தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 2

'இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள்: எதிர்காலம் இப்போது' என்ற கருப்பொருளுடன் கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது

மிகவும் போற்றத்தக்க திரைப்பட ஆளுமைகள், சினிமா ஆர்வலர்கள் முன்னிலையில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்குவதாக கோவாவின் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் கலாச்சார ஒத்திசைவையும் பன்முகத்தன்மையையும்  வெளிப்படுத்தும் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகள் அனைவரையும் உற்சாகப்படுத்தில் ஆழ்த்தின. படைப்பாற்றல் மற்றும் சினிமா அறிவைக் கொண்டாடும் ஒன்பது நாட்களுக்கான  கம்பீரமான தொடக்கத்தை இது  உருவாக்கியது. உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,   இந்திய சர்வதேச திரைப்பட விழா புகழ்பெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் கிரேசியின் திரைப்படமான 'பெட்டர் மேன்' திரையிடலுடன் தொடங்கியது.

திரைத்துறை பிரபலங்களான அபிஷேக் பானர்ஜி, பூமி பெட்னேகர் ஆகியோர் தொகுத்து வழங்கிய தொடக்க விழாவில் சினிமா ரசிகர்கள் முன்னிலையில் சினிமா உலகின் பிரகாசமான நட்சத்திரங்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர். சினிமாவுக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக திரைப்பட ஜாம்பவான்கள் சுபாஷ் கய், சிதானந்த் நாயக், போமன் இரானி, ஆர்.கே.செல்வமணி, ஜெயம் ரவி, ஐசரி கணேஷ், ஆர்.சரத்குமார், பிரனிதா சுபாஷ், ஜாக்கி பாக்னானி, ராகுல் ப்ரீத் சிங், ரன்தீப் ஹூடா, ராஜ்குமார் ராவ் ஆகியோர்  கௌரவிக்கப்பட்டனர்.

இந்திய மரபுகளைப் பின்பற்றி, மாநிலங்களவை உறுப்பினர் திரு சதானந்த் ஷெட் தனவாடே, தகவல், ஒலிபரப்புத்துறை  செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், விழா இயக்குநர் திரு  சேகர் கபூர், சிபிஎஃப்சி தலைவர் திரு பிரசூன் ஜோஷி, பிரசார் பாரதி தலைவர் திரு நவீனீத் குமார் சேகல் போன்ற பிரமுகர்கள் முன்னிலையில் கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஒரு தென்னங்கன்றை நட்டு  நீர் ஊற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், "கோவாவும்  இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் உண்மையில் ஒத்திசைந்தவை. நீங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழாபற்றி நினைக்கும் போதுகோவாவை நினைவில் கொள்கிறீர்கள், கோவாவை நினைக்கும் போது, நீங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை  நினைவில் கொள்கிறீர்கள்" என்றார். கோவாவுக்கு வருகை தந்துள்ள  விழா பிரதிநிதிகள் அனைவரையும் கோவா மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்பதாக டாக்டர் சாவந்த் கூறினார்.

இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சியில் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மாறியுள்ளது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தமது  வீடியோ செய்தியில் தெரிவித்தார். துடிப்புடன் வேகமாக வளர்ந்து வரும் உள்ளடக்க படைப்பாளர்களின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர்  கூறினார். "இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்கள், உணவு வகைகள், வளமான பாரம்பரியம், இந்திய இலக்கியம் மற்றும் மொழிகளின் சிறப்புகளை சுவாரஸ்யமான, ஆக்கபூர்வமான வழிகளில் வெளிப்படுத்தும் புதுமையான உள்ளடக்கத்தை படைப்பாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார். தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான கியூரேட்டர்களின் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் படைப்பாளர்களின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து புதிய கூட்டாண்மைகளும் புதிய யோசனைகளும் உருவாகும் என்று திரு வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார். புதிய முயற்சிகள் மூலம் சில இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டுதலும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த நிகழ்வின் போது பகிரப்படும் யோசனைகள் வரும் ஆண்டுகளில் தொழில்துறையின் திசையை வடிவமைக்க உதவும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்  காணொலி செய்தியில், இந்திய சினிமாவை மேம்படுத்த இந்திய திரைப்பட விழா முயற்சி செய்து வருவதாகவும், அதை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். திரைப்படத் திருட்டைத் தடுப்பதில் திரைப்படத் துறைக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்று அவர் கூறினார். தகவல்ஒலிபரப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திரைப்பட வசதிக்கான ஒற்றைச் சாளர முறை திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதிகளைப் பெறுவதை எளிதாக்கியுள்ளது. இந்த முயற்சியுடன் பல்வேறு மானியங்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கியுள்ளன. நாளைய படைப்பாளிகள் (கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ) என்ற முன்முயற்சி  தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகள் திரைப்பட ஜாம்பவான்களால் வழிகாட்டப்படுவதற்கும் அவர்களுடனான தொடர்புகளால் பயனடைவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று டாக்டர் எல். முருகன் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு 1000-க்கும் அதிகமான திரைப்படங்கள் போட்டிக்கு வந்துள்ளதாகவும் இணையமைச்சர் கூறினார். இந்த ஆண்டுக்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குநர் பிலிப் நோய்ஸுக்கு வழங்குவதில் இந்திய திரைப்பட விழா பெருமை அடைகிறது என்று டாக்டர் எல்.முருகன் கூறினார்.

இந்த ஆண்டு இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், ராஜ் கபூர், தபன் சின்ஹா, அக்கினேனி நாகேஸ்வர ராவ்,   முகமது ரஃபி ஆகியோரின் அபூர்வமான பாரம்பரியத்திற்கு தொடர்ச்சியான அஞ்சலிகள், திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகள் மூலம் பாராட்டு செலுத்தப்பட்டது. இது சினிமா உலகிற்கு இந்த புகழ்பெற்ற திரைப்பட ஆளுமைகளின் பங்களிப்புகளை  நெருக்கமாகக் கொண்டுவர உதவியது. இந்திய சினிமாவின் இந்த நான்கு ஜாம்பவான்களுக்கான  சிறப்பு அஞ்சல் தலையை தகவல், ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, சிறப்புச் செயலாளர் திருமதி நீரஜா சேகர் ஆகியோர் வெளியிட்டனர். மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு அமிதாப் சிங்; என்.எப்.டி.சி. நிர்வாக இயக்குநர் திரு பிரிதுல் குமார்; இணைச்செயலாளர் (திரைப்படம்), திருமதி விருந்தா மனோகர் தேசாய்; விழா இயக்குநர், திரு சேகர் கபூர்; பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர் ராவின் மகன் திரு நாகார்ஜுனா; புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் முகமது ரஃபியின் மருமகள் திருமதி ஃபிர்தௌஸ் ரஃபி உள்ளிட்டோர்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், விழா இயக்குநர் சேகர் கபூர் ஆகியோர், 55 வது சர்வதேச போட்டி நடுவர் உறுப்பினர்களான அசுதோஷ் கோவரிகர் (தலைவர்), அந்தோணி சென், எலிசபெத் கார்ல்சன், ஃபிரான் போர்ஜியா, ஜில் பில்காக் ஆகியோரை கெளரவித்தனர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'சிறந்த அறிமுக இந்தியத் திரைப்படம்' பிரிவுக்கான நடுவர் குழுவில் சந்தோஷ் சிவன் (நடுவர் குழுத் தலைவர்), எம்.வி.ரகு, சுனீல் புராணிக், சேகர் தாஸ், வினித் கனோஜியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் பிரசார் பாரதியின் 'வேவ்ஸ் ஓடிடி' என்ற ஓடிடி தளத்தை கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார். இந்தத் தளம் கிளாசிக் உள்ளடக்கம் மற்றும் சமகால நிரலாக்கத்தின் வளமான கலவையை வழங்குகிறது. ராமாயணம், மகாபாரதம், சக்திமான், ஹம் லோக் போன்ற காலத்தால் அழியாத நிகழ்ச்சிகளைக் கொண்ட நூலகத்துடன், இந்தியாவின் கடந்த காலத்துடன் கலாச்சார மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்களைத் தேடும் பார்வையாளர்களை இந்தத் தளம் ஈர்க்கிறது. நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனி ஆகியோரின் அன்னபூர்ணா ஃபிலிம் அண்ட் மீடியா ஸ்டுடியோவைச் சேர்ந்த  மாணவர்களின் பட்டமளிப்பு படமான ரோல் எண் 52 வேவ்ஸ் மாநாட்டில் திரையிடப்படும்.

55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா,'நாளைய படைப்பு மனங்கள்' முன்முயற்சியுடன், 'இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள்: எதிர்காலம் இப்போது' என்ற கருப்பொருளின் மூலம் இளம் திரைப்பட தயாரிப்பாளர்களின் திறனை வரவேற்கிறது.

***

(Release ID: 2075278)

TS/SMB/AG/KR

 

iffi reel

(Release ID: 2075432) Visitor Counter : 14