நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர பகுதிகளை வளர்ச்சி மையங்களாக மாற்ற பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

Posted On: 01 FEB 2025 1:13PM by PIB Chennai

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவது, நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு , குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்த, 1 லட்சம் கோடி ருபாய் நகர்ப்புற சவால் நிதியை அரசு உருவாக்கும் என்று நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புற சவால் நிதிக்கு வங்கித் திட்ட செலவில் 25 சதவீதம் வரை நிதியளிக்கப்படும் என்றும், 50 சதவீதம் பத்திரங்கள், வங்கிக் கடன்கள் மற்றும் தனியார் பங்களிப்புகள் மூலம் நிதியளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இது வழங்கப்படும்.

அடிப்படை புவிசார் உள்கட்டமைப்பு மற்றும் தரவுகளை உருவாக்க தேசிய புவிசார் இயக்கத் திட்டத்தை தொடங்க பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. பிரதமர் விரைவு சக்தியைப் பயன்படுத்தி, இந்தத் திட்டம் மூலம் நிலப் பதிவுகளை நவீனமயமாக்குதல், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை வடிவமைத்தல் ஆகியவற்றை எளிதாக்கப்படும்.

 

நகர்ப்புற ஏழைகள் மற்றும் நலிந்த சுயஉதவிக் குழுக்களுக்கு உதவி செய்வதில் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். நகர்ப்புற தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், நிலையான வாழ்வாதாரத்தைப் வழங்கவும், சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

நவீன யுக சேவைப் பொருளாதாரத்திற்கு ஆன்லைன் செயலிகள் மூலம் பணியாற்றும் உணவுப்பொருள் விநியோக தொழிலாளர்கள் பெரும் உத்வேகத்தை வழங்குவதாகவும். அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து மத்திய அரசு ஆன்லைன் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் இ-ஷ்ரம் இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் அந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் 1 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 லட்சத்திற்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளை அதிக வட்டி கடன்களிலிருந்து பிரதமரின் ஸ்வநிதி திட்டம் விடுவித்துள்ளது என்று நிதியமைச்சர் எடுத்துரைத்தார். இந்த வெற்றியின் அடிப்படையில், இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட வங்கி கடன் வரம்பு ரூ. 30,000 அடிப்படையில் UPI இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடுத்தர வருமானம் பெறுவோருக்கான மலிவு விலை வீட்டுவசதி திட்டத்தின் கீழ, ஐம்பதாயிரம் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் மேலும் நாற்பதாயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வாங்கிய கடன்களுக்கு தவணைத்தொகை செலுத்தி வந்த நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கான  இரண்டாம் கட்ட நிதி, அரசு வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஒரு கலப்பு நிதியாக விரிவுப்படுத்தப்படும் என்றும் ரூ. 15,000 கோடி மதிப்புள்ள இந்த நிதி, மேலும் 1 லட்சம் வீடுகளை விரைவாக கட்டி முடிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098385

***

PKV /GK /RJ/KR


(Release ID: 2098603) Visitor Counter : 19