பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


துடிப்பான போடோ சமூகத்தின் முன்னேற்றத்தையும் வளத்தையும் உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

போடோ மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது: பிரதமர்

வடகிழக்குப் பகுதி முழுவதும் இந்தியாவின் அஷ்டலட்சுமி ஆகும்: பிரதமர்

Posted On: 15 NOV 2024 9:34PM by PIB Chennai

அமைதியை நிலைநிறுத்தவும், துடிப்பான போடோ சமூகத்தை உருவாக்கவும் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவை குறித்த இரண்டு நாள் மாபெரும் நிகழ்ச்சியான முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, கார்த்திகை பௌர்ணமியையும் தேவ் தீபாவளி பண்டிகையையும் முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிரகாஷ் பர்வாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்திய மக்கள் பழங்குடியினர் கௌரவ தினத்தை கொண்டாடி வருவதாகவும் அவர் கூறினார். முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய அவர்,  செழிப்பு, கலாச்சாரம், அமைதி ஆகியவற்றின் புதிய எதிர்காலத்தைக் கொண்டாட நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள போடோ மக்களை வாழ்த்தினார். 

இந்த நிகழ்ச்சி தமக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, 50 ஆண்டுகால வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்ததாலும், போடோலாந்து தனது முதல் ஒற்றுமை விழாவைக் கொண்டாடுவதாலும் இது மிகவும் பொருத்தமான சிறப்பான என்று கூறினார். ரணசண்டி நடனமே போடோலாந்தின் வலிமையை வெளிப்படுத்தியது என்று அவர் மேலும் கூறினார். பல ஆண்டுகால போராட்டத்தின் பின் சமரச முயற்சிகள் மூலம் புதிய வரலாற்றை உருவாக்கியதற்காக போடோக்களை திரு நரேந்திர மோடி பாராட்டினார். 

2020 போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு கோக்ராஜருக்கு வருகை தந்த வாய்ப்பை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, தன் மீது பொழிந்த அரவணைப்பும் அன்பும் போடோக்களில் ஒருவராக தன்னை உணர வைத்தது என்று குறிப்பிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே அரவணைப்பையும் அன்பையும் உணர்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். போடோலாந்தில் அமைதி, வளம் ஆகியவற்றின் புதிய விடியல் ஏற்பட்டுள்ளது என்று போடோக்களிடம் கூறிய திரு நரேந்திர மோடி, ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். இது உண்மையிலேயே தனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று அவர் கூறினார்.  போடோலாந்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். 

அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு போடோலாந்து புதிய வளர்ச்சி அலையைக் கண்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். போடோ அமைதி ஒப்பந்தத்தின் பலன்களையும், போடோக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தையும் கண்டு திருப்தி அடைவதாக அவர் மேலும் கூறினார். போடோ அமைதி ஒப்பந்தம் மேலும் பல ஒப்பந்தங்களுக்கான புதிய பாதைகளைத் திறந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக அசாமில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, வன்முறைப் பாதையைக் கைவிட்டு, வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கர்பி ஆங்லாங் ஒப்பந்தம், புரூ-ரியாங் ஒப்பந்தம், என்.எல்.எஃப்.டி-திரிபுரா ஒப்பந்தம் ஆகியவை என்றாவது ஒரு நாள் யதார்த்தமாகும் என்பது யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார். மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கை இரு தரப்பினராலும் மதிக்கப்படுகிறது என்றும், தற்போது போடோலாந்து மக்களின் வளர்ச்சியில் மத்திய அரசும், அசாம் அரசும் அனைத்து முயற்சியையும் மேற்கொள்கின்றன என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

போடோ பிராந்திய பிராந்தியத்தில் போடோ சமூகத்தின் தேவைகள், எதிர்பார்ப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அளித்த முன்னுரிமையை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, போடோலாந்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ. 1500 கோடி சிறப்பு தொகுப்பை வழங்கியுள்ளது என்றும், அசாம் அரசு சிறப்பு மேம்பாட்டு தொகுப்பை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். போடோலாந்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 700 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். வன்முறையைக் கைவிட்டு பொது நீரோட்டத்திற்கு திரும்பியுள்ள மக்களுக்காக அரசு மிகுந்த உணர்வுப்பூர்வமாக முடிவுகளை எடுத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  போடோலாந்தின் வளர்ச்சிக்காக அசாம் அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 800 கோடிக்கு மேல் செலவிடுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும், எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதையும் வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, சீட் இயக்கம் தொடங்கப்பட்டதை சுட்டிக் காட்டினார்.  திறன் வளர்ப்பு, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றின் மூலம், போடோ இளைஞர்கள் பெரும் பயனைப் பெறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் தற்போது விளையாட்டுத் துறையில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக திரு நரேந்திர மோடி கூறினார். பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற துராந்த் கோப்பையின் இரண்டு பதிப்புகள் கோக்ராஜரில் நடைபெற்றது வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் குறிப்பிட்டார். அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோலாந்து இலக்கிய விழாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கோக்ராஜரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய பிரதமர், போடோ இலக்கியத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். போடோ சாகித்ய சபாவின் 73-வது நிறுவன தினத்தை முன்னிட்டு அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

மோஹோட்சோவில் உள்ள கண்காட்சியைப் பார்வையிட்ட தமது அனுபவத்தை விவரித்த திரு நரேந்திர மோடி, வளமான போடோ கலை, கைவினைப் பொருட்களான அரோனாயே, டோகோனா, கம்சா, கராய்-தகினி, தோர்கா, ஜாவ் கிஷி, காம், புவிசார் குறியீடு பெற்ற பிற தயாரிப்புகளைக் கண்டதாகக் கூறினார்.  போடோ கலாச்சாரத்தில் பட்டுப்புழு வளர்ப்பு எப்போதும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது என்பதை  எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, போடோலாந்து பட்டுப்புழு வளர்ப்பு இயக்கத்தை அரசு செயல்படுத்தியதை சுட்டிக் காட்டினார். ஒவ்வொரு போடோ குடும்பத்திலும் நெசவுப் பாரம்பரியம் உள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, போடோலாந்து கைத்தறி இயக்கத்தின் மூலம் போடோ சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இந்தியாவின் சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக அசாம் விளங்குகிறது என்றும், போடோலாந்து அசாமின் சுற்றுலாவின் பலமாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். ஒரு காலத்தில் மறைவிடங்களாக இருந்த மானஸ் தேசியப் பூங்கா, ரைமோனா தேசியப் பூங்கா, சிக்னா ஜாலாவ் தேசியப் பூங்கா ஆகிய அடர்ந்த காடுகள் தற்போது இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் இடமாக மாறி வருவது குறித்து திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். போடோலாந்தில் வளர்ந்து வரும் சுற்றுலா, இளைஞர்களுக்கு பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

போடோஃபா உபேந்திர நாத் பிரம்மா, குருதேவ் காளிசரண் பிரம்மா ஆகியோரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, போடோஃபா எப்போதும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் போடோ மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கும் ஜனநாயக வழிமுறையை முன்வைத்தார் என்றும், குருதேவ் காளிசரண் பிரம்மா அகிம்சை, ஆன்மீகத்தின் பாதையைப் பின்பற்றி சமூகத்தை ஒன்றிணைத்தார் என்றும் குறிப்பிட்டார்.  போடோலாந்து இளைஞர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்க கனவு காண்கிறார்கள் என்றும், மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு போடோ குடும்பத்துடனும் அவர்களின் முன்னேற்றத்தில் துணையாக நிற்கின்றன என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

அசாம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியும் இந்தியாவின் அஷ்டலட்சுமி என்று கூறிய திரு நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய சக்தியை அளிக்கும் வகையில் கிழக்கு இந்தியாவில் இருந்து வளர்ச்சியின் விடியல் எழும் என்று கூறினார். எனவே, வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகளைக் காண அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

அசாம், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியின் பொற்காலம் கடந்த பத்தாண்டுகளில் தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, அரசின் கொள்கைகள் காரணமாக 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர் என்றார். அசாமில் லட்சக்கணக்கான மக்கள் வறுமையை வென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் அசாம் வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, குறிப்பாக சுகாதார உள்கட்டமைப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.  2014-க்கு முன்பு அசாமில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக இருந்த்து எனவும் இப்போது அது 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மேலும் 12 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் கதவுகளை திறக்கும் என்றும் அவர் கூறினார்.

போடோ அமைதி ஒப்பந்தம் காட்டியுள்ள பாதை ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியின் வளத்துக்கான பாதை என்று கூறித் தமது உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.  

அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, போடோலாந்து பிராந்திய பிராந்திய தலைவர் திரு பிரமோத் போரோ, அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் தலைவர் திரு தீபன் போடோ, போடோ சாகித்ய சபாவின் தலைவர் டாக்டர் சுரத் நர்சாரி  ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

பின்னணி

முதலாவது போடோலாந்து மஹோத்சவம், நவம்பர் 15, 16 ஆகிய இரண்டு நாள் நிகழ்வாகும். இது அமைதி நிலைத்திருக்கவும், துடிப்பான போடோ சமூகத்தை உருவாக்கவும் மொழி, இலக்கியம், கலாச்சாரம் குறித்த ஒரு பெரிய நிகழ்வாகும். இது போடோலாந்தில் மட்டுமல்ல, அசாம், மேற்கு வங்கம், நேபாளம், வடகிழக்கின் பிற சர்வதேச எல்லைப் பகுதிகளிலும் வசிக்கும் பூர்வீக போடோ மக்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் 2020-ம் ஆண்டில் போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தம் போடோலாந்தில் பல ஆண்டுகளாக நீடித்த மோதல்கள், வன்முறை, உயிர் இழப்புகளைத் தீர்த்தது மட்டுமல்லாமல், பிற அமைதி தீர்வுகளுக்கும் ஒரு வினையூக்கியாக செயல்பட்டது.

இந்திய பாரம்பரியம், மரபுகளுக்கு பங்களிக்கும் வளமான போடோ கலாச்சாரம், பாரம்பரியம், இலக்கியம்" என்ற அமர்வு மஹோத்சவத்தின் சிறப்பம்சமாகும். வளமான போடோ கலாச்சாரம், மரபுகள், மொழி, இலக்கியம் குறித்த விவாதங்கள் இதில் இடம்பெறுகிறது. "தேசிய கல்விக் கொள்கை-2020 மூலம் தாய்மொழி வழிக் கல்வியின் சவால்கள், வாய்ப்புகள்" என்ற மற்றொரு அமர்வும் நடைபெறும். போடோலாந்து பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பழங்குடி கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியும், துடிப்பான போடோலாந்து' பிராந்தியத்தை உருவாக்குவது குறித்த கலந்துரையாடலும் ஏற்பாடு நடைபெறும்.

போடோலாந்து பிராந்தியம், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் பிற பகுதிகள், அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலாச்சார, மொழி, கலை ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


******

PLM/KV


(Release ID: 2076549) Visitor Counter : 28