பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்


துன்பங்களைத் தாண்டி  உச்சங்களை அடைவது எப்படி என்பதை எதிர்கால சந்ததியினருக்கு டாக்டர் சிங்கின் வாழ்க்கை கற்றுத் தருகிறது: பிரதமர்

கனிவான மனிதர், கற்றறிந்த பொருளாதார நிபுணர் மற்றும் சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தலைவராக டாக்டர் மன்மோகன் சிங் எப்போதும் நினைவுகூரப்படுவார்: பிரதமர்

பணிவு, மென்மை மற்றும் அறிவாற்றலால் டாக்டர் சிங்கின் புகழ்பெற்ற நாடாளுமன்ற வாழ்க்கை அமைந்திருந்தது: பிரதமர்

டாக்டர் மன்மோகன் சிங் எப்போதும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்களுடனும் தொடர்பைப் பராமரித்தவராகவும், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியவராகவும் திகழ்ந்தார்: பிரதமர்

Posted On: 27 DEC 2024 11:37AM by PIB Chennai

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியிலிருந்து இன்று  காணொலி செய்தியில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல என்று கூறிய பிரதமர், பிரிவினையின் போது இந்தியாவுக்கு வந்த  டாக்டர் சிங் நிறைய இழந்திருந்தாலும் அவர் ஒரு சாதனையாளர் என்று கூறினார். துன்பங்களைத் தாண்டி  உச்சங்களை எவ்வாறு அடைவது என்பதை டாக்டர் சிங்கின் வாழ்க்கை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்கிறது என்றும் அவர் கூறினார்.

கனிவான மனிதர், கற்றறிந்த பொருளாதார நிபுணர் மற்றும் சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தலைவராக டாக்டர் சிங் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று கூறிய திரு மோடி, ஒரு பொருளாதார நிபுணராக பல்வேறு நிலைகளில் இந்திய அரசுக்கு டாக்டர் சிங் அளித்த எண்ணற்ற பங்களிப்புகளை எடுத்துரைத்தார். சவாலான காலங்களில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய பணிகளை பிரதமர் பாராட்டினார்.

முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான திரு பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், நாட்டை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு புதிய பொருளாதாரப் பாதையில் வழிநடத்தினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் டாக்டர் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என்று அவர் தெரிவித்தார். மக்கள் மீதும், நாட்டின் வளர்ச்சிமீதும் டாக்டர் மன்மோகன் சிங் கொண்டுள்ள உறுதிப்பாடு எப்போதும் உயர்ந்த மதிப்புடையது என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர் சிங்கின் வாழ்க்கை, அவரது நேர்மை மற்றும் எளிமையின் பிரதிபலிப்பாக உள்ளது என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். பணிவு, மென்மை மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றால் டாக்டர் சிங்கின் புகழ்பெற்ற நாடாளுமன்ற வாழ்க்கை அமைந்திருந்தது  என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் டாக்டர் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்த நேரத்திலும்கூட, டாக்டர் சிங்கின் அர்ப்பணிப்பு உணர்வு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது என்று தாம் அப்போது பாராட்டிய தைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதும், சக்கர நாற்காலியில் அமர்ந்து முக்கியமான அமர்வுகளில் கலந்து கொண்டு தனது நாடாளுமன்றக் கடமைகளை டாக்டர் சிங் நிறைவேற்றினார்.

புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களில் கல்வி பயின்று, அரசின் உயர் பதவிகளை வகித்த போது, டாக்டர் மன்மோகன் சிங் தனது எளிமையான பின்னணியின் மதிப்புகளை ஒருபோதும் மறக்கவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்களுடனும் தொடர்பைப் பேணுபவராகவும், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியவராகவும் டாக்டர் சிங் எப்போதும் உயர்ந்து நிற்கிறார் என்று அவர் கூறினார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும், பின்னர் தில்லியிலும் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவருடன் நடத்திய வெளிப்படையான விவாதங்களை பிரதமர் அன்புடன் நினைவுகூர்ந்தார். டாக்டர் சிங்கின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர், அனைத்து குடிமக்கள் சார்பிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

***

TS/SMB/KV


(Release ID: 2088338) Visitor Counter : 25