குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் தேசிய மாநாடு - குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 08 MAR 2025 1:39PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 8, 2025) புதுதில்லியில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி ('நாரி சக்தி சே விக்சித் பாரத்') என்ற தலைப்பில் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்த நாள் பெண்களின் சாதனைகளை கௌரவிக்கவும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்த நம்மை அர்ப்பணிக்கவும் இது ஒரு சந்தர்ப்பமாகும் என்று கூறினார்.

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் 50-வது ஆண்டு இது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த காலகட்டத்தில், மகளிர் சமூகம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை எனவும் இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகத் தமது வாழ்க்கைப் பயணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறினார். ஒடிசாவின் ஒரு எளிய குடும்பத்தில் பின்தங்கிய பகுதியில் பிறந்ததிலிருந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கான தமது பயணம் வரையிலான பயணம் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள், சமூக நீதியின் தத்துவமாகும் என்று அவர் கூறினார். பெண்களின் வெற்றிக்கான உதாரணங்கள் தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க பெண்கள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு சிறந்த சூழல் அவசியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அழுத்தம் அல்லது பயம் இல்லாமல் தங்கள் வாழ்க்கையைப் பற்றி தாமாக முடிவுகளை எடுக்கக்கூடிய சூழலை அவர்கள் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  அறிவியலாகட்டும், விளையாட்டுத்துறையாகட்டும், அரசியலாகட்டும், சமூக சேவையாகட்டும், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைக்கு மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என அவர் கூறினார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், நாட்டின் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு வேகமாக அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். தன்னம்பிக்கை, சுயமரியாதை, சுதந்திரம், அதிகாரம் பெற்ற பெண்களின் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

 

 

*****

PLM /DL


(Release ID: 2109412) Visitor Counter : 30