பிரதமர் அலுவலகம்
வீர பாலகர் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
26 DEC 2024 3:30PM by PIB Chennai
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, அன்னபூர்ணா தேவி அவர்களே, சாவித்ரி தாக்கூர் அவர்களே, சுகந்தா மஜும்தார் அவர்களே, ஏனைய மதிப்பிற்குரியர்களே, நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்திருக்கும் விருந்தினர்களே, எனதருமைக் குழந்தைகளே,
இன்று, மூன்றாவது 'வீர பாலகர் தினம்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாம் இங்கு கூடி இருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, துணிச்சலான சாஹிப்ஜாதாக்களின் தியாகத்தின் என்றென்றும் நினைவாக எங்கள் அரசு வீர பாலகர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இன்று இந்த நாள் கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கும் விழாவாக ஆகியிருக்கிறது. இந்த நாள் இந்தியாவில் எண்ணற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வெல்லமுடியாத துணிச்சலுடன் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது! இன்று நாடு முழுவதிலும் இருந்து 17 குழந்தைகள் வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கலை ஆகியவற்றில் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பமுடியாத தங்களின் திறனை நிரூபித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில், எங்கள் குருக்கள் மற்றும் துணிச்சலான சாஹிப்ஜாதாக்களை நான் பயபக்தியுடன் வணங்குகிறேன். விருதுகளை வென்றிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தேசத்தின் சார்பில் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று உங்கள் அனைவருடனும் உரையாடும் வேளையில், எந்தச் சூழ்நிலையில் துணிச்சலான சாஹிப்ஜாதாக்கள், தங்களது உயரிய தியாகத்தை மேற்கொண்டனர் என்பதையும் நான் குறிப்பிடுகிறேன். இன்றைய இளைய தலைமுறையினர் இந்த நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதனால்தான் இந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுகூர வேண்டியது அவசியம். சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று வீரம் செறிந்த சாஹிப்ஜாதாக்கள், மிகச் சிறிய வயதிலேயே தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். சாஹிப்ஜாதா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா ஃபதே சிங் ஆகியோர் வயதில் சிறியவர்கள், ஆனால் அவர்களின் தைரியம் வானத்தை விட உயர்ந்தது. அவர்கள் முகலாயப் பேரரசின் ஒவ்வொரு தூண்டுதலையும் நிராகரித்தனர். ஒவ்வொரு கொடுமையையும் சகித்துக் கொண்டனர். குரு அர்ஜன் தேவ், குரு தேஜ் பகதூர், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் வீரத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாஹிப்ஜாதாக்கள் நினைவூட்டினர். அவர்களின் துணிச்சல் எங்கள் விசுவாசத்தின் ஆன்மீக பலம். சாஹிப்ஜாதாக்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், தங்கள் நம்பிக்கைகளின் பாதையிலிருந்து ஒருபோதும் தளரவில்லை. எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும், எவ்வளவு மோசமான காலமாக இருந்தாலும், தேசத்தின் நலனையும், தேசத்தின் நலனையும் விட பெரியது எதுவும் இல்லை என்பதையும் இந்த வீரபாலகர் தினம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நாட்டிற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வீரத்தின் அடையாளமாகும். நாட்டிற்காக வாழும் ஒவ்வொரு குழந்தையும் இளைஞர்களும் 'வீர பாலகர்' (தைரியமான குழந்தை) ஆவார்.
நண்பர்களே,
இந்த ஆண்டின் வீர பாலகர் தினம் மேலும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு இந்தியக் குடியரசு மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்ட 75-வது ஆண்டாகும். இந்த 75-வது ஆண்டில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகப் பணியாற்ற துணிச்சலான சாஹிப்ஜாதாக்களிடமிருந்து உத்வேகம் பெற்று வருகிறார்கள்.
நண்பர்களே,
இந்த பத்தாண்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் 'அமிர்த காலத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில், நாட்டின் இளைஞர்களின் முழு பலத்தையும் நாம் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் ஆற்றலால், பாரதம் இணையற்ற உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தீர்மானத்தை மனதில் கொண்டு, நமது குருக்கள், துணிச்சலான சாஹிப்ஜாதாக்கள் மற்றும் மாதா குஜ்ரி ஜி ஆகியோருக்கு நான் மீண்டும் ஒரு முறை தலை வணங்குகிறேன்.
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
----
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2123559)