கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கூட்டுறவு மாநாட்டில் உரையாற்றி, கூட்டுறவு தொடர்பான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்

'கூட்டுறவுகள்' விவசாயிகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், வளமானவர்களாகவும் மாற்றுவதற்கான சக்திவாய்ந்த வழியாகும்- திரு அமித் ஷா

Posted On: 24 JAN 2025 6:49PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, விவசாயம் லாபகரமானதல்ல என்று கருதப்பட்டாலும், கூட்டுறவு இயக்கத்தை அறிவியல் முன்னேற்றங்களுடன் இணைப்பதன் மூலம் விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்ற முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாக  குறிப்பிட்டார்.

விவசாயிகள் முன்பு, பாரம்பரிய முறைகளை நம்பியிருந்ததாகவும், தங்கள் மண்ணின் குறிப்பிட்ட ஊட்டச்சத்து கலவை பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார். நாசிக்கில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன மண் பரிசோதனை ஆய்வகத்தின் நன்மைகளை திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற வேண்டும் என்று கூறிய திரு அமித் ஷா, தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இயற்கை விளைபொருள் சான்றிதழைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய கூட்டுறவு இயற்கை விவசாய நிறுவனம் (என்சிஓஎல்), சான்றளிக்கப்பட்ட இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பன்னாட்டு அமைப்பு சான்றளிக்கப்பட்ட அனைத்து கரிம விளைபொருட்களையும் விவசாயிகளிடமிருந்து வாங்கி, சந்தையில் விற்பனை செய்து, லாபம் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.

கூட்டுறவின் மூலம் வளம் என்ற முழக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், இந்த தொலைநோக்குப் பார்வையை  நனவாக்கும் பொறுப்பு கூட்டுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இயற்கை வேளாண் பொருட்களின் பேக்கேஜிங், சந்தைப்படுத்தல், பிராண்டிங் ஆகியவற்றுக்காக மூன்று புதிய பன் மாநில கூட்டுறவு நிறுவனங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். கூட்டுறவு அமைப்புகள் விவசாயிகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், வளமானவர்களாகவும் மாற்றுவதற்கான சக்திவாய்ந்த வழியாகும் என்று மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2095948) Visitor Counter : 25