இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2025 7:10PM by PIB Chennai
76-வது குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக தேர்வு செய்யப்பட்டு, அதைக் காண அழைக்கப்பட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (26.01.2025) கலந்துரையாடினார். இந்தியாவின் பொது சேவை ஒலிபரப்பு வானொலிப் பிரிவான ஆகாஷ்வாணி அவர்களை புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வாணி பவனில் உள்ள அதன் அலுவலகத்திற்கு அழைத்தது.
ஆகாஷ்வாணி மாற்றத்தின் பாடப்படாத நாயகர்களைக் கொண்டாடுகிறது:
மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் கொண்டாடப்பட்டு சிறப்பிக்கப்படும் தனிநபர்களின் வெற்றிக் கதைகள், முயற்சிகள், அவர்களின் கடின உழைப்பை தெரியப்படுத்துவதில் ஆகாஷ்வாணி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த எழுச்சியூட்டும் அனிபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், சமூகத்திற்கு இந்த நபர்களின் நேர்மறையான தாக்கத்தையும் அர்த்தமுள்ள பங்களிப்புகளையும் வெளிப்படுத்தும் ஒரு மையத் தூணாக ஆகாஷ்வாணி மாறியுள்ளது.
பிரதமரின் சிறப்பு அழைப்பின் பேரில், குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்ட தனிநபர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், குடியரசு தின அணிவகுப்பைக் காண அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆகாஷ்வாணியில் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த நபர்களைப் பற்றி பிரதமர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மாற்றத்தின் எழுச்சியூட்டும் அனுபவங்கள்:
நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், "மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு தனிநபர்களின் பங்களிப்புகளை எடுத்துரைத்து, அவர்களின் முயற்சிகளை உலகிற்கு எடுத்துக்காட்டியது உண்மையிலேயே அற்புதமானது. இந்த நபர்கள் இந்த நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் பணி இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க முக்கியமான நிகழ்வில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.
பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்த இந்த அழைப்பாளர்கள், தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ளவும், லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கவும் வாய்ப்பளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் மனதின் குரல் நிகழ்ச்சிக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த முயற்சியின் மூலம் சமூகத்தின் நலனுக்காக உலகம் முழுவதும் செய்யப்படும் நேர்மறையான, அர்த்தமுள்ள பணிகளைப் பிரதமர் கொண்டாடியுள்ளார். இத்தகைய எழுச்சியூட்டும் முயற்சிகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க தளமாக செயல்படுகிறது. பிரதமருக்கும், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அழைப்பாளர்கள் அனைவருக்கும் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்தார்.
மனதின் குரல்:
மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியிருக்கிறது. சமூகத்திற்கு சாதாரண மக்கள் அசாதாரணமான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக, மனதின் குரல் கல்வி, சுற்றுச்சூழல், சமூக நலன், புதுமை போன்ற துறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்தவர்களின் குரல்களை ஒலிக்கச் செய்து வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்த தனித்துவமான நிகழ்ச்சி ஒரு வலுவான, உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட முயற்சிகளின் சக்தியை எடுத்துக் காட்டுகிறது.
***
PLM/KV