குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 03 DEC 2024 1:36PM by PIB Chennai

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் இன்று (2024 டிசம்பர் 3,) 2024-ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த விருதுகள் நீண்டகால சமூக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறினார். விருதுபெற்றவர்களைப் பின்பற்றுவதன் மூலம், மற்ற தனிநபர்களும் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி செயல்பட முடியும்.

இந்த ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தின் மையக்கருத்து "அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்துதல்" என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், மாற்றுத்திறனாளிகளிடையே தொழில்முனைவை ஊக்குவித்தல், அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு வழங்குதல், அவர்களின் தயாரிப்புகளை வாங்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை வழங்குதல் ஆகியவை அவர்களின் தலைமைத்துவ திறனை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

ஒட்டுமொத்த மனிதகுலமும் மாற்றுத் திறனாளிகளை சௌகரியமாகவும், சமத்துவமாகவும் உணரச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். எல்லா வகையிலும் அவர்களுக்கு தடையற்ற சூழலை வழங்குவதே சமூகத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உண்மையான அர்த்தத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும் சமூகம் மட்டுமே பிறர் மீது அக்கறை உள்ள சமூகம் என்று அழைக்கப்பட முடியும்.

மாற்றுத்திறனாளிகளாக இருப்பது எந்தவிதமான குறைபாடும் அல்ல என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இது ஒரு சிறப்பு நிலை. மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை புரிந்துணர்வே தவிர, அனுதாபம் அல்ல. அவர்களுக்கு உணர்வுத்திறன்தான் தேவை, கருணை அல்ல, அவர்களுக்கு இயல்பான பாசம் தேவை, சிறப்பு கவனம் அல்ல. சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் அவர்கள் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையை அனுபவிப்பதை சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

மற்றவர்களைப் போலவே பணியாற்றுவதற்கான வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையையும், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் உணர்வையும் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இதன்மூலம், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

***

TS/MM/AG/KR/DL


(Release ID: 2080221) Visitor Counter : 48