பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 30 MAR 2025 11:41AM by PIB Chennai

 

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது.  இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும்.  இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது.  இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது.  இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது.  பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன.  பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு.  ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது. 

 

முதல் செய்தி கன்னடத்தில் – சர்வாரிகி உகாதி ஹப்பத, ஹார்திக சுபாஷயகளு.  அடுத்த செய்தி தெலுகுவில் – அந்தரிகி உகாதி சுபாகான்ஷலு.  அடுத்த கடிதம் கொங்கணியில் புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவிக்கிறது.  சம்வஸா பாடவயார்ச்சி பர்பி.  அடுத்த செய்தி மராட்டி மொழியிலே, குடி பாடிவா நிமித்த ஹார்திக் சுபேச்சா.  நம்முடைய ஒரு நண்பர் மலையாளத்திலே, எல்லாவருக்கும் விஷு ஆஷம்ஷகள்.  மேலும் ஒரு செய்தி தமிழிலே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

          நண்பர்களே, இன்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள், பல்வேறு மொழிகளிலும் செய்திகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.  ஆனால் இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?  இந்தச் சிறப்பினைப் பற்றித் தான் நான் உங்களோடு கலந்து கொள்ள இருக்கிறேன்.  நம்முடைய தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் இன்றோ, அடுத்த சில நாட்களிலோ புத்தாண்டு தொடங்கவிருக்கின்றது.  இந்த அனைத்துச் செய்திகளும் புத்தாண்டு மற்றும் பல்வேறு நன்னாட்களுக்கான வாழ்த்துக்கள்.  ஆகையால் தான் எனக்கு இன்று பலப்பல மொழிகளில் மக்கள் தங்களின் நல்வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்கள்.

        நண்பர்களே, இன்று கர்நாடகத்திலே, ஆந்திராவிலே, தெலங்கானாவிலே உகாதிப் பண்டிகை மிகவும் கோலாகலத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றது.  இன்றே தான் மகாராஷ்டிரத்திலும் குடிபடுவா கொண்டாடப்படுகிறது.  பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்திலே, பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களில் அசாமிலே ரோங்காலி பிஹு, வங்காளத்தில் போயிலா போய்ஷாக், கஷ்மீரத்திலே நவரேஹ் விழாக்கள் கொண்டாடப்படும்.  இதைப் போலவே 13 முதல் 15 ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசத்தின் பல்வேறு பாகங்களில் பல பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கின்றன.   மேலும் ஈத் பண்டிகையும் வந்து கொண்டிருக்கிறது.  அதாவது இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளுக்கான மாதம், திருநாட்களுக்கான மாதம்.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளின் பொருட்டு பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  நமது இந்தப் பண்டிகைகள் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டாலும், பாரதத்தின் வேற்றுமையில் எவ்வாறு ஒற்றுமை இழைந்தோடுகிறது என்பதைக் காண முடிகிறது.  இந்த ஒற்றுமை உணர்வைத் தான் நாம் மேலும்மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். 

          நண்பர்களே, தேர்வுகள் நெருங்கும் போது இளைய சமூகத்தோடு தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியை நான் செய்கிறேன்.  இப்போது தேர்வுகளோ முடிந்துவிட்டன.  பல பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட தயாரிப்புகள் நடந்து வருகின்றன.  இதன் பிறகு கோடை விடுமுறைக்காலம் வந்துவிடும்.  ஆண்டின் இந்த வேளைக்குத் தான் குழந்தைகள் மிகவும் காத்துக் கிடப்பார்கள்.  எனக்கும் என்னுடைய சிறுவயது நாட்கள் நிழலாடுகின்றன, என்னுடைய நண்பனோடு நாள் முழுவதும் ஏதாவது கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பேன்.  ஆனால் அதோடு நின்று போகாமல் ஏதோ ஒரு வகையான ஆக்கப்பூர்வமானதையும் செய்வோம், கற்போம்.  கோடைக்காலப் பகல்வேளை அதிகமாக இருக்கும், இதிலே குழந்தைகளிடம் செய்வதற்கு நிறைய இருக்கும்.  இந்தச் சமயத்தில்தான் ஏதோவொரு புதிய பொழுதுபோக்கினைத் தனதாக்கிக் கொள்வதோடு நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இன்று பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட தளங்களுக்குக் குறைவே கிடையாது.  இவற்றிலிருந்து நிறைய இவர்களால் கற்றுக் கொள்ள முடியும்.  எடுத்துக்காட்டாக ஒரு அமைப்பு தொழில்நுட்ப முகாம் ஒன்றை நடத்தினால், அதில் பிள்ளைகள் செயலியை ஏற்படுத்துவதோடு கூடவே, ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் அதாவது கட்டற்ற மென்பொருள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  வேறு எங்காவது சுற்றுச்சூழல், மேடைநாடகம் பற்றி, அல்லது தலைமைப்பண்பு, இப்படி பல்வேறுபட்ட விஷயங்கள் குறித்துப் பாடங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, இதோடு நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளலாமே!!  அந்த வகையில் பல்வேறு பள்ளிகளில் பேச்சு அல்லது நாடகம் பற்றிக் கற்பிக்கிறார்கள், இது பிள்ளைகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.  இவையனைத்தையும் தவிர, உங்களிடம் இந்த விடுமுறையில் பல இடங்களுக்குச் சென்று தன்னார்வச் செயல்பாடுகளில், சேவைகளோடு உங்களை இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கிறது.  இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்பாக என்னுடைய சிறப்பான வேண்டுகோள் என்னவென்றால், எந்த அமைப்பாவது, ஏதோ ஒரு பள்ளியோ, சமூக அமைப்புகளோ, அல்லது அறிவியல் மையமோ, இப்படிப்பட்ட கோடைக்கால நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களோ யாராக இருந்தாலும், நீங்கள் செய்பவனவற்றை #MyHolidays என்பதோடு கண்டிப்பாகப் பகிருங்கள்.  இதனால் தேசமெங்கும் இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இவைபற்றிய தகவல்கள் எளிதில் கிடைக்கும்.

          எனது இளைய நண்பர்களே, நான் இன்று உங்களோடு MY-Bharatஇன் சிறப்பான அட்டவணை பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.  ஏனென்றால், இது கோடைக்கால விடுமுறைக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த அட்டவணையின் ஒரு படி, இப்போது என் முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது.  நான் இந்த அட்டவணையின் சில வித்தியாசமான முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  எடுத்துக்காட்டாக MY-Bharatஇன் கல்விச் சுற்றுலாவில், நமது மக்கள் மருந்தகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  துடிப்புநிறை கிராமம் இயக்கத்தின் அங்கமாக ஆகி நீங்கள் எல்லைப்புறக் கிராமங்களின் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற முடியும்.  இதோடு கூடவே அங்கே கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் நீங்கள் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ள இயலும்.  அதே போல அம்பேட்கர் ஜயந்தியின் போதான பாதயாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டு நீங்கள் அரசியல் சட்டத்தின் விழுமியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும்.  குழந்தைகளிடமும் அவர்கள்தம் பெற்றோரிடமும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் விடுமுறை நாட்களின் உங்களுடைய அனுபவங்களை  #HolidayMemoriesஉடன் கண்டிப்பாகப் பகிருங்கள்.  நான் உங்களுடைய அனுபவங்களை அடுத்துவரும் மனதின் குரலிலே இடம்பெறச் செய்ய முயற்சிக்கிறேன்.

          எனதருமை நாட்டுமக்களே, கோடைக்காலம் தொடங்கியவுடனேயே நகரம்தோறும், கிராமந்தோறும், நீரைச் சேமிக்கும் தயாரிப்புகள் தொடங்கி விடுகின்றன.  பல மாநிலங்களில் நீர் சேகரிப்போடு தொடர்புடைய பணிகள், நீர் பாதுகாப்போடு தொடர்புடைய பணிகளுக்குப் புதிய வேகம் பிடித்திருக்கின்றன.   ஜலசக்தி அமைச்சகமும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இந்த நோக்கில் பணியாற்றி வருகின்றார்கள்.  தேசத்தின் ஆயிரக்கணக்கான செயற்கைக் குளங்கள், தடுப்பணைகள், ஆழ்குழாய்க் கிணறுகளின் மறுசெறிவு, சமூக ஊறல்குழி ஆகியவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.  ஒவ்வோர் ஆண்டினைப் போலவே இந்த முறையும், கேட்ச் தி ரெயின், அதாவது மழை நீரைச் சேகரிப்போம் இயக்கத்திற்காக தயாரிப்புகள் செய்யப்பட்டு விட்டன.  இந்த இயக்கமும் கூட அரசினுடையது அல்ல, சமூகத்தினுடையது, மக்களுடையது.  நீர் பாதுகாப்போடு அதிக அளவு மக்களை இணைப்பதற்காக நீர் சேகரிப்புக்கான மக்கள் பங்கெடுக்கும் இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.  நம்மிடத்திலே இருக்கும் இயற்கை ஆதாரங்களை எவ்வாறு அடுத்த தலைமுறையினரிடம், பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது என்பது தான் முயற்சி.

          நண்பர்களே, மழைநீர்த் துளிகளைச் சேகரிப்பதன் மூலம் நாம் நிறைய நீரை வீணாகாமல் சேமிக்க முடியும்.  கடந்த சில ஆண்டுகளில் இந்த இயக்கத்தின்படி, தேசத்தின் பல பாகங்களில் நீர் பாதுகாப்பு தொடர்பான இதுவரை காணாத அளவு செயல்கள் நடந்திருக்கின்றன.  நான் உங்களுக்கு சுவாரசியமான ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறேன்.  கடந்த 7-8 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட கண்மாய்கள்-குளங்கள் மற்றும் நீர் மறுசெறிவு அமைப்புகளால் 11 பில்லியன் க்யூபிக் மீட்டரை விட அதிக அளவு நீர் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.  ஆமாம், இந்த 11 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் என்றால் எவ்வளவு என்று நீங்கள் யோசிக்கலாம்?

          நண்பர்களே, பாக்ரா நங்கல் அணையில் திரளும் நீர் தொடர்பான படங்களை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள்.  இந்த நீர், கோவிந்த் சாகர் ஏரியை நிறைக்கிறது.   இந்த ஏரியின் நீளம் 90 கிலோ மீட்டருக்கும் அதிகமானது.  இந்த ஏரியிலும் கூட 9-10 பில்லியன் க்யூபிக் மீட்டருக்கு அதிகமான நீரைச் சேமிக்க முடியாது.  வெறும் 9-10 பில்லியன் க்யூபிக் மீட்டர் மட்டுமே!!  ஆனால் நாட்டுமக்களின் சின்னச்சின்ன முயற்சிகள் காரணமாக, தேசத்தின் பல்வேறு பாகங்களில் 11 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் பாதுகாக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.  அற்புதமான முயற்சி தானே இது!! 

          நண்பர்களே, இந்தக் கோணத்தில் கர்நாடகத்திலே கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்கள்.  சில ஆண்டுகள் முன்பாக இங்கே இரு கிராமங்களில் இருந்த ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன.  ஒரு சமயத்தில் கால்நடைகள் அருந்தக்கூட நீர் இல்லாமல் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!  மெல்லமெல்ல, ஏரியில் புற்களும் புதர்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கின.   ஆனால் கிராமவாசிகள் சிலரோ, ஏரிக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற முடிவைச் செய்தார்கள், பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  எதை விரும்பினார்களோ, அதைச் செய்து முடித்தார்கள்.  கிராமவாசிகளின் முயற்சிகளைப் பார்த்து அக்கம்பக்கத்து சமூகசேவை அமைப்புகளும் இவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டன.  அனைவரும் இணைந்து குப்பைக்கூளங்களை அகற்றி, சில காலத்திற்குள்ளாகவே ஏரியை முழுமையாகச் சுத்தம் செய்து விட்டார்கள்.  இப்போது மழைக்காலத்திற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையிலேயே மழைநீரைச் சேகரிப்போம் இயக்கத்துக்கான அருமையான எடுத்துக்காட்டு இது.  நண்பர்களே, நீங்களும் கூட சமூக அளவிலான இப்படிப்பட்ட முயற்சிகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  இந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நீங்கள் அனைவரும் இப்போதிலிருந்து திட்டங்களைத் தீட்டுங்கள், ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  முடிந்தால் கோடையில் உங்கள் வீட்டிற்கு முன்பாக பானையில் நீரைக் கண்டிப்பாக வைத்திருங்கள்.  வீட்டின் மாடியிலோ, முற்றத்திலோ பறவைகளுக்காக நீர் வையுங்கள்.  இந்தப் புண்ணிய கார்யம் உங்கள் மனதை எத்தனை வருடும் என்பதை நீங்களே உணரலாம். 

          நண்பர்களே, மனதின் குரலில் இப்போது சிறகு விரிக்கும் மனோவலிமை பற்றி!!  சவால்களைத் தாண்டி உறுதியை வெளிப்படுத்தல் பற்றி!!  சில நாட்கள் முன்பாக முடிவடைந்த கேலோ இண்டியா பேரா விளையாடுக்களில் மீண்டும் ஒருமுறை விளையாட்டு வீரர்கள் தங்களுடைய ஈடுபாடு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி நம்மனைவரையும் மலைக்கச் செய்து விட்டார்கள்.  இந்த முறை முன்பைவிட அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுக்களில் பங்கெடுத்தார்கள்.  பேரா ஸ்போர்ட்ஸ் என்பது எத்தனை பிரபலமாக இருக்கிறது என்பதை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  கேலோ இண்டியா பேரா கேம்ஸிலே பங்கெடுத்துக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களின் அருமையான முயற்சிகளுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.  ஹரியாணா, தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசத்தின் விளையாட்டு வீரர்கள் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றமைக்காக நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.  இந்த விளையாட்டுக்களின் வாயிலாக நமது மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், 18 தேசிய சாதனைகளையும் உருவாக்கியிருக்கின்றார்கள்.  இவற்றிலே பன்னிரெண்டினை நமது பெண் விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.  இந்த முறை கேலோ இண்டியா பேரா கேம்ஸில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீர ரான ஜாபி மேத்யூ எனக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் சில பகுதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

          ”பதக்கம் வெல்வது மிகவும் விசேஷமானது ஆனால், எங்களுடைய போராட்டம் பதக்க மேடையிலே ஏறி நிற்பதோடு முடிந்து போவதில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறோம்.  வாழ்க்கை பல வகையாக எங்களை சோதித்துப் பார்க்கிறது.  மிகவும் குறைவானவர்களால் மட்டுமே எங்களின் போராட்டம் பற்றிப் புரிந்து கொள்ள முடிகிறது.  இதனைத் தாண்டி நாங்கள் நெஞ்சுரத்தோடு முன்னேறி வருகிறோம்.  நாங்கள் எங்களுடைய கனவுகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருக்கிறோம்.  நாங்கள் யாருக்கும் குறைவானவர்கள் அல்ல என்பதே எங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.”

          சபாஷ்!!  ஜாபி மேத்யூ அவர்களே, நீங்கள் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், அருமை, அருமை.  இந்தக் கடிதத்திற்காக மட்டுமே கூட நான் உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  நான் ஜாபி மேத்யூவோடு கூட, நம்முடைய அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் கூற விரும்புவது என்னவென்றால் உங்களுடைய முயற்சிகள் அனைத்துமே எங்கள் அனைவருக்கும் உத்வேகங்கள்.

          நண்பர்களே, தில்லியில் மேலும் ஒரு மிகப்பெரிய ஏற்பாடு மக்களுக்கு மிகவும் உத்வேகமளித்திருக்கிறது, உற்சாகத்தை அளித்திருக்கிறது.  முதன்முறையாக ஃபிட் இண்டியா கார்னிவல், அதாவது உடலுறுதி இந்தியா விழா என்ற ஒரு நூதனமான எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதிலே பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்தார்கள்.  இவர்கள் அனைவரின் இலக்கு ஒன்று தான் – உடலுறுதியோடு இருத்தல், உடலுறுதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.   இந்த ஏற்பாட்டில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் அவர்களின் உடல்நலத்தோடு கூடவே ஊட்டச்சத்டோடு தொடர்புடைய தகவல்களும் கிடைத்தன.  நீங்களும் கூட அவரவர் பகுதிகளிலும் இப்படிப்பட்ட விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.  இந்த முன்முயற்சியில் MY-Bharat உங்களுக்கு மிகவும் உதவிகரமாக ஆக முடியும்.

          நண்பர்களே, நமது உள்நாட்டு விளையாட்டுக்கள் இப்போது பிரபலமான கலாச்சாரம் என்ற வகையிலே மாறி வருகின்றன.  பிரபலமான ரேப்பரான ஹனுமான்கைண்ட், இவரைப் பற்றி அனைவரும் அறிவார்கள் தானே!!  இப்போதெல்லாம் அவருடைய புதிய பாடலான ரன் இட் அப், மிகவும் பிரபலமாகி வருகிறது.  இதிலே களறிப்பாயட்டு, கத்கா மற்றும் தாங்க்-தா போன்ற நம்முடைய பாரம்பரியமான போர்க்கலைகள் இடம் பெற்றிருக்கின்றன.   நான் ஹனுமான் கைண்டுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், அவருடைய முயற்சியால் நமது பாரம்பரியப் போர்க்கலைகள் குறித்து உலகத்தோருக்குத் தெரியவரும்.

          என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வோர் மாதமும் மைகவ் மற்றும் நமோ செயலியில் உங்களுடைய ஏராளமான செய்திகளும் தகவல்களும் எனக்குக் கிடைத்து வருகின்றன.  பல செய்திகள் என் மனதைத் தொட்டு விடுகின்றன, சில பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.  பல வேளைகளில் இந்தச் செய்திகள் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் குறித்து வித்தியாசமான தகவல்களை அளிக்கின்றன.  இந்த முறை என் கவனத்தைக் கவர்ந்த செய்தியை நான் அவசியம் உங்களோடு பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.   வாராணசியின் அதர்வ் கபூர், மும்பையின் ஆர்யஷ் லீகா, அத்ரேய் மான் ஆகியோர் சில நாட்கள் முன்பு நான் மேற்கொண்ட மௌரீஷியஸ் பயணம் குறித்த தங்களுடைய உணர்வுகளை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.  இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற கீத் கவயி பாட்டு நிகழ்ச்சி அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிஹாரிலிருந்து வந்த பல கடிதங்களிலும் கூட இதே உணர்வு தான் வெளிப்படுகிறது.  மௌரீஷியசில் கீத் கவயி பாடல்களின் அருமையான வெளிப்பாட்டினை நானுமே உணர்ந்தேன், மிகவும் சிறப்பாக இருந்தது.

          நண்பர்களே, நாம் வேர்களோடு இணையும் போது, எத்தனை பெரிய புயல் வந்தாலும், நம்மை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.  கற்பனை செய்து கொள்ளுங்கள், 200 ஆண்டுகள் முன்பாக, பாரதத்தைச் சேர்ந்த பலர் ஒப்பந்தத் தொழிலாளிகளாக மௌரீஷியஸ் சென்றார்கள்.  அடுத்து என்ன ஆகும் என்று யாருக்கும் ஒன்றும் தெரியாது.  ஆனால் காலப்போக்கில் அங்கே அவர்கள் கலந்து விட்டார்கள்.  மௌரீஷியசில் அவர்கள் தங்களுக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  அவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள், தங்களுடைய வேர்களோடு இணைந்திருந்தார்கள்.  மௌரீஷியஸ் மட்டுமே இதற்கு உதாரணமல்ல.  கடந்த ஆண்டு நான் கயானா சென்ற போது, அங்கே சௌதால் அரங்கேற்றப்பட்டு, அது என்னை மிகவும் கவர்ந்தது. 

நண்பர்களே, இப்போது நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கிறேன்.

  • ஃபிஜி பற்றிய ஒலிக்குறிப்பு –

இது ஏதோ நமது தேசத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தது என்று தான் நீங்கள் நினைப்பீர்கள்.  ஆனால் இது ஃபிஜியோடு தொடர்புடையது என்று நான் சொன்னால் அது உங்களுக்கு பேராச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  இது ஃபிஜி நாட்டின் மிகவும் பிரபலமான ஃபக்வா சௌதால் ஆகும்.  இந்தப் பாடலும், இசையும் கேட்கும் அனைவரின் உள்ளங்களிலும் உற்சாகத்தைக் கொட்டி நிரப்பும்.  நான் உங்களுக்கு மேலும் ஒரு ஒலிக்குறிப்பை இசைத்துக் காட்டுகிறேன். 

  • சூரினாம் பற்றிய ஒலிக்குறிப்பு –

இந்த ஒலிக்குறிப்பு சூரினாமின் சௌதால் ஆகும்.  இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த நாட்டுமக்கள், சூரினாமின் குடியரசுத் தலைவர் மற்றும் என்னுடைய நண்பரான சான் சந்தோகி அவர்கள் இதை எப்படி அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கலாம்.  ஆட்டம் பாட்டங்களின் இந்தப் பாரம்பரியம், ட்ரினிடாட் மற்றும் டொபாகோவிலும் கூட மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது.  இந்த அனைத்து நாடுகளிலும் மக்கள் இராமாயணத்தைச் சிறப்பாகப் படிக்கிறார்கள்.  இங்கே ஃபக்வா மிகவும் பிரபலமான ஒன்று, அனைத்து பாரதிய திருவிழாக்கள்-பண்டிகைகளையும், முழு உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.   இவர்களுடைய பல பாடல்கள் போஜ்புரி, அவதி அல்லது கலந்துபட்ட மொழியில் இருக்கின்றன, சில வேளைகளில் ப்ரஜ் மற்றும் மைதிலியையும் பயன்படுத்துகிறார்கள்.  இந்த தேசங்களில் நமது பாரம்பரியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அனைவரும் பாராட்டுதல்களுக்குச் சொந்தக்காரர்கள்.

         நண்பர்களே, பல்லாண்டுகளாக பாரத நாட்டுக் கலாச்சாரத்தைப் போற்றிப் பராமரித்துவரும் பல அமைப்புகள் உலகத்தில் இருக்கின்றன.  இப்படிப்பட்ட ஒரு அமைப்புத் தான் சிங்கப்பூர் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி.  பாரதநாட்டு நடனம், இசை மற்றும் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த அமைப்பு, தனது பெருமைமிகு 75 ஆண்டுக்கால பயணத்தை நிறைவு செய்திருக்கிறது.  இந்தச் சந்தர்ப்பத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளில், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவரான திருவாளர் தர்மன் ஷண்முகரத்தினம் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.  இந்த அமைப்பின் முயற்சிகளை அவர் மிகவும் பாராட்டி உரையாற்றினார்.  நான் இந்தக் குழுவினருக்கு என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

         நண்பர்களே, மனதின் குரலில் நாம் நமது தேசத்து மக்களின் சாதனைகளோடு கூடவே பலவேளைகளில் சமூக விஷயங்களையும் கையிலெடுக்கிறோம்.  பல வேளைகளில் சவால்கள் குறித்தும் பேசுகிறோம்.  இந்த முறை மனதின் குரலில், நான் பேசவிருக்கும் ஒரு சவால், இது நேரடியாக நம்முடன் தொடர்புடையது.  இந்தச் சவால், ஜவுளித்துறைக் கழிவுகள் பற்றியது.  என்ன இது, ஜவுளித்துறைக் கழிவுகளில் என்ன பெரிய சவால் என்று நீங்கள் எண்ணமிடுவீர்கள் தானே!!  உண்மையில், ஜவுளித்துறைக் கழிவுகள், ஒட்டுமொத்த உலகத்தையும் கவலைக்குள்ளாக்கும் பெரிய காரணமாக ஆகிவிட்டது.  இப்போதெல்லாம் உலகெங்கிலும் பழைய துணிகளை விரைவாக நீக்கி, புதிய ஆடைகளை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.  பழைய துணிகளை அணிந்து நீக்கிய பிறகு அதற்கு என்னவாகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?  இவை ஜவுளித்துறைக் கழிவுகள் ஆகின்றன.  இந்த விஷயம் தொடர்பாக உலகெங்கிலும் கணிசமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஓர் ஆய்வின்படி, பழைய துணிகளின் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றனவாம், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக.   ஜவுளித்துறைக் கழிவுகளை ஏற்படுத்தும் உலகின் 3ஆவது மிகப்பெரிய நாடாக பாரதம் விளங்குகிறது.  அதாவது நம் முன்பாக இருக்கும் சவால் மிகப்பெரியது.  ஆனால், நமது தேசத்திலே இந்தச் சவாலை எதிர்கொள்ள பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  பல பாரத நாட்டு ஸ்டார்ட் அப்புகள், ஜவுளிகளின் மீட்டெடுப்பு வசதிகள் தொடர்பாகப் பணிகளைத் தொடங்கியிருக்கின்றன.  பல குழுக்கள், துணிக்கழிவுகளை நெய்யும் நமது சகோதர சகோதரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பணிகளைச் செய்து வருகின்றன.  பல இளைய நண்பர்களும் கூட நீடித்த ஃபேஷன் முயற்சிகளோடு இணைந்திருக்கின்றார்கள்.  இவர்கள் பழைய துணிகளையும், காலணிகளையும் மறுசுழற்சி செய்து, தேவையானவர்கள் வரை கொண்டு சேர்க்கிறார்கள்.  ஜவுளித்துறைக் கழிவுகளிலிருந்து அழகுப் பொருட்கள், கைப்பைகள், காகிதங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  பல அமைப்புகள் இப்போதெல்லாம் சர்குலர் ஃபேஷன் ப்ராண்டை பிரபலப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.  புதியபுதிய வாடகைத் தளங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன, இங்கே நூதனமாக வடிவமைக்கப்பட்ட துணிகள் வாடகைக்குக் கிடைத்து வருகின்றன.  சில அமைப்புகள் பழைய துணிகளைக் கொண்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தி, ஏழைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றார்கள்.

         நண்பர்களே, ஜவுளித்துறைக் கழிவுகளைச் சமாளிப்பதில் சில நகரங்களும் கூட தங்களுக்கென புதிய அடையாளங்களை ஏற்படுத்தி வருகின்றன.   ஹரியாணாவின் பானீபத்தில் உள்ள ஜவுளிகளின் மறுசுழற்சியானது உலக மையமாக ஆகி வருகின்றது.  பெங்களூரூவிலும் கூட நூதனமான தொழில்நுட்பத் தீர்வுகளின் உதவியோடு தனக்கென பிரத்யேகமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.  இங்கே பாதிக்கும் மேற்பட்ட ஜவுளித்துறைக் கழிவுகள் ஒன்றுதிரட்டப்படுவது, நமது மற்ற நகரங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.  இதைப் போலவே தமிழ்நாட்டின் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வாயிலாக, ஜவுளித்துறை கழிவுகளின் மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. 

         என் கனிவான நாட்டுமக்களே, இன்று உடலுறுதியோடு கூடவே, கவுண்ட், அதாவது எண்ணிக்கையின் பங்கும் அதிகரித்திருக்கிறது.  ஓர் நாளில் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதன் எண்ணிக்கை, ஓர் நாளில் எத்தனை கலோரிகள் உண்ணப்பட்டிருக்கிறதோ இதன் எண்ணிக்கை, எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றன என்பதன் எண்ணிக்கை, இத்தனை அளவு எண்ணிக்கைக்கு இடையே, மேலும் ஒரு கவுண்ட்டவுன் தொடங்க இருக்கிறது.  சர்வதேச யோகா தினத்தின் கவுண்ட்டவுன்.  யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே நாட்கள் இருக்கின்றன.   இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யோகாவைப் பழகத் தொடங்கவில்லை என்றால், கண்டிப்பாக இப்போது தொடங்குங்கள், இன்னும் காலம் கடக்கவில்லை.  பத்தாண்டுகள் முன்பாக, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.  இப்போதோ இந்த தினம், மகத்தானதொரு பெருவிழாவாக உருவெடுத்து விட்டது.  மனித சமூகத்திற்கு பாரதத்தின் தரப்பிலிருந்து மேலும் ஒரு விலைமதிப்பில்லா வெகுமதியான இது, வருங்காலச் சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  2025ஆம் ஆண்டின் யோகா தினத்தின் கருவாக, யோகா ஃபார் ஒன் எர்த், ஒன் ஹெல்த், அதாவது ஒரு பூமி, ஒரு உடல்நலத்திற்கு யோகக்கலை.  யோகாவின் வாயிலாக ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் மிக்கதாக ஆக்க விரும்புகிறோம்.

         நண்பர்களே, இன்று நமது யோகக்கலையும், பாரம்பரிய மருந்துகளும் தொடர்பாக உலகெங்கும் ஆர்வம் அதிகரித்து வருவது நம்மனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்.  பெரும் எண்ணிக்கையில் இளைய நண்பர்கள், யோகக்கலை மற்றும் ஆயுர்வேதத்தின் நல்வாழ்வு தொடர்பான மிகச் சிறப்பான ஊடகங்களாகத் தங்களுடையதாக்கி வருகிறார்கள்.  எடுத்துக்காட்டாக, தென்னமெரிக்காவின் நாடான சிலேயில், ஆயுர்வேதம் விரைவாகப் பிரபலமடைந்து வருகிறது.  கடந்த ஆண்டு ப்ராசீலுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, சீலேயின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேர்ந்தது. ஆயுர்வேதத்தின் புகழ் குறித்து எங்களுக்கிடையே கணிசமாக நாங்கள் உரையாடினோம்.  சோமோஸ் இண்டியா என்ற பெயர் கொண்ட ஒரு அணியைப் பற்றித் தெரிய வந்தது.  ஸ்பானிஷ் மொழியில் இதன் பொருள் – நாங்கள் இந்தியா என்பதாகும்.  இந்தக் குழு, சுமார் பத்தாண்டுகளாக யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு ஊக்கமளிப்பதில் இணைந்திருக்கிறது.  அவர்களுடைய கவனம் சிகிச்சையோடு கூடவே, கல்வி நிகழ்ச்சிகளின் மீதும் இருக்கின்றது.  இவர்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகக்கலையோடு தொடர்புடைய தகவல்களை, ஸ்பானிஷ் மொழியில் மொழியாக்கமும் செய்து வருகின்றார்கள்.   கடந்த ஆண்டுகளைப் பற்றி மட்டும் பேசுவோமேயானால், இவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், படிப்புகளிலும் சுமார் 9000 மக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  நான் இந்தக் குழுவோடு தொடர்புடைய அனைவருக்கும் அவர்களின் இந்த முயற்சிக்காகப் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

         எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான வினா!!  மலர்களின் பயணம் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டதுண்டா?  மரங்கள்-செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில மலர்களின் பயணம் ஆலயங்கள் வரை தொடர்கிறது.  சில மலர்கள், இல்லங்களை அழகுபடுத்தப் பயனாகின்றன, சில மலர்களோ, வாசனை திரவியங்களாகத் தயாரிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் மணத்தைப் பரப்புகின்றன.  ஆனால் இன்று, நான் மலர்களின் மேலும் ஒரு பயணம் பற்றித் தெரிவிக்க இருக்கிறேன்.  நீங்கள் மஹுவா மலர்களைப் பற்றிக் கண்டிப்பாக கேள்விப்பட்டிருக்கலாம்.  அதாவது இலுப்பை மலர்கள்.  நமது கிராமங்களில், குறிப்பாக பழங்குடியினத்தவர்கள் இவற்றின் மகத்துவம் பற்றி நன்கு அறிந்திருக்கின்றார்கள்.  தேசத்தின் பல பாகங்களில் இலுப்பை மலர்களின் பயணம், இப்போது ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.  மத்திய பிரதேசத்தின் சிந்த்வாடா மாவட்டத்தில், இலுப்பை மலர்களாலான சுவையான தின்பண்டங்கள் தயாராகின்றன.  ராஜாகோஹ் கிராமத்தின் நான்கு சகோதரிகளின் முயற்சியால் இந்தச் சுவையான தின்பண்டங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.  இந்தப் பெண்களின் பேரவாவைப் பார்த்து, ஒரு பெரிய நிறுவனமானது, இவர்களுக்குத் தொழிற்சாலையில் பணியாற்றும் பயிற்சியை அளித்தது.  இவர்களால் உள்ளுயிர்ப்படைந்த கிராமத்தின் பல பெண்களும் இவர்களோடு இணைந்தார்கள்.  இவர்கள் தயாரித்த இலுப்பைச் சுவை தின்பண்டங்களின் தேவை இப்போது அதிகரித்து வருகிறது.  தெலங்காணாவின் ஆதிலாபாத் மாவட்டத்திலும் கூட, இரு சகோதரிகள், இலுப்பை மலர்களைக் கொண்டு புதியதொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள்.  இவற்றைக் கொண்டு பலவகையான பண்டங்களைத் தயாரிக்கிறார்கள், இவற்றை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.  இவர்களின் பண்டங்களிலே பழங்குடிக் கலாச்சாரத்தின் இனிப்பும் கலந்திருக்கிறது. 

         நண்பர்களே, நான் உங்களுக்கு மேலும் ஒரு அருமையான மலரைப் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன், இதன் பெயர் கிருஷ்ண கமல், அதாவது தக்கபூண்டு மலர்கள்.  குஜராத்தின் ஒற்றுமை நகரத்தில், ஒற்றுமைச் சிலையைப் பார்க்கச் சென்றிருக்கிறீர்களா?  இந்த ஒற்றுமைச்சிலைக்கு அருகிலே, நீங்கள் அதிக எண்ணிக்கையில் தக்கபூண்டு மலர்களைக் காணலாம்.  இந்த மலர், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.  இந்த தக்கபூண்டு மலர், ஒற்றுமை நகரின் ஆரோக்கிய வனம், ஒற்றுமை நாற்றுப்பண்ணை, உலக வனம் மற்றும் மியாவாக்கி காடுகளையும் ஈர்க்கும் மையங்களாக ஆகிவிட்டன.  இங்கே திட்டமிட்ட முறையில், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் தக்கபூண்டு மலர்களின் செடிகள் நடப்பட்டிருக்கின்றன.  நீங்களும் கூட உங்களுக்கு அருகே கவனித்தால், உங்களுக்கு மலர்களின் சுவாரசியமான பயணங்கள் தென்படும்.  நீங்கள் உங்கள் பகுதிகளில் மலர்களின் இப்படிப்பட்ட பயணம் குறித்து எனக்கும் எழுதி அனுப்புங்கள்.

         எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, நீங்கள் எப்போதும் போலவே உங்களுடைய கருத்துக்கள், அனுபவங்கள், தகவல்கள் ஆகியவற்றை என்னோடு பகிர்ந்து வாருங்கள்.  உங்களுக்கு அருகே சாதாரணமானவையாக உங்களுக்குத் தோன்றக்கூடியதாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அந்த விஷயம் மிகவும் சுவாரசியமாகவும், புதியதாகவும் விளங்கும்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் இணைவோம், நாட்டுமக்களின் உள்ளெழுச்சியூட்டக்கூடிய விஷயங்கள் குறித்து உரையாடி மகிழ்வோம்.   உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

***

AD/KV

 


(Release ID: 2116734) Visitor Counter : 83