பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் 

Posted On: 09 JAN 2025 2:11PM by PIB Chennai


ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு அவர்களே, முதலமைச்சர் மோகன் சரண் மஞ்சி அவர்களே, மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் அவர்களே, ஜுவல் ஓரம் அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஷோபா கரண்ட்லஜே அவர்களே, கீர்த்தி வர்தன் சிங் அவர்களே, பபித்ரா மார்கரெட்டா அவர்களே, உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள பாரதி அன்னையின் புதல்வர்கள், புதல்விகளே!
வணக்கம்!
பகவான் ஜகந்நாதர், லிங்கராஜ் ஆகியோரின் இந்தப் புனித பூமியில், உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள எனது இந்திய புலம்பெயர்ந்த குடும்பங்களை வரவேற்கிறேன். ஆரம்பத்தில் பாடப்பட்ட வரவேற்பு பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் இந்திய சமூக நிகழ்வுகள் எங்கெங்கு நடத்தப்படுகிறதோ அங்கெல்லாம் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் குழுவினர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரின் உணர்வை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். உங்களுக்கு வாழ்த்துகள்.
நண்பர்களே,
இந்த வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தின் முக்கிய விருந்தினர்  டிரினிடாட்-டொபாகோ அதிபர் கிறிஸ்டின் கங்காலூவின் காணொலிச் செய்தி நம் அனைவரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரும் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பேசினார். அவரது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இது இந்தியாவில் துடிப்பான திருவிழாக்கள், ஒன்றுகூடல்களின் நேரம். இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்குகிறது. மகர சங்கராந்தி, லோஹ்ரி, பொங்கல், மாக் பிஹு போன்ற பண்டிகைகளும் வருகின்றன. எங்கும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், இந்த நாளில்தான் 1915- ம் ஆண்டில், மகாத்மா காந்தி அவர்கள் வெளிநாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்த பின்னர் இந்தியா திரும்பினார். இத்தகைய அற்புதமான நேரத்தில் நீங்கள் இந்தியாவில் இருப்பது பண்டிகை உணர்வை அதிகரிக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தின் இந்தப் பதிப்பு மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பானதாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவரது தொலைநோக்குப் பார்வை இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நிறுவனமாக இது மாறியுள்ளது. இந்தியாவை, இந்தியத்தன்மை, நமது கலாச்சாரம், நமது முன்னேற்றம் ஆகியவற்றை நாம் ஒன்றாக கொண்டாடுவோம். நமது வேர்களுடன் இணைவோம்.
நண்பர்களே,
இன்று நீங்கள் கூடியிருக்கும் ஒடிசா மண், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும். ஒடிசாவில், ஒவ்வொரு அடியிலும், நமது பாரம்பரியத்தை நாம் காண்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரி-கந்தகிரி குகைகள், கொனார்க்கின் சூரியக் கோயில், தாமிரலிப்தி, மணிக்பட்னா, பாலூர் போன்ற புராதன துறைமுகங்கள் போன்றவற்றால் அனைவருக்குமே பெருமிதம் ஏற்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒடிசாவைச் சேர்ந்த நமது வர்த்தகர்கள் பாலி, சுமத்ரா, ஜாவா போன்ற இடங்களுக்கு நீண்ட கடல் பயணங்களை மேற்கொண்டார்கள். அதன் நினைவாக, இன்றும், பாலி ஜாத்ரா ஒடிசாவில் கொண்டாடப்படுகிறது. ஒடிசாவில் தான் தௌலி என்ற இடம் அமைதியின் சிறந்த அடையாளமாக விளங்குகிறது. உலகம் வாளால் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தும் சகாப்தத்தில் இருந்தபோது, நமது பேரரசர் அசோகர் இங்கு அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார். நமது பாரம்பரியத்தின் இந்த வலிமைதான் எதிர்காலம் போரில் இல்லை, புத்தரிடம் உள்ளது என்பதை உலகிற்கு சொல்ல இன்று இந்தியாவை உத்வேகப்படுத்துகிறது. எனவே, ஒடிசாவின் இந்த மண்ணுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பது எனக்கு மிகவும் சிறப்பானதாகிறது.
நண்பர்களே,
வெளிநாடுவாழ் இந்தியர்களை நான் எப்போதும் இந்தியாவின் தூதர்களாகவே கருதி வந்துள்ளேன். உலகம் முழுவதிலுமிருந்து உங்கள் அனைவரையும் நான் சந்திக்கும்போது, உங்களுடன் உரையாடும் போது, எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்கிறேன். உங்களிடமிருந்து நான் பெறும் அன்பு என்னால் மறக்க முடியாத ஒன்று. உங்கள் பாசம், உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என்னுடன் இருக்கும்.
நண்பர்களே,
இன்று, உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களால் உலகில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில், உலகம் முழுவதிலும் பல தலைவர்களை சந்தித்துள்ளேன். உலகத் தலைவர்கள் ஒவ்வொருவரும் இந்திய வம்சாவளியினரை பாராட்டுகிறார்கள். இதற்கு ஒரு பெரிய காரணம் நீங்கள் அனைவரும் அங்குள்ள சமூகங்களுக்கு சேர்க்கும் சமூக விழுமியங்கள். நாம் "ஜனநாயகத்தின் தாய்" மட்டுமல்ல. ஜனநாயகம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அது நமது வாழ்க்கை முறை. நமக்கு பன்முகத்தன்மை கற்பிக்கப்பட வேண்டியதில்லை. நமது வாழ்க்கையே பன்முகத்தன்மையில் இயங்குகிறது. அதனால்தான் இந்தியர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் அங்குள்ள சமூகத்துடன் ஒன்றிணைகிறார்கள். அந்த இடத்தின் விதிகள், பாரம்பரியங்களை மதிக்கிறோம். நாம் அந்த நாட்டுக்கு, அந்த சமூகத்திற்கு மிகுந்த நேர்மையுடன் சேவை செய்கிறோம். அவர்களின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் நாம் பங்களிக்கிறோம். இவை அனைத்துடனும், இந்தியா தொடர்ந்து நமது இதயங்களில் துடிக்கிறது. 
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டில் இந்தியா, முன்னேறி வரும் வேகம், முன்னெப்போதும் இல்லாதது. வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. வெறும் 10 ஆண்டுகளில், உலகின் 10-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5- வது பெரிய பொருளாதாரத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் வெற்றியை உலகம் இன்று பார்த்து வருகிறது. பாரதத்தின் சந்திரயான் விண்கலம் சிவ-சக்தி புள்ளியை எட்டிய போது, நாம் அனைவரும் பெருமிதம் கொண்டோம். இன்று, டிஜிட்டல் இந்தியாவின் சக்தியைக் கண்டு உலகம் ஆச்சரியப்படும் போது, நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். இன்று, இந்தியாவின் ஒவ்வொரு துறையும் விண்ணைத் தொடும் வகையில் முன்னேறி வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமானப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்புகள், மின்சார இயக்கம், பரந்த மெட்ரோ கட்டமைப்பு, புல்லட் ரயில் திட்டம் என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் முன்னேற்றத்தின் வேகம் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. 
நண்பர்களே,
இன்று, இந்தியா சொல்வதை உலகம் உன்னிப்பாகக் கேட்கிறது. இன்றைய இந்தியா தனது கருத்தை வலுவாக முன்வைப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய தெற்கின் குரலை முழு பலத்துடன் உரக்க ஒலிக்கிறது. ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக்க இந்தியா முன்மொழிந்தபோது, அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த முன்மொழிவை ஆதரித்தன. "மனிதகுலம் முதலில்" என்ற உணர்வுடன், இந்தியா தனது உலகளாவிய பங்களிப்பை விரிவுபடுத்தி வருகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் திறமை தற்போது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. நமது வல்லுநர்கள் உலகின் முக்கிய நிறுவனங்கள் மூலம் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர். 
நண்பர்களே,
வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு, இந்தியா உலகிலேயே இளைய, மிகவும் திறமையான மக்களைக் கொண்ட நாடாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். திறன்களுக்கான உலகளாவிய தேவையில் கணிசமான பகுதியை இந்தியா பூர்த்தி செய்யும். உலகின் பல நாடுகள் பாரதத்தின் திறமை வாய்ந்த இளைஞர்களை இருகரம் நீட்டி வரவேற்கின்றன என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு இந்தியரும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் சிறந்த திறன்களுடன்  செல்வதை உறுதி செய்ய இந்திய அரசும் முயற்சி செய்து வருகிறது. உங்கள் வசதிக்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். உங்கள் பாதுகாப்புநலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நெருக்கடி நிலைமைகளின் போது நமது புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவது அரசின் பொறுப்பு என நாம் கருதுகின்றோம். இன்றைய இந்திய வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளில் இதுவும் ஒன்று. கடந்த பத்தாண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள நமது தூதரகங்கள், அலுவலகங்கள் உணர்வுபூர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
முன்னர் பல நாடுகளில், மக்கள் தூதரக வசதிகளைப் பெறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் உதவிக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பதினான்கு தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
நண்பர்களே,
உலகெங்கிலும் பரவியுள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் வரலாறு, பல்வேறு நாடுகளுக்கு அவர்களின் பயணம், அந்த நாடுகளில் இந்தியாவின் கொடியை உயர்த்திய கதைகள் ஆகியவை இந்தியாவின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இதுபோன்ற பல சுவாரஸ்யமான, எழுச்சியூட்டும் கதைகள் உங்களிடம் உள்ளன. அவை பகிரப்பட வேண்டும். காட்சிப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். 
நண்பர்களே,
இன்றைய இந்தியா வளர்ச்சி, பாரம்பரியத்துடன் முன்னேறி வருகிறது. ஜி-20 மாநாட்டின் போது, இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் நேரடியாக அனுபவிப்பதற்காக நாங்கள் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தினோம். காசி-தமிழ் சங்கமம், காசி-தெலுங்கு சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை நாங்கள் பெருமையுடன் ஏற்பாடு செய்கிறோம். இன்னும் சில நாட்கள் கழித்து திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். தெய்வப் புலவர் திருவள்ளுவரின் போதனைகளை பரப்புவதற்காக திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரில் முதல் மையத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் மொழி, தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் பாரம்பரியத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லும்.
நண்பர்களே,
இந்தியாவில் உள்ள நமது பாரம்பரிய இடங்களை இணைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். உதாரணமாக, ராமர் - சீதா மாதாவுடன் தொடர்புடைய இடங்களைப் பார்வையிட சிறப்பு ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. பாரத் கவுரவ் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கியமான பாரம்பரிய இடங்களையும் இணைக்கின்றன. எங்களது அதிவேக வந்தே பாரத் ரயில்கள் மூலம், நாட்டின் முக்கிய பாரம்பரிய மையங்களை இணைத்துள்ளோம். சிறிது நேரத்திற்கு முன்பு, வெளிநாடு வாழ் இந்தியர் எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயிலைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த ரயிலில் சுமார் 150 பேர் 17 சுற்றுலா மற்றும் நம்பிக்கை தொடர்பான இடங்களுக்கு பயணம் செய்வார்கள்..
நண்பர்களே,
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது, வெளிநாடுவாழ் இந்தியர்கள் இதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் போது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பங்களித்தனர். இப்போது நமது இலக்கு 2047. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் இன்னும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு நன்றி.
இந்தியா பெரிய நகரங்களுடன் நின்றுவிடவில்லை. இந்தியாவின் பெரும்பகுதி இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில்தான் உள்ளது. அங்கு இந்தியாவின் பாரம்பரியத்தை காண முடியும். இந்த பாரம்பரியத்துடன் உலகை நாம் இணைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இந்த சிறிய நகரங்களுக்கு கிராமங்களுக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். பின்னர், நீங்கள் திரும்பி வந்தவுடன் உங்கள் அனுபவங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் இந்தியாவுக்கு வரும்போது, குறைந்தது இந்திய வம்சாவளியைச் சாராத ஐந்து நண்பர்களையாவது உங்களுடன் அழைத்து வாருங்கள் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன். இந்தியாவுக்கு வருகை தரவும், இந்தியாவின் சிறப்புகளைக் கண்டு அனுபவிக்கவும் உங்கள் வெளிநாட்டு நண்பர்களை ஊக்குவியுங்கள்.
நண்பர்களே,
குறிப்பாக புலம்பெயர் சமூகத்தின் அனைத்து இளம் நண்பர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவைப் பற்றி மேலும் அறிய வினாடி வினா போட்டியில்  பங்கேற்கவும். இது இந்தியாவை நன்கு புரிந்துகொள்ள உதவும். 
நண்பர்களே,
நீங்கள் வாழும் நாடுகளில், இந்தியாவின் உண்மையான வரலாற்றைப் பரப்புவதில் நீங்களும் முன்னின்று செயல்பட வேண்டும். பல நாடுகளில் உள்ள தற்போதைய தலைமுறையினருக்கு நமது வளம், நீண்ட கால அடிமைத்தனம், நமது போராட்டங்கள் பற்றி தெரியாது. இந்தியாவின் உண்மையான வரலாற்றை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் உதவலாம்.
நண்பர்களே,
இன்று, இந்தியா உலகின் நண்பர் என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகளாவிய இணைப்பை மேலும் வலுப்படுத்த, உங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் வாழும் நாட்டில், விருது வழங்கும் விழாக்களை ஏற்பாடு செய்யலாம். இந்த விருதுகளை நீங்கள் வாழும் நாட்டின் உள்ளூர்வாசிகளுக்கு வழங்கலாம். இலக்கியம், கலை, திரைப்படம், நாடகம் அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களை நீங்கள் கௌரவிக்கலாம். இந்த சாதனையாளர்களை அழைத்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பாக விருதுகளும், சான்றிதழ்களும் வழங்குங்கள். அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம், துணைத் தூதரகம் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறது. இது அந்த நாட்டு மக்களுடனான உங்கள் தனிப்பட்ட தொடர்பை பலப்படுத்தும். அவர்களுடனான உங்கள் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஆழப்படுத்தும்.
நண்பர்களே,
2025-ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்திலும், செல்வத்திலும் செழிப்பைக் கொண்டு வரட்டும். எதிர்வரும் ஆண்டு உங்கள் அனைவருக்கும் வளமான, நிறைவான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள், மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*********  
 

TS/PLM/RS/KV


(Release ID: 2093332) Visitor Counter : 30