதரவை வழங்கி, அடிப்படை உள்கட்டமைப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதி செய்துள்ளது என்பதை வலியுறுத்தினார். திரு நாயுடுவின் தலைமையுடன், புதிய மாநில அரசு வளர்ச்சி முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றம், சட்டமன்றம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

"என்.டி.ஆர் அவர்கள் ஒரு வளர்ச்சியடைந்த ஆந்திராவை கற்பனை செய்தார்", என்று குறிப்பிட்ட பிரதமர், அமராவதியையும் ஆந்திராவையும் வளர்ந்த இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்ற கூட்டு முயற்சிகளை வலியுறுத்தினார், என்.டி.ஆர் அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தெலுங்கில் இது நமது பொறுப்பு என்றும், நாம் இணைந்து சாதிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறினார்.

 

கடந்த 10 ஆண்டுகளில், இயல், டிஜிட்டல் மற்றும் சமூக உள்கட்டமைப்பில் இந்தியா விரிவாக கவனம் செலுத்தி வருவதாக வலியுறுத்திய திரு மோடி, இந்தியா தற்போது உலகில் வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும், இந்த முன்னேற்றத்தால் ஆந்திரப் பிரதேசம் குறிப்பிடத்தக்க அளவு பயனடைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் ரயில் திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதன் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஆந்திரப் பிரதேசம், இணைப்பின் ஒரு புதிய சகாப்தத்தைக் காண்கிறது, இது மாவட்டங்களுக்கு இடையே இணைப்புகளை மேம்படுத்தும் மற்றும் அண்டை மாநிலங்களுடனான இணைப்பை வலுப்படுத்தும்" என்று கூறிய அவர், விவசாயிகள் பெரிய சந்தைகளை அணுகுவதை எளிதாகக் காண்பார்கள் என்றும், மேம்பட்ட தளவாட செயல்திறனிலிருந்து தொழில்கள் பயனடையும் என்றும் வலியுறுத்தினார். சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் துறைகளும் வேகம் பெற்று, முக்கிய மதத் தலங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். ரேணிகுண்டா-நாயுடுபேட்டா நெடுஞ்சாலையை ஒரு உதாரணமாக மேற்கோள் காட்டிய அவர், இது திருப்பதி பாலாஜி சன்னதிக்கான அணுகலை கணிசமாக எளிதாக்கும், பக்தர்கள் வெங்கடேஸ்வர சுவாமியை மிகக் குறைந்த நேரத்தில் பார்வையிட அனுமதிக்கும் என்று கூறினார். வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் தங்களது ரயில்வே கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகள் இந்திய ரயில்வேக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டமாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், ஆந்திரப் பிரதேசத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக இந்திய அரசு சாதனை அளவிலான  நிதியை ஒதுக்கியுள்ளது என்றார். 2009 மற்றும் 2014 க்கு இடையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கான ஒருங்கிணைந்த ரயில்வே பட்ஜெட் ₹ 900 கோடிக்கும் குறைவாக இருந்தது, ஆனால் இன்று, ஆந்திராவில் மட்டும் ரயில்வே பட்ஜெட் ₹ 9,000 கோடியைத் தாண்டியுள்ளது, இது பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.  "மேம்படுத்தப்பட்ட ரயில்வே பட்ஜெட் மூலம், ஆந்திரா 100% ரயில்வே மின்மயமாக்கலை எட்டியுள்ளது" என்று கூறிய பிரதமர், மாநிலம் இப்போது எட்டு ஜோடி நவீன வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது, அமிர்த பாரத் ரயில், ஆந்திரா வழியாக செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட ரயில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் மேலும் எடுத்துரைத்தார். மேலும், பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அதிகரித்துவரும் விளைவை அடிக்கோடிட்டுக் காட்டி, உற்பத்தித் துறையில் அதன் நேரடி தாக்கத்தை எடுத்துரைத்த திரு மோடி, சிமென்ட், எஃகு மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்ற மூலப்பொருட்கள், பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களிலிருந்து கணிசமாகப் பயனடைகின்றன, பல தொழில்களை வலுப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு, இந்தியாவின் இளைஞர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கிறது, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை அவர் வலியுறுத்தினார். ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

 

"ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு  அதிகாரமளித்தல் ஆகிய நான்கு முக்கிய தூண்களை வளர்ந்த இந்தியாஅடித்தளமாகக் கொண்டுள்ளது" என்று செங்கோட்டையில் தாம் குறிப்பிட்டத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தத் தூண்கள் தங்கள் அரசின் கொள்கைகளில் மையமாக உள்ளன, விவசாயிகளின் நலனுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். விவசாயிகள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க, இந்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மலிவு விலையில் உரங்களை வழங்க கிட்டத்தட்ட ₹12 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான புதிய மற்றும் மேம்பட்ட விதை வகைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஆந்திராவில் உள்ள விவசாயிகள் ₹5,500 கோடி மதிப்புள்ள கோரிக்கை தீர்வுகளைப் பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். கூடுதலாக, பிரதமரின்  கிசான் சம்மான் நிதியின் கீழ், ஆந்திராவில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு ₹17,500 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி உதவியை உறுதி செய்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

 

நாடு முழுவதும் நீர்ப்பாசனத் திட்டங்களை இந்தியா வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என்று வலியுறுத்திய திரு மோடி, ஒவ்வொரு பண்ணைக்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்யவும், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் நதிகள் இணைப்பு முயற்சிகளைத் தொடங்கி வருகிறது என்று வலியுறுத்தினார். புதிய மாநில அரசு அமைக்கப்பட்டதன் மூலம், போலாவரம் திட்டம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தத் திட்டத்தால் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார். போலாவரம் திட்டத்தை விரைந்து முடிக்க மாநில அரசுக்கு தங்கள் அரசு முழு ஆதரவு அளிக்கிறது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

பல தசாப்தங்களாக இந்தியாவை விண்வெளி சக்தியாக உருவாக்குவதில் ஆந்திரப் பிரதேசம் முக்கிய பங்காற்றியதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ஒவ்வொரு விண்கலமும் லட்சக்கணக்கான இந்தியர்களை பெருமிதத்தில் ஆழ்த்துவதாகவும், விண்வெளி ஆய்வில் நாட்டின் இளைஞர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார். இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அறிவித்த அவர், ஒரு புதிய பாதுகாப்பு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறினார். டிஆர்டிஓவின் புதிய ஏவுகணை சோதனை தளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாகயாலங்காவில் உள்ள நவ துர்கா ஏவுகணை சோதனை தளம், அன்னை துர்காவின் தெய்வீக சக்தியிலிருந்து வலிமையைப் பெற்று, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை பன்மடங்கு பெருக்கும் சக்தியாக செயல்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் ஆந்திரப் பிரதேச மக்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

"இந்தியாவின் வலிமை அதன் ஆயுதங்களில் மட்டுமல்ல, அதன் ஒற்றுமையிலும் உள்ளது" என்று கூறிய பிரதமர், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏக்தா மால்கள் மூலம் இந்த ஒற்றுமை உணர்வு மேலும் வலுப்படுத்தப்படுவதை எடுத்துரைத்தார். விசாகப்பட்டினம், விரைவில் அதன் சொந்த ஏக்தா மாலைக் கொண்டிருக்கும் என்றும், அங்கு இந்தியா முழுவதிலுமிருந்து கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்துவார்கள் என்றும் அவர் அறிவித்தார். இந்த மால்கள் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையுடன் மக்களை இணைக்கும் என்று குறிப்பிட்ட அவர், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி, "ஒரே பாரதம், உன்னத பாரதம்" தொலைநோக்கை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

 

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் (ஜூன் 21) ஆந்திரப் பிரதேசத்தில் கொண்டாடப்படும் என்றும், அதில் தானும் கலந்து கொள்வேன் என்றும் பிரதமர் அறிவித்தார். அடுத்த 50 நாட்களில் யோகா தொடர்பான செயல்பாடுகளில் மக்கள் அதிக அளவில் ஈடுபட்டு உலக சாதனை படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆந்திரப் பிரதேசத்தில்  கனவு காண்பவர்களுக்கோ, சாதனையாளர்களுக்கோ பஞ்சமில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த மாநிலம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், வளர்ச்சிக்கான சரியான வேகத்தை பெற்றுள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆந்திராவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் நிலையான வேகத்தை வலியுறுத்திய அவர், தனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதியளித்து, அவர்களுடன் தோளோடு தோள் நிற்பதாகக் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு. சையது அப்துல் நசீர், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, நாடு முழுவதும் போக்குவரத்துக்கான இணைப்பை உறுதி செய்வது போன்ற தனது நிலைப்பாட்டுக்கு ஏற்ப, ஆந்திரப் பிரதேசத்தில் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பல்வேறு பிரிவுகளை அகலப்படுத்தும் பணிகளும், சாலை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைத்தல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன்  வேலை வாய்ப்பையும் உருவாக்கிடும்.  திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, மலகொண்டா மற்றும் உதயகிரி கோட்டை போன்ற மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது.

போக்குவரத்து  வசதிகளை மேம்படுத்தவும், அதன் திறனை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்களில் புக்கனபள்ளி சிமெண்ட் நகர், பன்யம் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை இரட்டிப்பாக்கும் பணிகள், ராயலசீமா மற்றும் அமராவதி இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், நியூ வெஸ்ட் பிளாக் ஹட் கேபின், விஜயவாடா நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைத்தல் ஆகியவை ஆகும்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளையும், ரயில்வே திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு பிரிவுகளை அகலப்படுத்துதல், உயர்மட்ட நடைபாதை அமைத்தல், சாலை மேம்பாலம் கட்டுதல் போன்றவை  இடம் பெறும்.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன், மாநிலங்களுக்கு இடையேயான பயண நேரத்தையும், கூட்ட நெரிசலையும் குறைக்க உதவிடும்.  மேலும் இத்திட்டம் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குண்டக்கல் மேற்கு, மல்லப்பா கேட் ரயில் நிலையங்களுக்கு இடையில், சரக்கு ரயில்களின் இயக்கத்தை இதே வழித்தடத்தில் இயக்கப்படுவதை தவிர்க்கவும்குண்டக்கல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டப்பேரவை, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், இதர நிர்வாகக் கட்டடங்கள், 5,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.17,400 கோடி மதிப்பிலான நிலங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், மேம்பட்ட வெள்ள மேலாண்மை அமைப்புகளுடன் 320 கி.மீ உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து கட்டமைப்புகளைக் கொண்ட பகுதியாக மேம்படுத்தவும், வெள்ளத் தணிப்பு திட்டங்களும் இதில் அடங்கும். இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான திட்டங்கள், தலைநகர் அமராவதி முழுவதும் ரூ.20,400 கோடி மதிப்பிலான சாலை மீடியன்கள், சைக்கிள் தடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் பொருத்தப்பட்ட 1,281 கி.மீ சாலை அமைக்கும் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நாகயாலங்காவில் ரூ.1,460 கோடி மதிப்பிலான ஏவுகணை சோதனை தளத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஏவுதள மையம், தொழில்நுட்ப கருவிகள், உள்நாட்டு ரேடார்கள், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் அமைப்புகள் ஆகியவை நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்தும்.

விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடாவில் ஒற்றுமை வளாக கட்டுமானப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தல், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புப் பொருள் திட்டத்தை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், கிராமப்புற கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், உள்நாட்டு தயாரிப்புகளின் சந்தை இருப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது.

****

 

(Release ID: 2126248)

RB/DL


(Release ID: 2126350) Visitor Counter : 24