பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 DEC 2024 8:37PM by PIB Chennai

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!

வணக்கம்!

நண்பர்களே,

இன்று நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி பாபா சாஹேப் அம்பேத்கரின் மஹாபரிநிர்வாண் தினமாகும். பாபா சாஹேப் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், கடந்த 75 ஆண்டுகால அனுபவங்களால் செழுமைப்படுத்தப்பட்டு, தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்தூக்கம் அளிக்கும் ஆழமான ஆதாரமாக விளங்குகிறது. ஒட்டுமொத்த தேசத்தின் தரப்பில் நான் பாபா சாஹேபுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவருக்குத் தலைவணங்குகிறேன்.

நண்பர்களே,

கடந்த இரண்டு ஆண்டுகளில், பாரத் மண்டபம் பல குறிப்பிடத்தக்க தேசிய, சர்வதேச நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இங்கு ஜி-20 உச்சிமாநாட்டின் பிரம்மாண்டத்தையும், வெற்றியையும் நாம் கண்டோம். இருப்பினும், இன்றைய நிகழ்வு இன்னும் சிறப்பானது. தில்லி, வடகிழக்கு சார்ந்ததாக மாறியுள்ளது. வடகிழக்கின் மாறுபட்ட, துடிப்பான வண்ணங்கள் தலைநகரில் ஒரு அற்புதமான வானவில்லை உருவாக்கியுள்ளன. தொடக்க அஷ்டலட்சுமி மஹோத்சவத்தைக் கொண்டாடுவதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். அடுத்த மூன்று நாட்களில் இந்தப் பண்டிகை வடகிழக்குப் பகுதியின் அளப்பரிய ஆற்றலை ஒட்டுமொத்த நாட்டிற்கும், உலகிற்கும் அளிக்கும். வர்த்தகத்தை வளர்ப்பது, வடகிழக்கு தயாரிப்புகள், அதன் வளமான கலாச்சாரம், அதன் சுவையான உணவு வகைகளை காட்சிப்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் இதில் இருக்கும். இது சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.  இது வடகிழக்குப் பிராந்தியத்தின் விவசாயிகள், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். வடகிழக்குப் பகுதியின் வளம் அசாதாரணமானது. அஷ்டலட்சுமி மகோத்சவ அமைப்பாளர்களுக்கும், அனைத்து வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் அனைத்து மதிப்புமிக்க விருந்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த 100-200 ஆண்டுகளை பிரதிபலிக்கும் போது, மேற்கத்திய உலகின் எழுச்சியை நாம் கவனித்தோம். பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்துலக ரீதியாகவும் மேற்குலகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவாரஸ்யமாக, இந்தியாவிற்குள்ளும், நமது வளர்ச்சிக் கதையை வடிவமைப்பதில் மேற்கு பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது, நாம் 21-ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், இந்த நூற்றாண்டு கிழக்கிற்கு – ஆசியாவுக்கு, குறிப்பாக பாரதத்திற்கு – சொந்தமானது என்று அடிக்கடி கூறுகிறோம். இந்தச் சூழலில், பாரதத்தின் எதிர்காலம் கிழக்கு பாரதத்திற்கு, குறிப்பாக வடகிழக்கிற்கு சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில், மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற மையங்களாக உருவெடுத்துள்ளன.  வரவிருக்கும் பத்து ஆண்டுகளில், குவஹாத்தி, அகர்தலா, இம்பால், இட்டாநகர், கேங்டாக், கோஹிமா, ஷில்லாங் மற்றும் அய்சால் போன்ற நகரங்கள் அவற்றின் மகத்தான திறனை வெளிப்படுத்தும். அஷ்டலட்சுமி மஹோத்சவம் போன்ற நிகழ்வுகள் இந்த பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

நம் பாரம்பரியத்தில், லக்ஷ்மி அன்னை மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றின் தெய்வமாக மதிக்கப்படுகிறார். லக்ஷ்மியை நாம் வழிபடும் போதெல்லாம், எட்டு வடிவங்களில் அவரை மதிக்கிறோம். ஆதி லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லக்ஷ்மி என வழிபடுகிறோம். இதேபோல், இந்தியாவின் வடகிழக்கின் அஷ்டலட்சுமி அமைப்பில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்கள் உள்ளன. இந்த எட்டு நிலைகளும் அஷ்டலட்சுமியின் சாரத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.

நண்பர்களே,

அஷ்டலட்சுமி மஹோத்சவம் என்பது வடகிழக்குப் பகுதியின் வளமான எதிர்காலத்தைக் கொண்டாடும் கொண்டாட்டமாகும். இது வளர்ச்சியின் புதிய விடியலின் கொண்டாட்டமாகும். இது வளரச்சி அடைந்த பாரத்தை உருவாக்கும் நமது இயக்கத்தை துரிதப்படுத்தும். இன்று, வடகிழக்குப் பகுதியில் முதலீடு செய்வதற்கு இணையற்ற உற்சாகம் காணப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் அசாதாரணமான வளர்ச்சிப் பயணத்தை நாம் கண்டிருக்கிறோம். இருப்பினும், இந்த கட்டத்தை அடைவதில் சவால்கள் இல்லாமல் இல்லை. வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் வளர்ச்சியில் ஒருங்கிணைக்க சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.  அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் முதல் முறையாக வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் நிறுவப்பட்டது.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளாக, தில்லி - வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மத்திய அரசின் அமைச்சர்கள் 700-க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, மக்களுடன் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிட்டுள்ளனர். 10 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான தற்போதைய அரசின் அர்ப்பணிப்புக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.

நண்பர்களே,

இந்தப் பிராந்தியத்தில், நாம் வெறுமனே உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்கவில்லை; பிரகாசமான, நீடித்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக, வடகிழக்குப் பகுதிகளுக்கு இணைப்புச் சேவை மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. தொலைதூர நகரங்களுக்கு பயணம் செய்ய பெரும்பாலும் நாட்கள், வாரங்கள் கூட ஆனது.  சில வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை ரயில் சேவைகள் இல்லை. 2014 முதல், எங்கள் அரசு உடல் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளது. இது வடகிழக்கில் உள்கட்டமைப்பின் தரம், வாழ்க்கைத் தரம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் சுமார் 5,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  வடகிழக்கில் ரயில் இணைப்பு அதிவேகமாக விரிவடைந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களையும் ரயில் மூலம் இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. முதல் வந்தே பாரத் ரயில் ஏற்கனவே வடகிழக்கில் இயங்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், வடகிழக்கில் விமான நிலையங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் மூலம் நீர்வழிப் பாதைகளையும் நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

எரிவாயு குழாய் இணைப்புக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வடகிழக்கு எரிவாயு தொகுப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 1,600 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்திற்கு எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இணையதள இணைப்பை மேம்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களில் 2,600-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் 13,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கண்ணாடி இழைக் கேபிள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களையும் 5ஜி இணைப்பு சென்றடைந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

வடகிழக்கு மாநிலங்களில் சமூக உள்கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அஷ்டலட்சுமி மாநில இளைஞர்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. வடகிழக்குப் பகுதியின் இளைஞர்கள் எப்போதும் தங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சியைக் காண விரும்புகிறார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்திலும் நீடித்த அமைதிக்கான பொதுமக்களின் ஆதரவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, வளர்ச்சிக்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கில் பல வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

நண்பர்களே,

வடகிழக்கின் தனித்துவமான தயாரிப்புகள் உலகெங்கிலும் உள்ள சந்தைகளை அடைய வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். இந்த இலக்கை அடைய, ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான தயாரிப்புகளை ஊக்குவிக்க 'ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி' முயற்சி செயல்படுத்தப்படுகிறது.  நாட்டு மக்களிடம், குறிப்பாக தில்லி மக்களிடம், வடகிழக்குப் பொருட்களை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பகவான் கிருஷ்ணர், அஷ்டலக்ஷ்மியின் ஆசீர்வாதத்துடன், 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சிக்கான புதிய அளவுகோலை வடகிழக்கு பகுதி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், இந்த நிகழ்வும் பிராந்தியமும் பெரும் வெற்றியடைய வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழி பெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

 

***

 

PLM /DL


(Release ID: 2081867) Visitor Counter : 22