பிரதமர் அலுவலகம்
அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் வெளியிட்டார்
வடகிழக்குப் பகுதி இந்தியாவின் அஷ்டலட்சுமி: பிரதமர்
அஷ்டலட்சுமி மஹோத்சவம் என்பது வடகிழக்கின் பிரகாசமான எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும் - இது வளர்ச்சியின் புதிய விடியலுக்கான திருவிழா: பிரதமர்
Posted On:
06 DEC 2024 7:27PM by PIB Chennai
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது உட்பட கடந்த 2 ஆண்டுகளில் பல தேசிய, சர்வதேச நிகழ்வுகளுக்கு பாரத மண்டபம் சாட்சியாக திகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இன்றைய நிகழ்ச்சி மேலும் சிறப்பு வாய்ந்தது என்றார். இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த தில்லியையும் வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு வண்ணங்களால் ஜொலிக்கச் செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவின் திறனை நாட்டிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்தும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நடைபெறும் என்றும், வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தயாரிப்புகள், கலாச்சாரம், உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 100 முதல் 200 ஆண்டுகளில் மேற்கத்திய உலகின் எழுச்சியை ஒவ்வொருவரும் கண்டுள்ளனர் என்றும், பொருளாதாரம், சமூகம், அரசியல் என ஒவ்வொரு மட்டத்திலும் மேற்கத்திய பிராந்தியம் உலகின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவும் மேற்கத்திய பிராந்தியத்தின் தாக்கத்தையும் அதன் வளர்ச்சி கதையில் அதன் பங்கையும் தற்செயலாக பார்த்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். வரும் காலங்களில், இந்தியாவின் வளர்ச்சிக் கதை கிழக்கு இந்தியாவுக்கு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சொந்தமானது என்று அவர் தெரிவித்தார். வரும் பத்து ஆண்டுகளில் குவஹாத்தி, அகர்தலா, இம்பால், இட்டாநகர், கேங்டாக், கோஹிமா, ஷில்லாங், அய்ஸ்வால் போன்ற நகரங்களின் புதிய திறனை இந்தியா காணும் என்றும் அஷ்டலட்சுமி போன்ற நிகழ்வுகள் அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்திய பாரம்பரியத்தை குறிப்பிட்ட பிரதமர், லட்சுமி தேவி மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பின் தெய்வம் என்று அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டார். லட்சுமி தேவியின் எட்டு வடிவங்களை பட்டியலிட்ட அவர், லட்சுமி தேவியை வழிபடும்போதெல்லாம் எட்டு வடிவங்களும் வணங்கப்படுகின்றன என்று கூறினார். அதேபோல், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களின் அஷ்டலட்சுமி மக்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதாக திரு நரேந்திர மோடி கூறினார்.
அஷ்டலட்சுமி மகோத்சவம் என்பது வடகிழக்குப் பகுதியின் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டாடும் விழா என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இது வளர்ச்சியின் புதிய விடியலைக் கொண்டாடுகிறது என்றும், இது வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார். இன்று வடகிழக்கில் முதலீடு செய்வதற்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியின் அற்புதமான பயணத்தை ஒவ்வொருவரும் கண்டு வருவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்தப் பயணம் எளிதான ஒன்றல்ல என்று கூறிய அவர், இந்தியாவின் வளர்ச்சி கதையுடன் வடகிழக்குப் பகுதி மாநிலங்களை இணைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்றார். முந்தைய அரசுகளின் காலத்தில் வடகிழக்குப் பகுதி வளர்ச்சி மோசமாக இருந்தது என்று கூறிய திரு நரேந்திர மோடி, வடகிழக்கின் வளர்ச்சிக்காக முதன்முறையாக அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் தனி அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை எடுத்துரைத்தார்.
கடந்த பத்தாண்டுகளில் தில்லிக்கும் வடகிழக்குப் பகுதி மக்களுக்கும் இடையேயான தூரத்தைக் குறைக்க அரசு அயராது உழைத்துள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு 700-க்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது அரசுக்கும் வடகிழக்கு மக்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
அரசு வடகிழக்குப் பகுதியில் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்து வருகிறது என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு உள்கட்டமைப்பில் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுக்கு அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். இது உள்கட்டமைப்பின் தரம், வடகிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார். வடகிழக்குப் பகுதியின் ரயில் இணைப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதைத் குறிப்பிட்ட பிரதமர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தலைநகரங்களையும் ரயில் மூலம் இணைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றார்.
எரிவாயு குழாய் இணைப்புக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலமும் வடகிழக்கு எரிவாயு தொகுப்புடன் இணைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
வடகிழக்குப் பகுதியின் இணைப்பைத் தவிர, அதன் பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலாவுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறினார். அஷ்டலட்சுமி மாநில இளைஞர்களுக்கு இந்திய அரசு பெரும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், அவர்கள் எப்போதும் வளர்ச்சியையே விரும்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்திலும் நிரந்தர அமைதி நிலவுவதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொதுமக்களின் ஆதரவு இருப்பதாக கூறிய திரு நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் காரணமாகவே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு வளர்ச்சிக்கான புதிய பாதையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.
கடவுள் கிருஷ்ணர், அஷ்டலட்சுமி ஆகியோரின் ஆசிகளுடன், 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சியின் புதிய முன்னுதாரணத்தை வடகிழக்கு இந்தியா நிச்சயமாக அமைக்கும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
அஷ்டலட்சுமி மஹோத்சவம் என்பது மூன்று நாள் கலாச்சார விழாவாகும். இது டிசம்பர் 6 முதல் 8 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது.
பாரம்பரிய கைவினைப்பொருட்கள், கைத்தறி, விவசாய பொருட்கள், சுற்றுலா போன்ற பகுதிகளில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த மஹோத்சவ நிகழ்ச்சி பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
மஹோத்சவத்தில் தேசிய அளவில் வடகிழக்கு இந்தியாவின் வளமான கைத்தறி, கைவினைப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வடிவமைப்பு மாநாடு, ஆடை அலங்கார அணிவகுப்புகள் இடம் பெறுகின்றன. பிராந்தியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் இந்த திருவிழாவில் துடிப்பான இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன் வடகிழக்கு இந்தியாவின் உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
***
PKV/PLM/KPG/DL
(Release ID: 2081739)
Visitor Counter : 29
Read this release in:
Odia
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam