பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாளையும் நாளை மறுநாளும்(மே 1 மற்றும் 2-ம் தேதி பிரதமர் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்

மும்பையில், வேவ்ஸ் - உலக ஒலி - ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

25 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான ஊடகக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியா நடத்துகிறது

கேரளாவில், விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

இது இந்தியாவின் முதல் பிரத்யேக கொள்கலன் மாற்று துறைமுகம் ஆகும்
அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்; நிறைவுற்ற திட்டங்களை திறந்து வைக்கிறார்.

இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஆந்திரப்பிரதேசத்தில் பல்வேறு சாலை மற்றும் ரயில் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 30 APR 2025 1:00PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளையும் நாளை மறுநாளும் (மே 1 மற்றும் 2-ம் தேதி) மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 1-ம் தேதி மும்பை செல்லும் அவர், காலை 10.30 மணிக்கு வேவ்ஸ் உலக ஒலி-ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் கேரளா செல்லும் அவர், மே 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து மக்களிடையே உரையாற்றுகிறார்.

கேரளாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஆந்திரப்பிரதேசம் செல்லும் பிரதமர், பிற்பகல் 3:30 மணியளவில், அமராவதியில் ரூ.58,000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மக்களிடையே உரையாற்றுகிறார்.

மகாராஷ்டிராவில்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு மையத்தில் நாட்டின் முதலாவது வேவ்ஸ் - உலக ஒலி – ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு படைப்பாளர்கள் மற்றும் நாடுகளை இணைக்கும் நோக்குடன் நடத்தப்படுகிறது. நான்கு நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள்,

கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்கு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும்.

ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான படைப்பாற்றல், தொழில்நுட்பம், திறமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இம்மாநாட்டில் திரைப்படங்கள், ஓடிடி, கேமிங், காமிக்ஸ், டிஜிட்டல் மீடியா, செயற்கை நுண்ணறிவு, ஏவிஜிசி - எக்ஸ்ஆர், ஒளிபரப்பு, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.இந்த மாநாடு நாட்டின் ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையின்  வலிமையை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2029-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை வாய்ப்புகளைப் பெறுவதை இந்த வேவ்ஸ் உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேவ்ஸ் உச்சிமாநாட்டில், இந்தியா முதல் முறையாக சர்வதேச அளவிலான ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதில் 25 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இது உலகளவிலான ஊடகங்கள், பொழுதுபோக்குத் துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில் வேவ்ஸ் பஜாரில் 6,100 வாடிக்கையாளர்கள், 5,200 விற்பனையாளர்கள் மற்றும் 2,100 செயல்திட்டங்கள் இடம் பெறுகின்றன. உலகளாவிய மின்னணு –சந்தையாக வேவ்ஸ் மாநாட்டின் சந்தை நடவடிக்கைகளும் இடம் பெறும். இது உள்நாட்டிலும் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களையம் விற்பனையாளர்களையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான கட்டமைப்புகள் வர்த்தக வாய்ப்புகளை உறுதி செய்கிறது.

ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளைப் பெற்ற 32 பிரிவுகளில் நடத்தப்பட்ட படைப்பாற்றல் சவால் போட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுடன் பிரதமர் கிரியாட்டோஸ்பியரைப் பார்வையிடுவதுடன் பாரத் அரங்கையும் அவர் பார்வையிடுவார்.

வேவ்ஸ் உச்சி மாநாட்டில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 1,000 படைப்பாளர்கள், 300-க்கும் அதிகமான நிறுவனங்கள், 350-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த உச்சிமாநாட்டில் 42 முழுமையான அமர்வுகளும், 39 கால இடைவெளியுடன் கூடிய அமர்வுகளும் ஒளிபரப்பு, இன்போடெயின்மென்ட், மெய்நிகர் காட்சிகள், திரைப்படங்கள், டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 32 முக்கிய அமர்வுகளும் இடம் பெறும்.

கேரளாவில் பிரதமர்

ரூ.8,900 கோடி மதிப்பிலான விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்குத்  துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான திட்டத்தின் ஒருங்கிணைந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்தியாவின் கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் நாட்டின் முதலாவது பிரத்யேக சரக்குப் பெட்டக மாற்றுத் துறைமுகம் இதுவாகும்.

நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இது அமைந்துள்ளது. இந்த பிரத்யேக சரக்கு பெட்டக மாற்று நடவடிக்கைகளில் சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கும் சரக்குப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் சரக்குப் பெட்டகங்களை கையாளும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், சரக்கு பரிமாற்றத்திற்கு வெளிநாட்டு துறைமுகங்களை சாந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கும் இந்தத் துறைமுகம் பங்களிக்கும். ஏறக்குறைய 20 மீட்டர் ஆழத்தில் இயற்கையுடன் இணைந்த வகையில் மேம்படுத்தப்பட்ட இந்தத் துறைமுகம் உலகின் பரபரப்பான கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு அருகில் அமைந்திருப்பது நாட்டுக்கு மேலும் வலு சேர்ப்பதாக  உள்ளது.

ஆந்திராவில்

அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, நாடு முழுவதும் போக்குவரத்துக்கான இணைப்பை உறுதி செய்வது போன்ற தனது நிலைப்பாட்டுக்கு ஏற்ப, ஆந்திரப்பிரதேசத்தில் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பல்வேறு பிரிவுகளை அகலப்படுத்தும் பணிகளும், சாலை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைத்தல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன்  வேலை வாய்ப்பையும் உருவாக்கிடும்.  திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, மலகொண்டா மற்றும் உதயகிரி கோட்டை போன்ற மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது.

போக்குவரத் வசதிகளை மேம்படுத்தவும், அதன் திறனை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்தத் திட்டங்கள் புக்கனபள்ளி சிமெண்ட் நகர், பன்யம் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை இரட்டிப்பாக்கும் பணிகள், ராயலசீமா மற்றும் அமராவதி இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், நியூ வெஸ்ட் பிளாக் ஹட் கேபின், விஜயவாடா நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைத்தல் ஆகியவை ஆகும்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளையும், ரயில்வே திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு பிரிவுகளை அகலப்படுத்துதல், உயர்மட்ட நடைபாதை அமைத்தல், சாலை மேம்பாலம் கட்டுதல் போன்றவை  இடம் பெறும்.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன், மாநிலங்களுக்கு இடையேயான பயண நேரத்தையும், கூட்ட நெரிசலையும் குறைக்க உதவிடும்.  மேலும் இத்திட்டம் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தும். என்று எதிர்பார்க்கப்படுகிறது. குண்டக்கல் மேற்கு, மல்லப்பா கேட் ரயில் நிலையங்களுக்கு இடையில், சரக்கு ரயில்களின் இயக்கத்தை இதே வழித்தடத்தில் இயக்கப்படுவதை தவிர்க்கவும்,  குண்டக்கல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டப்பேரவை, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், இதர நிர்வாகக் கட்டடங்கள், 5,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.17,400 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான நிலங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், மேம்பட்ட வெள்ள மேலாண்மை அமைப்புகளுடன் 320 கி.மீ உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து கட்டமைப்புகளைக் கொண்ட பகுதியாக மேம்படுத்தவும், வெள்ளத் தணிப்பு திட்டங்களும் இதில் அடங்கும். இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான திட்டங்கள், தலைநகர் அமராவதி முழுவதும் ரூ.20,400 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான சாலை மீடியன்கள், சைக்கிள் தடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் பொருத்தப்பட்ட 1,281 கி.மீ சாலை அமைக்கும் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நாகயாலங்காவில் ரூ.1,460 கோடி மதிப்பிலான ஏவுகணை சோதனை தளத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஏவுதள மையம், தொழில்நுட்ப கருவிகள், உள்நாட்டு ரேடார்கள், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் அமைப்புகள் ஆகியவை நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்தும்.

விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடாவில் ஒற்றுமை வளாக கட்டுமானப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தல், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புப் பொருள் திட்டத்தை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், கிராமப்புற கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், உள்நாட்டு தயாரிப்புகளின் சந்தை இருப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது.

----¬

(Release ID 2125406)

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2125563) Visitor Counter : 13