பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 121-வது அத்தியாயத்தில், 27.04.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
27 APR 2025 11:47AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது. ஏப்ரல் மாதம் 22ஆ ம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, பாரத நாட்டவரான நம்மிடம் காணப்படும் இந்த ஆக்ரோஷம் தான் உலகம் நெடுகவும் இருக்கிறது. இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அனுதாபங்கள் குவிந்து வருகின்றன. உலகத் தலைவர்கள் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார்கள், கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். படுபயங்கரமாக புரியப்பட்ட இந்தக் கொடூரச் செயலை அனைவரும் கடுமையான சொற்களில் சாடியிருக்கிறார்கள். அவர்கள் இறந்துபட்டவர்களின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும், தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி பாரத நாட்டவரோடு நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளிக்கிறேன். இந்தத் தாக்குதலைச் செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலைத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
நண்பர்களே, இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம். கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, விண்வெளி விஞ்ஞானம் போன்ற விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம். விஞ்ஞானம், கல்வி மற்றும் பாரதத்தின் விண்வெளித் திட்டத்தின் புதிய உயரங்களை அளிப்பதில் அவருடைய பங்களிப்பு எப்போதுமே நினைவில் கொள்ளப்படும். அவருடைய தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்புக்கு புதிய அடையாளம் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதலில் விண்வெளித் திட்டம் அடைந்த முன்னேற்றத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. இன்று பாரதம் எந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறதோ, அவற்றில் பல, டாக்டர். கஸ்தூரிரங்கனின் கண்காணிப்பில் ஏவப்பட்டன. அவருடைய ஆளுமை தொடர்பான மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இது இளைய தலைமுறையினருக்கு ஒரு படிப்பினையாக இருக்கும். அவர் எப்போதுமே புதுமைகள் படைத்தலுக்கு மகத்துவம் அளித்து வந்திருக்கிறார். புதியன கற்றல், தெரிதல், புதியன படைத்தல் பற்றிய அவருடைய தொலைநோக்கு மிகவும் உள்ளெழுச்சியூட்டவல்லது. டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்கள் தேசத்தின் புதிய தேசியக் கல்விக்கொள்கையைத் தயாரித்து அளிப்பதிலும் கூட மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார். டாக்டர். கஸ்தூரிரங்கன், 21ஆம் நூற்றாண்டின் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப, முன்னோக்குப் பார்வை கொண்ட கல்விச் சிந்தனையை முன்வைத்தார். தன்னலமற்ற தேச சேவை மற்றும் தேச நிர்மாணம் ஆகியவற்றில் அவருடைய பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு பணிவுணர்வோடு நான் என் சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த மாதம் ஏப்ரலோடு ஆர்யபட் செயற்கைக்கோள் ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவெய்துகின்றது. இன்று நாம் பின்னோக்கிப் பார்க்கையில், 50 ஆண்டுகளின் இந்தப் பயணத்தை அசைபோடும் போது, நாம் எத்தனை தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. விண்வெளியில் பாரதத்தின் கனவுகள், ஊக்கம் என்ற சிறகுகளைக் கொண்டே மேலெழும்பின. தேசத்திற்காக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் கொண்ட சில இளம் விஞ்ஞானிகள் – அவர்களிடம் இன்றிருப்பது போன்ற நவீன சாதனங்களேதும் இருக்கவில்லை, உலகின் தொழில்நுட்பத்தைப் பெறக்கூடிய அணுகல் இல்லை. எதுவுமே இல்லாத போதும் கூட, அவர்களிடம் திறமைகள், ஈடுபாடு, உழைப்பு மற்றும் தேசத்திற்காக சாதித்துக் காட்டவேண்டும் என்ற பேரார்வம் மட்டுமே இருந்தன. மாட்டு வண்டிகளிலும், சைக்கிள்களிலும் முக்கியமான கருவிகளைத் தாமே எடுத்துவந்த நமது விஞ்ஞானிகளின் படங்களை நீங்கள் கவனித்திருக்கலாம். அதே ஈடுபாடு மற்றும் தேச சேவையுணர்வின் விளைவாகவே இன்று இத்தனை பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இன்று பாரதம் ஒரு உலக அளவிலான விண்வெளி சக்தி. நாம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சாதனையைப் படைத்திருக்கிறோம். நாம் நிலவின் தென் துருவத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடாக இருக்கிறோம். செவ்வாயைச் சுற்றிவரும் பயணத்தை பாரதம் ஏவியிருக்கிறது, மேலும் நாம் ஆதித்யா-எல் 1 பயணம் வாயிலாக சூரியனுக்கு வெகு அருகில் சென்றிருக்கிறோம். இன்று உலகனைத்திற்கும் மிகவும் மலிவான விலையில், ஆனால் வெற்றிகரமான விண்வெளித் திட்டத்திற்கான தலைமையை பாரதம் ஏற்றிருக்கிறது. உலகின் பல நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவவும், விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ அமைப்பின் உதவியை நாடுகின்றன.
நண்பர்களே, இஸ்ரோ அமைப்பு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதைக் காணும்போது, நமக்குப் பெருமிதம் பொங்குகிறது. 2014ஆம் ஆண்டு, பி எஸ் எல் வி – சி – 23 விண்ணில் செலுத்தப்பட்டதை நான் காண நேர்ந்தபோது எனக்குள்ளும் இதே உணர்வுதான் நிரம்பியது. 2019ஆம் ஆண்டில் சந்திரயான் – 2 தரையிறங்கிய வேளையிலும் கூட, நான் பெங்களூரூவின் இஸ்ரோ மையத்தில் இருந்தேன். அந்த வேளையிலே, சந்திரயான் பயணத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போது, அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான வேளையாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் விஞ்ஞானிகளின் மனோதிடம் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை நான் என் கண்களால் கண்டேன். சில ஆண்டுகள் கழித்து, இதே விஞ்ஞானிகள் சந்திரயான் – 3ஐ எப்படி வெற்றிகரமாகச் செலுத்திக் காட்டினார்கள் என்பதை உலகமே கண்ணுற்றது.
நண்பர்களே, இப்போது பாரதம் தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டிருக்கிறது. இன்று பல இளைஞர்கள், விண்வெளி ஸ்டார்ட் அப்புகளில் புதிய கொடிகளை நாட்டி வருகிறார்கள். பத்தாண்டுகள் முன்னர் இந்தத் துறையில் ஒரே ஒரு நிறுவனமே இருந்தது, ஆனால் இன்று தேசத்திலே 325ற்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருகின்றன. வரவிருக்கும் காலங்களில் விண்வெளித் துறையில் பல புதிய சாத்தியக்கூறுகள் உருவாக இருக்கின்றன. பாரதம் புதிய உயரங்களை எட்டவிருக்கிறது. தேசம் ககன்யான், ஸ்பேஸ்டெக் மற்றும் சந்திரயான் – 4 போன்ற பல முக்கியமான பயணங்களுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நாம் வீனஸ் ஆர்பிடர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் மிஷன் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். நமது விண்வெளி விஞ்ஞானிகள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுமக்களைப் புதிய பெருமையில் ஆழ்த்த இருக்கிறார்கள்.
நண்பர்களே, கடந்த மாதம், மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய பயங்கரமான படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நிலநடுக்கத்தால் அங்கே மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கிறது, இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு ஒவ்வொரு சுவாஸமும், ஒவ்வொரு கணமும் விலைமதிப்பில்லாதவை. ஆகையால் பாரதம், மியான்மாரில் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ, உடனடியாக ஆப்பரேஷன் பிரம்மாவைத் தொடக்கியது. விமானப்படையின் விமானங்கள் தொடங்கி, கடற்படையின் கப்பல்கள் வரை மியான்மாருக்கு உதவிகள் புரிவதற்கென்றே புறப்பட்டுச் சென்றன. அங்கே பாரத நாட்டுக் குழு, ஒரு கள மருத்துவமனையை ஏற்படுத்தியது. பொறியாளர்களின் ஒரு குழு, முக்கியமான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புக்களில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கெடுப்பதில் உதவி புரிந்தது. பாரத நாட்டுக் குழு அங்கே கம்பளிகள், கூடாரங்கள், உறங்குவதற்கான பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள், குடிநீர் போன்றவற்றோடு கூட, மேலும் பல பொருட்களை அளித்தது. இவை பொருட்டு பாரத நாட்டுக் குழுவினருக்கு அந்த நாட்டு மக்களிடமிருந்து அதிக பாராட்டுக்களும் கிடைத்தன.
நண்பர்களே, இந்தச் சங்கடமான வேளையில், தைரியம், உளவுறுதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவை தொடர்பான பல மனதைத் தொடும் எடுத்துக்காட்டுகள் காணப்பட்டன. பாரதக் குழுவானது, 18 மணிநேரத்துக்கும் மேலாக கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த, 70 வயதுக்கும் மேற்பட்ட ஒரு முதிய பெண்மணியைக் காப்பாற்றியது. தொலைக்காட்சியில் மனதின் குரலை இப்போது பார்த்துக் கொண்டிருப்பவர்களால், அந்த வயதான பெண்மணியின் முகத்தைப் பார்க்க முடியும். பாரதத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குழுவானது அவருடைய பிராணவாயு அளவுகளை சீர் செய்வது தொடங்கி, எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிப்பது வரை, சிகிச்சைகளுக்கான அனைத்து வசதிகளையும் அளித்தது. இந்த முதிய பெண்மணி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, அவர் நமது குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். பாரத நாட்டு மீட்புக் குழுவினர் காரணமாகவே தமக்குப் புதிய வாழ்க்கை கிடைத்திருப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்தார். நமது குழுவினர் காரணமாகவே தங்களுடைய நண்பர்களும், உறவினர்களும் கிடைத்ததாக பலர் தெரிவித்தார்கள்.
நண்பர்களே, நிலநடுக்கத்திற்குப் பிறகு மியான்மாரின் மாண்டலேவில் இருக்கும் ஒரு பௌத்த மடாலயத்திலும் கூட பலர் சிக்கியிருப்பதாக சந்தேகம் எழுந்தது. நமது நண்பர்கள், இங்கேயும் கூட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர்களுக்கு பௌத்த துறவிகளின் ஏராளமான நல்லாசிகள் கிடைத்தன. இந்த ஆப்பரேஷன் பிரம்மாவில் பங்கெடுத்த அனைவர் பற்றியும் மிகவும் பெருமையாக இருக்கிறது. வசுதைவ குடும்பகம், உலகனைத்தும் ஓர் குடும்பம் என்ற உணர்வு தான் நமது பாரம்பரியம், நமது கலாச்சாரம். சங்கடத்தின் போது உலகின் நண்பனாக பாரதத்தின் உடனடிச் செயல்பாடு மற்றும் மனிதத்திற்காக பாரதத்தின் அர்ப்பணிப்புதான் நமது அடையாளமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்த இந்தியர்களின் புதிய முயற்சி பற்றித் தெரிய வந்தது. எத்தியோப்பியாவில் வசிக்கும் பாரத நாட்டவர், பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு பாரதம் அனுப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட பாதிப்பால் அவதிப்படும் பல குழந்தைகளுக்கு பாரத நாட்டவரின் குடும்பங்கள் வாயிலாக பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன. பணத் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற பாரதம் வரமுடியாத குழந்தைகளின் குடும்பங்களுக்கு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை நமது பாரத நாட்டு சகோதர சகோதரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். ஆபத்தான நோய்களால் அவதிப்படும் எத்தியோப்பியாவின் ஏழைக்குழந்தைகளுக்குச் சிறப்பான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அயல்நாடுவாழ் பாரத நாட்டவரின் இத்தகைய சிறப்பான செயல்களுக்கு, எத்தியோப்பியாவில் முழுமையான பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. பாரதத்தில் மருத்துவ வசதிகள் தொடர்ந்து சிறப்படைந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனால் ஆதாயங்களை பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடைந்து வருகிறார்கள்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, ஆஃப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை நாம் அனுப்பியிருந்தோம். இந்தத் தடுப்பூசிகள், வெறிநாய்க்கடி, டெட்டனஸ் என்ற இசிவுநோய், குளிர் ஜுரம், ஹெபாடிடிஸ் பி என்ற ஈரல் அழற்சி போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இதே வாரத்தில் தான் நேபாளத்தின் வேண்டுகோளை ஏற்று அங்கே மருந்துகளும் தடுப்பூசிகளும் அடங்கிய ஒரு பெரிய பொதியை நாம் அனுப்பினோம். இவற்றால் தலசீமியா மற்றும் சிக்கில் செல் நோய் எனும் அரிவாள் உரு சிகப்பணு சோகையால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். மானுட சேவை என்று வரும் போது, பாரதம் எப்போதுமே முன்வந்திருக்கிறது, எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட அனைத்துத் தேவைகளுக்கும் முன்வந்து உதவும்.
நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம். எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல். இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும். இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காபாற்றுகிறது, இதன் பெயரும் கூட சசேத். சசேத் செயலியை, பாரதத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்தச் செயலியால் நீங்கள் வானிலை ஆய்வுத் துறைசார் அண்மைத் தகவல்களைப் பெறலாம். குறிப்பாக, இந்த சசேத் செயலி, மாநில மொழிகளிலும் கூட பல தகவல்களை அளிக்கிறது. இந்தச் செயலியால் நீங்களும் பயனடையுங்கள், உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று நாம் உலகெங்கிலும் பாரதத்தின் திறமைகள் புகழப்படுவதைக் காண்கிறோம். பாரதத்தைப் பற்றி உலகத்தோரின் பார்வையை பாரத இளைஞர்கள் மாற்றிவிட்டார்கள். எந்த ஒரு நாட்டின் இளைஞர்களின் நாட்டம் எப்படி இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதறிந்தால், அந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விட முடியும். இன்று இந்தியாவின் இளைஞர்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தலை நோக்கி முன்னேறி வருகிறார்கள். எந்தத் துறைகளில் எல்லாம் நம் பின் தங்கிய நிலை மற்றும் பிற காரணங்களால் நாம் அடையாளப்படுத்தப்பட்டோமோ, அந்தத் துறைகளில் எல்லாம் நமது இளைஞர்கள், நமக்கு புதிய நம்பிக்கை அளிக்கவல்ல உதாரணங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சத்திஸ்கட்டின் தந்தேவாடாவில் உள்ள அறிவியல் மையம் இப்போதெல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சில நாட்கள் முன்புவரை தந்தேவாடா என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வன்முறை மற்றும் அமைதியின்மை என்ற காட்சியே மனதில் தோன்றும் ஆனால் இன்றோ அங்கே ஒரு அறிவியல் மையம், குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கையின் புதிய கிரணங்களை அளித்து வருகிறது. இந்த அறிவியல் மையத்திற்குச் செல்வதை குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் இப்போது புதிய புதிய இயந்திரங்களை உருவாக்குவது முதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். 3டி பிரிண்டர்கள் மற்றும் ரோபாட்டிக் கார்களைத் தவிர, மேலும் பல புதுமையான பொருட்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. சில நாட்கள் முன்பாக நான் குஜராத்தின் அறிவியல் நகரிலும் கூட அறிவியல் காட்சிக்கூடங்களைத் திறந்து வைத்தேன். இந்தக் காட்சிக்கூடங்களைக் காணும் போது, நவீன அறிவியலின் சக்தி என்ன, விஞ்ஞானம் எந்த அளவுக்கு நமக்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்பதன் ஒரு காட்சி எனக்குக் கிடைத்தது. இந்தக் காட்சிக்கூடங்களைப் பார்த்து, குழந்தைகளிடம் அதிக உற்சாகம் ஏற்படுகிறது என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல்பால் பெருகிவரும் இந்த ஈர்ப்பு, கண்டிப்பாக பாரதத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, நமது தேசத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது நமது 140 கோடி நாட்டுமக்கள், அவர்களின் வல்லமை, அவர்களின் மனவுறுதி தாம். கோடிக்கணக்கானோர் ஒன்றிணைந்து ஒரு இயக்கத்தோடு இணையும் போது, அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். இதற்கு ஒரு உதாரணம் என்று சொன்னால், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கம் தான். இந்த இயக்கம் நம்மை ஈன்றெடுத்த தாயின் பொருட்டு மட்டுமல்ல, நம்மனைவரையும் ஈன்று, சீராட்டி அரவணைத்துவரும் பூமித்தாய், அவள் பொருட்டும் தான். நண்பர்களே, ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று வரும் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இந்த இயக்கம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இந்த ஓராண்டில் இந்த இயக்கத்தின்படி, நாடெங்கிலும் 140 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. பாரதத்தின் இந்த முன்னெடுப்பைப் பார்த்து, தேசத்திற்கு வெளியேயும் கூட மக்கள் தங்களின் தாயின் பெயரால் ஒரு மரத்தை நட்டிருக்கின்றார்கள். நீங்களும் கூட இந்த இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஓராண்டு நிறைவெய்தும் போது உங்களுடைய பங்களிப்பு உங்களைப் பெருமைப்பட வைக்கும்.
நண்பர்களே, மரங்கள் நமக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன, இவற்றின் நிழலில் நமக்கு வெப்பத்திலிருந்து இளைப்பாறுதல் கிடைக்கிறது என்பதை நாமனைவரும் அறிவோம். ஆனால் கடந்த நாட்களில் நான் இது தொடர்பான ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன், அது என் கவனத்தை ஈர்த்தது. குஜராத்தின் அஹமதாபாத் நகரில் கடந்த சில ஆண்டுகளில் 70 இலட்சம் மரங்களுக்கும் அதிகமாக நடப்பட்டிருக்கின்றன. இந்த மரங்கள் காரணமாக அஹமதாபாதின் பசுமைப்பகுதி கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதோடு கூடவே, சாபர்மதி நதி ரிவர் ஃப்ரண்ட் எனும் நதிமுகப்பை ஏற்படுத்தியதிலும், காங்கரியா ஏரி போன்ற சில ஏரிகளின் மீள் அமைப்பாலும், இங்கே நீர் நிலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் உலக வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் பங்கெடுக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக அஹமதாபாத் ஆகியிருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த மாற்றத்தை, சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் குளிர்மையை, அங்கிருக்கும் மக்களும் கூட உணர்ந்து வருகிறார்கள். அஹமதாபாதில் நடப்பட்டிருக்கும் மரங்கள் அங்கே புதிய உவகையை ஏற்படுத்தும் காரணிகளாக ஆகி வருகின்றன. உங்களனைவரிடத்திலும் மீண்டும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், பூமியின் நலனைப் பேணிக்காக்க, சூழல் மாற்றம் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள, நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, கண்டிப்பாக தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுங்கள்.
நண்பர்களே, ஒரு பழமொழி உண்டு, மனம் போல் வாழ்வு. நம் மனதிலே ஒன்றைச் செய்யவேண்டும் என்று உறுதி பூண்டு விட்டால், கண்டிப்பாக இலக்கை எட்டி விட முடியும். நீங்கள் மலைகளில் விளைந்த ஆப்பிளைச் சுவைத்து உண்டிருப்பீர்கள். ஆனால் கர்நாடகத்தில் விளைந்த ஆப்பிளைச் சுவைத்திருக்கிறீர்களா என்று நான் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் இல்லையா? பொதுவாக ஆப்பிள் பழங்கள் மலைகளில் விளைகின்றன என்று தான் நாமறிவோம். ஆனால் கர்நாடகத்தின் பாகல்கோட்டிலே வசிக்கும் ஸ்ரீஷைல்தேலி அவர்கள், மைதானங்களில் ஆப்பிள்களை பயிர் செய்திருக்கிறார். அவர் வசிக்கும் குலாலி கிராமத்தில் 35 டிகிரிக்கும் அதிக வெப்பநிலையிலும் கூட ஆப்பிள் மரங்களை நட்டு விளைவித்திருக்கிறார். ஸ்ரீஷைல்தேலிக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது, இவர் ஆப்பிள் சாகுபடியையும் செய்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார், இதில் வெற்றியும் கண்டார். இன்று இவரால் பயிர் செய்யப்பட்ட ஆப்பிள் மரங்களில் கணிசமாக ஆப்பிள்கள் விளைகின்றன, இவற்றை விற்று நல்ல வருவாயையும் ஈட்டி வருகிறார்.
நண்பர்களே, ஆப்பிள்களைப் பற்றி நாம் பேசும் போது, நீங்கள் கின்னௌரி ஆப்பிள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆப்பிள்களுக்குப் பெயர் போன கின்னௌரிலே குங்குமப்பூ சாகுபடியும் தொடங்கியிருக்கிறது. பொதுவாக ஹிமாச்சலத்தில் குங்குமப்பூவை பயிர் செய்வது குறைவாகவே இருக்கும் ஆனால், இப்போது கின்னௌரின் அழகான சாங்க்லா பள்ளத்தாக்கிலும் கூட குங்குமப்பூ பயிர் செய்யப்படத் தொடங்கியிருக்கிறது. இதே போன்ற மேலும் ஒரு எடுத்துக்காட்டு கேரளத்தின் வயநாட்டிலும் உண்டு. இங்கேயும் கூட குங்குமப்பூவை பயிர்விப்பதிலே வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் வயநாட்டின் இந்தக் குங்குமப்பூ ஏதோ வயலிலோ, மண்ணிலோ அல்ல, மாறாக ஏரோபோனிக்ஸ் அதாவது, பனிமூட்டம் நிறைந்த காற்றில் விளைவிக்கும் உத்தியைப் பயன்படுத்தி பயிர் செய்யப்படுகிறது. இதைப் போன்றே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் லிச்சிப் பழம் அதாவது விளச்சிப்பழ சாகுபடியிலும் நடந்திருக்கிறது. இந்த விளச்சிப்பழம் பிஹார், மேற்கு வங்கம் அல்லது ஜார்க்கண்டில் தான் விளையும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது விளச்சிப்பழ சாகுபடி தென் பாரதம் மற்றும் ராஜஸ்தானத்திலும் கூட ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் திருவீர அரசு காபிப்பயிர் விவசாயம் செய்து வந்தார். கொடைக்கானலில் அவர் விளச்சி மரங்களை நட்டார், அவருடைய ஏழாண்டுக்கால உழைப்பிற்குப் பிறகு இப்போது இந்த மரங்கள் மகசூல் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன. விளச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற விவசாயிகளும் உள்ளெழுச்சி அடைந்தார்கள். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் ராணாவத்தும் விளச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் உத்வேகம் அளிக்கவல்லவை. நாம் புதியதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்தை மேற்கொண்டால், இடர்களைத் தாண்டியும் உறுதிப்பாட்டோடு நின்றால், அசாத்தியமானவைகளும் சாத்தியப்படும்.
என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்று ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை. சில நாட்களில் மே மாதம் தொடங்கிவிடும். நான் உங்களை சுமார் 108 ஆண்டுகள் முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 1917ஆம் ஆண்டு, ஏப்ரல் மற்றும் மே என்ற இதே இரண்டு மாதங்கள் – தேசத்தின் விடுதலைக்காக ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்து வந்தது. ஆங்கிலேயர்கள் உச்சகட்ட அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தார்கள். ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் மீது அடக்குமுறை காட்டுமிராண்டித்தனத்தையும் கடந்த நிலையில் இருந்தது. பிஹாரின் விளைநிலங்களில் இண்டிகோ அதாவது அவுரிச் செடியை பயிர் செய்ய விவசாயிகளை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவுரிச் செடி சாகுபடியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மலடாகிக் கொண்டிருந்தன ஆனால், ஆங்கிலேய காட்டாட்சி இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த நிலையில் 1917ஆம் ஆண்டில், காந்தியடிகள் பிஹாரின் சம்பாரணுக்கு வந்தார். விவசாயிகள் காந்தியடிகளிடம் சென்று – எங்களுடைய நிலம் இறந்து கொண்டிருக்கிறது, உண்ண உணவு கிடைக்கவில்லை என்று முறையிட்டார்கள். இலட்சக்கணக்கான விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து காந்தியடிகள் தன் மனதில் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டார். அங்கிருந்துதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பாரண் சத்தியாகிரகம் தொடங்கியது. அண்ணலின் சத்தியாகிரகத்தால் ஒட்டுமொத்த ஆங்கிலேய ஆட்சியும் ஆட்டம் கண்டது. வேறு வழியில்லாமல் இந்த அவுரிச் செடி பயிர் செய்ய விவசாயிகளை வற்புறுத்தும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு வெற்றி இது. இந்த சத்தியாகிரகத்தில் பிஹாரைச் சேர்ந்த மேலும் ஒரு நல்மைந்தனுடைய மிகப்பெரிய பங்களிப்பும் இருந்தது, இவர் தான் நாடு விடுதலை அடைந்த பிறகு தேசத்தின் முதல் குடியரசுத் தலைவராக ஆனார். அவர் தான் மகத்தான ஆளுமையான டாக்டர். ராஜேந்திர பிரசாத். இவர் சம்பாரண் சத்தியாகிரகம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் – Satyagraha in Champaran, சம்பாரணில் சத்தியாகிரகம் என்ற இந்தப் புத்தகத்தை அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டும். சகோதர சகோதரிகளே, ஏப்ரலோடு தான் சுதந்திரப் போராட்டத்தின் பல, மறக்கமுடியாத அத்தியாயங்கள் இணைந்திருக்கின்றன. ஏப்ரல் மாதத்தின் 6ஆம் தேதியன்று தான் காந்தியடிகளின் தாண்டி யாத்திரை நிறைவடைந்தது. மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று தொடங்கி, 24 நாட்கள் வரை நடந்த இந்த யாத்திரை, ஆங்கிலேயர்களை அசைத்துப் பார்த்தது. ஏப்ரல் மாதத்தில் தான் ஜலியான்வாலாபாக் படுகொலை அரங்கேறியது. பஞ்சாபின் மண்ணின் மீது, ரத்தத்தால் செம்மையான இந்த வரலாற்றின் அடையாளங்கள் இன்றும் கூட காணப்படுகின்றன.
நண்பர்களே, சில நாட்களில் மே மாதம் 10ஆம் தேதியன்று, முதல் சுதந்திரப் போராட்டத்தின் ஆண்டு நிறைவு வரவிருக்கிறது. சுதந்திரம் வேண்டி புரியப்பட்ட அந்த முதல் போரில் எழுந்த தீப்பொறி மேலும் வலுவடைந்து, இலட்சக்கணக்கான வீரர்களுக்கு பெருங்கனலாக உருமாறியது. ஏப்ரல் 26ஆம் தேதியன்று நாம் 1857ஆம் ஆண்டுப் புரட்சியின் மகத்தான நாயகனான பாபு வீர் குன்வர் சிங் அவர்களின் நினைவுநாளை அனுசரித்தோம். பிஹாரின் மாபெரும் போராளி காரணமாக தேசம் முழுமைக்கும் உத்வேகம் கிடைத்தது. இப்படிப்பட்ட இலட்சோபலட்சம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் காலத்தால் அழியாத உத்வேகங்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். நாம் அவற்றிலிருந்து சக்தி பெற வேண்டும், இவை அமுதக்காலத்தின் நமது உறுதிப்பாடுகளுக்குப் புதிய பலத்தை அளிக்கின்றன.
நண்பர்களே, மனதின் குரலின் இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் இந்த நிகழ்ச்சியோடு ஒரு ஆத்மார்த்தமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எந்தச் சாதனைகளை நாட்டுமக்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவை மனதின் குரல் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அடுத்து வரவிருக்கும் மாதங்களில் நாம் மீண்டும் இணைவோம், தேசத்தின் பன்முகத்தன்மை, கௌரவமளிக்கும் பாரம்பரியங்கள், புதிய சாதனைகள் ஆகியவை குறித்துப் பரிமாறுவோம். தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவருவோரைப் பற்றித் தெரிந்து கொள்வோம். எப்போதும் போலவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வாருங்கள். நன்றி, வணக்கம்.
*****
(Release ID: 2124694)
SMB/SG
(Release ID: 2124700)
Visitor Counter : 75
Read this release in:
Gujarati
,
Odia
,
Malayalam
,
Telugu
,
Manipuri
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Kannada