பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 07 MAR 2025 6:31PM by PIB Chennai

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ நிர்வாகி திரு பிரபுல்பாய் படேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகா திருமதி கல்பென் டெல்கர் அவர்களே, பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே, வணக்கம்.

நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

நண்பர்களே,

சில்வசாவின் இந்த இயற்கை அழகு, இங்குள்ள மக்களின் அன்பு, தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய இடங்களில் உங்களுடனான எனது உறவு எவ்வளவு பழமையானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தப் பத்தாண்டு கால சொந்தம் என்ற உணர்வும், இங்கு வருவதால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதும் உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். இன்று பழைய நண்பர்களைப் பார்க்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு வருவதற்கான வாய்ப்பை நான் பலமுறை பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் சில்வசா மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி, டாமன்-டையூ முழுவதின் நிலை என்னவாக இருந்தது, அது எவ்வளவு வித்தியாசமாக இருந்தது, கடற்கரையில் ஒரு சிறிய இடத்தில் என்ன நடந்துவிடும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் எனக்கு இங்குள்ள மக்கள் மீதும், இங்குள்ள மக்களின் திறன்கள் மீதும் நம்பிக்கை இருந்தது. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. 2014-ல் மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, எங்கள் அரசு இந்த நம்பிக்கையை அதிகாரமாக மாற்றியது, அதை முன்னெடுத்துச் சென்றது, தற்போது நமது சில்வசா, இந்த மாநிலம் நவீன அடையாளத்துடன் உருவாகி வருகிறது. சில்வசா அனைத்து இடங்களிலிருந்தும் வந்த மக்கள் வசிக்கும் நகரமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

இந்த வளர்ச்சி இயக்கத்தின் கீழ், ரூ.2500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலா, அதாவது ஒவ்வொரு துறையுடனும் தொடர்புடைய ஏராளமான திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும். புதிய வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும். இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நான் உங்களுக்கு ஒரு சிறிய விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். உங்களில் பலர், வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு புதிதாக எதுவும் இல்லை, சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பார்கள். இந்த சிங்கப்பூர் ஒரு காலத்தில் மீனவர்களின் ஒரு சிறிய கிராமமாக இருந்தது. மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்தது. மிகக் குறுகிய காலத்திலேயே அங்குள்ள மக்களின் மனவுறுதி தற்போது சிங்கப்பூராக மாறிவிட்டது. இதேபோல், இந்த யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் முடிவு செய்தால், நான் உங்களுடன் நிற்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்களும் உடன் வர வேண்டும், இல்லையெனில் அது நடக்காது.

நண்பர்களே,

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை நமக்கு வெறும் யூனியன் பிரதேசம் மட்டுமல்ல. இந்த யூனியன் பிரதேசம் நமது பெருமை, இது நமது பாரம்பரியமும் கூட. அதனால்தான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முழுமையான வளர்ச்சிக்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தை முன்மாதிரி மாநிலமாக நாங்கள் மாற்றி வருகிறோம். இந்தப் பகுதி அதன் உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, நவீன சுகாதாரச் சேவைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு பெயர் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! இந்தப் பிராந்தியம் அதன் சுற்றுலா மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கு பெயர் பெற வேண்டும்! தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள், பெண்களின் பங்கேற்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என இந்தப் பகுதி அறியப்பட வேண்டும்!

சகோதர சகோதரிகளே,

பிரபுல்பாய் படேலின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் ஆதரவு காரணமாக, நாம் இந்த இலக்கிலிருந்து வெகு தொலைவில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில், இந்த திசையில் நாங்கள் விரைவாக ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளோம். நமது சில்வசாவும், இந்த யூனியன் பிரதேசமும் வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டின் வரைபடத்தில் தனித்துவமான அடையாளத்துடன் உருவாகி வருகின்றன. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை பல திட்டங்களில் வளர்ச்சியை எட்டியுள்ளன. ஒவ்வொரு பயனாளியும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒவ்வொரு தேவைக்கும் அரசுத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார். ஒரே நாடு ஒரே குடும்ப அட்டையானது ஒவ்வொரு நபருக்கும் உணவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. நீர்வள இயக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தூய்மையான குடிநீரை வழங்கி வருகிறது. பாரத் நெட் டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தியுள்ளது. பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம் ஒவ்வொரு குடும்பத்தையும் வங்கிச் சேவைகளுடன் இணைத்துள்ளது. ஒவ்வொரு பயனாளியும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார்கள்.

நண்பர்களே,

உள்கட்டமைப்பு முதல் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி வரை இந்த மாநிலத்தின் நிலை எவ்வாறு மாறியுள்ளது என்பதைத் தற்போது நாம் காண முடிகிறது. ஒரு காலத்தில் இங்குள்ள இளைஞர்கள் உயர் கல்விக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த பிராந்தியத்தில் 6 தேசிய அளவிலான நிறுவனங்கள் உள்ளன. நமோ மருத்துவக் கல்லூரி, குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஐஐஐடி டையூ, தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் டாமன் பொறியியல் கல்லூரி ஆகிய  இந்த நிறுவனங்களின் காரணமாக, நமது சில்வசா மற்றும் இந்த யூனியன் பிரதேசம் கல்வியின் புதிய மையமாக மாறியுள்ளன. இங்குள்ள இளைஞர்கள் இந்த நிறுவனங்களிலிருந்து அதிகப் பயனைப் பெறுவதற்காக, அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி ஆகிய 4 மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்படும் மாநிலமாக இது இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்து வந்தேன். இப்போது இங்குள்ள ஆரம்ப மற்றும் மழலையர் பள்ளிகளில் கூட, குழந்தைகள் நவீன வகுப்பறைகளில் படிக்கிறார்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நண்பர்களே,

கடந்த ஆண்டுகளில், நவீன சுகாதார சேவைகள் இந்த பகுதியில் கணிசமாக விரிவடைந்துள்ளன. 2023-ம் ஆண்டில், இங்கு நமோ மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது 450 படுக்கைகள்  கொண்ட மற்றொரு மருத்துவமனை அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

தற்போது சில்வசாவில் இந்த ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தவையாக மாறியுள்ளன. தற்போது மக்கள் மருந்தகம் மூலம் குறைந்த கட்டணத்தில் மருந்துகள் கிடைக்கின்றன. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையை வழங்குகிறது.

நண்பர்களே,

ஆரோக்கியம் தொடர்பான இந்த முக்கியமான தலைப்புகளுடன், மற்றொரு முக்கியமான விஷயத்தையும் எழுப்ப விரும்புகிறேன். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் அது தொடர்பான நோய்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய ஒரு நோய் உடல் பருமன். 2050-ம் ஆண்டில் 44 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று ஓர் அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் உடல் பருமன் காரணமாக கடுமையான நோய்களுக்கு இரையாகலாம்.  இந்த உடல் பருமன் பிரச்சினைகளை ஆபத்தானது. அதாவது, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவார், இது எவ்வளவு பெரிய நெருக்கடி. அத்தகைய நிலைமையை இப்போதிருந்தே தவிர்க்க நாம் முயற்சிக்க வேண்டும். எனவே, பல நடவடிக்கைகள் இருக்கலாம். நான் ஒரு அழைப்பு விடுத்துள்ளேன், இன்று உங்களிடமிருந்து எனக்கு ஒரு வாக்குறுதி வேண்டும். இந்த மருத்துவமனை நன்றாகக் கட்டப்பட்டுள்ளது, ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் சிரமத்தை நீங்கள் அனுபவிக்க நான் விரும்பவில்லை. மருத்துவமனை காலியாக இருந்தாலும், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும், அதை நீங்கள் செய்வீர்களா?தயவு செய்து உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் சொல்லுங்கள், நீங்கள் அதை செய்வீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று எனக்கு ஒரு வாக்குறுதி கொடுங்கள், நீங்கள் அனைவரும் உங்கள் கைகளை உயர்த்தி, நீங்கள் அதை 100 சதவீதம் செய்வீர்கள் என்று கூறுங்கள். இந்த உடலின் எடை அதிகரித்து, நீங்கள் குண்டாக ஆகிக் கொண்டே இருப்பீர்கள், அதற்குப் பதிலாக நீங்கள் ஒல்லியாக மாற முயற்சி செய்ய வேண்டும்.

நாம் அனைவரும் நமது சமையல் எண்ணெயை 10% குறைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10% குறைவான சமையல் எண்ணெயைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்குவதை விட 10% குறைவான சமையல் எண்ணெயை வாங்க முடிவு செய்யுங்கள். உங்கள் எண்ணெய் நுகர்வை 10% குறைப்பதாக நீங்கள் உறுதியளிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அனைவரும் கைகளை உயர்த்த வேண்டும், குறிப்பாக சகோதரிகள் சொல்ல வேண்டும், நீங்கள் வீட்டில் கேட்க வேண்டியிருந்தாலும், நீங்கள் நிச்சயமாக எண்ணெய் நுகர்வை குறைக்க முடியும். இது உடல் பருமனைக் குறைப்பதில் மிகப் பெரிய படியாக இருக்கும். இது தவிர, உடற்பயிற்சியை நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். நீங்கள் தினமும் சில கிலோமீட்டர் நடந்தாலோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டினாலோ அது மிகவும் நன்மை பயக்கும்.

நண்பர்களே,

வளர்ச்சியை நோக்கிய பார்வை கொண்ட மாநிலத்தில், வாய்ப்புகள் விரைவாக உருவாக்கப்படுகின்றன. அதனால்தான், கடந்த பத்தாண்டுகளில், இந்த பிராந்தியம் ஒரு தொழில்துறை மையமாக உருவெடுத்துள்ளது. இந்த முறை பட்ஜெட்டில், இங்கு மிகவும் பயனடையக்கூடிய உற்பத்தி என்ற மிகப் பெரிய பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான புதிய தொழில்கள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன, பல தொழில்கள் விரிவடைந்துள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலைகள் உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த வேலைவாய்ப்புகள் மூலம் நமது பழங்குடியின சமுதாயத்தினர், பழங்குடியின நண்பர்கள் அதிகபட்ச பயன்களைப் பெறுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்.

நண்பர்களே,

சுற்றுலாவும் வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இங்குள்ள கடற்கரைகள் மற்றும் வளமான பாரம்பரியம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது

நண்பர்களே,

இங்கு மேற்கொள்ளப்பட்ட இணைப்பு பணிகளும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளன. தற்போது, தாத்ரா அருகே புல்லட் ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மும்பை-தில்லி விரைவுச் சாலை சில்வசா வழியாக செல்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இங்கு பல கிலோமீட்டர் புதிய சாலைகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. உடான் திட்டத்தின் மூலம் மாநிலமும் பயனடைந்துள்ளது. சிறந்த போக்குவரத்துக்காக இங்குள்ள விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

வளர்ச்சியுடன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவையும் நல்ல நிர்வாகம் மற்றும் எளிதான வாழ்க்கை கொண்ட மாநிலங்களாக மாறி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு அலுவலகங்களைச் சுற்றி ஓட வேண்டியிருந்த ஒரு காலம் இருந்தது. தற்போது, அரசு தொடர்பான பெரும்பாலான பணிகள் மொபைலில் ஒரே கிளிக்கில் செய்யப்படுகின்றன. பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் இந்தப் புதிய அணுகுமுறையால் மிகவும் பயனடைந்து வருகின்றன. தற்போது கிராமங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகள் கேட்கப்படுகின்றன, அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய முயற்சிகளுக்காக பிரபுல்பாய் மற்றும் அவரது குழுவினரை நான் பாராட்டுகிறேன். யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று நான் உறுதியளிக்கிறேன். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக நான் மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன், நீங்கள் எனக்கு அளித்த அற்புதமான வரவேற்பு, என் மீது நீங்கள் பொழிந்த அன்பு, பாசம், எனக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மற்றும் மரியாதை ஆகியவற்றிற்காக யூனியன் பிரதேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி.

----

(Release ID 2109185)

TS/IR/KPG/KR


(Release ID: 2109832) Visitor Counter : 9