பிரதமர் அலுவலகம்
கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பின்னோக்கு துறைமுகம், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்: பிரதமர்
இன்று, பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள். ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் கேரளாவிலிருந்து வெளியே வந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவியதன் மூலம் தேசத்தின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார். இந்த மங்களகரமான தருணத்தில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்: பிரதமர்
இந்தியாவின் கடலோர மாநிலங்களும் நமது துறைமுக நகரங்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு முக்கிய வளர்ச்சி மையங்களாக மாறும்: பிரதமர்
துறைமுக இணைப்பை விரிவாக்கும் சாகர்மாலா திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுடன் இணைந்து துறைமுக உள்கட்டமைப்பை மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது: பிரதமர்
பிரதமரின்-விரைவு சக்தி திட்டம் மூலம், நீர்வழிப்பாதைகள், ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் பாதைகளின் இணைப்பு வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன: பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில், அரசு-தனியார் கூட்டாண்மைகள் மூலமான முதலீடுகள் நமது துறைமுகங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தியது மட்டுமின்றி, அவற்றை எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்றியுள்ளன: பிரதமர்
போப் ஃபிரான்சிஸின் சேவை மனப்பான்மைக்காக உலகம் எப்போதும் அவரை நினைவில் கொள்ளும்: பிரதமர்
Posted On:
02 MAY 2025 1:16PM by PIB Chennai
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன், செப்டம்பரில், ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எடுத்துரைத்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் சிலை ஆதி சங்கராச்சாரியாரின் மகத்தான ஆன்மீக ஞானம் மற்றும் போதனைகளுக்கு புகழ் சேர்ப்பதாக அவர் கூறினார். உத்தராகண்டில் உள்ள புனித கேதார்நாத் ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் தெய்வீக சிலையைத் திறந்து வைக்கும் பெருமையும் தனக்குக் கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கேதார்நாத் கோயிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு நிகழ்வாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கராச்சாரியார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நாட்டின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, ஆன்மீக ரீதியில் ஒளி பெற்ற பாரதத்திற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.
மகத்தான சாத்தியக்கூறுகள் நிறைந்த பரந்த பெருங்கடல் ஒருபுறம் இருப்பதையும், மறுபுறம் இயற்கையின் வியத்தகு அழகு அதன் பிரம்மாண்டத்தை மேலும் கூட்டுவதையும் திரு மோடி எடுத்துரைத்தார். இவை அனைத்திற்கும் மத்தியில், விழிஞ்ஞம் ஆழ்கடல் துறைமுகம் இப்போது புதிய யுக வளர்ச்சியின் அடையாளமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்காக கேரள மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
விழிஞ்ஞம் ஆழ்கடல் துறைமுகம் ரூ. 8,800 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், வரும் ஆண்டுகளில் இந்தக் கப்பல் போக்குவரத்து மையத்தின் திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும், இதனால் உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் சிலவற்றின் சுமூகமான வருகை சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் கப்பல் போக்குவரத்தில் 75% முன்னர் வெளிநாட்டு துறைமுகங்கள் மூலம் நடத்தப்பட்டன என்பதையும், இதனால் நாட்டிற்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை இப்போது மாற உள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பணம் இனி இந்தியாவுக்கு பயன்படும் என்றும், ஒரு காலத்தில் நாட்டிற்கு வெளியே சென்ற நிதி இனி கேரளா மற்றும் விழிஞ்ஞம் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
காலனித்துவ ஆட்சிக்கு முன், இந்தியா பல நூற்றாண்டுகள் செழிப்புடன் இருந்தது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு கட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கினைக் கொண்டிருந்தது என்பதை எடுத்துரைத்தார். அந்தக் காலத்தில் இந்தியாவை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்தியது அதன் கடல்சார் திறன் மற்றும் அதன் துறைமுக நகரங்களின் பொருளாதார செயல்பாடுதான் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தக் கடல்சார் வலிமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் கேரளா குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டிருந்தது என்று கூறிய அவர், கடல்சார் வர்த்தகத்தில் கேரளாவின் வரலாற்றுப் பங்கினை எடுத்துரைத்தார். அரபிக் கடல் வழியாக, இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளைப் பேணி வந்தது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கேரளாவைச் சேர்ந்த கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் சென்றன. இது உலகளாவிய வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய மையமாக மாறியது என்று அவர் குறிப்பிட்டார். "இன்று, இந்தப் பொருளாதார சக்தியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது" என்று அவர் கூறினார். மேலும், "இந்தியாவின் கடலோர மாநிலங்களும் துறைமுக நகரங்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய மையங்களாக மாறும்" என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
"உள்கட்டமைப்பும், வணிகம் செய்வதை எளிதாக்குவதும் ஊக்குவிக்கப்படும்போது துறைமுகப் பொருளாதாரம் அதன் முழு திறனை அடைகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், இதுவே மத்திய அரசின் துறைமுகம் மற்றும் நீர்வழிப் பாதைகள் கொள்கையின் வரைபடமாக இருந்து வருகிறது. தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களின் முழுமையான வளர்ச்சி முயற்சிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தி, துறைமுக இணைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ், நீர்வழிப்பாதைகள், ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் தடையற்ற இணைப்புக்காக விரைந்து ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். வணிகம் செய்வதை எளிதாக்குவதில் இந்த சீர்திருத்தங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் அதிக முதலீட்டிற்கு வழிவகுத்துள்ளன என்றும் அவர் கூறினார். இந்திய கடற்படையினர் தொடர்பான விதிமுறைகளையும் மத்திய அரசு சீர்திருத்தியுள்ளது, இது குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளது என்று பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டில், இந்திய கடற்படையினரின் எண்ணிக்கை 1.25 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது என்றும் இன்று, இந்த எண்ணிக்கை 3.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடற்படையினர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியா இப்போது உலகளவில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு தசாப்தத்திற்கு முன், கப்பல்கள் துறைமுகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, இதனால் சரக்குகளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டது என்பதை எடுத்துரைத்த திரு மோடி, இந்த மந்தநிலை, வணிகங்கள், தொழில்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்தது என்று குறிப்பிட்டார். நிலைமை இப்போது மாறிவிட்டது என்றும், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் கப்பல் திரும்பி செல்லும் நேரத்தை 30% குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேம்பட்ட துறைமுக செயல்திறன் காரணமாக, இந்தியா இப்போது குறுகிய காலத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாளுகிறது, நாட்டின் சரக்குப் போக்குவரத்து மற்றும் வர்த்தக திறன்களை வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்தியாவின் கடல்சார் வெற்றி ஒரு தசாப்த கால தொலைநோக்கு மற்றும் முயற்சியின் விளைவாகும்" என்று பிரதமர் கூறினார், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது துறைமுகங்களின் திறனை இரட்டிப்பாக்கி, அதன் தேசிய நீர்வழிகளை எட்டு மடங்கு விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று, உலகின் முதல் 30 துறைமுகங்களில் இரண்டு இந்திய துறைமுகங்கள் உள்ளன என்றும், தளவாட செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையும் மேம்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, உலக கப்பல் கட்டுமானத்தில் முதல் 20 நாடுகளில் இந்தியா இப்போது உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகு, உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை நோக்கி கவனம் இப்போது திரும்பியுள்ளது என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய இந்தியாவின் கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்கு திட்டத்தை அவர் அறிவித்தார். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார பெருவழித்தடத்தை நிறுவ இந்தியா பல முக்கிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஜி-20 உச்சிமாநாட்டை அவர் நினைவு கூர்ந்தார், இந்த வழித்தடத்தில் கேரளாவின் முக்கிய பங்கை எடுத்துரைத்த அவர், இந்த முயற்சியால் மாநிலம் பெரிதும் பயனடையும் என்று கூறினார்.
இந்தியாவின் கடல்சார் தொழிலை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதில், தனியார் துறையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, பொது-தனியார் கூட்டாண்மைகளின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் துறைமுகங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அவற்றை எதிர்காலத்திற்குத் தயாராகவும் ஆக்கியுள்ளது என்று அவர் கூறினார். தனியார் துறை பங்கேற்பு புதுமை மற்றும் மேம்பட்ட செயல்திறனை உந்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கொச்சியில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் குழுமத்தை நிறுவுவதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தக் குழுமம் நிறைவடைந்தவுடன், ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது கேரளாவின் உள்ளூர் திறமையாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வளர்ச்சிக்கான தளத்தை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா இப்போது தனது கப்பல் கட்டும் திறன்களை வலுப்படுத்த லட்சிய இலக்குகளை நிர்ணயித்து வருவதாக பிரதமர் மேலும் கூறினார். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் பெரிய கப்பல்கள் கட்டுவதை ஊக்குவிக்க ஒரு புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது, இது உற்பத்தித் துறையை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி குறு, சிறு,நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நேரடி நன்மைகளை ஏற்படுத்தும் என்றும், நாடு முழுவதும் ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
"உண்மையான வளர்ச்சி என்பது உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு, வர்த்தகம் விரிவடைந்து, சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போதுதான் அடையப்படுகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் கேரள மக்கள் துறைமுக உள்கட்டமைப்பில் மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்களிலும் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த கொல்லம் மற்றும் ஆலப்புழா புறவழிச்சாலைகள் போன்ற திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். கேரளாவிற்கு நவீன வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டு, அதன் போக்குவரத்து வலையமைப்பு மற்றும் இணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேரளாவின் வளர்ச்சி இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்ற கொள்கையில் இந்திய அரசு உறுதியாக நம்புகிறது என்று திரு மோடி கூறினார். கடந்த பத்தாண்டுகளில் முக்கிய சமூக அளவுருக்களில் கேரளாவின் முன்னேற்றத்தை உறுதிசெய்து, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வோடு அரசு செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதமரின் சூர்யக்கூரை இலவச மின்சாரத் திட்டம் உள்ளிட்ட கேரள மக்களுக்கு பயனளித்த பல முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.
மீனவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், நீலப் புரட்சி மற்றும் பிரதமரின் மீன்வளம் மற்றும் மீனவர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பொன்னானி மற்றும் புதியப்பா உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களின் நவீனமயமாக்கலை அவர் சுட்டிக்காட்டினார். கூடுதலாக, கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியைப் பெற முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கேரளா எப்போதும் நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையின் பூமியாக இருந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, உலகின் பழமையான தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் தாமஸ் தேவாலயம் இங்கு நிறுவப்பட்டது என்பதை எடுத்துரைத்தார். போப் பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்பு காலமானபோது, உலகெங்கிலும் உள்ள மக்களைத் தொட்ட சமீபத்திய துக்க தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார். இது ஒரு ஆழமான மரபை விட்டுச் சென்றது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு போப்பின் இறுதிச் சடங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டின் சார்பாக அஞ்சலி செலுத்தினார் என்றும் அவர் கூறினார். கேரளத்தின் புனித பூமியிலிருந்து இந்த இழப்பால் துக்கப்படுபவர்களுக்கு திரு மோடி மீண்டும் ஒருமுறை தனது இரங்கலைத் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸின் சேவை மனப்பான்மையையும், கிறிஸ்தவ மரபுகளுக்குள் அனைவரையும் உள்ளடக்கியதாக உறுதி செய்வதற்கான அவரது முயற்சிகளையும் பாராட்டிய பிரதமர், உலகம் அவரது பங்களிப்புகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று குறிப்பிட்டார். தமது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், போப் பிரான்சிஸைச் சந்திக்க பல வாய்ப்புகள் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். அவரிடமிருந்து சிறப்பு அரவணைப்பைப் பெற்றதாகவும், மனிதநேயம், சேவை மற்றும் அமைதி பற்றிய அவரது விவாதங்களை மிகவும் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில், திரு மோடி கேரளாவை உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய மையமாகக் கருதுவதாக குறிப்பிட்டார். இது ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்தது. இந்த இலக்கை முன்னேற்றுவதற்காக மாநில அரசுடன் இணைந்து பணியாற்றும் மத்திய அரசின் நிலையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். கேரள மக்களின் திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, "இந்தியாவின் கடல்சார் துறை புதிய உயரங்களை எட்டும்" என்று திரு மோடி கூறினார்.
கேரள மாநில ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள முதல்வர் திரு பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள் திரு சுரேஷ் பிரபு, திரு ஜார்ஜ் குரியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னணி
8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள விழிஞஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒருங்கிணைந்த தொலைநோக்கின் ஒரு பகுதியாக இந்தியாவின் கடல்சார் துறையில் செய்யப்படும் மாற்றத்தக்க முன்னேற்றங்களைக் குறிக்கும் நாட்டின் முதல் பிரத்யேக கொள்கலன் கையாளும் துறைமுகமாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த விழிஞ்ஞம் துறைமுகம், உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும், தளவாட செயல்திறனை மேம்படுத்துவதற்கும், சரக்கு பரிமாற்றத்திற்கு வெளிநாட்டு துறைமுகங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் பங்களிக்கும் ஒரு முக்கிய முன்னுரிமை திட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 மீட்டர் ஆழத்தில் அதன் இயற்கையான ஆழமான பகுதி மற்றும் உலகின் பரபரப்பான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ள இத்துறைமுகம், உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
----
(Release ID: 2126080)
SM/SMB/PKVB/KPG/SG
(Release ID: 2126159)
Visitor Counter : 34
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada