பிரதமர் அலுவலகம்
தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
Posted On:
15 DEC 2024 10:15PM by PIB Chennai
தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 4-வது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2024 டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்றது.
மக்களுக்கு ஆதரவான செயல்திறன் மிக்க நல்ல ஆளுமை நமது பணியின் மையமாக உள்ளது என்றும், இதன் மூலம் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நாம் அடைய முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
'தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு – மக்கள்தொகை பங்கீட்டை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன.
புதிய தொழில்களின் வருகையை, குறிப்பாக 2-ம் நிலை. 3-ம் நிலை நகரங்களில் அவற்றைத் தொடங்குவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், புத்தொழில் நிறுவனங்கள் செழித்து வளரும் சூழலை உருவாக்க பாடுபட வேண்டும் என்றும் மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். சிறிய நகரங்களில் தொழில்முனைவோருக்கு உகந்த இடங்களை அடையாளம் கண்டு, அவர்களை வங்கி அமைப்புடன் இணைக்கவும், போக்குவரத்து வசதிகளை வழங்கவும், அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாநிலங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குடிமக்களை துன்புறுத்துவதற்கு வழிவகுக்கும் இணக்கங்களை எளிமைப்படுத்துமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆளுகை மாதிரியை மாநிலங்கள் சீர்திருத்த வேண்டும் என்று பங்கேற்பாளர்களை அவர் வலியுறுத்தினார். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று குறிப்பிட்ட பிரதமர், அரசின் பல்வேறு முன்முயற்சிகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதும் முக்கியம் என்றார்.
சுழல் பொருளாதாரம் பற்றி பேசிய பிரதமர், கரிம உயிர் வேளாண் வளங்களை வெளிக் கொணரும் திட்டம் தற்போது ஒரு பெரிய எரிசக்தி வளமாக பார்க்கப்படுவதைப் பாராட்டினார். இந்த முயற்சி கழிவுகளை செல்வமாக மாற்றுகிறது, அதே நேரத்தில் வயதான கால்நடைகளை ஒரு சுமையாக இல்லாமல் ஒரு சொத்தாக மாற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான நம்பகத்தன்மை இடைவெளி நிதி குறித்த கருத்துகளை ஆராயுமாறு மாநிலங்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். தரவு மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சமூகம் அதிகரித்து வருவதால், டிஜிட்டல் கழிவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியமானது. இந்த மின்னணுக் கழிவுகளை பயனுள்ள வளமாக மாற்றுவதன் மூலம், அத்தகைய பொருட்களின் இறக்குமதியை நாம் சார்ந்திருப்பது குறையும்.
சுகாதாரத் துறையில், உடல் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், இந்தியாவில் உடல் பருமனை ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். திடமான மற்றும் ஆரோக்கியமான இந்தியா மட்டுமே வளர்ந்த பாரதமாக இருக்க முடியும் என்று அவர் கூறினார். 2025 இறுதிக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றும், இந்த இலக்கை அடைவதில் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பெரும் பங்காற்றகூடும் என்றும் அவர் கூறினார்.
முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்கள் திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், இந்த வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகளால் அடிமட்ட அளவில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்றார். இது மகத்தான சமூக-பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும்.
இந்த மாநாட்டில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084669
***
VL/BR/RR
(Release ID: 2084732)
Visitor Counter : 18