தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக மொபைல் மாநாடு -2025 ல், உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் திரு ஜோதிராதித்ய சிந்தியா

Posted On: 01 MAR 2025 9:07AM by PIB Chennai

 

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மார்ச் 3-6, 2025 வரை நடைபெறவுள்ள  உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றான,   உலக மொபைல் மாநாடு- 2025 -ல்,  மத்திய தொலைத்தொடர்புத் துறை  அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்.

இந்தியா மொபைல் மாநாடு- 2025- ன் முன்னோட்ட நிகழ்ச்சியை அவர் வெளியிடுவதுடன், உலக மொபைல் மாநாட்டில் இந்தியாவின் அரங்கையும்  திறந்து வைப்பார்.

இந்தியா மொபைல் மாநாடு என்பது இந்தியாவின் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை முன்னிலைப்படுத்தும் தளமாகும், மேலும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் அதிநவீன முன்னேற்றங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை இதில் காட்சிப்படுத்துகின்றனர். இந்திய அரங்கில் 38 இந்திய தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்கள் தங்களின் அதிநவீன தயாரிப்புகளான வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டையும் காட்சிப்படுத்துவார்கள்.

அமைச்சரின் பங்கேற்பானது டிஜிட்டல் மற்றும் மொபைல் சூழல் அமைப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக் காட்டுகிறது. அவரது பங்கேற்பு டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும்.

5ஜி, செயற்கை நுண்ணறிவு, 6ஜி, குவாண்டம் மற்றும் அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பங்களில் அதிநவீன முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, தமது பயணத்தின் போது, தொலைத்தொடர்பு அமைச்சர், உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் உரையாடுவார். இந்த நிகழ்வு மொபைல் துறையை வடிவமைக்கும் முக்கிய போக்குகளை விவாதிப்பதற்கான ஒரு தளமாகச் செயல்படுவதுடன், இந்தியாவின் டிஜிட்டல் விருப்பங்களை நிறைவேற்றும்.

அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தமது பயணம் குறித்து,  “இந்தியா வேகமாக உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாகி வருகிறது. மேலும் உலக மொபைல் மாநாடு போன்ற நிகழ்வுகளில் சர்வதேச கூட்டாளர்களுடனான எங்கள் ஈடுபாடு புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது. உலகளாவிய நிபுணர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், மொபைல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கும் நான் எதிர்நோக்குகிறேன்’’ என்று தெரிவித்தார்.

‘உலகளாவிய தொழில்நுட்ப நிர்வாகம்’,  ‘புதுமை மற்றும் ஒழுங்குமுறையை சமநிலைப்படுத்துதல்: தொலைத்தொடர்பு கொள்கை மீதான உலகளாவிய பார்வைகள்’ உள்ளிட்ட பல முக்கிய அமர்வுகளில் அமைச்சர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்சிலோனாவில் நடக்கும்  உலக மொபைல்  காங்கிரஸ் 2025-ல் பங்கேற்பது, உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட நிர்வாகிகள், தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது உத்திசார் ஒத்துழைப்பு, அறிவு பரிமாற்றம் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குகிறது.

***

PKV/KV

 


(Release ID: 2107218) Visitor Counter : 22