தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ராணுவ தின அணிவகுப்பு 2025 பற்றிய ஒரு கண்ணோட்டம்: 55 வது IFFI-ல் முன்னோட்டம் வெளியீடு
வளமான ராணுவ பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற நகரமான புனே, வரலாற்று ரீதியான சாதனையைக் குறிக்கும் வகையில், 2025 ஜனவரி 15 அன்று, முதல்முறையாக மதிப்புமிக்க ராணுவ தின அணிவகுப்பை நடத்த உள்ளது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின்போது, வரவிருக்கும் அணிவகுப்பிற்கான முன்னோட்ட வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டது. இதனை, திரைப்பட ஆர்வலர்கள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
1949-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா நியமிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ராணுவ தின அணிவகுப்பு நடைபெறுகிறது. பாரம்பரியமாக டெல்லியில் நடைபெறும் இந்த அணிவகுப்பு 2023-ல் பெங்களூருவில் தொடங்கி, 2024-ல் லக்னோவைத் தொடர்ந்து, வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 2025 அணிவகுப்புக்கு புனேவின் தேர்வு, ஆயுதப் படைகளுடனான நகரத்தின் வரலாற்று உறவுகளையும், இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தலைமையகமாக அதன் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆண்டு அணிவகுப்பு, பம்பாய் பொறியியல் குழு மற்றும் மையத்தில் நடைபெறும். இதில் அணிவகுப்பு குழுக்கள், வாகன அணிவகுப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிகள் இடம்பெறும். சிறப்பம்சமாக, ட்ரோன்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல் விளக்கங்களும், போர் ஒத்திகைகள் மற்றும் தற்காப்பு செயல் விளக்கம் போன்ற வசீகரிக்கும் நிகழ்ச்சிகளும் அடங்கும்.
அணிவகுப்புக்கு முன்னதாக, புனேவில் ஜனவரி தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள "உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள்" கண்காட்சி போன்ற நிகழ்வுகள், உள்ளூர்வாசிகள் மேம்பட்ட ஆயுதங்களை ஆராயவும், தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கும். இத்தகைய முயற்சிகள் உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. ராணுவ தின அணிவகுப்பை ஒரு சம்பிரதாய நிகழ்வாக மட்டுமல்லாமல், தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தேசிய கொண்டாட்டமாக மாற்றுகின்றன.
பல்வேறு நகரங்களில் ராணுவ தின அணிவகுப்பை நடத்துவதன் மூலம், இந்திய ராணுவம் நாடு முழுவதும் உள்ள மக்களுடன் வலுவான தொடர்பை மேம்படுத்துகிறது. இந்த முயற்சி, கொண்டாட்டத்தை பரவலாக்குகிறது. உள்ளூர் மக்களுக்கு ஆயுதப்படைகளுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
***
(Release ID: 2076612)
TS/MM/RR/KR
(Release ID: 2076769)
Visitor Counter : 5