கூட்டுறவு அமைச்சகம்
போபாலில் மாநில அளவிலான கூட்டுறவு மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்
கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவுத் துறையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது - இப்போது இந்தத் துறை வேகமாக முன்னேறி வருகிறது: திரு அமித் ஷா
Posted On:
13 APR 2025 7:12PM by PIB Chennai
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற மாநில அளவிலான கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (13.04.2025) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மத்திய பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு விஸ்வாஸ் சாரங், மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூடானி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு ஆகிய மூன்று துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும், அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார். பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டுறவு இயக்கம் செயலிழந்து வந்ததாக அவர் கூறினார். இதற்கு காரணம், கூட்டுறவு சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களைத் தவிர, அனைத்து கூட்டுறவுகளும் மாநிலப் பொறுப்பாகும் என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டில் வேகமாக மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்தின் புவியியல் நிலை, மழைப்பொழிவு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண் மேம்பாடு, கால்நடை வளர்ப்பு பரிமாணங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, தேசிய அளவில் எந்த சிந்தனையும் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார். தேசிய அளவில் கூட்டுறவு அமைச்சகம் இல்லாததால் இதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று திரு அமித் ஷா கூறினார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியதாகவும் அதில் முதல் கூட்டுறவு அமைச்சராகும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்தது என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இப்போது இந்தத் துறை வேகமாக முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். நமது அரசியல் சாசனத்தில் இருந்த வரம்புகள் இன்னும் அப்படியே உள்ளன என்று அவர் கூறினார். இன்றும், கூட்டுறவு என்பது ஒரு மாநில விஷயமாக உள்ளது எனவும் இத்துறையில் மத்திய அரசு எந்த சட்ட மாற்றங்களையும் செய்ய முடியாது என்றும் திரு அமித் ஷா கூறினார். இருப்பினும், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கு புத்துயிரூட்டவும், பால்வளத் துறையை மேம்படுத்தவும், கூட்டுறவு சீரான மேலாண்மைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கான (பிஏசிஎஸ்) மாதிரி துணை விதிகளை உருவாக்குவதில் கூட்டுறவு அமைச்சகம் முதலில் பணியாற்றி அதை ஒப்புதலுக்காக மாநில அரசுகளுக்கு அனுப்பியது என்று அவர் கூறினார். இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அவர் கூறினார். மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டதற்காக மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்த திரு அமித் ஷா, இந்த நடவடிக்கை கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்துள்ளது என்று கூறினார். பொதுக் கணக்கு ஆணையத்தை வலுப்படுத்தாவிட்டால், மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். முந்தைய தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் குறுகிய கால விவசாயக் கடன்களை மட்டுமே வழங்கி வந்ததாகவும் இதில் அவை அரை சதவீத வருமானத்தை ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இன்று இந்த சங்கங்கள் 20-க்கும் மேற்பட்ட வகையான சேவைகளை வழங்கி வருவதாலும் புதிய சீர்திருத்தங்களாலும் அவற்றின் வருமானம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் மருந்தக மையம், பொதுச் சேவை மையங்கள் போன்ற சேவைகளை வழங்க தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக திரு அமித் ஷா கூறினார். இந்த சங்கங்கள் இப்போது உர விற்பனையாளர்களாக மாறலாம் எனவும் பெட்ரோல் நிலையங்களைத் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
₹ 2500 கோடி செலவில் நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களையும் (பிஏசிஎஸ்) மத்திய அரசு கணினிமயமாக்கியுள்ளது என்று அவர் கூறினார். பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்குவதில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது என அவர் தெரிவித்தார்.
கணினிமயமாக்கப்பட்ட பிஏசிஎஸ் இந்தியாவில் 13 மொழிகளில் செயல்படுவதாக திரு அமித் ஷா கூறினார். மத்திய பிரதேசத்தில் இந்தியிலும், குஜராத்தில் குஜராத்தியிலும், தமிழ்நாட்டில் தமிழிலும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று புதிய தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் விளைபொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்வதற்காக தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (NCEL) நிறுவப்பட்டது எனவும் விவசாயிகளின் இயற்கை விளைபொருட்களுக்கு அதிக விலை பெற்றுத் தரும் நோக்கத்துடன் தேசிய கூட்டுறவு இயற்கை பொருட்கள் நிறுவனம் (NCOL) நிறுவப்பட்டது எனவும் அவர் கூறினார். இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்த 20 ஆண்டுகளில் அமுல் உள்ளிட்ட பிற நிறுவனங்களை விட பெரியதாக மாறும் என்று அவர் தெரிவித்தார். விதைகள் பாதுகாப்பு, மேம்பாட்டிற்காக இந்திய விதைகள் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் (பாரதிய பீஜ் சககாரி சமிதி லிமிடெட் - பிபிஎஸ்எஸ்எல்) என்ற தேசிய கூட்டுறவு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். கூட்டுறவுத் துறையில் கல்வி, பயிற்சிக்காக திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகத்தை அரசு நிறுவியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
மத்திய பிரதேசத்தில் தற்போது நல்லாட்சி நிலவுகிறது என்று திரு அமித் ஷா கூறினார். மாநிலத்தின் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் தெரிவித்தார். இந்த வாய்ப்பை மத்திய பிரதேச மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
****
PLM/DL
(Release ID: 2121482)
Visitor Counter : 20