குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பாட்னா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 25 FEB 2025 3:16PM by PIB Chennai

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று  (பிப்ரவரி 25, 2025) நடைபெற்ற பாட்னா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பாட்னா மருத்துவக் கல்லூரி பீகாரின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். ஆசியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (பி.எம்.சி.எச்) பழமையைப் பாதுகாத்துக் கொண்டே நவீனத்தை நோக்கி முன்னேறி வரும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன் முன்னாள் மாணவர்கள் தங்கள் திறமை, சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வலிமையால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தங்களுக்கும் பி.எம்.சி.எச்-க்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

சிகிச்சைக்காக மற்றொரு நகரத்திற்கு அல்லது மாநிலத்திற்கு செல்வது என்பது சிகிச்சையில் தாமதம், உணவு, தங்குமிடம் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். இது முக்கிய நகரங்களின் மருத்துவமனைகளுக்கும் அதிக சுமையை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் நல்ல மருத்துவமனைகளைப் பரவலாக்குவது இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க உதவும். சென்னை, ஹைதராபாத், மும்பைஇந்தூர் போன்ற நகரங்கள் சிறப்பு சிகிச்சைக்கான மையங்களாக வளர்ந்துள்ளன. பீகாரும் இதுபோன்ற பல மையங்களை உருவாக்க வேண்டும். இது பீகார் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையை வழங்குவது மட்டுமின்றி, மாநிலத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தும். பி.எம்.சி.எச் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவத்துடன் இந்த முயற்சிக்கு பெரிதும் பங்களிக்க முடியும்.

இது தொழில்நுட்பத்தின் சகாப்தம் என்று கூறிய குடியரசுத்தலைவர், மருத்துவத் துறையிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவ செயல்முறையை எளிமையாகவும் துல்லியமாகவும் ஆக்குகின்றன என்றார். பி.எம்.சி.எச் இன் அனைத்து பங்குதாரர்களும் சமீபத்திய தொழில்நுட்பங்களை பின்பற்ற எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது சிகிச்சையை எளிதாக்குவது மட்டுமின்றி, மருத்துவர்களின் அறிவு மற்றும் செயல்திறனையும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

நமது மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்களாகவும், சிகிச்சையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், ஆலோசகர்களாகவும் உள்ளனர் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த அனைத்து பாத்திரங்களிலும், அவர்கள் மக்களுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்கிறார்கள்; தேச நிர்மாணத்திற்கு பங்களிக்கிறார்கள். ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.

***

TS/SMB/KV/KR

 


(Release ID: 2106173) Visitor Counter : 32