பாதுகாப்பு அமைச்சகம்
பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் ஏரோ இந்தியா 2025 கண்காட்சி - பாதுகாப்புத் துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்
வலுவான, திறன்மிக்க, பாதுகாப்பான, தற்சார்புடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை ஏரோ இந்தியா 2025 முன்னெடுத்துச் செல்லும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
09 FEB 2025 6:21PM by PIB Chennai
ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15-வது பதிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (2025 பிப்ரவரி 10) அன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைக்கிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, உலகளாவிய விண்வெளி நிறுவனங்களின் அதிநவீன தயாரிப்புகளுடன் இந்தியாவின் வான்வழி வலிமையையும் உள்நாட்டு அதிநவீன கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தும். 'தற்சார்பு இந்தியா', இந்தியாவில் தயாரிப்போம்- உலகிற்காக தயாரிப்போம்' என்ற தொலைநோக்கு பார்வைகளுக்கு ஏற்ப, இந்த நிகழ்வு உள்நாட்டுமயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த சர்வதேச ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்கும்.
இதன் மூலம் 2047-க்குள் நாட்டை வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தீர்மானத்திற்கு ஒரு உந்துதலையும் இது அளிக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வலுவான, திறமையான இந்தியா, பாதுகாப்பான, தற்சார்பு இந்தியா என்ற அரசின் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான தளமாக ஏரோ இந்தியா இருப்பதாக விவரித்தார். ஏரோ இந்தியா என்பது புதிய இந்தியாவின் வலிமை, உறுதி, தற்சார்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு தளமாகும் என்று அவர் கூறினார். இது இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலைக்கு முக்கியமானது மட்டுமல்ல எனவும், நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். இது நமது பாதுகாப்பு திறன்களை வெளிப்படுத்துவதுடன், உலகளாவிய ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். நமது நட்பு நாடுகளுடன் பொதுவான அக்கறை உள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதும் நமது குறிக்கோள் என அவர் கூறினார். இந்த நிகழ்வு தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளின் காட்சிப்படுத்துதலாக மட்டுமல்லாமல், நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் திகழும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மொத்தம் 42,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, 150 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது்என அவர் தெரிவித்தார். 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்பது, இந்தியாவின் வான்வெளி, பாதுகாப்புத் திறன்களில் வளர்ந்து வரும் உலகளாவிய நம்பிக்கைக்கு ஒரு சான்று என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
2025-26 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ .1.60 லட்சம் கோடியை தாண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.21,000 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் பாதுகாப்பு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமைச்சர் கூறினார். பாதுகாப்புத் துறையில் எந்தவொரு முன்னேற்றமும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் என்று அவர் கூறினார். பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் சிவில் துறையிலும் புதுமையை ஊக்குவிக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், முப்படைகளின் தளபநி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஏரோ இந்தியா தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு:
நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2025 பிப்ரவரி 11 அன்று பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் நடைபெற உள்ளது.
கடந்த ஏரோ இந்தியா பதிப்பில் 27 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு, 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது. நட்பு நாடுகளின் ராணுவ தளபதிகளும் சுமார் 30 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
முதலீடு, கூட்டு முயற்சிகள், கூட்டு உற்பத்தி, ஆராய்ச்சி - மேம்பாட்டில் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளியில் பயிற்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும்.
பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் வட்டமேசை கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்தியா அரங்கம்:
இந்திய பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, கண்டுபிடிப்பு, உற்பத்தி திறன்களை வெளிப்படுத்த இந்திய அரங்கம் ஒரு வாய்ப்பை வழங்கும். இதை பிப்ரவரி 10-ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். இந்திய அரங்கம் ஐந்து தனித்துவமான மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, விமானப் போக்குவரத்து, தரைவழி விமானப் போக்குவரத்து, கடற்படை விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு விண்வெளி, முக்கிய தொழில்நுட்ப களங்கள் ஆகியவற்றில் உள்நாட்டு திறன்களை வெளிப்படுத்தும்.
***
PLM/KV
(Release ID: 2101185)
Visitor Counter : 43