பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்


நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெற முன்னுரிமை அளித்துப் பணியாற்றுகிறோம்: பிரதமர்

மிகவும் கடினமான காலங்களில் கூட, விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவில் புதிய சமூக இயக்கங்கள் நடந்து கொண்டே இருந்தன: பிரதமர்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் இந்தியாவின் அழியாத கலாச்சாரத்தின் நவீன அக்ஷய் வாட் ஆகும் - இந்த அக்ஷய் வாட் இந்திய கலாச்சாரத்தையும், நமது தேசத்தின் உணர்வையும் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது: பிரதமர்

முயற்சிகளின் போது, தனி நபர் மீது அல்லாமல் மக்கள் மீது கவனம் செலுத்தப்படும்போது, தேசத்தின் உணர்வு முதன்மையானதாக இருக்கும்போது, கொள்கைகள், முடிவுகளில் நாட்டு மக்களின் நலன் மிக முக்கியமான காரணியாக இருக்கும்போதுதான், அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் தெரியும்: பிரதமர்

உலகில் எங்கெல்லாம் இயற்கை பேரிடர் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் முழு மனதுடன் சேவை செய்ய இந்தியா எழுந்து நிற்கிறது: பிரதமர்

தேச நிர்மாண உணர்வால் நிரம்பிய நமது இளைஞர்கள், 2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றனர்: பிரதமர்

Posted On: 30 MAR 2025 2:09PM by PIB Chennai

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சுயில் உரையாற்றிய அவர், புனித நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் சைத்ர சுக்லா பிரதிபதாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நாடு முழுவதும் குடி படவா, உகாதி, நவ்ரேஹ் போன்ற பண்டிகைகள் இன்று கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பகவான் ஜூலேலால், குரு அங்கத் தேவ் ஆகியோரின் பிறந்த தினங்களான இந்த நாளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இன்று டாக்டர் கே.பி.ஹெட்கேவாரின் பிறந்த நாள் என்றும், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) புகழ்பெற்ற பயணத்தின் நூற்றாண்டு என்றும் அவர் ஒப்புக் கொண்டார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் டாக்டர் ஹெட்கேவார், ஸ்ரீ கோல்வால்கர் குருஜி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்மிருதி மந்திருக்கு வருகை தந்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டம், அடுத்த மாதம் வரவிருக்கும் அதன் சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாள் ஆகியவை குறித்து குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, தீக்ஷபூமியில் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், அவரது ஆசிகளைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார். நவராத்திரி, இதர பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

சேவைக்கான புனிதமான மையமாக நாக்பூரின் முக்கியத்துவத்தையும், ஒரு உன்னத முயற்சியின் விரிவாக்கத்தையும்  கூறிய திரு நரேந்திர மோடி, ஆன்மிகம், அறிவு, பெருமை, மனிதநேயத்தை பிரதிபலிக்கும் மாதவ் நேத்ராலயா குறித்து குறிப்பிட்டார். மாதவ் நேத்ராலயா பல ஆண்டுகளாக லட்சக்கணக்கானவர்களுக்கு சேவை செய்து, பூஜ்ய குருஜியின் கொள்கைகளைப் பின்பற்றி, எண்ணற்ற மக்களுக்கு பார்வை ஒளியை மீட்டெடுத்து வரும் நிறுவனம் என்று அவர் எடுத்துரைத்தார்.

மாதவ் நேத்ராலயாவின் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், இந்த விரிவாக்கம் அதன் சேவை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, ஆயிரக்கணக்கான புதிய உயிர்களுக்கு பார்வை வெளிச்சத்தைக் கொண்டுவந்து அவர்களின் வாழ்க்கையிலிருந்து இருளை அகற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாதவ் நேத்ராலயாவுடன் தொடர்புடைய அனைவரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். மேலும் அவர்களின் தொடர்ச்சியான சேவைக்குத் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அனைவரின் முயற்சி என்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சுகாதாரத் துறையில் நாடு அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். மாதவ் நேத்ராலயா இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக உள்ளது என்று குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை எனவும் ஏழைகளும் சிறந்த சிகிச்சையைப் பெற என்று கூறிய அவர், எந்தவொரு குடிமகனும் வாழ்க்கையின் கண்ணியத்தை இழக்கக்கூடாது என்றும், தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சையைப் பற்றி கவலைப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் மருந்தக மையங்கள் அமைக்கப்பட்டு, ஏழை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு, மக்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டிருப்பதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் கிராமங்களில் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டு, தொலை மருத்துவம் மூலம் மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவை வழங்கப்படுவதை அவர் குறிப்பிட்டார். இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக மக்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய தேவை இல்லை என அவர் கூறினார்.

நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுவதையும், எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் மூன்று மடங்காக உயர்த்தப்படுவதையும் சுட்டிக்காட்டிய திரு மோடி, எதிர்காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய அதிக திறன் வாய்ந்த மருத்துவர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றார். மாணவர்கள் தங்கள் சொந்த மொழிகளில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், அவர்கள் மருத்துவர்களாக மாறவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். நவீன மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்களுடன், நாடு அதன் பாரம்பரிய அறிவையும் ஊக்குவித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் யோகா மற்றும் ஆயுர்வேதம் உலக அரங்கில் நாட்டின் கவுரவத்தை உயர்த்தியுள்ள உலகளாவிய அங்கீகாரம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டின் இருப்பும் அதன் கலாச்சாரமும், உணர்வும் தலைமுறைகளைக் கடந்து விரிவடைவதைப் பொறுத்தது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் பல நூற்றாண்டுகால அடிமைத்தனம், படையெடுப்புகளின் வரலாற்றை எடுத்துரைத்தார். குரு நானக் தேவ், கபீர் தாஸ், துளசிதாஸ், சூர்தாஸ், மகாராஷ்டிராவின் சாந்த் துக்காராம், சந்த் ஏக்நாத், சந்த் நாம்தேவ் மற்றும் துறவி தியானேஷ்வர் போன்ற துறவிகள் தங்கள் கருத்துக்களால் இந்தியாவின் தேசிய நனவில் உயிர் புகுத்திய பக்தி இயக்கத்தை ஒரு உதாரணமாக மேற்கோள் காட்டிய அவர், கடினமான காலங்களில் கூட, இந்தியாவில் புதிய சமூக இயக்கங்கள் இந்த நனவை விழிப்படையச் செய்தன என்று கூறினார். இந்த இயக்கங்கள் பாகுபாட்டை உடைத்து சமூகத்தை ஒன்றிணைத்தன என்று அவர் குறிப்பிட்டார். நம்பிக்கையிழந்த சமுதாயத்தின் சாரத்தை நினைவூட்டி, தன்னம்பிக்கையை ஊட்டி, இந்தியாவின் தேசிய உணர்வு மங்காமல் இருப்பதை உறுதி செய்த சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பை சுட்டிக் காட்டிய பிரதமர், காலனிய ஆட்சியின் இறுதி பத்தாண்டுகளில் இந்த உணர்வுக்கு உற்சாகம் அளித்ததில் டாக்டர் ஹெட்கேவார், குருஜி ஆற்றிய பங்களிப்பை குறிப்பிட்டார். தேசிய உணர்வைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட சிந்தனை விதை தற்போது ஒரு பெரிய மரமாக வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான தன்னார்வலர்களை கிளையாகக் கொண்ட இந்த மாபெரும் மரத்திற்கு கொள்கைகளும், லட்சியங்களும் உயரம் கொடுக்கின்றன என்று அவர் எடுத்துரைத்தார். "ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் இந்தியாவின் அழியாத கலாச்சாரத்தின் நவீன அக்ஷய் வாட், இந்த அக்ஷய் வாட் இந்திய கலாச்சாரத்தையும் நமது தேசத்தின் உணர்வையும் தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

மாதவ் நேத்ராலயாவின் புதிய வளாகம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், பார்வைக்கும் திசைக்கும் இடையிலான இயற்கையான தொடர்பு குறித்து குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, வாழ்க்கையில் தொலைநோக்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "பஷ்யேமா சாரதா ஷதம்" என்ற வேத சொல்லை அவர் மேற்கோள் காட்டினார். வெளிப்புற பார்வை, உள் பார்வை இரண்டின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். விதர்பாவின் மகத்தான துறவி "பிரஜ்னசக்ஷு" என்று அழைக்கப்படும் திரு குலாப்ராவ் மகராஜ்-ஜை நினைவு கூர்ந்த பிரதமர், "இளம் வயதிலேயே தனது கண்பார்வையை இழந்த போதிலும்குலாப்ராவ் மகராஜ் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்று கூறினார். அவருக்கு உடல் பார்வை இல்லையென்றாலும், அவர் ஆழமான பார்வையைக் கொண்டிருந்தார் எனவும் இது ஞானத்திலிருந்து உருவாகி விவேகத்தின் மூலம் வெளிப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய தொலைநோக்குப் பார்வை தனிநபர்களுக்கும், சமுதாயத்திற்கும் அதிகாரம் அளிக்கும் என்று அவர் கூறினார். ஆர்எஸ்எஸ் என்பது வெளிப்புற பார்வை, உள் பார்வை இரண்டையும் நோக்கி செயல்படும் ஒரு புனிதமான முயற்சி என்று அவர் குறிப்பிட்டார். மாதவ் நேத்ராலயாவை வெளிப்புற பார்வைக்கு உதாரணமாக எடுத்துரைத்த அவர், உள் பார்வை சங்கத்தை சேவைக்கு ஒத்ததாக ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

புனித நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், சேவையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுமே வாழ்க்கையின் நோக்கம் என்பதை எடுத்துரைத்தார். சேவை என்பது விழுமியங்களில் ஊறிப்போகும் போது, அது பக்தியின் வடிவமாக மாறுகிறது எனவும் இது ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டரின் வாழ்க்கையின் சாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சேவை உணர்வு, பல தலைமுறை தன்னார்வத் தொண்டர்கள் தங்களை அயராது அர்ப்பணித்துக் கொள்ள ஊக்கமளிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். இந்த பக்தி தன்னார்வலர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது என்றும் ஒருபோதும் சோர்வடையவோ அல்லது நிறுத்தவோ அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். வாழ்க்கையின் முக்கியத்துவம் அதன் கால அளவில் இல்லை, அதன் பயன்பாட்டில் உள்ளது என்று குருஜி கூறியதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, "தேவ் முதல் தேசம்" மற்றும் "ராமர் முதல் ராஷ்டிரா வரை" என்ற கொள்கைகளால் வழிநடத்தப்படும் கடமைக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். எல்லையோர கிராமங்கள், மலைப்பாங்கான பகுதிகள் அல்லது வனப்பகுதிகளில் பல்வேறு துறைகளில் தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகள் குறித்து அவர் குறிப்பிட்டார். வனவாசி கல்யாண் ஆசிரமங்கள், பழங்குடியின குழந்தைகளுக்கான ஏகல் வித்யாலயாக்கள், கலாச்சார விழிப்புணர்வு இயக்கங்கள், பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கான சேவா பாரதியின் முயற்சிகள் போன்ற முன்முயற்சிகளில் அவர்களின் ஈடுபாட்டை அவர் எடுத்துரைத்தார். நேத்ர கும்பமேளா முன்முயற்சியின் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவிய பிரயாகை மஹாகும்பமேளாவின் போது தன்னார்வலர்களின் முன்மாதிரியான பணிகளைப் பாராட்டிய அவர், எங்கெல்லாம் சேவை தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் தன்னார்வலர்கள் உள்ளனர் என்று கூறினார். வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களின் போது தன்னார்வலர்களின் ஒழுக்கமான நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் தன்னலமற்ற தன்மை, சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார். சேவை என்பது ஒரு வேள்வி நெருப்பு என அவர் கூறினார்.

சங்கம் எங்கும் வியாபித்துள்ளது என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்று ஒருமுறை குருஜியிடம் கேட்கப்பட்டபோது, குருஜி சங்கத்தை ஒளியுடன் ஒப்பிட்டார் என்று கூறிய திரு நரேந்திர மோடி, ஒளி ஒவ்வொரு பணியையும் தானே செய்யாது என்றாலும், அது இருளை அகற்றி மற்றவர்களுக்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகிறது என்பதை எடுத்துரைத்தார். குருஜியின் போதனைகள் வாழ்க்கை மந்திரமாக செயல்படுவதாகவும், ஒவ்வொருவரும் ஒளியின் ஆதாரமாக மாறவும், தடைகளை அகற்றவும், முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும் வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். "நான் அல்ல, நீங்கள்", "என்னுடையது அல்ல, தேசத்துக்காக" என்ற கொள்கைகளுடன் தன்னலமற்ற தன்மையின் சாரத்தை அவர் எடுத்துரைத்தார்.

"நான்" என்பதற்கு பதிலாக "நாம்" என்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அனைத்து கொள்கைகள், முடிவுகளிலும் நாட்டிற்கு முதலிடம் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இத்தகைய அணுகுமுறை நாடு முழுவதும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சங்கிலிகளை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், காலனித்துவ மனநிலையைத் தாண்டி செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 70 ஆண்டுகளாக தாழ்வு மனப்பான்மையுடன் சுமந்து வந்த காலனித்துவத்தின் மிச்ச சொச்சங்களை மாற்றி இந்தியா இப்போது தேசிய பெருமையின் புதிய அத்தியாயங்களைக் கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியர்களை இழிவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட காலாவதியான பிரிட்டிஷ் சட்டங்களை புதிய பாரதிய நியாய் சன்ஹிதாவைக் கொண்டு மாற்றுவது குறித்து அவர் குறிப்பிட்டார். காலனித்துவ பாரம்பரியத்தின் மீதான கடமையின் அடையாளமாக ராஜபாதை, கடமைப் பாதையாக மாற்றப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். கடற்படையின் கொடியிலிருந்து காலனித்துவ சின்னங்கள் அகற்றப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இது இப்போது சத்ரபதி சிவாஜி மகாராஜின் சின்னத்தை பெருமையுடன் கொண்டுள்ளது என அவர் கூறினார். அந்தமான் பிராந்தியத்தில் உள்ள தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டதையும், வீர சாவர்க்கர் நாட்டிற்காக கஷ்டங்களை அனுபவித்ததையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட இந்தியாவின் சுதந்திரத்தின் நாயகர்களை கௌரவிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியாவின் வழிகாட்டும் கொள்கையான "உலகம் ஒரே குடும்பம்" என்பது உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ளது. இது இந்தியாவின் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது" என்று கூறிய திரு நரேந்திர மோடி, கொவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார். ஒரு குடும்பமாக உலகிற்கு தடுப்பூசிகளை வழங்கியதை அவர் குறிப்பிட்டார். "ஆபரேஷன் பிரம்மா நடவடிக்கை" திட்டத்தின் கீழ் மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், துருக்கி, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் போது இந்தியா அளித்த உதவிகள், மாலத்தீவில் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இந்தியாவின் உடனடி உதவி நடவடிக்கை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். மோதல்களின் போது மக்களை வெளியேற்றுவதில் இந்தியாவின் பங்கை வலியுறுத்திய அவர், இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய தெற்கின் குரலை விரிவுபடுத்துகிறது என்று குறிப்பிட்டார். இந்த உலகளாவிய சகோதரத்துவ உணர்வு இந்தியாவின் கலாச்சார விழுமியங்களில் இருந்து உருவாகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் இளைஞர்கள் நாட்டின் மிகப்பெரிய சொத்து, நம்பிக்கை நிறைந்தவர்கள், ஆபத்தை எதிர்கொள்வதற்கான மேம்பட்ட திறன் ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, புதிய கண்டுபிடிப்புகள், புத்தொழில் நிறுவனங்கள், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் அவர்களின் பெருமை ஆகியவற்றில் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டார். பிரயாகை மஹா கும்பமேளாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றதை இந்தியாவின் சாசுவதமான பாரம்பரியத்துடன் அவர்கள் கொண்டுள்ள தொடர்புக்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டார். தேசிய தேவைகளில் இளைஞர்கள் கவனம் செலுத்துவது, "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" திட்டத்தின் வெற்றியில் அவர்களின் பங்கு, உள்ளூர் தயாரிப்புகளுக்கு அவர்கள் குரல் கொடுக்கும் ஆதரவு ஆகியவை குறித்து அவர் குறிப்பிட்டார். தேச நிர்மாண உணர்வால் உந்தப்பட்டு, விளையாட்டுத் துறை முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை சிறந்து விளங்கி, தேசத்திற்காக வாழவும், பணியாற்றவும் அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கி இந்திய இளைஞர்கள் நாட்டை வழிநடத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பயணத்தின் உந்து சக்தியாக அமைப்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை பிரதமர் எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல ஆண்டுகால முயற்சி, அர்ப்பணிப்பு பலனளித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளதாகக் கூறினார்.

1925-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டபோது, போராட்டம், சுதந்திரம் என்ற குறிக்கோள் ஏற்பட்ட காலகட்டத்தில் நிலவிய மாறுபட்ட சூழ்நிலைகள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சங்கத்தின் 100 ஆண்டுகால பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், 2025 முதல் 2047 வரையிலான காலம் தேசத்திற்கான புதிய, லட்சிய இலக்குகளை முன்வைக்கிறது என்று குறிப்பிட்டார். பிரம்மாண்டமான தேசிய கட்டடத்தின் அஸ்திவாரத்தில் ஒரு சிறிய கல்லாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் குருஜியின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை ஒரு கடிதத்திலிருந்து அவர் நினைவு கூர்ந்தார். சேவைக்கான அர்ப்பணிப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், அயராத முயற்சியை பராமரித்து வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது பகிர்ந்து கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பார்வை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வலிமையான இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். டாக்டர் ஹெட்கேவார், குருஜி போன்ற மேதைகளின் வழிகாட்டுதல் நாட்டிற்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், பல தலைமுறைகளின் தியாகங்களை கௌரவிப்பதற்கும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத், சுவாமி கோவிந்த் தேவ்கிரி மகராஜ், சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ், டாக்டர் அவினாஷ் சந்திர அக்னிஹோத்ரி, பிற சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

PLM/KV

 

 


(Release ID: 2116834) Visitor Counter : 45