பிரதமர் அலுவலகம்
குவஹாத்தியில் நடைபெற்ற அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025 (அட்வான்ட்டேஜ் அசாம் 2.0)தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
25 FEB 2025 2:06PM by PIB Chennai
அசாம் ஆளுநர் திரு. லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, செயல்துடிப்புமிக்க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, தொழில்துறை தலைவர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!
கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இன்று ஒரு புதிய எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்க உள்ளன. அசாம் அனுகூலம் என்பது உலகம் முழுவதையும் அசாமின் திறன் மற்றும் முன்னேற்றத்துடன் இணைக்கும் மாபெரும் முயற்சியாகும். கடந்த காலங்களில் பாரதத்தின் வளத்தில் கிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியமாக உள்ளது. தற்போது, பாரதம் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில், கிழக்கு இந்தியாவும், நமது வடகிழக்கு இந்தியாவும் மீண்டும் ஒருமுறை தங்கள் வலிமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளன. இந்த உணர்வின் பிரதிபலிப்பாகவே அசாம் அனுகூலத்தை நான் காண்கிறேன். இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அசாம் அரசுக்கும், ஹிமந்தா அவர்களின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2013-ல் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் அசாம் சென்றிருந்தபோது, ஒரு கூட்டத்தில் தன்னிச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னேன் – அது "எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளும்போது, மக்கள் அ என்றால் அசாம் என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்பதாகும்.
நண்பர்களே,
தற்போது, நாம் அனைவரும் உலகளாவிய சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், புரிந்து கொள்கிறோம். இந்த உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுக்கு ஒரு நிச்சயம் உள்ளது - அந்த நிச்சயம் பாரதத்தின் விரைவான வளர்ச்சி என்பதுதான். பாரதத்தின் மீதான இந்த நம்பிக்கைக்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இன்றைய பாரதம் இந்த 21-ம் நூற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை மனதில் கொண்டு, மிகப் பெரும் அளவில் வேலைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது உலகின் நம்பிக்கை பாரதத்தின் இளைஞர்கள் மீது உள்ளது, அவர்கள் விரைவாக திறன்களாக மாறி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர். வறுமையில் இருந்து மீண்டு, புதிய விருப்பங்களுடன் முன்னேறி வரும் பாரதத்தின் புதிய நடுத்தர வர்க்கத்தை உலகம் நம்புகிறது. அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கை தொடர்ச்சியை ஆதரிக்கும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை உலகம் நம்புகிறது. சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி வரும் பாரதத்தின் ஆட்சி மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. தற்போது, பாரதம் அதன் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளுடன் பாரதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. கிழக்கு ஆசியாவுடனான நமது தொடர்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. கூடுதலாக, புதிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் பல புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது.
நண்பர்களே,
பாரதத்தின் மீது வளர்ந்து வரும் உலகளாவிய நம்பிக்கைக்கு இடையே, நாம் அனைவரும் இன்று அசாமில், அன்னை காமாக்யாவின் புனித பூமியில் கூடியிருக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் அசாமின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அசாம் அனுகூலம் உச்சி மாநாட்டின் முதல் பகுதி 2018-ல் நடைபெற்றது. அப்போது அசாமின் பொருளாதாரம் 2.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, அசாம் 6 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறியுள்ளது. அதாவது, பிஜேபி ஆட்சியின் கீழ் வெறும் ஆறு ஆண்டுகளில், அசாமின் பொருளாதாரம் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இது இரட்டை என்ஜின் அரசின் இரட்டை விளைவு ஆகும். அசாமில் நீங்கள் அனைவரும் செய்த முதலீடுகள் உட்பட, அசாமை வரம்பற்ற வாய்ப்புகள் கொண்ட மாநிலமாக மாற்றியுள்ளன. அசாம் அரசு கல்வி, திறன் மேம்பாடு, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சிறந்த முதலீட்டு சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், பிஜேபி அரசு மாநிலத்தில் இணைப்பு தொடர்பான உள்கட்டமைப்பில் விரிவாகப் பணியாற்றியுள்ளது. நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் மீது மூன்று பாலங்கள் மட்டுமே இருந்தன, அதாவது 70 ஆண்டுகளில் மூன்று பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், நான்கு புதிய பாலங்களைக கட்டியுள்ளோம். இந்த பாலங்களில் ஒன்றுக்கு பாரத ரத்னா பூபன் ஹசாரிகா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2014 க்கு இடையில், ரயில்வே பட்ஜெட்டில் அசாமுக்கு சராசரியாக 2,100 கோடி ரூபாய் கிடைத்தது. எங்கள் அரசு அசாமின் ரயில்வே பட்ஜெட்டை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்து, அதை 10,000 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. கூடுதலாக, அசாமில் 60-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, வடகிழக்கின் முதல் பகுதியளவு -அதிவேக ரயில் குவஹாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே ஓடத் தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
அசாமின் விமானப் போக்குவரத்து விரைவாக விரிவடைந்து வருகிறது. 2014 வரை, இங்கு ஏழு வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது சுமார் 30 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதுடன், அசாம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
நண்பர்களே,
இந்த மாற்றம் உள்கட்டமைப்புடன் நின்றுவிடவில்லை. சட்டம் ஒழுங்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், ஏராளமான அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தற்போது, அசாமில் உள்ள ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு இளைஞரும் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகின்றனர்.
நண்பர்களே,
தற்போது, பாரதத்தின் பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தொழில்துறை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான முழுமையான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். புத்தொழில் நிறுவனங்களுக்கான கொள்கைகள், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள் அல்லது உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் என எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் சிறந்த கொள்கைகளை நாங்கள் வகுத்துள்ளோம். உள்கட்டமைப்பிலும் அரசு பெருமளவில் முதலீடுகளை செய்து வருகிறது. நிறுவன சீர்திருத்தங்கள், தொழில், உள்கட்டமைப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் கலவையானது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளது. அதனால்தான் முதலீட்டாளர்கள் பாரதத்தின் திறனையும், வளர்ச்சிக்கான மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளையும் அங்கீகரிக்கின்றனர். இந்த முன்னேற்றத்தில் அசாமும் இரட்டை என்ஜின் வேகத்தில் முன்னேறி செல்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் அசாம் தனது பொருளாதாரத்தை 150 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அசாம் இந்த இலக்கை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது நம்பிக்கை அசாமின் திறமையான மக்களிடமிருந்தும், இங்குள்ள பிஜேபி அரசின் அர்ப்பணிப்பிலிருந்தும் உருவாகிறது. தற்போது, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நுழைவாயிலாக அசாம் உருவாகி வருகிறது. இந்தத் திறனை மேலும் மேம்படுத்த, "உன்னதி" என்றும் அழைக்கப்படும் வடகிழக்கு உருமாற்ற தொழில்மயமாக்கல் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் தொழில், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். இந்தத் திட்டத்தையும், அசாமின் வரம்பற்ற திறனையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இங்குள்ள அனைத்து தொழில்துறை தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அசாமின் இயற்கை வளங்கள் மற்றும் உத்திசார்ந்த இருப்பிடம் அதை விருப்பமான முதலீட்டு இடமாக ஆக்குகிறது. அசாமின் வலிமைக்கு ஒரு உதாரணம் அசாம் தேநீர். அசாம் தேயிலை ஒரு உலகளாவிய பிராண்ட் ஆகும். இது உலகெங்கிலும் உள்ள தேநீர் பிரியர்களின் வாழ்க்கையின் நேசத்துக்குரிய பகுதியாகும். அசாம் தேயிலை இப்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த மரபு அசாமை மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க ஊக்குவிக்கிறது.
நண்பர்களே,
தற்போது உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகம் ஒரு நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலியைக் கோருகிறது. இந்த முக்கியமான நேரத்தில், பாரத் தனது உற்பத்தித் துறையை விரைவான முறையில் வலுப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் உற்பத்தியை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். நமது மருந்துகள், மின்னணுவியல், மோட்டார் வாகனங்கள் தொழிற்சாலைகள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, சர்வதேச சந்தைகளில் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கான புதிய அளவுகோல்களையும் உருவாக்கி வருகின்றன. இந்த உற்பத்திப் புரட்சியில் அசாம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நண்பர்களே,
உலக வர்த்தகத்தில் அசாம் எப்போதும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவின் கடலோர இயற்கை எரிவாயு உற்பத்தியில் அசாம் 50% க்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், அசாமின் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. மின்னணுவியல், செமிகண்டக்டர்கள், பசுமை எரிசக்தி போன்ற புதிய துறைகளிலும் அசாம் விரைவாக வளர்ந்து வருகிறது. அரசின் கொள்கைகள் காரணமாக, அசாம் உயர் தொழில்நுட்பத் தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான மையமாக மாறி வருகிறது.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு, மத்திய பட்ஜெட்டில் நாம்ரூப்-4 ஆலைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. வரும் ஆண்டுகளில், இந்த யூரியா உற்பத்தி ஆலை வடகிழக்கு மாநிலங்களின் உரத் தேவையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் உரத் தேவையையும் பூர்த்தி செய்யும். கிழக்கு இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையமாக அசாம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த இலக்கை அடைய பிஜேபி தலைமையிலான மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டில், உலகின் முன்னேற்றமானது மின்னணு புரட்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளைச் சார்ந்துள்ளது. இதற்கு நாம் எவ்வளவு சிறப்பாக தயாராகிறோமோ, அவ்வளவு வலுவாக உலக அரங்கில் இருப்போம். அதனால்தான் எங்கள் அரசு 21-ம் நூற்றாண்டின் கொள்கைகள் மற்றும் உத்திகளுடன் முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு மற்றும் மொபைல் உற்பத்தியில் பாரதம் எவ்வாறு ஒரு பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது, இந்த வெற்றிக் கதையை செமிகண்டக்டர் உற்பத்தியிலும் பிரதிபலிப்பதை பாரதம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முக்கிய மையமாக அசாம் உருவாகி வருவது குறித்து நான் பெருமைப்படுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு, டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி & ஆய்வக வசதி அசாமின் ஜாகிரோட்டில் திறக்கப்பட்டது. வரும் ஆண்டுகளில் முழு வடகிழக்கு பிராந்தியத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்த ஆலை முக்கிய பங்கு வகிக்கும்.
நண்பர்களே,
செமிகண்டக்டர் துறையில் புதுமைகளை ஊக்குவிக்க ஐஐடிகளுடன் நாங்கள் ஒத்துழைத்துள்ளோம். நாட்டில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பத்தாண்டின் இறுதியில், மின்னணுத் துறை 500 பில்லியன் டாலர்கள் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது விரைவு மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, செமிகண்டக்டர் உற்பத்தியில் பாரதம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுக்கும் என்பது உறுதி. இது லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் மற்றும் அசாமின் பொருளாதாரத்திற்கு கணிசமாகப் பயனளிக்கும்.
நண்பர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், பாரதம் அதன் சுற்றுச்சூழல் பொறுப்புகளை மனதில் கொண்டு கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. உலகம் தற்போது நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இயக்கத்தை ஒரு முன்மாதிரி நடைமுறையாக கருதி எங்கள் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சூரிய சக்தி, காற்று மற்றும் நிலையான எரிசக்தி வளங்களில் நாடு அதிக முதலீடுகளை செய்துள்ளது. இது நமது சுற்றுச்சூழல் கடமைகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனையும் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பில் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை சேர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனின் வருடாந்திர உற்பத்தியை அடையும் பணியிலும் அரசு செயல்பட்டு வருகிறது. எரிவாயு உள்கட்டமைப்பு விரிவாக்கத்துடன், நாட்டில் எரிவாயுவின் தேவையும் விரைவாக உயர்ந்துள்ளது. எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் இந்தப் பயணத்தில் அசாம் பெரிய நன்மையைக் கொண்டுள்ளது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டங்கள் முதல் பசுமை முயற்சிகள் வரை, அனைத்து கொள்கைகளும் உங்களுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அசாம் ஒரு தலைமைத்துவமாக உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருப்பினும், உங்களைப் போன்ற தொழில்துறை தலைவர்கள் முன்வந்து அசாமின் முழு திறனையும் அதிகரிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டில் பாரதத்தை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். தற்போது, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியா பிராந்தியமானது உள்கட்டமைப்பு, சரக்கு போக்குவரத்து, வேளாண்மை, சுற்றுலா மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் வேகமாக முன்னேறி வருகின்றது. பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தப் பிராந்தியம் முன்னோடியாக இருப்பதை உலகம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தப் பயணத்தில் நீங்கள் பங்குதாரர்களாக இருப்பீர்கள் என்றும், அசாமின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பீர்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஒட்டுமொத்த தெற்கு உலக அளவில் இந்தியாவின் திறன்களை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் மாநிலமாக அசாமை மாற்ற நாம் இணைந்து பணியாற்றுவோம். இந்த உச்சிமாநாட்டிற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் கூறும்போது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் – நான் உங்களுடன் நிற்கிறேன், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தில் உங்கள் பங்களிப்புகளை முழுமையாக ஆதரிக்கிறேன்.
மிகவும் நன்றி.
***
TS/IR/AG/KR/DL
(Release ID: 2106209)
Visitor Counter : 8