பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 05 MAR 2025 3:16PM by PIB Chennai

வணக்கம்!

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்  வாழ்த்துக்கள். மக்கள் சக்தி, பொருளாதாரம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்தல்- இது வளர்ச்சியடைந்த  இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கான வழி வகைகளை வரையறைக்கும் கருப்பொருளாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருப்பதை நீங்கள் காண முடியும்.  எனவே, இந்த பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக உருவெடுத்துள்ளது. மக்கள் சக்தி ,பொருளாதாரம் மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறதோ அதே அளவு முன்னுரிமை முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அளித்து வருகிறோம். திறன் மேம்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இந்தப் பிரிவுகளில் நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியமாகும். அதே நேரத்தில், இது ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும்  அடிப்படையாகும்.

நண்பர்களே,

கல்வி, திறன், சுகாதாரம் ஆகிய மூன்று தூண்களின் மீதுதான் மக்கள் முதலீடு என்ற தொலைநோக்குப் பார்வை உள்ளது. பல தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டின் கல்வி முறை எவ்வாறு  மாற்றத்தை சந்தித்து வருகிறது என்பதை  நீங்கள் காணமுடியும்.. தேசியக் கல்விக் கொள்கை, இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் விரிவாக்கம், கல்வி அமைப்பில்  தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல், செயற்கை நுண்ணறிவின் முழுத் திறனையும் பயன்படுத்துதல், பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், 22 இந்திய மொழிகளில் கற்றல் உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக, தற்போது நாட்டின் கல்வி முறை 21-ம் நூற்றாண்டுக்கான உலகின் தேவைகளை ஒத்திருக்கிறது.

நண்பர்களே,

2014-ம் ஆண்டு முதல் 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  1,000 ஐ.டி.ஐ நிறுவனங்களை தரம் உயர்த்தவும், 5 திறன்மிகு மையங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதில் உலக அளவில் பல்வேறு துறைகளில் நிபுணர்களின் உதவியைப் பெறுவதுடன் இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடுவதை உறுதி செய்தும் வருகிறோம். இந்த முயற்சிகள் அனைத்திலும் தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும். வேகமாக மாறிவரும் உலகத்துடன் இணைந்து செயல்பட இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்கள் செயல்முறைகளைக் கற்றுக் கொள்வதற்கான தளத்தைப் பெறவேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை சார்ந்த திறன்களை வழங்குவதற்காக பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

இந்த பட்ஜெட்டில் கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்களை அறிவித்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில்  மேலும் 75 ஆயிரம் இடங்களைச் சேர்க்கும் இலக்கை நிர்ணயித்து உள்ளோம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தொலை மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பு மூலம் தரமான சுகாதார சேவைகள் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறோம். இது மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இது இளைஞர்களுக்கு பல புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இவற்றை நனவாக்க நீங்கள் சம அளவில் வேகமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் பலன்கள் மக்களைச் சென்றடைய செய்ய முடியும்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் முதலீடு செய்வதை எதிர்கால கண்ணோட்டத்துடன் கூடிய அணுகுமுறையாக பார்த்தோம். 2047-ம் ஆண்டில் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை 90 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வளவு பரந்துபட்ட மக்கள் தொகைக்கு திட்டமிட்ட நகரமயமாக்கல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்கென, ரூ.1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதியத்தை உருவாக்க முன்முயற்சி எடுத்துள்ளோம். இந்த நிதியமானது நிர்வாகம், உள்கட்டமைப்பு, நிதி நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும். மேலும் தனியார் முதலீட்டையும் அதிகரிக்கும். நாட்டில் உள்ள நகரங்களில் நிலையான நகர்ப்புற இயக்கம், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும். தனியார் துறையினர், குறிப்பாக கட்டுமானத்துறையினர் மற்றும் தொழில்துறையினர் திட்டமிட்ட நகரமயமாக்கல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அம்ரித் 2.0 மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதில்  அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நண்பர்களே,

இன்று, பொருளாதாரத்தில் முதலீடு செய்வது குறித்து நாம் விவாதிக்கும் போது, சுற்றுலாத்துறையில் உள்ள  சாத்தியக்கூறுகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சுற்றுலாத் துறையின் பங்களிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்த இந்தப் பட்ஜெட்டில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாவை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் 50 இடங்கள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள உணவகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்படும். இது சுற்றுலாவை எளிதாக்குவதுடன் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். முத்ரா திட்டத்தின்கீழ் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான வாய்ப்புகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 'புத்தர் தோன்றிய இடம்' மற்றும் 'இந்தியாவில் குணமடையுங்கள்' ஆகிய பிரச்சாரத்தின் மூலம் உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர். இந்தியாவை உலக அளவிலான சுற்றுலா தலமாகவும் சுகாதார மையமாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

சுற்றுலா குறித்து விவாதிக்கும்போது, விடுதிகள், போக்குவரத்துத் துறை தவிர, சுற்றுலாத் துறையில் மற்ற துறைகளுக்கும் புதிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, நாட்டின் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். யோகா மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுலா ஆகியவற்றின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்விச் சுற்றுலாவிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இது குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். வலுவான செயல்திட்டத்துடன் இந்தப் பிரிவில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்.

நண்பர்களே,

நாட்டின் எதிர்காலம் புதிய கண்டுபிடிப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.  எனவே, இந்தத் திசையில் நாம் விரைந்து செயலாற்ற வேண்டும். இந்த பட்ஜெட்டில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த தேசிய பேரளவு மொழி மாதிரி அமைப்பையும் இந்தியா உருவாக்க உள்ளது. இதற்காகத் தனியார் துறையானது உலக நாடுகளைத் தாண்டி ஒரு படி முன்னேற வேண்டும்.  நம்பகமான, பாதுகாப்பான, ஜனநாயக நடைமுறைகளுடன் கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவில் சிக்கனமான தீர்வுகளை வழங்கக்கூடிய நாட்டிற்காக உலக நாடுகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. தற்போது இந்தத் துறையில் அதிக முதலீடுகள் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதற்கேற்ப கூடுதல் பலன்களைப் பெறமுடியும்.

நண்பர்களே

தற்போது இந்தியா உலகின் 3-வது பெரிய புத்தொழில் நிறுவனங்களுகான சூழல் அமைத்துக் கொண்டுள்ள நாடாக  உள்ளது. புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிதியத்தை உருவாக்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப(டீப் டெக்) நிதியத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் வளர்ந்து வரும் துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்புக்காக 10 ஆயிரம்  இடங்கள் உருவாக்கப்படும். இது ஆராய்ச்சி படிப்புகளை ஊக்குவிப்பதுடன், திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கும். தேசிய புவிசார் இயக்கம்  மற்றும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் துறையில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல ஒவ்வொரு நிலையிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே, ஞான பாரத இயக்கம் தொடர்பான நடவடிக்கைகள் இந்தியாவின் வளமான கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தைப் பாதுகாக்கும். இந்த அறிவிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்த இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் (ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை) டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்படும். அதன் பிறகு ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும். இதனால் உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள்ஈ இந்தியாவின் வரலாறு, பாரம்பரிய அறிவு, ஞானம் குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்தியாவின் தாவர மரபணு வளங்களைப் பாதுகாக்க தேசிய மரபணு வங்கியை மத்திய அரசு அமைத்து வருகிறது. எதிர்காலத் தலைமுறையினருக்கு மரபியல் வளங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அத்தகைய முயற்சிகளின் நோக்கத்தை நாம் விரிவுபடுத்த வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களும், துறைகளும் இந்த முயற்சிகளில் பங்குதாரர்களாக இணைய  வேண்டும்.

நண்பர்களே,

பிப்ரவரி மாதத்தில், இந்தியப் பொருளாதாரம் குறித்து சர்வதேச செலாவணி நிதியத்தின் சிறப்பான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளோம். அந்த நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2015-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் 66 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.  இந்தியா தற்போது 3.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இந்த வளர்ச்சி பல பெரிய பொருளாதார நாடுகளைக் காட்டிலும் கூடுதலாகும். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. சரியான திசையில், சரியான முதலீடுகளைச் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியும். பட்ஜெட் அறிவிப்புகளை அமல்படுத்துவது என்பது இதில் பெரும் பங்கு வகிக்கிறது., உங்கள் அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ஜெட்டை அறிவித்ததன் மூலம், நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம் என்ற மரபைத் தகர்த்து இருக்கிறோம்.  பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பும், பட்ஜெட் தயாரித்த பிறகும், அதை அறிவித்த பிறகும் உங்களுடன் கலந்து ஆலோசித்து உள்ளோம். இந்த பொதுமக்கள் பங்கேற்பு  மாதிரி மிகவும் அரிதானது. இந்த விவாதத் திட்டம் ஆண்டு தோறும் வேகம் பெற்று வருவதுடன் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. மக்கள் உற்சாகத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறார்கள். பட்ஜெட்டுக்குப் பிறகு அதன் அமலாக்கத்தில் உள்ள பயனுள்ள விஷயங்களைக் காட்டிலும் பட்ஜெட்டுக்கு முன்பு மேற்கொள்ளப்படும் விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். இந்த கூட்டு விவாதம் நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்குவதில் மிகப் பெரிய பங்காற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

பொறுப்புத் துறப்பு இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

----

(Release ID 2108424)

TS/SV/KPG/DL  


(Release ID: 2108660) Visitor Counter : 10