பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

'சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கத்தை' பிரதமர் தொடங்கி வைத்தார்

வீர பாலகர் தினத்தையொட்டி, சாஹிப்ஜாதேக்களின் வீரம் மற்றும் தியாகங்களை நினைவு கூர்வோம், மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்: பிரதமர்

சாஹிப்ஜாதா ஜோராவர் சிங், சாஹிப்ஜாதா ஃபதே சிங் ஆகியோர் வயதில் சிறியவர்கள், ஆனால் அவர்களின் துணிச்சல் வெல்ல முடியாதது: பிரதமர்

எவ்வளவு கடினமான காலமாக இருந்தாலும், நாடு மற்றும் அதன் நலன்களை விட வேறு எதுவும் பெரியதல்ல: பிரதமர்

நமது ஜனநாயகம் குருமார்களின் போதனைகள், சாஹிப்ஜாதாக்களின் தியாகங்கள் மற்றும் நாட்டின் ஒற்றுமையின் அடிப்படை மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது: பிரதமர்

வரலாற்று காலம் முதல் தற்போதைய காலம் வரை, இந்தியாவின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் சக்தி எப்போதும் பெரும் பங்கு வகித்துள்ளது: பிரதமர்

தற்போது, சிறந்தவை மட்டுமே நமது தரமாக இருக்க வேண்டும்: பிரதமர்

Posted On: 26 DEC 2024 2:25PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற வீர பாலகர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 3-வது வீர பாலகர் தினத்தையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தின் நினைவாக தங்களது அரசு வீர பாலகர் தினத்தை தொடங்கியதாகக் கூறினார். இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டிற்கான உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நாள் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களை வெல்ல முடியாத துணிச்சலுடன் ஊக்குவிக்க பணியாற்றியது என்று அவர் மேலும் கூறினார். இன்று வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் வீர பாலகர் விருது பெற்ற  17 குழந்தைகளுக்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார். இன்று விருது பெற்ற இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறனை அடையாளப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் குருமார்கள் மற்றும் துணிச்சலான சாஹிப்ஜாதேகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், விருது பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

துணிச்சலான சாஹிப்ஜாதாக்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த திரு மோடி, இன்றைய இளைஞர்கள் அவர்களின் வீரதீர சாகசத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்றும், எனவே அந்த நிகழ்வுகளையும் நினைவு கூர்வது முக்கியம் என்றும் கூறினார். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் துணிச்சலான சாஹிப்ஜாதேக்கள் இளம் வயதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர் என்று அவர் மேலும் கூறினார். சாஹிப் ஜோராவர் சிங், சாஹிப் ஃபதே சிங் ஆகியோர் இளம் வயதினராக இருந்தபோதிலும், அவர்களின் தைரியத்திற்கு எல்லையே இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். சாஹிப்ஜாதேக்கள் முகலாய ஆட்சியின் அனைத்து சோதனைகளையும் நிராகரித்து, அனைத்து அட்டூழியங்களையும் சகித்துக் கொண்டு, வஜீர் கான் உத்தரவிட்ட மரண தண்டனையை மிகுந்த துணிச்சலுடன் தழுவத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் மேலும் கூறினார். குரு அர்ஜன் தேவ், குரு தேக் பகதூர், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் வீரத்தை சாஹிப்ஜாதாக்கள் தனக்கு நினைவூட்டியதாகவும், இந்த துணிச்சல்தான் நமது நம்பிக்கையின் ஆன்மீக பலம் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். சாஹிப்ஜாதாக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் நம்பிக்கையின் பாதையிலிருந்து ஒருபோதும் அவர்கள் பின்வாங்கவில்லை என்று பிரதமர் மேலும் கூறினார். எவ்வளவு கடினமான சூழ்நிலைகளாக இருந்தாலும், நாடு மற்றும் நாட்டின் நலனை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்பதை வீர பாலகர் தினம் நமக்குக் கற்பிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். "நாட்டிற்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஒரு துணிச்சலான செயல் என்றும், நாட்டிற்காக வாழும் ஒவ்வொரு குழந்தையும் இளைஞர்களும் வீர பாலகர்" என்றும் அவர் கூறினார்.

"இந்திய குடியரசு மற்றும் நமது அரசியலமைப்பு நிறுவப்பட்ட 75-வது ஆண்டைக் குறிக்கும் இந்த ஆண்டின் வீர பாலகர் தினம் மேலும் சிறப்பு வாய்ந்தது" என்று பிரதமர் கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பின் இந்த 75-வது ஆண்டில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பணியாற்ற துணிச்சலான சாஹிப்ஜாதாக்களிடமிருந்து உத்வேகம் பெற்று வருவதாக அவர் கூறினார். சாஹிப்ஜாதாக்களின் வீரம் மற்றும் தியாகத்தின் மீது இந்த நாள் உருவானது என்பதில் இந்தியாவின் வலுவான ஜனநாயகம் பெருமை கொள்கிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார். நமது ஜனநாயகம்தான் சமூகத்தின் கடைசி மனிதனையும் மேம்படுத்த நமக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். நாட்டில் பெரியவர், சிறியவர் என்று யாரும் இல்லை என்பதை அரசியல் சாசனம் நமக்கு கற்பிக்கிறது. இந்த கோட்பாடு அனைவரின் நலனுக்காக வாதிடும் நமது குருமார்களின் போதனைகளுடன் ஒத்துப்போகிறது என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் லட்சியங்களில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதை சாஹிப்ஜாதாக்களின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது என்று வலியுறுத்திய பிரதமர், அதேபோல, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு என்ற கொள்கையை அரசியலமைப்பு உயர்த்தியுள்ளது என்றும் கூறினார். நமது ஜனநாயகத்தின் பரிமாணம் குருமார்களின் போதனைகள், சாஹிப்ஜாதாக்களின் தியாகம், நாட்டின் ஒற்றுமை மந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த காலம் முதல் தற்போது வரை, இந்தியாவின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் சக்தி குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது என்று திரு மோடி கூறினார். சுதந்திரத்திற்கான போராட்டம் முதல் 21-ம் நூற்றாண்டின் இயக்கங்கள் வரை, ஒவ்வொரு புரட்சிக்கும் இந்திய இளைஞர்கள் பங்களித்துள்ளனர் என்று அவர் எடுத்துரைத்தார். இளைஞர்களின் சக்தியின் காரணமாக உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பார்க்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். தற்போது, புத்தொழில் முதல் அறிவியல் வரை, விளையாட்டு முதல் தொழில்முனைவு வரை, இளைஞர் சக்தி புதிய புரட்சிகளை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் கொள்கையில் மிகப்பெரிய இடத்தை வகிக்கிறது என்று அவர் கூறினார். புத்தொழில் சூழல்சார் அமைப்பு, விண்வெளி பொருளாதாரத்தின் எதிர்காலம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சித் துறை, ஃபின்டெக் மற்றும் உற்பத்தித் துறை அல்லது திறன் மேம்பாடு மற்றும் உள்ளக பயிற்சித் திட்டங்கள் என அனைத்து கொள்கைகளும் இளைஞர்களை மையமாகக் கொண்டவை என்றும், அவர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கை அரசின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விரைவாக மாறிவரும் தற்போதைய உலகில், புதிய தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால திசைகள் உருவாகி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பாரம்பரிய மென்பொருளில் இருந்து செயற்கை நுண்ணறிவுக்கு மாறியுள்ள நிலையிலும், இயந்திர கற்றல் அதிகரித்து வரும் நிலையிலும், நமது இளைஞர்களை எதிர்காலத்திற்கு உகந்தவர்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கல்வியை நவீனமயமாக்கி, கற்றலுக்கான திறந்த சூழலை வழங்கிய புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் நாடு நீண்ட காலத்திற்கு முன்பே இதற்குத் தயாராகத் தொடங்கிவிட்டது என்று திரு மோடி எடுத்துரைத்தார். இளம் குழந்தைகளிடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் சோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 'எனது இளைய இந்தியா பாரதம்' இயக்கம் கல்வியுடன் நடைமுறை வாய்ப்புகளை வழங்குவதையும், இளைஞர்களிடையே சமூகத்தின் மீதான கடமை உணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு மோடி கூறினார்.

உடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, ஆரோக்கியமான இளமை, திறன் வாய்ந்த நாட்டிற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.  இளைய தலைமுறையினரிடையே உடல் தகுதி குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு "ஃபிட் இந்தியா", "கேலோ இந்தியா" ஆகிய இயக்கங்கள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். 'சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம்' தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இது கிராம பஞ்சாயத்துகளிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்து, ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றி, வளர்ந்த இந்தியாவுக்கு அடித்தளமாக அமையும்  என்று அவர் கூறினார்.

"வீர பாலகர் தினம் நமக்கு உத்வேகம் அளித்து, புதிய தீர்மானங்களுக்கு நம்மை ஊக்குவிக்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது தரம் இப்போது சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் துறைகளை சிறந்ததாக மாற்ற பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "உள்கட்டமைப்பில் நாம் பணியாற்றினால், நமது சாலைகள், ரயில் கட்டமைப்பு, விமான நிலைய உள்கட்டமைப்பு ஆகியவை உலகிலேயே சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாம் உற்பத்தியில் ஈடுபட்டால், நமது குறை கடத்திகள், மின்னணு, ஆட்டோ வாகனங்கள் ஆகியவை உலகளவில் சிறந்ததாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நாம் சுற்றுலாவில் பணிபுரிந்தால், நமது இடங்கள், பயண வசதிகள் மற்றும் விருந்தோம்பல் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாம் விண்வெளித் துறையில் பணியாற்றினால், நமது செயற்கைக்கோள்கள், ஊடுருவல் தொழில்நுட்பம் மற்றும் வானியல் ஆராய்ச்சி ஆகியவை சிறந்ததாக இருக்க வேண்டும்" என்று பிரதமர் கூறினார். இத்தகைய உயர்ந்த இலக்குகளை நிர்ணயிப்பதற்கான உத்வேகம் சாஹிப்ஜாதாக்களின் துணிச்சலிலிருந்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பெரிய இலக்குகள் இப்போது நமது தீர்மானங்கள் என்று அவர் வலியுறுத்தினார். தனது இளைஞர்களின் திறன்கள் மீது நாடு முழு நம்பிக்கை வைத்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை வழிநடத்தக்கூடிய இந்திய இளைஞர்கள், நவீன உலகிற்கு வழிகாட்ட புதுமைகளை அறிமுகப்படுத்தக் கூடியவர்கள் என்றும், ஒவ்வொரு பெரிய நாட்டிலும், துறையிலும் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய வாய்ப்புகள் வழங்கப்படும்போது தங்கள் நாட்டிற்காக எதையும் சாதிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டினார். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தற்சார்பு இந்தியாவின் வெற்றி உறுதியானது என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு சகாப்தமும் ஒரு நாட்டின் இளைஞர்களுக்கு அதன் விதியை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, சுதந்திரப் போராட்டத்தின் போது, இந்திய இளைஞர்கள் அந்நிய ஆட்சியின் ஆணவத்தை அகற்றி தங்கள் இலக்குகளை அடைந்தனர் என்றும், அதே நேரத்தில் தற்போது இளைஞர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த 10 ஆண்டில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான விரைவான வளர்ச்சிக்கான அடித்தளத்தை நாம் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நேரத்தை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு துறையிலும் முன்னேறி, நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தீவிர அரசியலில் ஈடுபடாத குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை அவர் வலியுறுத்தினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த முயற்சி முக்கியமானது என்று கூறிய அவர், ஒரு புதிய தலைமுறையை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இளைஞர்களை ஊக்குவித்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்' நடைபெறும் என்று திரு மோடி அறிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.

அமிர்த காலத்தின் 25 ஆண்டுகால தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வரும் பத்தாண்டுகள், குறிப்பாக அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சக்தியையும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் ஆற்றல் ஆகியவை நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். குருமார்கள், துணிச்சலான சாஹிப்ஜாதாக்கள், மாதா குஜ்ரி  ஆகியோருக்கு மரியாதை செலுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமாக வீரபாலகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு 'சுபோஷித் கிராம பஞ்சாயத்து அபியான்' திட்டத்தை தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும், செயலில் சமுதாய பங்கேற்பை உறுதி செய்வதன் மூலமும் ஊட்டச்சத்து விளைவுகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இளம் மனங்களை ஈடுபடுத்துவதற்கும், நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், தேசத்திற்கு தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகள் நடத்தப்படும். மை கவ் மற்றும் மை பாரத் இணையதளங்கள் மூலம் வினாடி வினாக்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான ஆன்லைன் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கதை சொல்லுதல், எழுத்துப் படைப்பாற்றல், சுவரொட்டி தயாரித்தல் போன்ற சுவாரஸ்யமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் தேசிய பாலகர் விருது பெற்ற சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

 

***

(Release ID: 2088080)
TS/IR/RR


(Release ID: 2088115) Visitor Counter : 26