பிரதமர் அலுவலகம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு பாராட்டத்தக்க முன்முயற்சி; தொழில், புதிய கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மாநிலத்தின் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இது அமைந்துள்ளது: பிரதமர்
உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம், இந்த மாநாடு பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகுத்துள்ளது. வர்த்தகம், தொழில்முனைவோருக்கான முக்கிய மையமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது: பிரதமர்
உலகத்தின் எதிர்காலமாக இந்தியா உள்ளது! வந்து எங்கள் நாட்டில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் : பிரதமர்
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முயற்சிகளின் காரணமாக மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க அளவில் பயனடையும்: பிரதமர்
வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன: பிரதமர்
2025-ம் ஆண்டின் முதல் 50 நாட்கள் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளன: பிரதமர்
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் எரிசக்
Posted On:
24 FEB 2025 3:24PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் வழியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநாட்டில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். ராஜா போஜ் பூமியில் முதலீட்டாளர்களையும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களையும் வரவேற்பதில் பெருமை கொள்வதாக திரு மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கும் என்பதால் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
"உலக நாடுகள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளதாக" கூறிய திரு மோடி, இந்திய வரலாற்றில் இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது இதுவே முதல் முறை என்று கூறினார். இந்தியாவிடமிருந்து சாமானிய மக்கள், துறைசார்ந்த நிபுணர்கள், நிறுவனங்கள், நாடுகள் என அனைவரும் ஏராளமான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியா குறித்து கடந்த சில வாரங்களில் பெறப்பட்ட கருத்துக்கள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், "உலகின் எதிர்காலம் இந்தியாவில் உள்ளது" என்று பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளதை அவர் மேற்கோள் காட்டினார். அண்மையில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா அமைப்பு இந்தியாவை சூரிய மின் உற்பத்தியின் வல்லரசு நாடாக அறிவித்தது. இது குறித்து பல்வேறு நாடுகள் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போது, இந்தியா அதற்கான தீர்வுகளை வழங்குகிறது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த விநியோகச் சங்கிலியாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும், ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த நிறுவனங்கள் உலகளவிலான விநியோகச் சங்கிலி தொடர்பான சவால்களுக்கு இந்தியாவிடமிருந்து தீர்வுகளை எதிர்பார்ப்பதாகவும், இதன் காரணமாக இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் இந்த நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, "வேளாண்மை, கனிம வளங்களில் நாட்டின் முன்னோடி மாநிலமாக இது திகழ்கிறது என்று கூறினார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் உயிர்நாடியாக நர்மதா நதி இருப்பதாக குறிப்பிட்ட அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக உருவெடுப்பதற்கான திறன் மத்தியப் பிரதேசத்திற்கு உள்ளது என்றார்.
கடந்த 20 ஆண்டுகளாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிய பிரதமர், ஒரு காலத்தில் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது என்றும், சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது என்றும் குறிப்பிட்டார். இத்தகைய சூழல் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்கியதாக தெரிவித்தார். மக்களின் ஆதரவுடன், மத்தியப் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, முதலீட்டாளர்கள் மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்ய தயங்கிய நிலை இருந்தது என்றும், ஆனால் இன்று, முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். முன்பு சாலை வசதிகள் மோசமானதாக இருந்த நிலையில், தற்போது மின்சார வாகன புரட்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது என்றார். 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 2 லட்சம் மின்சார வாகனங்கள் அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இது சுமார் 90 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். இது உற்பத்தித் துறைகளுக்கு உகந்த மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்து வருவதை நிரூபிப்பதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
"கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக மத்தியப் பிரதேச மாநிலம் பெரிதும் பயனடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் தில்லி-மும்பை விரைவுச் சாலை, மத்தியப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் வழியாக செல்கிறது. இது மும்பையின் துறைமுகங்களுக்கு வட இந்திய சந்தைகளுடன் விரைவான போக்குவரத்து தொடர்பை வழங்குகிறது என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தில் தற்போது ஐந்து லட்சம் கிலோ மீட்டருக்கும் கூடுதலான சாலை வசதிக்கான கட்டமைப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தொழில்துறை வழித்தடங்கள் நவீன வசதிகளுடனும் அதிவேக நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இது சரக்குப் போக்குவரத்தில் விரைவான வளர்ச்சியை உறுதி செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
விமானப் போக்குவரத்து குறித்து குறிப்பிட்ட அவர், குவாலியர், ஜபல்பூர் விமான நிலையங்களில் உள்ள முனையங்கள் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த விரிவாக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்தார். மத்தியப்பிரதேசத்தின் விரிவான ரயில் கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மத்தியப்பிரதேசத்தில் ரயில் கட்டமைப்பு 100 சதவீத மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தின் மாதிரி தொடர்ந்து அனைவரையும் கவர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாதிரியைப் பின்பற்றி, அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசத்தில் 80 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
“கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் எரிசக்தித் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று திரு மோடி பாராட்டினார். மேலும் ஒரு காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் இருந்த பசுமை எரிசக்தியில் இப்போது இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 70 பில்லியன் டாலருக்கும் (ரூ.5 டிரில்லியனுக்கும் அதிகமான) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முதலீடு கடந்த ஆண்டு மட்டும் தூய்மை எரிசக்தித் துறையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். எரிசக்தித் துறையில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியால் மத்தியப் பிரதேசம் பெரிதும் பயனடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். தற்போது, மத்தியப்பிரதேசம் சுமார் 31,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் மின்சார உபரி மாநிலமாக உள்ளது என்றும், அதில் 30 சதவீதம் தூய்மை எரிசக்தி என்றும் அவர் கூறினார். ரேவா சூரிய சக்தி பூங்கா நாட்டின் மிகப்பெரிய ஒன்றாகும் என்றும், சமீபத்தில், ஓம்காரேஷ்வரில் மிதக்கும் சூரிய சக்தி ஆலை திறக்கப்பட்டது என்றும் அவர் எடுத்துரைத்தார். பினா சுத்திகரிப்பு பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் அரசு சுமார் ரூ.50,000 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், இது மத்தியப்பிரதேசத்தை பெட்ரோ கெமிக்கல்களுக்கான மையமாக மாற்ற உதவும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். நவீன கொள்கைகள் மற்றும் சிறப்பு தொழில்துறை உள்கட்டமைப்பு மூலம் மத்தியப் பிரதேச அரசு இந்த உள்கட்டமைப்பை ஆதரிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழில்துறை மண்டலங்கள் உள்ளன என்றும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் முதலீட்டு மண்டலங்கள் பிதம்பூர், ரத்லம் மற்றும் தேவாஸில் உருவாக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்ட அவர், மத்தியப்பிரதேசத்தில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்திற்கான மகத்தான வாய்ப்பை எடுத்துரைத்தார்.
தொழில்துறை வளர்ச்சிக்கு நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஒருபுறம், நீர் பாதுகாப்பை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மறுபுறம், நதிகள் இணைப்புக்கான ஒரு பெரும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மத்தியப்பிரதேசத்தில் வேளாண்மை, தொழில்துறைகள் இந்த முயற்சிகளால் பெரிதும் பயனடையும் என்பதை அவர் எடுத்துரைத்தார். ரூ.45,000 கோடி மதிப்புள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 10 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாகவும், மத்தியப்பிரதேசத்தில் நீர் மேலாண்மையை வலுப்படுத்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த வசதிகள் உணவு பதனப்படுத்துதல், வேளாண் தொழில் மற்றும் ஜவுளித் துறைகளில் குறிப்பிடத்தக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
மத்தியப்பிரதேசத்தில் தங்கள் அரசு அமைந்த பிறகு, வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, மாநில மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மத்தியப்பிரதேச அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக எடுத்துரைத்தார். தனது 3-வது பதவிக்காலத்தில் மூன்று மடங்கு விரைவாகச் செயல்படுவோம் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்த அவர், "இந்த வேகம் 2025-ம் ஆண்டின் முதல் 50 நாட்களில் தெளிவாக காணமுடிந்தது" என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு பகுதியையும் உற்சாகப்படுத்திய சமீபத்திய பட்ஜெட்டை திரு மோடி எடுத்துரைத்தார். மிகப்பெரிய வரி செலுத்துவோராக இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர்தான் சேவைகள் மற்றும் உற்பத்திக்கான தேவையை உருவாக்குகிறார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார். இந்தப் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லை என்பதும் வரி விகிதங்களை மறுசீரமைப்பதும் அடங்கும் என்று அவர் கூறினார். பட்ஜெட்டைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தியில் முழுமையான தன்னிறைவை அடைய உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதை பட்ஜெட் வலியுறுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, முந்தைய அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் திறன்கள் வரையறைக்கப்பட்டிருந்தன என்றும் இது விரும்பிய அளவில் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளின் வளர்ச்சியைத் தடுத்தது என்றும் கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதே தற்போதைய முன்னுரிமை என்பதை அவர் எடுத்துரைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் கடன் தொடர்பான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் கடன் எளிதாக வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மதிப்புக் கூட்டல் மற்றும் ஏற்றுமதிக்கான ஆதரவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில ஒழுங்குமுறை நீக்க ஆணையத்தைப் பற்றி விவாதித்த பிரதமர் கடந்த பத்தாண்டுகளில், தேசிய அளவில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மாநில, உள்ளூர் அளவில் சீர்திருத்தங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன” என்றும் தெரிவித்தார். மாநிலங்களுடன் தொடர்ச்சியான உரையாடல் நடைபெற்று வருவதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் மாநிலங்களுடன் இணைந்து 40,000-க்கும் மேற்பட்ட நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், 1,500 காலாவதியான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்குத் தடையாக இருக்கும் விதிமுறைகளை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என்றும், ஒழுங்குமுறை நீக்க ஆணையம் மாநிலங்களில் முதலீட்டிற்கு ஏற்ற ஒழுங்குமுறை சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பட்ஜெட்டானது அடிப்படை சுங்க வரி கட்டமைப்பை எளிமைப்படுத்தியுள்ளது என்றும் தொழில்துறைக்குத் தேவையான பல அத்தியாவசிய உள்ளீடுகளுக்கான விகிதங்களைக் குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சுங்க வழக்குகளை மதிப்பிடுவதற்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தனியார் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டிற்காக னப் புதிய துறைகளைத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு, அணுசக்தி, உயிரி உற்பத்தி, முக்கியமான கனிம பதனப்படுத்துதல் மற்றும் லித்தியம் பேட்டரி உற்பத்தி போன்றவை முதலீட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். "இந்த நடவடிக்கைகள் அரசின் நோக்கத்தையும் உறுதிப்பாட்டையும் நிரூபிக்கின்றன" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
“ஜவுளி, சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியிலும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும்” என்று பிரதமர் தெரிவித்தார். பருத்தி, பட்டு, பாலிஸ்டர், விஸ்கோஸ் ஆகியவற்றின் 2-வது பெரிய உற்பத்தியாளராக இந்தியா விளங்குவதை அவர் எடுத்துரைத்தார். ஜவுளித்துறை கோடிக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், ஜவுளித் துறையில் வளமான பாரம்பரியத்தையும், திறன்களையும், தொழில்முனைவோரையும் இந்தியா கொண்டுள்ளது என்றார். இந்தியாவின் பருத்தி தலைநகரமாக மத்தியப்பிரதேசம் விளங்குவதாகவும், நாட்டின் இயற்கை பருத்தி விநியோகத்தில் 25 சதவீதத்திற்கு இம்மாநிலம் பங்களிப்பு செய்கிறது. பட்டுப்புழு உற்பத்தியில் மிகப் பெரிய மாநிலமான இதன் சந்தேரி, மகேஸ்வரி புடவைகள் மிகவும் பிரசித்தம் பெற்றவை என்றும், ஜிஐ-முத்திரை பெற்றவை என்றும் அவர் கூறினார். இந்தத் துறையில் முதலீடு செய்வது மத்தியப்பிரதேசத்தின் ஜவுளிகள் உலகளாவிய சந்தையைப் பெறுவதற்கு உதவி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். பாரம்பரிய ஜவுளிகளோடு புதிய வழிகளை இந்தியா கண்டறிவது பற்றி எடுத்துரைத்த பிரதமர், வேளாண் ஜவுளிகள், மருத்துவ ஜவுளிகள், புவிசார் ஜவுளிகள் போன்ற தொழில்நுட்ப ஜவுளிகள் ஊக்குவிக்கப்படுவது பற்றியும் இதற்காக தேசிய இயக்கம் தொடங்கப்பட்டு பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்பட்டிருப்பது பற்றியும் எடுத்துரைத்தார். மத்திய அரசின் பிஎம் மித்ரா திட்டம் நன்கு அறியப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட திரு மோடி, மத்தியப்பிரதேசம் உட்பட நாடு முழுவதும் 7 பெரிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். இந்த முன்முயற்சி ஜவுளித் துறையை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல உதவும் என்று அவர் கூறினார். ஜவுளித்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஜவுளித்துறையில் புதிய பரிமாணங்களை இந்தியா சேர்த்திருப்பது போலவே சுற்றுலா துறையையும் அது விரிவாக்கம் செய்துள்ளது என்று தெரிவித்த திரு மோடி, “மத்தியப்பிரதேசம் விசித்திரமானது, அது மிகவும் அற்புதமானது” என்ற மத்தியப்பிரதேசத்தின் சுற்றுலா இயக்கத்தை நினைவுகூர்ந்தார். நர்மதை நதியை சுற்றிலும் உருவாக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா உள்கட்டமைப்பு, மத்தியப்பிரதேசத்தின் பழங்குடியினப் பகுதிகள் ஆகியவை பற்றி அவர் எடுத்துரைத்தார். இம்மாநிலத்தில் ஏராளமான தேசியப் பூங்காக்கள் இருப்பது பற்றி பேசிய பிரதமர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கான ஏராளமான வாய்ப்புகள் இருப்பது பற்றியும் விவரித்தார். “இந்தியாவில் குணமடையுங்கள்” என்ற மந்திரம் உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய துறையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த துறையில் அரசு – தனியார் துறை கூட்டாண்மையை அரசு ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சை முறைகளும், ஆயுஷ் மருத்துவ முறையும் பெருமளவில் ஊக்கப்படுத்தப்படுவதையும் சிறப்பு ஆயுஷ் விசாக்கள் வழங்கப்படுவதையும் திரு மோடி எடுத்துரைத்தார். இந்த முன்முயற்சிகள் மத்தியப்பிரதேசத்திற்கு பெரும் பயனளிக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். உஜ்ஜைனியில் உள்ள மகாகால் மகாலோக்-ஐ காண்பதற்கு பார்வையாளர்களை ஊக்குவித்த அவர், மகாகாலிடமிருந்து அவர்கள் ஆசீர்வாதம் பெறுவார்கள் என்றும், நாடு எந்த அளவிற்கு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை விரிவுபடுத்தியுள்ளது என்பதை உணர்வார்கள் என்றும் கூறினார்.
செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தான் உரையாற்றியதை சுட்டிக்காட்டிய பிரதமர், மத்தியப்பிரதேசத்தில் முதலீடு செய்யவும், முதலீட்டை அதிகரிக்கவும் இது சரியான தருணம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் சகன்பாய் பட்டேல், முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னணி
போபாலில் இரண்டு நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு, மத்தியப்பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக உருவாக்குவதற்கு முக்கிய தளமாக உள்ளது. இந்த உச்சி மாநாடு மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள், போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து, தொழில்துறை, திறன் மேம்பாடு, சுற்றுலா, எம்எஸ்எம்இ உள்ளிட்ட சிறப்பு அமர்வுகளை கொண்டிருந்தது. உலகளாவிய தெற்கு நாடுகளின் மாநாடு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளின் அமர்வுகள், முக்கிய கூட்டாண்மை நாடுகளின் சிறப்பு அமர்வுகள் போன்ற சர்வதேச அமர்வுகளும் இதில் அடங்கும்.
இந்த உச்சிமாநாட்டின்போது 3 பெரிய தொழில்துறை கண்காட்சிகளும் நடைபெற்றன. ஆட்டோ கண்காட்சி மத்தியப்பிரதேசத்தின் போக்குவரத்து வாகன உற்பத்தித் திறன்கள் மற்றும் எதிர்கால போக்குவரத்து தீர்வுகளை முன்வைத்தது. ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியானது இந்த மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் நவீன ஜவுளி உற்பத்தியின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டின. “ஒரு மாவட்டம் – ஒரு உற்பத்திப் பொருள்” என்ற கண்காட்சி மாநிலத்தின் தனித்துவமான கைவினை கலைத்திறன் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தியது.
60-க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், இந்தியாவை சேர்ந்த 300-க்கும் அதிகமான பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
***
(Release ID: 2105735)
TS/SV/IR/SMB/AG/KPG/RR/DL
(Release ID: 2105869)
Visitor Counter : 12