பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியின் 118-வது அத்தியாயத்தில், 19.01.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 JAN 2025 11:46AM by PIB Chennai

 

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று 2025ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல்.  நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள்.  ஒருஒரு முறையும் மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும், ஆனால் இந்த முறை, நாம் ஒரு வாரம் முன்னதாகவே, நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றோம்.  ஏனென்றால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நமது குடியரசுத் தினமாகும்.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான முதன்மையான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே, இந்த முறை வரும் குடியரசுத் திருநாள் மிகவும் விசேஷமானதாகும்.   இது பாரதநாட்டுக் குடியரசின் 75ஆவது ஆண்டாகும்.  இந்த ஆண்டு தான் நமது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவெய்துகின்றன.  நான் அரசியல் நிர்ணய சபையின் அனைத்து மாபெரும் ஆளுமைகளுக்கும் என் சிரம்தாழ்த்திய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்; இவர்கள் தாம் நமது பவித்திரமான அரசியல் சாஸனத்தை நமக்களித்தார்கள்.  அரசியல் நிர்ணய சபை கூடிய காலத்தில் பல விஷயங்கள் குறித்து நீண்டநெடிய விவாதங்கள் நடைபெற்றன.  அந்த விவாதங்கள், அரசியல் நிர்ணய சபையின் இருந்த அங்கத்தினர்களின் சிந்தனை, அவர்களின் குரல் ஆகியன நமக்கெல்லாம் மிகப்பெரிய மரபுச் சின்னங்கள்.  இன்று மனதின் குரலில், அவர்களின் சில மகத்தான தலைவர்களின் குரல்பதிவுகளை உங்களுக்குக் கேட்க அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. 

 

நண்பர்களே அரசியல் நிர்ணய சபை தனது பணியைத் தொடங்கிய வேளையில், பாபாசாகேப் ஆம்பேட்கர் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைக் கூறினார்.  அவருடைய உரை ஆங்கிலத்தில் இருக்கிறது.  அதன் ஒரு பகுதியை ஒலிக்கச் செய்கிறேன். 

          

“So far as the ultimate goal is concerned, I think none of us need have any apprehensions. None of us need have any doubt, but my fear which I must express clearly is this, our difficulty as I said is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mass that we have today, take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity. Our difficulty is not with regard to the ultimate; our difficulty is with regard to the beginning.”

 

”நாம் அடைய வேண்டிய நிறைவான இலக்கைப் பொறுத்த மட்டில், நம்மில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இருக்கத் தேவையில்லை.  யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க வேண்டாம், ஆனால் என்னுடைய அச்சமெல்லாம் நிறைவான எதிர்காலம் பற்றியதல்ல என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன்.  இன்று நம்தேசத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களையும், ஒரு தீர்மானத்தோடு, ஒற்றுமையை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய ஒத்துழைப்பு நிறைந்த பாதையில் பயணிப்பதில் தான் சிரமமே இருக்கிறது.  நிறைவு குறித்து எந்தச் சங்கடமும் கிடையாது, தொடக்கம் குறித்தே நமக்கிருக்கும் சங்கடம்”

 

நண்பர்களே, அரசியல் நிர்ணய சபை ஒன்றுபட்டு, ஒருமித்த குரலில், ஒருங்கிணைந்த கருத்தோடு, அனைவருக்குமான நலன் மீது பணியாற்றுவது குறித்துத் தான் பாபாசாகேப் அழுத்தமளித்து வந்தார்.  நான் உங்களனைவருக்கும் அரசியல் சட்டசபையின் மேலும் ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்கச் செய்கிறேன்.  இந்த ஒலிக்குறிப்பு டாக்டர். ராஜேந்திர பிரஸாத் அவர்களுடையது, இவர் நமது அரசியலமைப்புச் சபையின் தலைவராக இருந்தார்.  வாருங்கள், டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள் குரலை செவிமடுப்போம்.

 

”இயல்பிலேயே அமைதிப்பிரியர்களான நாம் அவ்வாறே இருந்து வந்தோம் என்பதையே நமது கலாச்சாரமும் நமது வரலாறும் நமக்கு என்ன கற்பிக்கின்றன.  நமது சாம்ராஜ்ஜியமும் நமது வெற்றியும் வேறுவகையானவை.  நாம் மற்றவர்களை அடிமைத்தளைகளில், அது இரும்பாலானதாகட்டும், பொன்னாலானவையாகட்டும், எப்போதும் யாரையும் தளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது இல்லை.  நாம் மற்றவர்களை நம்மோடு கூடவே, இரும்புத் தளைகளால் அல்ல, அவற்றைவிட அதிக உறுதியான, ஆனால் அழகான-சுகமான பட்டு இழைகளால் இறுக்கியிருந்தோம், அந்த பந்தத்தின் பெயர் தர்மம், கலாச்சாரம், ஞானம்.  நாம் இப்போதும் கூட அதே பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.  மேலும் நமது ஒரே நாட்டம், ஒரே விருப்பம் என்றால், உலகில் சுகத்தையும் அமைதியையும் நிலைநிறுத்துவதற்கு உதவிபுரிய முடிய வேண்டும், இன்று நமக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்து இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் வாய்மை, அகிம்சை என்ற பலமான ஆயுதங்களை உலகின் கரங்களில் அளிக்க முடிய வேண்டும் என்பது தான்.  நம்முடைய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் இருக்கும் உள்ளார்ந்த சக்தி தான் காலம் அளித்த வலிகளையெல்லாம் தாண்டி, வாழும் சக்தியை நமக்கு அளித்து நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.  நாம் நமது ஆதர்சங்களை முன்வைத்து வாழ்வோமேயானால், நம்மால் உலகிற்குப் பெரும்சேவையாற்ற முடியும்.”

 

நண்பர்களே, டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள் மனித விழுமியங்களின்பால் தேசத்தின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்துப் பேசியிருந்தார்.  இப்போது நான் உங்களுக்கு டாக்டர் ஷ்யாமா பிரஸாத் முகர்ஜி அவர்களின் குரல்பதிவை ஒலிக்கச் செய்கிறேன்.  வாய்ப்புகள் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்பது குறித்து அவர் உரையாற்றினார்.  டாக்டர் ஷ்யாமா பிரஸாத் முகர்ஜி அவர்கள் கூறினார் -

    

I hope sir that we shall go ahead with our work in spite of all difficulties and thereby help to create that great India which will be the motherland of not this community or that, not this class or that, but of every person, man, woman and child inhabiting in this great land irrespective of race, caste, creed or community. Everyone will have an equal opportunity, so that he or she can develop himself or herself according to best talent and serve the great common motherland of India.”

 

”அனைத்து இடர்களையும் தாண்டி நம்மால் நமது பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஐயா.  இதன் வாயிலாக குறிப்பிட்ட சமூகத்திற்கோ, அல்லது பிரிவினருக்கோ உரித்தான தாய்நாடு என்று இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்கும், ஓவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் சொந்தமான, இனம், சாதி, பிரிவு, சமுதாயம் என்ற பேதங்களை எல்லாம் தாண்டிய, மகத்தானதொரு இந்தியாவை நாம் உருவாக்குவோம்.  தங்களுடைய சிறப்பான திறன்கள்-திறமைகளுக்கு உட்பட்டு, அனைவருக்கும் பொதுவான மகத்தான தாய்நாடான தாய்த்திருநாட்டிற்குச் சேவையாற்றும் வகையில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.”

 

நண்பர்களே, அரசியல் சட்டசபையின் விவாதங்களின் இந்த மூலமான ஒலிக்குறிப்புகளைக் கேட்டு நன்றாக உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.  இந்தக் கருத்துக்களால் உத்வேகமடைந்து நாட்டுமக்கள், நமது அரசியலமைப்புச் சட்டப் பிதாமகர்களும் பெருமிதப்படும் வகையிலானதொரு பாரதநாட்டை அமைக்கச் செயலாற்ற வேண்டும்.

 

நண்பர்களே, குடியரசுத் திருநாளுக்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 25ஆம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம்.  இந்த நாள் ஏன் முக்கியமானது என்றால், இந்த நாளன்று தான் இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது…… Election Commission.  நமது அரசியலமைப்புச்சட்ட நிறுவனர்கள், அரசியலமைப்புச்சட்டத்திலே நமது தேர்தல் ஆணையத்திற்கு, மக்களாட்சியில் மக்களின் பங்களிப்பிற்கான மிகப்பெரிய இடத்தை அளித்திருக்கிறார்கள்.  தேசத்தில் 1951-52ஆம் ஆண்டில் முதன்முறையாகத் தேர்தல்கள் நடைபெற்ற போது, தேசத்திலே மக்களாட்சி உயிர்த்திருக்குமா என்று சிலருக்கு ஐயப்பாடுகள் இருந்தன.  ஆனால் நமது மக்களாட்சியானது அனைத்து ஐயப்பாடுகளையும் தவறானவை என நிரூபித்திருக்கிறது.  ஐயம் திரிபற பாரதம் அல்லவா ஜனநாயகத்தின் தாயகம், Mother of Democracy!!  கடந்த பல பத்தாண்டுகளில் கூட தேசத்தின் ஜனநாயகம் பலமடைந்திருக்கிறது, நிறைவானதாக ஆகி இருக்கிறது.  அவ்வப்போது நமது வாக்களிப்புச் செயல்பாட்டை நவீனப்படுத்தி, பலப்படுத்தியும் இருப்பதற்காக, தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  ஆணையமானது மக்கள் சக்திக்கு மேலும் சக்தியளிக்க வேண்டி, தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தியது.  பாரபட்சமற்ற தேர்தல்களை நடத்துவதில் ஆணையத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதிக எண்ணிக்கையில் நீங்கள் உங்கள் வாக்குகளின் உரிமையைப் பயன்படுத்துங்கள், எப்போதும் செய்யுங்கள், தேசத்தின் ஜனநாயகச் செயல்முறையின் அங்கமாகவும் ஆகுங்கள், இந்தச் செயல்பாட்டிற்கு மேலும் வலுகூட்டுங்கள் என்று நாட்டுமக்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, பிரயாக்ராஜில் மகாகும்பமேளா தொடங்கி விட்டது.  தலைவணங்க வேண்டிய மக்கள் வெள்ளம், கற்பனைக்கெட்டா காட்சிகள், சமத்துவம்-சகோதரத்துவத்தின் அசாதாரணமான சங்கமம்.  இந்த முறை கும்பமேளாவில் பல திவ்வியமான இணைவுகளும் அரங்கேறுகின்றன.  கும்பமேளாவின் இந்த உற்சவம், பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது.  சங்கம பூமியிலே அனைத்து பாரத மக்களும், அனைத்துலக மக்களும் ஒன்று திரண்டிருக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பாரம்பரியத்தில், எங்கேயும், எதிலேயும் எந்த வேறுபாடும் இல்லை, சாதிவாதம் இல்லை.  இதிலே பாரதநாட்டின் தென்பகுதி மக்களும் வருகிறார்கள், கிழக்கு பாரதீயர்களாகட்டும், மேற்கு பாரதீயர்களாகட்டும் வருகிறார்கள்.  கும்பத்திலே ஏழை-பணக்காரர்கள் என அனைவரும் இணைகிறார்கள்.  அனைவரும் சங்கமத்தில் சங்கமித்து புனித நீராடுகிறார்கள், ஒன்றுபட்டு அனைவருக்குமான உணவை உண்கிறார்கள், பிரசாதங்களை ஏற்கிறார்கள், ஆகையால் தான் கும்பம் என்பது ஒற்றுமையின் மகாகும்பமாக இருக்கிறது!  பாரதநாடு முழுமையையும் பாரம்பரியங்கள் எப்படி ஓரிழையில் இணைக்கின்றன என்பதை கும்பத்திற்கான ஏற்பாடுகள் நமக்கெல்லாம் உணர்த்துகின்றன.  வடக்கு முதல் தெற்கு வரை நம்பிக்கைகளைச் செயல்படுத்தும் வழிமுறைகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன.  ஒருபுறம் பிரயாக்ராஜ், உஜ்ஜையின், நாசிக் மற்றும் ஹரித்வாரில் கும்பமேளாவின் ஏற்பாடுகள் நடக்கும் வேளையில், மற்றோர் புறத்திலே, தென்னாட்டிலே, கோதாவரி, கிருஷ்ணை, நர்மதை மற்றும் காவிரி நதிகளின் கரைகளிலே புஷ்கரம் நடக்கின்றன.  இந்த இரு புனித தருணங்களும் நமது பவித்திரமான நதிகளோடு, மக்களின் நம்பிக்கைகளோடு இணைந்திருக்கின்றன.  இதைப் போலவே கும்பகோணம் தொடங்கி திருக்கடையூர், குடவாசல் தொடங்கி திருச்சேறை வரை இருக்கும் பல ஆலயங்களின் பாரம்பரியங்கள் கும்பத்தோடு தொடர்புடையனவாக இருக்கின்றன.

 

நண்பர்களே, இந்த முறை கும்பமேளாவிலே இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் பரவலாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இளைய தலைமுறையினர் தங்களுடைய பண்பாட்டோடு, பெருமையுணர்வோடு இணையும் போது, அதன் வேர்கள் மேலும் பலமடைகின்றன, அதன் எதிர்காலம் மேலும் பிரகாசமானதாக ஆகிறது என்பது நாம் உணர வேண்டிய மேலும் ஒரு உண்மை.  இந்த முறை கும்பத்தின் டிஜிட்டல் காலடித்தடங்களையும் பெரிய அளவிலே நம்மால் காண முடிகிறது.   உலகளாவிய அளவில் மக்களுக்கு கும்பத்தின் மீதிருக்கும் பெருவிருப்பம் பாரதநாட்டவர் அனைவருக்கும் பெருமைதரும் விஷயம்.

 

நண்பர்களே, சில நாட்கள் முன்பு, மேற்கு வங்கத்தில் கங்காசாகர் திருவிழா பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.  சங்கராந்தியின் புனிதமான தருணத்தில் இந்த திருவிழாவில் உலகனைத்திலிருந்தும் வந்த இலட்சோபலட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள்.  கும்பம், புஷ்கரம், கங்கா சாகர மேளாக்கள் – நமது இந்தப் புனிதக்காலங்கள், நமது சமூக சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேலும் வளர்ப்பவை.  இந்தப்  புனிதக்காலங்கள் பாரத நாட்டவரின், பாரத நாட்டின் பாரம்பரியங்களோடு இணைந்தவை, நமது சாத்திரங்களும் கூட உலகிலே அறம், பொருள் இன்பம், வீடு என்ற நான்கிற்கும் முக்கியத்துவம் அளித்திருக்கின்றன.  இதைப் போலவே நமது புனிதக்காலங்களும், பாரம்பம்பரியங்களும் கூட ஆன்மீகம், சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்து விஷயங்களுக்கும் சக்தியூட்டுகின்றன.

 

நண்பர்களே, இந்த மாதம் நாம் ’பௌஷ சுக்ல துவாதஸி’ தினத்தன்று, பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் பிராண பிரதிஷ்டை புனித நாளின் ஓராண்டு நிறைவையும் கொண்டாடினோம்.  இந்த ஆண்டு ‘பௌஷ சுக்ல துவாதசி’ ஜனவரி மாதம் 11ஆம் தேதியன்று வந்தது.  இந்த நாளன்று இலட்சோபலட்சம் இராமபக்தர்கள், அயோத்தியிலே ராம்லலாவின் தரிசனம் பெற்று, அவருடைய நல்லாசிகளுக்குப் பாத்திரர்களானார்கள்.  பிராண பிரதிஷ்டை நடந்த இந்த துவாதசி, பாரதநாட்டின் கலாச்சார ஆன்மாவின் மீள்பிரதிஷ்டை நடந்தேறிய துவாதசியாகும்.  ஆகையால் பௌஷ சுக்ல துவாதசி ஒருவகையில் பிரதிஷ்டை துவாதசி தினமாகவும் ஆகிவிட்டது.  நாம் வளர்ச்சிப்பாதையில் செல்லும் அதே வேளையில், நமது மரபுகளையும் பேணிவர வேண்டும், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்று முன்னேறிச் செல்ல வேண்டும். 

 

என் பிரியமான நாட்டுமக்களே, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, விண்வெளித்துறையில் பல சரித்திரச் சாதனைகளை பாரதம் ஈட்டியிருக்கிறது.   பாரதநாட்டு விண்வெளித்துறை ஸ்டார்ட் அப்பான பெங்களூரூவில் இருக்கும் பிக்ஸல், பாரதநாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் கூட்டமான Firefly-ஃபயர்ஃப்ளையினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது என்பதை இன்று நான் பெருமைபொங்கத் தெரிவிக்கிறேன்.  இந்த செயற்கைக்கோள் கூட்டம், பூமியிலிருக்கும் பொருள்களின் ரசாயனக் கட்டுமானத்தை அறியக்கூடியது.  உலகின் மிக அதிக பிரிதிறனுடைய உயர்ரக நிறமாலைத் திறன் கொண்ட செயற்கைக்கோள் கூட்டம் – High Resolution Hyper Spectral Satellite Constellation இதுவாகும்.  இந்தச் சாதனை, பாரதநாட்டை நவீன விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதன்மையானதாக ஆக்கியிருப்பதோடு, இது தற்சார்பு பாரதம் என்ற திசையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகப்பெரிய அடியெடுப்பாகும்.  இந்த வெற்றி நமது தனியார் விண்வெளித்துறையின் பெருகிவரும் வல்லமை மற்றும் நூதனத்துவத்தின் எடுத்துக்காட்டாகும்.  இந்தச் சாதனைகளுக்காக நான் பிக்ஸலின் குழுவினர், இஸ்ரோ மற்றும் இன் – ஸ்பேஸ் அமைப்புக்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாகப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக நமது விஞ்ஞானிகள், விண்வெளித்துறையில் மேலும் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினார்கள்.  நமது விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைப்புச் செய்தார்கள்.  விண்வெளியிலே இரண்டு விண்கோள்கள் இணைக்கப்படும் செயல்பாட்டைத் தான் விண்வெளியில் இணைப்பு – Space Docking என்று அழைக்கிறார்கள்.  இந்தத் தொழில்நுட்பம், விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையம் வரை பொருட்களை அனுப்பவும், குழுப்பயணத்திற்கும் மிக முக்கியமானது.  பாரதம் இப்படிச் செய்யக்கூடிய நான்காவது நாடாக ஆகியிருக்கிறது, இதிலே நமக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

 

நண்பர்களே, நமது விஞ்ஞானிகள் விண்வெளியிலே செடி வளர்த்து, அவற்றை உயிர்ப்போடு இருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதற்காக இஸ்ரோவின் விஞ்ஞானிகள், காராமணி விதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.    டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று அனுப்பப்பட்ட விதைகள் விண்வெளியிலே முளைவிட்டிருக்கின்றன.  இது மிகவும் உத்வேகம் அளிக்கவல்ல ஒரு பரிசோதனையாகும்.  எதிர்காலத்தில் விண்வெளியிலே காய்கறிகளை பயிர்செய்யும் பாதையும் திறக்கும்.  நமது அறிவியலார்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பதை நமக்கு இது எடுத்துக் காட்டுகிறது.

 

நண்பர்களே, நான் உங்களோடு மேலும் உத்வேகம் தரவல்ல ஒரு முயற்சி பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.  ஐஐடி மதராஸின் எக்ஸ்டெம் மையம், விண்வெளியில் தயாரிப்பில் ஈடுபட புதிய உத்திகளின் மீது பணியாற்றி வருகிறது.  இந்த மையம், விண்வெளியில் முப்பரிமாண அச்சிடப்பட்ட கட்டடங்கள், உலோக நுரைகள் – metal foamகள் மற்றும் கண்ணாடி ஒளியிழைகள்-optical fiberகள் போன்ற உத்திகளின் மீது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.  இந்த மையம், நீரில்லாமல் கான்க்ரீட் கட்டுமானங்கள் போன்ற புரட்சிகரமான செயல்களையும் மேம்படுத்தி வருகிறது.  எக்ஸ்டெம்மின் இந்த ஆய்வு, பாரதநாட்டின் ககன்யான் மிஷன் மற்றும் எதிர்கால விண்வெளி நிலையங்களுக்கு வலுசேர்க்கும்.  இதன் வாயிலாக தயாரிப்புத் துறையில் நவீன தொழில்நுட்பத்திற்கான பாதையும் துலக்கப்படும். 

 

நண்பர்களே, இந்தச் சாதனைகள் அனைத்தும், பாரதநாட்டின் விஞ்ஞானிகளும், நூதனங்களைப் படைப்போரும் எதிர்காலச் சவால்களுக்குத் தீர்வுகளை அளிக்கவல்ல தொலைநோக்காளர்கள் என்பதற்குச் சான்று பகர்கின்றன.  நமது தேசம் இன்று விண்வெளித் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கற்களை நிறுவி வருகின்றது.  நான் நமது நாட்டின் விஞ்ஞானிகள், புதுமைகளின் கண்டுபிடிப்பாளர்கள், இளவயது தொழில்முனைவோர் ஆகியோருக்கும் தேசத்தின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

என் கனிவான நாட்டுமக்களே, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே அலாதியான நட்பு குறித்த படங்களை நீங்கள் பல வேளைகளில் பார்த்திருக்கலாம், விலங்குகளின் விசுவாசம் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கலாம்.   செல்லப் பிராணிகளாகட்டும், வன விலங்குகளாகட்டும், மனிதர்களுடனான அவற்றின் உறவு பலவேளைகளில் திக்குமுக்காட வைக்கிறது.  விலங்குகளால் பேச முடியாமல் இருக்கலாம் ஆனால், உணர்வுகளை, அவற்றின் வெளிப்பாடுகளை மனிதனால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.  விலங்குகளும் அன்பின் மொழியைப் புரிந்து கொள்கின்றன, அதற்கேற்ப நடந்து கொள்கின்றன.   இந்தத் தருணத்தில் அசாமின் ஒரு எடுத்துக்காட்டை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அசாமின் ஒரு இடமான நௌகான்வில் நமது தேசத்தின் மாபெரும் ஆளுமையான ஸ்ரீமந்த் சங்கரதேவர் பிறந்தார்.  இந்த இடம் மிகவும் அழகானது.  இங்கே யானைகளின் மிகப்பெரிய தங்குமிடம் ஒன்று உண்டு.  யானைகளின் கூட்டம் பயிர்களை நாசம் செய்வதும், இதனால் விவசாயிகள் உளைச்சலுக்கு உள்ளாவதுமான பல சம்பவங்கள் இந்தப் பகுதியில் நடந்து வந்தன.  இதன் காரணமாக அக்கம்பக்கத்தில் இருக்கும் சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளானாலும், யானைகளின் உளைச்சலையும் இவர்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்.  யானைகள் தங்கள் பசியாற்றிக் கொள்ளும் வகையில் பயிர்களை நாசம் செய்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும்.  ஆகையால் கிராமவாசிகள் இதற்கான தீர்வினை ஏற்படுத்த, ஹாதி பந்து, அதாவது யானைகளின் நண்பன் என்ற குழு ஒன்றை உருவாக்கினார்கள்.  இந்த யானைகளின் நண்பர்கள் மிகுந்த புரிதலோடு செயல்பட்டு, சுமார் 800 பீகா அளவுகொண்ட வறண்ட பூமியில் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்கள்.  கிராமவாசிகள் அனைவரும் இணைந்து நேபியர் ரகப்புல்லை நட்டார்கள். இந்தப் புல்வகை யானைகளுக்கு மிகவும் பிடித்தமானது.  யானைகள் பயிர்களை அண்டுவது குறைந்து போனது தான் இதனால் ஏற்பட்ட விளைவு.  இது ஆயிரக்கணக்கான கிராமவாசிகளுக்குப் பெரிய நிம்மதியை அளித்தது.  அவர்களின் இந்த முயற்சி யானைகளுக்கு மிகவும் பிடித்துப் போனது. 

 

நண்பர்களே, நமது கலாச்சாரம் மற்றும் மரபு, அக்கம்பக்கத்தில் இருக்கும் விலங்குகள்-பறவைகளோடு அன்போடு வசிப்பதையே கற்பிக்கின்றன.  நம்மனைவருக்கும் மிகவும் சந்தோஷம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த இரு மாதங்களில் நமது தேசத்தில் இரண்டு புதிய புலிகள் சரணாலயங்கள் இணைந்திருக்கின்றன.  இவற்றில் ஒன்று சத்திஸ்கட்டின் குரு காஸீதாஸ்-தமோர் பிங்களா புலிகள் சரணாலயம்;   இரண்டாவது மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் ராதாபானி புலிகள் சரணாலயம்.

 

என் இதயம் கனிந்த நாட்டுமக்களே, எந்த மனிதனிடம் தனது கருத்தின் மீது மிகுந்த தீவிரமான உறுதி இருக்கிறதோ, அவர் தனது இலட்சியத்தை கண்டிப்பாக அடைவார் என்று ஸ்வாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார்.  எந்த ஒரு எண்ணத்தையும் வெற்றியடையச் செய்ய நமது பேரார்வமும், முனைப்பும் மிகவும் முக்கியமான கூறுகளாகும்.  முழு ஈடுபாட்டோடும், உற்சாகத்தோடும் மட்டுமே புதுமைகள் படைத்தல், படைப்பாற்றல் மற்றும் வெற்றிக்கான பாதை கண்டிப்பாகத் திறக்கும்.  சில நாட்கள் முன்பாக,  ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாளன்று, வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்களின் விவாதத்தில் பங்கு பெறும் பேறு எனக்குக் கிடைத்தது.  இங்கே தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் வந்திருந்த இளைய நண்பர்களோடு என்னுடைய நாளனைத்தையும் கழித்தேன்.  ஸ்டார்ட் அப்புகள், கலாச்சாரம், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கட்டமைப்பு போன்ற பல துறைகள் தொடர்பாக இளைஞர்கள் தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.   நினைவில் கொள்ளத்தக்க நிகழ்ச்சியாக இது எனக்கு இருந்தது.

 

நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் ஸ்டார்ட் அப் இண்டியாவின் 9 ஆண்டுகள் நிறைவேறின.  நமது தேசத்தின் கடந்த 9 ஆண்டுகளில் உருவான ஸ்டார்ட் அப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவை.  இது அனைத்து இந்தியர்களுக்கும் இனிப்பான செய்தி.  அதாவது நமது ஸ்டார்ட் அப் கலாச்சாரம் பெரிய நகரங்களோடு தங்கிப் போய் விடவில்லை.  சின்னச்சின்ன நகரங்களின் ஸ்டார்ட் அப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றிற்குத் தலைமை தாங்குபவர்கள் பெண்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  அம்பாலா, ஹிஸார், காங்க்டா, செங்கல்பட்டு, பிலாஸ்புர், க்வாலியர் மற்றும் வாஷிம் போன்ற நகரங்கள், ஸ்டார்ட் அப்புகளின் மையங்களாக ஆகி வருகின்றன எனும் போது மனதில் ஆனந்தம் கரைபுரண்டோடுகிறது.  நாகாலாந்து போன்ற மாநிலங்களில், கடந்த ஆண்டு ஸ்டார்ட் அப்புகளின் பதிவு 200 சதவீதத்திற்கும் அதிகமாக ஆகியிருக்கிறது.  கழிவுப்பொருள் மேலாண்மை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி, உயிரித்தொழில்நுட்பம் மற்றும் ஏற்பாட்டியல் போன்ற துறைகளோடு தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகள் தாம் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.  இவை வாடிக்கையான துறைகள் அல்ல என்றாலும், நமது இளைய நண்பர்களும் கூட வாடிக்கையைத் தாண்டிய சிந்தனை கொண்டவர்கள் இல்லையா?   ஆகையால் அவர்களுக்கு வெற்றி கிடைத்து வருகிறது.

 

நண்பர்களே, பத்தாண்டுகள் முன்பாக யாராவது ஸ்டார்ட் அப் துறையில் நுழைய முற்பட்டால், அவர் வகைவகையான நையாண்டிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  இந்த ஸ்டார்ட் அப் என்றால் என்ன என்று ஒருவர் கேட்பார், இன்னொருவரோ இதனால் என்ன ஆகிவிடும் என்பார்.  ஆனால் இப்போது பாருங்கள், ஒரே தசாப்தத்திலே, எத்தனைபெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  நீங்களும் பாரதநாட்டில் உருவாக்கம் பெற்றுவரும் புதிய சந்தர்ப்பங்களால் முழுமையாகப் பயனடையுங்கள்.  நீங்கள் உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தீர்கள் என்றால், உங்களுடைய கனவுகளுக்குப் புதிய இறக்கைகள் முளைக்கும்.

 

என் இதயம்நிறை நாட்டுமக்களே, நேரிய நோக்கத்தோடும், சுயநலமற்ற உணர்வோடும் புரியப்படும் செயல்களைப் பற்றி நெடுந்தொலைவுகளிலும் பேசப்படுகிறது.  நமது மனதின் குரலே கூட இதற்கான மிகப்பெரிய தளமாகும்.  நமது இத்தனை விசாலமான தேசத்திலே, தொலைவான இடங்களிலும் கூட, யாரோ ஒருவர் நல்ல பணியை ஆற்றுகிறார், கடமையுணர்வை தலையாயதாகக் கொண்டு செயல்படுகிறார் என்றால், அவருடைய முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட இது மிகச்சிறப்பான மேடையாகும்.    அருணாச்சலப் பிரதேசத்தின் தீபக் நாபாம் அவர்கள், தனது சேவை வாயிலாக வித்தியாசமான எடுத்துக்காட்டை அளித்திருக்கிறார்.  தீபக் அவர்கள் இங்கே Living-Home அமைப்பை நடத்திவருகிறார்.  மனநோயாளிகள், உடல் பலவீனம் உடையவர்கள், வயதானோர் ஆகியோருக்கு இங்கே சேவை புரியப்படுகிறது.  இங்கே போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியவர்களும் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்.  தீபக் நாபாம் அவர்கள், எந்த ஒரு உதவியும் பெறாமல் சமூகத்திலிருக்கும் ஏழைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வீடில்லாதவர்கள் ஆகியோருக்குத் துணைபுரியும் இயக்கத்தைத் தொடக்கினார்.  இன்று இவருடைய சேவையானது, ஒரு அமைப்பாக வடிவெடுத்திருக்கிறது.  இவருடைய அமைப்புக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.  லட்சத்தீவுகளில் கவரத்தித் தீவில் செவிலியராகப் பணியாற்றும் கே. ஹின்டும்பி அவர்களின் சேவை மிகவும் உத்வேகம் அளிக்கவல்லது.  18 ஆண்டுகள் முன்பு, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், இன்றும் கூட அதே கருணை, அதே அன்போடு, அன்று போல் இன்றும் மக்களின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.  லட்சத்தீவுகளைச் சேர்ந்த கேஜீ முகம்மது அவர்களின் முயற்சியும் கூட அற்புதமானது.  இவருடைய உழைப்பின் காரணமாக, மினிகாய் தீவின் கடல்சார் சூழலமைப்பு பலப்பட்டு வருகிறது.  இவர் சுற்றுச்சூழல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல பாடல்களை எழுதி வருகிறார்.  இவருக்கு லட்சத்தீவுகளின் சாகித்ய கலா அகாடமி தரப்பிலிருந்து மிகச்சிறந்த நாட்டுப்புறப்பாடல் விருதும் கிடைத்திருக்கிறது.   கேஜி முகம்மது அவர்கள், ஓய்வு பெற்ற பிறகு அங்கே இருக்கும் அருங்காட்சியகத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறார்.

 

நண்பர்களே, மேலும் ஒரு பெரும் நற்செய்தி, அந்தமான் – நிக்கோபார் தீவுக்கூட்டத்திலிருந்து கிடைத்திருக்கிறது.  நிக்கோபார் மாவட்ட த்தில் தூய்மையான தேங்காய் எண்ணெய்க்குத் தற்போது தான் ஜிஐ டேக் – புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.  தயாரிப்போடு தொடர்புடைய பெண்களோடு இந்த எண்ணெயை ஒருங்கிணைத்து, சுயவுதவிக் குழுவாக ஆக்கி வருகிறார்கள், இவர்களுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் துறைகளில் விசேஷப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.  நமது பழங்குடியினச் சமூகங்களுக்கு, பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கும் நோக்கில் இது பெரியதொரு அடியெடுப்பாகும்.  எதிர்காலத்தில் நிக்கோபாரின் தூய தேங்காய் எண்ணை, உலகெங்கிலும் கொடிகட்டிப் பறக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.  மேலும் இதிலே மிகப்பெரிய பங்களிப்பு அந்தமான் – நிக்கோபாரின் பெண்கள் சுயவுதவிக் குழுவினுடையதாக இருக்கும்.

 

எனதருமை நாட்டுமக்களே, ஒரு கணநேரம் நீங்கள் ஒரு காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்…… கோல்காதாவில் ஜனவரி மாத நேரம்.  இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கிறது, இங்கே பாரத நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சீற்றமும் உச்சத்தில் இருக்கிறது.  இதன் காரணமாக, நகரத்தின் அனைத்து இடங்களிலும் போலீசாரின் கண்காணிப்பு மும்முரமாக இருக்கிறது.  கோல்காத்தா நகரின் நடுவே ஒரு வீட்டின் அருகே போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது.  இதற்கிடையே, நீளமான ப்ரவுன் கோட்டும், முழுநீளக் கால்சட்டையும், கறுப்புத் தொப்பியும் அணிந்த ஒரு நபர் இரவின் இருளில், ஒரு பங்களாவிலிருந்து காரில் வெளியேறுகிறார்.  பலமான பாதுகாப்பு நிறைந்த பல காவல் தடுப்புகளைக் கடந்து அந்தக் கார், ஒரு ரயில் நிலையமான கோமோவை அடைகிறது.  இந்த நிலையம் இப்போது ஜார்க்கண்டில் இருக்கிறது.  இங்கிருந்து ரயிலில் ஏறி அவர் பயணிக்கிறார்.  இதன் பிறகு அஃப்கானிஸ்தானைக் கடந்து அவர் ஐரோப்பாவைச் சென்றடைகிறார்.  இவை அனைத்தும் ஆங்கிலேயர்களின் தீவிரமான கண்காணிப்பைத் தாண்டி அரங்கேறுகிறது. 

 

நண்பர்களே, இந்தக் கதை உங்களுக்கு ஏதோ திரைப்படக் காட்சியைப் போலத் தெரியலாம்.  இத்தனை தைரியத்தோடு செயல்பட்ட அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் எண்ணமிடலாம்.   உள்ளபடியே இந்த மனிதர் வேறு யாருமல்ல, நமது தேசத்தின் மாபெரும் ஆளுமையான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களே தான்.  ஜனவரி மாதம் 23ஆம் தேதியை அதாவது அவருடைய பிறந்த நாளை இப்போது நாம் பராக்ரம் திவஸ் என்ற வகையில் கொண்டாடுகிறோம்.   அவருடைய வீரத்தோடு தொடர்புடைய இந்தச் சம்பவத்திலும் பராக்கிரமத்தின் காட்சி நமக்குப் பளிச்சிடுகிறது.  எந்த வீட்டிலிருந்து ஆங்கிலேயர்களைத் திக்குமுக்காடச் செய்து தப்பிச் சென்றாரோ, அவருடைய அதே வீட்டிற்கு சில ஆண்டுகள் முன்பு நான் செல்ல நேர்ந்தது.  அவர் அப்போது பயன்படுத்திய அந்தக் கார் இப்போதும் இருக்கிறது.  அந்த அனுபவம் எனக்கு மிகவும் விசேஷமானது.  சுபாஷ் பாபு ஒரு தொலைநோக்காளர்.  சாகஸம் என்பது அவரது இயல்பிலேயே அமைந்திருந்தது.  இது மட்டுமல்ல, அவர் மிகத் திறமையான நிர்வாகியும் கூட. வெறும் 27 வயதில் அவர், கோல்காத்தா மாநகராட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார், அதன் பிறகு நகரத்தந்தைப் பொறுப்பையும் நிர்வகித்தார்.  ஒரு நிர்வாகி என்ற முறையிலேயும் கூட, அவர் பல பெரும்பணிகளை ஆற்றினார்.  குழந்தைகளுக்குப் பள்ளிகள், ஏழைக் குழந்தைகளுக்குப் பால் விநியோகம் மற்றும் தூய்மையோடு தொடர்புடைய அவருடைய முயற்சிகள் இன்றும்கூட நினைவில் கொள்ளப்படுகின்றன.  நேதாஜி சுபாஷ் அவர்களுக்கு வானொலியோடு நெருங்கிய உறவு இருந்து வந்தது.  அவர் ஆஸாத் ஹிந்த் ரேடியோவை நிறுவினார், இதைக் கேட்க மக்கள் மிகுந்த ஆவலோடு காத்திருப்பார்கள்.  அவருடைய அறைகூவல்களால், அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய சக்தி பிறந்தது.   ஆஸாத் ஹிந்த் ரேடியோவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், வங்காளி, மராட்டி, பஞ்சாபி, பஷ்தோ, உருது ஆகிய மொழிகளில் செய்தியறிக்கைகள் ஒலிபரப்பு செய்யப்பட்டன.   நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.  நாடெங்கிலும் இளைஞர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அவர்கள் சுபாஷ் பாபுவைப் பற்றி அதிக அளவில் படிக்க வேண்டும், அவருடைய வாழ்க்கையிலிருந்து தொடர்ந்து உத்வேகம் அடைந்து வர வேண்டும் என்பது தான்.

 

நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பதிவு, ஒவ்வொரு முறையும் தேசத்தின் சமூக முயற்சிகளோடு, உங்களனைவரின் சமூக விருப்பங்களோடு இணைக்கிறது.  ஓவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் உங்களுடைய ஆலோசனைகள், உங்களுடைய எண்ணங்கள்-கருத்துக்கள் எனக்குக் கிடைத்து வருகின்றன, ஒவ்வொரு முறையும் இவற்றைக் கண்டு, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டின் மீதான எனது நம்பிக்கை மேலும் வலுக்கிறது.  நீங்கள் அனைவரும் இதைப் போலவே அவரவருடைய பணிகளால் பாரதத்தை, மிக உயர்ந்ததாக ஆக்கத் தொடர்ந்து முயல வேண்டும்.   இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே.  அடுத்த மாதம் பாரதநாட்டவரின் சாதனைகள், உறுதிப்பாடுகள் மற்றும் வெற்றிகளின் புதிய கதைகளோடு மீண்டும் சந்திப்போம்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

*****

 


(Release ID: 2094241) Visitor Counter : 51