பிரதமர் அலுவலகம்
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
12 JAN 2025 7:08PM by PIB Chennai
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.
நண்பர்களே,
நீங்கள் பாரத் மண்டபத்தில் இருக்கிறீர்கள். காலச் சுழற்சியைப் பாருங்கள்! இந்த மண்டபத்தில் மகத்தான மனிதர்கள் கூடி உலகின் எதிர்காலம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதே மண்டபத்தில், நாட்டின் இளைஞர்கள், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரைபடத்தை உருவாக்குவது எனக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பாகும்.
நண்பர்களே,
சில மாதங்களுக்கு முன் நான் சில இளம் விளையாட்டு வீரர்களை எனது இல்லத்தில் சந்தித்தேன். நான் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு விளையாட்டு வீரர் எழுந்து நின்று, மோடி அவர்களே, உலகிற்கு நீங்கள் பிரதமராக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பிரதமர் என்றால் சிறந்த நண்பர் (பரம் மித்ரா) என்று கூறினார்.
நண்பர்களே,
என்னைப் பொறுத்தவரை, எனது நாட்டின் இளைஞர்களுடனான நட்புதான், உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நம்பிக்கைதான் மை யங் இந்தியாவை உருவாக்க எனக்கு உத்வேகம் அளித்தது. இந்த நம்பிக்கைதான் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு அடிப்படையாக அமைந்தது. எனது இந்த நம்பிக்கை, இந்திய இளைஞர்களின் சக்தி, இந்தியாவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்று கூறுகிறது.
நண்பர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், மனவுறுதி மூலம் சாதனை புரிந்த பல உதாரணங்களை நாம் கண்டிருக்கிறோம். திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் முடிவு செய்தோம். வெறும் 60 மாதங்களில் 60 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். ஒவ்வொரு குடும்பத்தையும் வங்கிக் கணக்குடன் இணைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இன்று, இந்தியாவில் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பமும் வங்கி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களின் சமையலறைகளை புகையிலிருந்து விடுவிக்க இந்தியா தீர்மானித்தது. 10 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியதன் மூலம் இந்த உறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
நண்பர்களே,
இன்று, பல துறைகளில், இந்தியா தனது இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே அடைந்து வருகிறது. கொரோனா காலத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், தடுப்பூசியைப் பற்றி உலகம் கவலைப்பட்டது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசியை முன்கூட்டியே தயாரித்தனர். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் ஆகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நாம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நடத்தி, சாதனை நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி அதனை நிரூபித்தோம். இன்று உலகமும் இந்தியாவின் வேகத்தை காண்கிறது.
பசுமை எரிசக்தி தொடர்பாக ஜி-20 உச்சிமாநாட்டில் நாம் பெரிய உறுதிப்பாட்டை மேற்கொண்டோம். பாரிஸ் உறுதிமொழியை நிறைவேற்றிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியது. அதுவும் திட்டமிடப்பட்ட காலத்திற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்? 9 ஆண்டுகளுக்கு முன். 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கையும் 2030-ம் ஆண்டுக்கு முன், ஒருவேளை மிக விரைவில் நாம் அடையலாம். இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியும், மனவுறுதியின் மூலம் நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு உதாரணமும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த வெற்றி வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நமது உறுதிப்பாட்டையும், இலக்கை நெருங்கும் வேகத்தையும் துரிதப்படுத்துகிறது.
நண்பர்களே,
இந்த வளர்ச்சிப் பயணத்தில், நாம் ஒரு விஷயத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அவற்றை அடைவதும் அரசு எந்திரத்தின் வேலை மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரிய இலக்குகளை அடைய, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைவது மிகவும் முக்கியம். இதற்காக, நாம் சிந்திக்க வேண்டும், திசையை முடிவு செய்ய வேண்டும். இன்று காலை உங்கள் விளக்கக்காட்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, இடையில் உரையாடிக் கொண்டிருந்த போது, இந்த ஒட்டுமொத்த செயல்முறையிலும் லட்சக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர் என்றால், வளர்ச்சியடைந்த இந்தியாவின் பெருமை மோடிக்கு மட்டுமல்ல, உங்களுடையதும் கூட. ‘வளர்ச்சியடைந்த இந்தியா: இளம் தலைவர்களின் கலந்துரையாடல்’ என்பது இந்த சிந்தனைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இளைஞர்களாகிய உங்களால் தலைமை தாங்கப்பட்ட முயற்சி இது. விநாடி வினா போட்டியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள், கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவர்கள், தற்போது இந்தத் திட்டத்தோடு இணைந்திருப்பவர்கள் என அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கின் பெருமையை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது பற்றிய ஒரு பார்வை இங்கு வெளியிடப்பட்ட கட்டுரை புத்தகத்திலும் காணப்படுகிறது. நான் இப்போது பார்த்த 10 விளக்கக்காட்சிகளிலும் இதன் பார்வை காணப்படுகிறது. இந்த விளக்கக்காட்சிகள் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கின்றன. நாட்டின் இளைஞர்கள் சிந்தனையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதைக் காணும்போது எனது இதயம் பெருமிதத்தால் நிரம்புகிறது. நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கான உங்கள் நோக்கம் எவ்வளவு விரிவானது என்பதை இது காட்டுகிறது. உங்கள் தீர்வுகளில் கள யதார்த்தம் இருக்கிறது, கள அனுபவம் இருக்கிறது, நீங்கள் சொல்லும் எல்லாவற்றிலும் மண்ணின் வாசனை இருக்கிறது. இந்திய இளைஞர்கள் மூடிய ஏசி அறைகளில் அமர்ந்து சிந்திப்பதில்லை. இந்திய இளைஞர்களின் சிந்தனையின் எல்லை வானத்தை விட உயர்ந்தது. நேற்றிரவு உங்களில் சிலர் எனக்கு அனுப்பிய வீடியோக்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பற்றிய பல்வேறு நிபுணர்களின் கருத்துகளை நான் கேட்டு வருகிறேன். நேரடி விவாதங்களில், அமைச்சர்களுடனான உரையாடல்களில், கொள்கை தொடர்பான நபர்களுடன் நடத்தப்படும் உரையாடல்களில், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் மன உறுதியை நான் உணர்ந்தேன். இளம் தலைவர் கலந்துரையாடல் என்ற இந்த ஒட்டுமொத்த செயல்முறையிலும் விவாதத்திற்குப் பின் வெளிவந்த ஆலோசனைகள், இந்திய இளைஞர்களின் யோசனைகள், நாட்டின் கொள்கைகளின் ஒரு பகுதியாக மாறும்; வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிகாட்டும். இதற்காக நாட்டின் இளைஞர்களை நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது குறித்து செங்கோட்டையில் இருந்து நான் பேசியுள்ளேன். உங்கள் ஆலோசனைகளை செயல்படுத்த அரசியல் ஒரு சிறந்த ஊடகமாக இருக்கலாம். இளைஞர்களாகிய உங்களில் பலர் அரசியலில் பங்கேற்க முன்வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
இன்று உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, வளர்ச்சியடைந்த இந்தியாவின் பிரம்மாண்டமான சித்திரத்தை நான் காண்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவில் நாம் எதைக் காண விரும்புகிறோம், எந்த வகையான இந்தியாவைக் காண விரும்புகிறோம்? வளர்ச்சியடைந்த இந்தியா என்றால் பொருளாதார, போர்த்தந்திர, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். நல்ல கல்வி மற்றும் நல்ல வருவாய்க்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கும் இடத்தில், உலகின் மிகப்பெரிய திறன்மிக்க இளம் மனிதவளம் இருக்கும். அங்கு இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க நல்லவாய்ப்பு கிடைக்கும்.
இன்று இந்தியாவின் பொருளாதாரம் ஏறத்தாழ 4 டிரில்லியன் டாலர் ஆகும். இது இந்தியாவின் பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. ரயில்வேக்கள், சாலைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு செலவிடப்பட்ட 2014-ம் ஆண்டின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட இன்று இந்தியா ரயில்வேக்கு மட்டுமே அதிக பணத்தை செலவிடுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு பட்ஜெட் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இப்போது 6 மடங்கு அதிகமாக உள்ளது. இது 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
நண்பர்களே,
தற்போது 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மைல்கல்லை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். சற்றே கற்பனை செய்து பாருங்கள், நாம் 5 டிரில்லியன் டாலரை எட்டும் போது, வளர்ச்சியின் அளவு எவ்வளவு பெரிதாக இருக்கும். வசதிகளின் விரிவாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கும். இந்தியா இதோடு நிற்கப் போவதில்லை. அடுத்த பத்தாண்டுகளின் இறுதியில், இந்தியா 10 டிரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கடக்கும். சற்றே கற்பனை செய்து பாருங்கள், வளர்ந்து வரும் இந்தப் பொருளாதாரத்தில், உங்கள் தொழில் முன்னேறும் போது, உங்களுக்கு எத்தனை வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை செய்து பாருங்கள், 2047-ம் ஆண்டில் உங்கள் வயது என்னவாக இருக்கும், உங்கள் குடும்பத்திற்காக மேற்கொண்ட ஏற்பாடுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். சற்றே கற்பனை செய்து பாருங்கள், 2047-ம் ஆண்டில், நீங்கள் 40-50 வயதை எட்டும்போது, வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது, நாடு வளர்ச்சியடைந்திருக்கும். அப்போது யார் அதிகம் பயனடைவார்கள். இன்றைய இளைஞர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். அதனால்தான் நான் இன்று முழு நம்பிக்கையுடன் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் தலைமுறையினர் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை மட்டும் கொண்டு வரமாட்டார்கள், அந்த மாற்றத்தின் மிகப்பெரிய பயனாளிகளாகவும் இருப்பார்கள். இந்த பயணத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது போதும் என்ற நமது பழக்கத்தை நாம் தவிர்க்க வேண்டும். இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. முன்னோக்கி செல்ல, இந்த பழக்கத்திலிருந்து வெளியே வந்து கடினமான பணிகளை மேற்கொள்வது அவசியம். இந்த இளம் தலைவர்கள் உரையாடலிலும், இளைஞர்கள் தங்கள் சௌகரிய மண்டலத்திலிருந்து வெளியே வர வேண்டும், அப்போதுதான் அவர்கள் வெற்றியின் புதிய உயரத்திற்குச் செல்ல முடியும்.
நண்பர்களே,
இன்றைய நிகழ்ச்சியில், வளர்ச்சியடைந்த இந்தியா, இளம் தலைவர்கள் கலந்துரைாயடல், இந்தியாவின் எதிர்காலத்திற்கான பாதையை தீர்மானிப்பதில் மிகப் பெரிய பங்கை வகிக்கும். சக்தி, உற்சாகம், பேரார்வம் ஆகியவற்றுடன் இந்தத் தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உங்கள் யோசனைகள் நிச்சயமாக மதிப்புமிக்கவை, சிறந்தவை. இப்போது நீங்கள் இந்த யோசனைகளை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், தெருவிலும், வட்டாரத்திலும் உள்ள இளைஞர்கள் வளர்ச்சியடைந்த பாரதம் குறித்த சிந்தனைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த உணர்வு கொண்டு செல்லப்பட வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவோம். இந்தத் தீர்மானத்தோடு நாம் வாழ வேண்டும், அதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் அனைத்து இளைஞர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானத்தை வெற்றியாக மாற்ற, உங்களின் தொடர் முயற்சிகளுக்கு, நாங்கள் உறுதுணையாக இருப்போம். வெற்றி அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம், நீங்கள் இந்த மகத்துவமான உறுதிமொழியுடன் முன்னேறிச் செல்ல வேண்டும், எனது நல்வாழ்த்துகள்.
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
மிகவும் நன்றி
*************
TS/SMB/AG/KV
(Release ID: 2093782)
Visitor Counter : 17
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada