பிரதமர் அலுவலகம்
மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
12 MAR 2025 6:07AM by PIB Chennai
வணக்கம்!
மொரீஷியஸ் மக்கள் எப்படி இருக்கிறீர்கள்?
எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா?
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்கள் அனைவரையும் வணங்குகிறோம்!
நண்பர்களே,
10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் மொரீஷியஸ் வந்திருந்தபோது, நான் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஹோலிப் பண்டிகையை கொண்டாடினோம். இந்தியாவிலிருந்து ஃபாகுவாவின் உற்சாகத்தை என்னுடன் கொண்டு வந்திருந்தேன். இந்த முறை மொரீஷியஸில் இருந்து இந்தியாவுக்கு ஹோலி பண்டிகையின் வண்ணங்களை என்னுடன் எடுத்துச் செல்ல உள்ளேன். ஒரு நாள் கழித்து நாம் அங்கு ஹோலி கொண்டாடுவோம். 14-ம் தேதி எங்கு பார்த்தாலும் வண்ணப்பொடிகள் பூசப்படும்.
ராமன் கையில் ஒரு தாளக்கருவி வைத்திருக்கிறான்;
லட்சுமணன் கையில் கை-தாளம் வைத்திருக்கிறான்.
பரதன் கையில் தங்க நிற பாய்ச்சி வைத்திருக்கிறான்...
சத்ருகன் கையில் ஒரு அபீர் இசைக்கருவி இருக்கிறது...
ஜோகிரா........
ஹோலி பண்டிகை குறித்து நாம் பேசும்போது, குஜியா மக்களின் இனிப்பு சுவையை நாம் எப்படி மறக்க முடியும்? ஒரு காலத்தில், தனது நாட்டில் இருந்து இந்தியாவின் மேற்குப் பகுதிகளுக்கு இனிப்பு பலகார வகைகளில் சேர்ப்பதற்காக சர்க்கரையை மொரீசியஷ் வழங்கியது. குஜராத்தி மொழியில் சர்க்கரையை 'மொராஸ்' என்றும் குறிப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியா – மொரீஷியஸ் நாடுகளிடையேயான உறவுகள் மேம்பட்டு வருகின்றன. மொரீஷியஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தேசிய தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
நான் மொரீஷியஸுக்கு வரும்போதெல்லாம், என் சொந்த மக்களுடன் இருப்பதைப் போல உணர்கிறேன். காற்றில், மண்ணில், நீரில், பாடப்படும் பாடல்களில், டோலக்கின் தாளத்தில், தால் பூரியின் சுவையில் ஒரு உணர்வு இருக்கிறது. குட்சா, மற்றும் கேடாக்ஸ் பைமென்ட் ஆகியவை இந்தியாவின் பிரபலமான வாசனையைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு இயற்கையானது, ஏனென்றால், இந்த நாட்டின் மண் நமது மூதாதையர்களான பல இந்தியர்களின் குருதி, வியர்வையுடன் கலந்துள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கம். இந்த உணர்வுடன் பிரதமர் நவீன் ராம்கூலம் அவர்களும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் இன்று நம்முடன் இணைந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரதமர் நவீன் அவர்கள் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் அவரது இதயத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும். அவரது அன்பான, இதயப்பூர்வமான வார்த்தைகளுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மொரீஷியஸ் மக்களும் இங்குள்ள அரசும் பிரதமர் தற்போது அறிவித்தபடி, நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதை எனக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். உங்கள் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இது இந்தியா, மொரீஷியஸ் இடையேயான வரலாற்று ரீதியான உறவுகளின் மாண்புகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தலைமுறை, தலைமுறையாக நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்து, மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு வந்த இந்தியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. இதற்காக மொரீஷியஸ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு, தேசிய தினத்தன்று இந்தியக் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இது மொரீஷியஸ், இந்தியா இடையேயான உறவின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. மார்ச் 12-ம் தேதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுவது, இரு நாடுகளின் பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாற்றின் பிரதிபலிப்பாகும். இதே நாளில்தான் மகாத்மா காந்தி அடிமைத்தனத்திற்கு எதிராகத் தண்டி சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார். இந்த நாள் இரு நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. மொரீஷியஸ் மக்களின் உரிமைக்காகப் போராடத் தொடங்கிய பாரிஸ்டர் மணிலால் போன்ற ஒரு மாபெரும் மனிதரை யாராலும் மறக்க முடியாது. நமது சாச்சா ராம்கூலம் அவர்கள், நேதாஜி சுபாஷ் மற்றும் பிறருடன் இணைந்து, அடிமைத்தனத்திற்கு எதிராக ஒரு அசாதாரணமான போராட்டத்தை நடத்தினார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் அமைந்துள்ள சீவூசாகுர் சிலை, இந்த வளமான பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக உள்ளது. நவீன் அவர்களுடன் இணைந்து சீவூசாகுர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது.
நண்பர்களே,
நான் உங்களைச் சந்திக்கும்போது, உங்களுடன் கலந்துரையாடும் போது, வரலாற்றில் இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி நாம் படித்த காலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக உணர்கிறேன் - காலனித்துவ காலகட்டத்தில் எண்ணற்ற இந்தியர்கள் வஞ்சகத்தின் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மிகுந்த வலியையும், துன்பத்தையும், துரோகத்தையும் சகித்துக்கொண்டார்கள். அந்த கடினமான காலங்களில், ராமர், ராம் சரித் மானஸ், ராமரின் போராட்டங்கள், அவரது வெற்றிகள், அவரது உத்வேகம் மற்றும் அவரது தவம் ஆகியவை இந்தியர்களின் வலிமையின் ஆதாரமாக இருந்தன. அவர்கள் தங்களை ராமராக நினைத்து வலிமையையும், நம்பிக்கையையும் பெற்றனர்.
நண்பர்களே,
1998-ல் சர்வதேச ராமாயண மாநாட்டுக்காக இங்கு வந்ததை நினைவு கூர்கிறேன். அப்போது, நான் அரசுப் பதவியில் இருக்கவில்லை. நான் ஒரு சாதாரண செயற்பாட்டாளனாக வந்தேன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நவீன் அவர்கள் அப்போதும் பிரதமராக இருந்தார். பின்னர், நான் பிரதமரானபோது, நவீன் அவர்கள் தில்லியில் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு என்னை கௌரவப்படுத்தினார்.
நண்பர்களே,
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு உணர்ந்து கொண்ட ராமர் மற்றும் ராமாயணத்தின் மீதான ஆழமான நம்பிக்கை இன்றும் வலுவானதாக உள்ளது. 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் நடைபெற்ற பிராண் பிரதிஷ்டா விழாவின் போதும் இதேபோன்ற பக்தி அலை காணப்பட்டது. இந்தியா முழுவதும் பரவிய உற்சாகமும் கொண்டாட்டமும் இங்கே மொரீஷியஸிலும் பிரதிபலித்தது. இதனைப் புரிந்து கொண்டு, மொரீஷியஸ் நாட்டில் அரை நாள் விடுமுறையையும் அறிவிக்கப்பட்டது. இந்தியா, மொரீஷியஸ் இடையேயான நம்பிக்கை நீடித்த நட்புறவுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.
நண்பர்களே,
அண்மையில் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டுவிட்டு பல குடும்பங்கள் மொரீஷியஸ் திரும்பியுள்ளன என்பதை நான் அறிவேன். மனித வரலாற்றில் மிகப்பெரிய விழாவில் - 65 முதல் 66 கோடி மக்கள் கலந்து கொண்டனர் - மொரீஷியஸ் மக்களும் இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு அங்கமாக இருந்தனர். ஆனால் மொரீஷியஸைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகள் பலர், அவர்கள் மனதார விரும்பிய போதிலும், இந்த ஒற்றுமைக்கான மகத்தான கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதையும் நான் அறிவேன். உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். அதனால்தான் மகா கும்பமேளாவின் போது எடுக்கப்படும் புனித நீரை என்னுடன் கொண்டு வந்துள்ளேன். நாளை, இந்த புனித நீர் இங்குள்ள கங்கை தலாவோவில் கரைக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்பு கோமுக்கில் கங்கையிலிருந்து நீர் இங்கு கொண்டு வரப்பட்டு கங்கா தலாவில் கரைக்கப்பட்டது. இதேபோன்ற புனிதமான தருணத்தை நாளை மீண்டும் ஒருமுறை நாம் காணவிருக்கிறோம். அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடனும், மகா கும்பமேளாவின் இந்த பிரசாதத்துடனும், மொரீஷியஸ் நாடு வளத்தின் புதிய உச்சங்களை எட்ட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை ஆகும்.
நண்பர்களே,
மொரீஷியஸ் 1968-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றுள்ளதுடன், அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேறிய விதம் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மொரீஷியஸை தங்களது இருப்பிடங்களாக மாற்றிகொண்டு, கலாச்சார பரிமாற்றங்களுடன், பன்முகத்தன்மையுடன் கூடிய தோட்டமாக மாற்றியுள்ளனர். எங்கள் மூதாதையர்கள் பீகார், உத்தரப்பிரதேசம், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து இங்கு வந்துள்ளனர். மொழி, பேச்சு வழக்குகள், உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கவனிக்கும் போது, மொரீஷியஸ் ஒரு சிறிய இந்தியாவாக தோற்றமளிப்பதைக் காண முடியும். பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்கள் மொரீஷியஸை வெள்ளித்திரையில் மட்டுமே கண்டு ரசித்துள்ளனர். பிரபல இந்தி திரைப்படப் பாடல்களை காணும் போது, இந்தியா ஹவுஸ் உட்பட பல்வேறு கடற்கரைகளின் அழகான காட்சிகள், ரோசெஸ்டர் நீர்வீழ்ச்சியின் ஒலிகளைக் கேட்க முடியும். இந்திய சினிமாவில் இடம் பெறாத மொரீஷியஸ் நகரமே இல்லை என்று கூறமுடியும். திரைப்பட இசை இந்திய இசையாகவும், அதில் வரும் இடங்கள் மொரீஷியஸ் நாடாகவும் இருக்கும்போது, அந்தத் திரைப்படம் வெற்றியடைவதற்கான உத்தரவாதம் அதிகரிக்கிறது.
நண்பர்களே,
ஒட்டுமொத்த போஜ்பூர் பிராந்தியத்துடனும், பீகாருடனும் நீங்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுபூர்வமான தொடர்பையும் நான் புரிந்து கொள்கிறேன்.
ஒரு காலத்தில் பீகார் உலகின் வளம் மிக்கபகுதியாக இருந்தது. தற்போது, பீகாரின் பெருமையை மீண்டும் கொண்டு வர நாம் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
உலகின் பல பகுதிகள் கல்விக்கு எட்டாத தொலைவில் இருந்த நேரத்தில், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்கள் சர்வதேச அளவில் கல்வியின் மையமாக இருந்தது. மத்திய அரசு நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டதுடன், புத்தரின் போதனைகள் அமைதியை நோக்கிய பயணத்தில் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளித்தும் வருகின்றன. இந்த வளமான பாரம்பரியத்தை பாதுகாத்து வருவது மட்டுமின்றி, உலகளவில் அதை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, பீகாரில் உற்பத்தி செய்யப்படும் மக்கானா என்ற தாமரை விதை இந்தியா முழுவதும் மக்களிடையே பரவலான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. பீகாரின் மக்கானா உலகெங்கிலும் உள்ள சிற்றுண்டிகளில் முக்கிய உணவாக இடம்பெறும்.
நண்பர்களே,
இன்று, எதிர்கால சந்ததியினருக்காக மொரீஷியஸ் நாட்டுடனான வலுவான உறவுகளை இந்தியா தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. மொரீஷியஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஏழாவது தலைமுறையினருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அடையாள அட்டைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மொரீஷியஸ் அதிபர் மற்றும் அவரது மனைவி பிருந்தா அவர்களிடம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பிரதமருக்கும், அவரது மனைவி வீணா அவர்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அடையாள அட்டைகளை வழங்கும் கவுரவம் எனக்கு கிடைத்தது. இந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தன்று உலகம் முழுவதும் குடியேறியுள்ள கிர்மிடியா சமூகத்தினருக்காக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்திருந்தேன். கிர்மிடியா சமூகம் குறித்த விரிவான தகவல் தொகுப்பை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கிர்மிடியா சமூகத்தின் உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த கிராமங்கள் மற்றும் நகரங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் குடியேறிய இடங்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். கிர்மிடியா சமூகத்தின் ஒட்டுமொத்த வரலாறும் – கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கான அவர்களின் பயணம் – ஒரே இடத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது. ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கிர்மிடியா மரபின் கலாச்சாரம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதும், உலக கிர்மிடியா மாநாடுகள் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதும் எங்கள் முயற்சியாகும். மொரீஷியஸ் மற்றும் கிர்மிடியா சமூகத்துடன் தொடர்புடைய பிற நாடுகளுடன் இணைந்து 'ஒப்பந்தத் தொழிலாளர்களை' அடையாளம் காணவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. மொரீஷியஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அப்ராவசி படித்துறை உட்பட இந்த வழித்தடங்களில் உள்ள முக்கிய பாரம்பரிய தளங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
மொரீஷியஸ் இந்தியாவுக்கு ஒரு சிறந்த நட்பு நாடாக இருப்பதுடன், ஒரே குடும்பத்திற்கான பிணைப்பைக் கொண்டது என்றும், வரலாறு, பாரம்பரியம், மனித உணர்வு ஆகியவற்றில் வலுவான நட்புறவு வேரூன்றியுள்ளது. மொரீஷியஸ்உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் பாலமாகவும் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பிரதமராக நான் முதன்முறையாக மொரீஷியஸுக்கு பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவின் சாகர் தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்து இருந்தேன். சாகர் என்றால் 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சி' என்று பொருள். இன்றும் மொரீஷியஸ் இந்த தொலைநோக்குப் பார்வையின் மையமாக உள்ளது. முதலீடு அல்லது உள்கட்டமைப்பு, வர்த்தகம் அல்லது நெருக்கடிக்கான எதிர்வினையாற்றுவது என எதுவாக இருந்தாலும், இந்தியா எப்போதும் மொரீஷியஸுடன் துணை நிற்கும். ஆப்பிரிக்க ஒன்றியத்திலிருந்து 2021-ம் ஆண்டில் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு, கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலாவது நாடு மொரீஷியஸ் ஆகும். இந்த ஒப்பந்தம் அந்நாட்டிற்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தைகளில் மொரீஷியஸுக்கு முன்னுரிமையை வழங்கியுள்ளது. இந்திய நிறுவனங்கள் மொரீஷியஸில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன. மொரீஷியஸ் மக்களுக்கான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவது, வளர்ச்சியை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழில்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றில் பங்கு ஆற்றுகின்றன.மொரீஷியஸின் திறன் மேம்பாட்டில் இந்தியா முக்கிய பங்குதாரராக உள்ளது.
நண்பர்களே,
பரந்த கடல் பிரதேசங்களைக் கொண்ட மொரீஷியஸ் நாட்டில், சட்டவிரோத மீன்பிடித்தல், கடற்கொள்ளை போன்ற குற்றச்செயல்களிலிருந்து அதன் வளங்களைப் பாதுகாக்க வேண்டும். நம்பகமான நட்பு நாடு என்ற முறையில், அந்நாட்டின் தேசிய நலனைப் பாதுகாக்கவும், இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாக்கவும் இந்தியா பணியாற்றி வருகிறது. நெருக்கடி காலங்களில், இந்தியா எப்போதும் மொரீஷியஸ் நாட்டிற்கு துணை நின்றுள்ளது. கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்தில் 1 லட்சம் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். மொரீஷியஸ் ஒரு நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் போது, இந்தியா முதல் நாடாக உதவி செய்யும். மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியை முதலில் கொண்டாடும் நாடு இந்தியாதான். இவை அனைத்திற்கும் மேலாக, நான் முன்பு கூறியது போல், இந்தியாவை பொறுத்தவரை மொரீஷியஸ் ஒரு குடும்பமாக கருதப்படுகிறது.
நண்பர்களே,
இந்தியாவும், மொரீஷியஸும் வரலாற்று ரீதியில் மட்டுமின்றி, எதிர்கால வாய்ப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா வேகமாக முன்னேறி வரும் துறைகளில் மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டம், மின்சாரப் பேருந்துகள் தொடங்கி, சூரியசக்தி திட்டங்கள் வரை, யுபிஐ, ரூபே அட்டைகள் போன்ற நவீன சேவைகள், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானம் – நட்பு உணர்வுடன் மொரீஷியஸுக்கு இந்தியா தனது ஆதரவை அளித்து வருகிறது. இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது, மேலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் வகையில், முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியால் மொரீஷியஸ் முழுமையாகப் பயனடைய வேண்டும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. அதனால்தான், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, சிறப்பு அழைப்பாளராக மொரீஷியஸுக்கு அழைப்பு விடுத்தோம். இந்தியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்க யூனியன் முதல் முறையாக ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பு நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த நீண்டகால கோரிக்கை இறுதியாக இந்திய தலைமையின் கீழ் நிறைவேற்றப்பட்டது.
பூமியை நாம் தாயாகக் கருதுகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் மொரீஷியஸ் வந்த போது, பருவநிலை மாற்றம் குறித்து மொரீஷியஸ் என்ன சொல்கிறது என்பதை நாம் கேட்க வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகிற்கும் நான் பிரகடனம் செய்தேன். இன்று மொரீஷியஸும், இந்தியாவும் இணைந்து இந்த விஷயம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்பி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு போன்ற முயற்சிகளில் மொரீஷியஸும் இந்தியாவும் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. இன்று, அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் பிரச்சாரத்துடனும் மொரீஷியஸ் இணைந்துள்ளது. அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ், இன்று நான் பிரதமர் நவீன் ராம்கூலம் அவர்களுடன் இணைந்து மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். இந்த பிரச்சாரம் நம்மைப் பெற்றெடுத்த தாயுடன் மட்டுமின்றி, பூமித்தாயுடனும் ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. மொரீஷியஸ் மக்கள் அனைவரும் இந்த இயக்கத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டில் மொரீஷியஸுக்கு பல வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மொரீஷியஸுடன் இந்தியா துணை நிற்கிறது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பிரதமருக்கும், அவரது அரசுக்கும், மொரீஷியஸ் மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
அனைவருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி.
வணக்கம்.
***
(Release ID: 2110566)
TS/SV/AG/KR
(Release ID: 2110884)
Visitor Counter : 14