பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 DEC 2024 4:02PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜெய்!

மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதல்வர் திரு மோகன் யாதவ்  அவர்களே,  மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங், திரு வீரேந்திர குமார் மற்றும் திரு சிஆர் பாட்டீல் அவர்களே,  துணை முதல்வர் திரு ஜெகதீஷ் தேவ்தா அவர்களே,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதன்பு சகோதர சகோதரிகளே.

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், திரு மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க அரசு வெற்றிகரமாக ஓராண்டை  நிறைவு செய்துள்ளது. மத்தியப் பிரதேச மக்களுக்கும், அர்ப்பணிப்புள்ள பா.ஜ.க தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டில், மத்திய பிரதேசம் வளர்ச்சியின் புதிய அலையை கண்டுள்ளது. இன்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தௌதான் அணைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் முதல் முறையாக ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய ஆலை திறக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக மத்திய பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நண்பர்களே,

இன்றைய நாள் நம் அனைவருக்கும் ஆழ்ந்த உத்வேகம் தரும் நாள். இன்று நமது மதிப்பிற்குரிய அடல்  அவர்களின் பிறந்தநாள். இந்த நாள் பாரத ரத்னா அடலின் நூற்றாண்டு பிறந்தநாளைக் குறிக்கிறது. அடல்  அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லாட்சி மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கான உத்வேகத்தின் திருவிழாவாகும். இன்று முற்பகுதியில், அவரது நினைவாக ஒரு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை நான் வெளியிட்டபோது, ​​நேசத்துக்குரிய நினைவுகளின் வெள்ளத்தில் மூழ்கிப்போனேன். பல ஆண்டுகளாக, அடல், என்னைப் போன்ற பல நபர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள் என்றென்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும்.

நண்பர்களே,

எங்களைப் பொறுத்தவரை நல்லாட்சி தினம் என்பது ஒரு நாள் அனுசரிப்பு மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை மற்றும் பா.ஜ.க அரசுகளின் அடையாளமாகும்.  நாட்டின் மக்கள், பா.ஜ.க தலைமையிலான அரசைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நல்லாட்சியின் மீதான இந்த நிலையான நம்பிக்கையே எங்கள் வெற்றியின் அடிக்கல்லாகும்.

நல்லாட்சி என்பது சிறந்த திட்டங்களை வகுப்பது மட்டுமல்ல; இது அவற்றின் பயனுள்ள மற்றும் வெளிப்படையான செயல்படுத்தல் பற்றியதாகும். மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் சென்றடைகிறது என்பதில்தான் ஆட்சியின் உண்மையான அளவுகோல் உள்ளது.

இன்று, பிரதமரின்  கிசான் சம்மான் நிதி போன்ற திட்டங்களின் உறுதியான பலன்களை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12,000 ரூபாய் பெறுகிறார்கள். வங்கிகளில் மக்கள் நிதி கணக்குகள் தொடங்கப்பட்டதால் மட்டுமே இது சாத்தியமானது.

நண்பர்களே,

அடல்  அவர்களின் அரசு அமைக்கப்பட்டபோது, ​​நாட்டின் நீர் தொடர்பான சவால்களை மிகுந்த தீவிரத்துடன் எதிர்கொள்ளத் தொடங்கினார். இருப்பினும், 2004 க்குப் பிறகு, அடல்  அவர்களின் அரசு  மாற்றப்பட்டதும், காங்கிரஸ் அந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் முயற்சிகள் அனைத்தையும் கிடப்பில் போட்டது. இன்று நமது அரசு, நதிகளை இணைக்கும் தேசிய பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. கென் - பெட்வா இணைப்பு திட்டத்தின் கனவு இப்போது நனவாகும் விளிம்பில் உள்ளது. இந்தத் திட்டம் பண்டேல்கண்ட் பகுதியில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கும். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர், திகம்கர், நிவாரி, பன்னா, தாமோ மற்றும் சாகர் உள்ளிட்ட பத்து மாவட்டங்கள் மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதிகளால் பயனடையும்.

நண்பர்களே,

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சிகள் உள்ளூர் பொருளாதாரத்தின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றனர், மேலும் ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகள் முதல் ஹோட்டல்கள், தாபாக்கள், ஹோம்ஸ்டேக்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் வரையிலான வணிகங்கள் செழித்து வளர்கின்றன. பால், தயிர், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் கூட பயனடைகிறார்கள்.

நண்பர்களே,

கடந்த இரண்டு தசாப்தங்களாக, மத்திய பிரதேசம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. வரும் ஆண்டுகளில், மாநிலம் நாட்டின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக மாற உள்ளது. இந்த மாற்றத்தில் பண்டேல்கண்ட் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். மத்திய பிரதேசத்தை வளர்ந்த பாரதத்திற்கான வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய இரட்டை எஞ்சின் அரசு தனது நேர்மையான முயற்சிகளை தொடரும் என்று நான் உறுதியளிக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இன்றைய திட்டம் உண்மையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்  அவசியத்தை நான் ஆழமாகப் புரிந்துகொள்கிறேன். இவ்வளவு பெரிய கூட்டம், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பங்கேற்பு, தண்ணீரின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தண்ணீர்தான் வாழ்க்கை; இந்தப் பகுதியில் எங்கள் பணிக்கான உங்கள் ஆசீர்வாதங்கள் தொடர்ந்து பணிசெய்ய எங்களை ஊக்குவிக்கின்றன.

மிக்க நன்றி!

பொறுப்புத் துறப்பு:  இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087846

***

(Release ID: 2087846)

TS/BR/RR


(Release ID: 2088036) Visitor Counter : 14