பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்தார் - இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சில் கூட்டத்திற்கு கூட்டாக தலைமை வகித்தார்

Posted On: 23 APR 2025 2:20AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 22, அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அரசு மாளிகையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.

இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும், அந்நாட்டு பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோர் தலைமை வகித்து அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்தினர். பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பட்டத்து இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்துப் போராட இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.

புதுதில்லியில் 2023 செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு கவுன்சிலின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தலைவர்கள் ஆய்வு செய்தனர். இருதரப்பு ஈடுபாடுகள் தீவிரமடைந்து வருவதையும், பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் அதிக எண்ணிக்கையிலான உயர்மட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதையும் இரு தரப்பிலும் நம்பிக்கை, பரஸ்பர புரிந்துணர்வை உருவாகியிருப்பதையும் தலைவர்கள் பாராட்டினர். எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கலாச்சாரம், மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக இளவரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்கிய ஆதரவுக்காகவும் சவுதி அரசைப் பிரதமர் பாராட்டினார்.

முதலீடு குறித்த உயர்நிலை பணிக்குழுவின் விவாதங்களின் முன்னேற்றத்தை இரு தலைவர்களும் பாராட்டினர். எரிசக்தி, பெட்ரோ ரசாயனம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, மருந்துகள், உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் சவுதி அரேபியாவின் முந்தைய உறுதிப்பாட்டின் அடிப்படையில் பணிக்குழு பல்வேறு துறைகளில் அடைந்த முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றனர். இந்தச் சூழலில், இந்தியாவில் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தையும், வரிவிதிப்பு பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர்கள் வரவேற்றனர். பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளும் பணம் செலுத்தும் தீர்வுகளை உள்ளூர் நாணயங்களில் இணைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இரு தலைவர்களும் இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தின் முன்னேற்றம் குறித்தும், குறிப்பாக இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு போக்குவரத்து இணைப்பு முயற்சிகள் குறித்தும் விவாதித்தனர். பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கவுன்சிலின் கீழ் உள்ள இரண்டு அமைச்சர்கள் குழுக்களின் பணிகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்: அரசியல், பாதுகாப்பு, சமூக, கலாச்சார ஒத்துழைப்புக்கான குழு, அதன் துணைக் குழுக்கள், பொருளாதாரம் - முதலீடுகளுக்கான குழு, அதன் கூட்டு பணிக்குழுக்கள் ஆகியவை அந்த இரு குழுக்களாகும்.

இரண்டு புதிய அமைச்சர்கள் குழுக்கள் நிறுவப்பட்டதன் மூலம் உத்திசார் ஒத்துழைப்பு கவுன்சிலின் விரிவாக்கத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்தச் சூழலில், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழுவை அமைக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். சமீபத்திய ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் வேகத்தை பாராட்டிய அவர்கள், சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழுவை நிறுவவும் ஒப்புக்கொண்டனர். கூட்டத்திற்குப்பின்னர், இரண்டாவது கூட்டத்தின் குறிப்புகளில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்தப் பயணத்தையொட்டி விண்வெளி, சுகாதாரம், விளையாட்டு (ஊக்கமருந்து எதிர்ப்பு), அஞ்சல் துறை ஆகிய துறைகளில் 4 இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை தலைவர்கள் வரவேற்றனர்.

உத்திசார் பாதுகாப்பு கவுன்சிலின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

 

***

(Release ID: 2123658)
TS/PLM/RR/KR


(Release ID: 2123712) Visitor Counter : 15