பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பஞ்சாயத்து விருதுகளை குடியரசுத் தலைவர் 2024 டிசம்பர் 11 அன்று வழங்குகிறார்

Posted On: 09 DEC 2024 5:34PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா 2024, டிசம்பர் 11  அன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் முன்னிலையில், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் அவர்களின் முன்மாதிரியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்குவார். மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மதிப்புமிக்க பிரமுகர்கள், மத்திய அரசு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள், நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

விருது பெற்ற பஞ்சாயத்துகளின் புதுமையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடைமுறைகளை ஆவணப்படுத்தும் 'விருது பெறும் பஞ்சாயத்துகளின் பணிகள் குறித்த சிறந்த நடைமுறைகள்' என்ற கையேட்டை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் வெளியிடுவார். கையேட்டின் முதல் பிரதி குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும். வெற்றி பெறும் ஊராட்சிகளுக்கு பரிசுத் தொகையை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் செயல்படுத்துவார். விருது பெற்ற சில பஞ்சாயத்துகளின் சிறப்பான முயற்சிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதில் பயிற்சி நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குறும்படமும் இந்த நிகழ்ச்சியின் போது திரையிடப்படும்.

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2024 தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்கார், நானாஜி தேஷ்முக் சர்வோத்தம் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்கார், கிராம உர்ஜா ஸ்வராஜ் விஷேஷ் பஞ்சாயத்து புரஸ்கார், கார்பன் நியூட்ரல் விஷேஷ் பஞ்சாயத்து புரஸ்கார் மற்றும் பஞ்சாயத்து க்ஷம்தா நிர்மான் சர்வோத்தம் சன்ஸ்தான் புரஸ்கார் போன்ற வகைகளை உள்ளடக்கியது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், குழந்தைகள் நலன், நீர் பாதுகாப்பு, துப்புரவு, உள்கட்டமைப்பு, சமூக நீதி, ஆளுமை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் ஊராட்சிகள் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் இந்த விருதுகள் முக்கியமானவை. இந்த விருதுகள் மூலம் வழங்கப்படும் அங்கீகாரம், மற்ற பஞ்சாயத்துகளை சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும், கிராமப்புற இந்தியாவின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கவும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா வெப்காஸ்ட் இணைப்பு (webcast.gov.in/mopr), மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் யூடியூப் சேனல் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082383

***

TS/IR/RJ/DL


(Release ID: 2082434) Visitor Counter : 28